செல்லுலாய்ட் பெண்கள்



முதுமை தோற்றத்தில்ந டி த்தே பேர் பெற்றவர் கே.பி.சுந்தராம்பாள்

பா.ஜீவசுந்தரி - 34

கே.பி.எஸ். என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் 50 களின் நடிகைகள் வரிசையில் இடம்  பெறுவாரா? நிச்சயம் இடம் பெறுவார். 1953 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஔவையார்’ படம் வெளியானது.  இரண்டாவது படமோ 1940ல் வெளியானது. 50களில் அவர் நடித்தது இந்த ஒரு படத்தில் மட்டும்தான். ஒரு படம்தான்  என்றாலும் காலத்துக்கும் பேர் சொல்லும் படம். மிகப் பெரும் வெற்றியும் பெற்றது. அதன் பின் 11 ஆண்டுகள்  இடைவெளியில் அடுத்த படத்தில் நடித்தார். அவருடைய   திரையுலக  வாழ்க்கையில் அனைத்துப் படங்களுமே  இப்படியான நீண்ட இடைவெளியில்தான் வெளியாகி இருக்கின்றன.

1935ல் தொடங்கிய திரைப் பயணத்தில் மூன்றாவது படமாக 53ல் அமைந்தது ஔவையார்.  இப்படத்தில் அந்த   வேடத்தை அவர் ஏற்றிருக்காவிட்டால் ஔவையாருக்கு வயதான பெண்மணி வேடம் அவ்வளவு கச்சிதமாகப்  பொருந்தியிருக்குமா என்பது சந்தேகம்தான். சங்க காலத்தில் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்த பெண்பால்  புலவர்களில் ஔவையார் என்று ஒருவர் மட்டும் இல்லை, பலர் உண்டு என்பது பற்றிய விவாதங்கள் இன்னமும்  தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் வயதானவரா அல்லது இளம் பெண்ணா என்ற சர்ச்சைகள் ஒரு பக்கம்  இருந்தாலும், தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஔவையார் என்றால் அவர் கே.பி. சுந்தராம்பாள் ஒருவர்தான்.

ரசிகர்கள் மத்தியில் ஔவையார் என்றால், பழுத்து உதிரத் தயாராகக் காத்திருக்கும் வயதில் மூத்த, முதிய பெண்மணி  என்ற சித்திரமே மனதுக்குள் தீட்டப்பட்டிருக்கும். அதற்கு முன் கலை உலகிலும் ஔவையாரின் உருவம் குறித்த  அனுமானங்கள் ஏதும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததா என்பதும் அறியப்படாதது.

நாடகங்களே முன்னோடி


திரைப்படங்களுக்கு முன்னோடியாக அப்போது பரவலாகத் தமிழகம் எங்கும் பட்டிதொட்டியிலிருந்து பெரும் நகரங்கள்  வரை நடத்தப்பட்டு வந்த நாடகங்கள், அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் என அனைத்தும் சொல்லி வந்த கதைகள்  புராணம், இதிகாசம் தொடர்பான கதைகளே. அதிலும் வள்ளித் திருமணம், நல்லதங்காள், அல்லி அரசாணி மாலை,  மதுரை வீரன் கதை, காத்தவராயன் கதை, அரிச்சந்திர புராணம், மகாபாரதம், ராமாயணம் போன்றவையே அதிகம்  நாடகமாக்கப்பட்டவை. இதில் ஔவை பற்றிய கதையாடல்களுக்கு வழி ஏதும் இல்லை.

ஔவையை படைத்தளித்த வாசன்


சங்க காலத் தமிழ்ப்புலவர் ஔவையார் பற்றி ஒரு படம் தயாரிக்க வேண்டும், அதில் கொடுமுடி கோகிலம், சங்கீத  ராணி கே.பி.சுந்தராம்பாளை நடிக்க வைக்க வேண்டும் என்று 1950களில் என திரைப்படத் தயாரிப்பாளரும், ஜெமினி  ஸ்டுடியோ அதிபருமான எஸ்.எஸ்.வாசனுக்குத் தோன்றியதே ஆச்சரியம்தான். அவரும் ஔவையாரை உடலும் குரலும்  கனிந்த முது பெரும் பெண்ணாக மக்களை ஏற்கச் செய்து வெற்றி பெற்று விட்டார். அந்தப் படத்தில் ஔவையாரின்  வாழ்க்கை வரலாறாகப் புனையப்பட்ட சம்பவங்களுக்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதும் இருந்தனவா என்பதும் அன்றைய  ஜெமினி கதை இலாகாவினர் அறிந்திருந்தார்களா என்பதும் கேள்விக்குறிதான்.

‘ஔவையார்’ படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்வதற்குள் ஏகப்பட்ட மோதல்கள். அதன் திரைக்கதை எழுதும்  பணியில் தொடக்கத்தில் எழுத்தாளர் புதுமைப்பித்தனும் ஈடுபட்டிருந்தார். ஔவையாரை வயது முதிர்ந்தவராகக்  காட்சிப்படுத்துவதற்கு அவர் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்ததால் அந்தப் பொறுப்பிலிருந்தே  அவர் விலக  நேர்ந்ததாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் ’ஔவையார்’ திரைக்கதை கே.பி.சுந்தராம்பாளுக்காகவே எழுதப்பட்டது  போல பின்னர் அமைந்து விட்டது. ஆனால், வயதான ஔவையை கண் முன் நிறுத்திய சுந்தராம்பாளின் அப்போதைய  வயதென்னவோ 40க்குள்தான்.
 
சிறு வயது முதலே பிள்ளையார் மீது பக்தி கொண்டு, வேறு ஒருவரைத் திருமணம் செய்வதை நிராகரித்து, இளம்  வயதிலேயே துறவறம் பூண்டு, பாடல்கள் இயற்றிப் புகழ் பெற்று, ஊர் ஊராகச் சென்று மன்னர்களையும் மக்களையும்  திருத்தி, வயது முதிர்ந்த மூதாட்டியாக முக்தி பெறுவதுதான் ஔவையார் படத்தின் கதை. அந்தக் கதையை அப்படியே  தாமும் நம்பி பார்ப்பவர்களையும் நம்ப வைக்கும்படி பாடி நடித்து, அசத்தியிருந்தார் சுந்தராம்பாள். படத்தின் வெற்றிக்கு   அவரது நடிப்பு, கம்பீரமான குரல் இவற்றோடு அவர் சொந்த வாழ்க்கையில் பூண்டிருந்த துறவறக் கோலமும் மிக  முக்கியமானதொரு காரணம்.

துறவறக் கோலம் பூண்ட சுந்தராம்பாளின் வாழ்க்கை
 

சுந்தராம்பாளின் அசல் வாழ்க்கையில் அவருடன் சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரின் காதல் துணைவர் எஸ்.ஜி. கிட்டப்பா மரணமடைந்தபோது சுந்தராம்பாளும் இளம் வயதில் கைம்பெண் கோலமும் துறவறமும் பூண்டார்.  அவரது தாம்பத்ய வாழ்க்கை என்பது ஒரு வகையில் அவலம் நிரம்பிய வாழ்க்கை. அவர்கள் இருவரும் முறையாக  திருமணம் செய்து கொள்ளவில்லை. கலைத்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்களின் வாழ்க்கையும்  அப்போது அப்படித்தான் இருந்தது.

முதல் மனைவி இருக்கும்போதே, தான் விரும்பிய, தன்னுடன் நடிக்கும் நடிகைகளை இரண்டாவது மனைவி என்ற  பெயரில் இணைத்துக்கொண்டு வாழ்வது பெரிதாகக் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. சமூகத்தால் அவர்கள்  கணவன்-மனைவியாகவே அறியப்பட்டார்கள். இரு தார மணம் தடை செய்யப்பட்ட பின்னரே, முதல் மனைவி சம்மதம்  பெற்று, திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகும் சட்டமீறல்கள்  நிகழ்ந்துகொண்டுதான் இருந்தன; இருக்கின்றன.

மனங்கள் ஒத்துப் போய்விட்டால், சட்டம், வாரிசுரிமை என்பதெல்லாம் காணாமல் போய் விடும். ஆனால் அவர்கள்  சுந்தராம்பாள் -கிட்டப்பாவின் காதல் எந்த இலக்கியக் காதலுக்கும் சற்றும் குறையாத அமர காதல் என்பதில் எள்  முனையளவும் குறைவற்றது. அனைத்துக்கும் மேலானது. அதனால்தான் கிட்டப்பாவின்  மரணத்தைத் தொடர்ந்து  கைம்பெண் கோலம் ஏற்றுக் கொண்டார். அதை மக்களும் மிகுந்த மரியாதையுடன் பார்த்தார்கள். அது போல  அவ்வையாரும் பிள்ளையாரை மானசீகமாகக் காதலித்துக் காதல் கைகூடாது என அறிந்ததும் துறவறம் பூண்டதான  உடல்மொழியில் சுந்தராம்பாள் நடித்ததை ரசிகர்களும் அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

இப்படத்தில் இடம்பெற்ற 48 பாடல்களில் கே.பி.எஸ். பாடியவை மட்டும் 30 பாடல்கள். அவர் பாடிய ‘பொறுமை  என்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேணும் பெண்கள்’, ‘கன்னித் தமிழ் நாட்டிலே’, ‘வெண்ணிலவே’  போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை. வானொலியிலும் அடிக்கடி இடம் பிடிப்பவை.

தனி நபரை முன்னி றுத்திய வெற்றிகள்


எப்போதுமே பிரமாண்டமான செட்டுகள், ஏராளமான நட்சத் திரக் குவியல் என படங்களைத் தயாரிக்கும் ஜெமினி  நிறுவனம் கே.பி.சுந்தராம்பாளையும் அவர் குரலையும் மட்டுமே நம்பி முன்னிறுத்தி ‘ஔவையார்’ படத்தை எடுத்தது.  படமும் சூப்பர் டூப்பர் வெற்றி. ஏற்கனவே கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியை முன்னிறுத்தி ‘சந்திரலேகா’வை தமிழ்,  இந்தி என இரு மொழிகளிலும் பிரமாண்டமாகத் தயாரித்து அகில இந்திய அளவில் கொண்டு சேர்த்து வெற்றி பெற்ற  அனுபவம் இருந்ததால், ஔவையாரின் வெற்றியும் சாத்தியமானது.

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கனவுக்கன்னிதான் நடிக்க வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை. ஒரு சந்நியாசினி,  சந்நியாசினியாகவே நடித்தாலும் படத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு இப்படம் நல்லதொரு உதாரணம்.  எஸ்.எஸ்.வாசன் நினைத்தது பலித்தது. இப்போது தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் சுவாரஸ்யம் குறையாமல்  இருக்கிறார் ஔவையார்.

30களிலேயே உருவானார் ஒரு லட்சம் ரூபாய் நடிகை

கே.பி.சுந்தராம்பாள் என்ற கே.பி.எஸ் நடித்த திரைப் படங்களின் எண்ணிக்கை மொத்தமே 13 தான், அதிலும் ஒரு படம்  வெளி வரவேயில்லை. ஆனால்,  முதல் படத்தில் நடிக்க வைப்பதற்கே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சம்மதிக்க  வைக்கப்பட்டவர். 1934லேயே இந்தத் தொகை அவருக்கு வழங்கப்பட்டது.  ஒரு லட்சம் ரூபாயின் இப்போதைய மதிப்பு  25 கோடி ரூபாய்க்கும் அதிகம். முக்கியமாக அப்போது அது விளம்பர யுக்தியாகவே பயன்படுத்தப்பட்டது. சரி, ஒரு  இளம் கைம்பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியம்

கொடுத்து, தயாரிப்பாளர் அசந்தாஸ் ஏன் தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும்? ஏன் அவ்வாறு விளம்பரம் செய்து  அவரை நடிக்க வைக்க வேண்டும்? அவ்வளவு முக்கியமானவரா அவர்? அப்படி என்ன சிறப்பு அவருக்கு என்ற  கேள்விகள் மனதுக்குள் எழுவது இயற்கையே. ஆம்! சுந்தராம்பாளின் நாடக உலக வாழ்க்கையும், அவரது நடிப்பும்,  அனைத்துக்கும் மேலாக காம்பீர்யம் பொருந்திய உச்சஸ்தாயியிலும் பிசிறில்லாமல் பாடும் அவரது அசாத்தியத் திறனும்  எப்போதும் மதிக்கத்தக்கவை. அந்த காந்தர்வக் குரலுக்காகவே அவர் மீண்டும் திரையுலகில் நுழைய வேண்டுமென்று  விரும்பி, அழைத்து வரப்பட்டார். அந்தக் குரல்தான் உடல் கவர்ச்சியை எல்லாம் மீறி அவரை மீண்டும் மீண்டும்  அழைத்து வந்து திரைப்படங்களில் பாடச் செய்ததுடன் நடிப்பதற்கான  வாய்ப்புகளையும்  உருவாக்கி அளித்தது.  சுந்தராம்பாள் தயாரிப்பாளரின் அந்த நம்பிக்கையை வீணாக்கவில்லை.
 
ஆண் வேடமிட்ட முதல் நடிகை

1933 டிசம்பர் 2ல் கிட்டப்பாவின் மறைவுக்குப் பின்னர் கைம்மைக்கோலம் பூண்டு இனி எந்த ஆண் மகனோடும் நடிக்க  மாட்டேன் என்ற விரதத்தைக் கடைப்பிடித்து வெள்ளைச் சேலையுடன் இருந்தவர் சுந்தராம்பாள். அவரை எப்படியாவது  திரைப்படத்தில் நடிக்க வைத்துவிட்டால் அதுவே படத்துக்கு மிகப் பெரிய விளம்பரமாகி விடும் என்பது முதல் காரணம்.  அடுத்ததாக அதற்காக  அவருக்கு அளிக்கப்பட்டது  ஒரு லட்சம் ரூபாய் ஊதியம். ஆனால் கோடி கொடுத்தாலும்  கே.பி.எஸ் தமது விரதத்தைக் கலைக்கமாட்டார் என்பதும் தெரியும். அதற்காக  அவர்கள் கூறிய காரணம் “நீங்கள் எந்த  ஆண் நடிகரையும் தொட்டு நடிக்க வேண்டியிருக்காது” என்பது. ஏனெனில் அவர் ஏற்க வேண்டிய வேடம் நந்தனார்.  நந்தனாரே ஒரு ஆண், வேறு எந்த ஆணையும் தொட்டு நெருக்கமாக நடிக்க வேண்டாம் என்பதால் நடிப்பதற்குச்  சம்மதித்தார். எந்தவிதத்திலும் தன் உறுதியிலிருந்து மாறாமல் இறுதிவரை அவ்வாறே நடித்தார்.

அத்துடன் ஒரு பெண், ஆண் வேடமிட்டு சினிமாவில் முதன்முதலாக நடிக்கிறார் என்கிற பரபரப்பு விளம்பரம் வேறு.  படத் தலைப்பு: ‘பக்த நந்தனார்’. தாழ்த்தப்பட்டவரான நந்தனார் காலில் விழுந்து ஆசி வாங்கிய வேதியராக நடித்தவர்  சங்கீத வித்வான் மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர். பிறப்பால் பார்ப்பனரான அவர் ஒரு பெண்ணின் காலில் விழுவதா  என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பின, ஆனால் கிளம்பிய வேகத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.  வேதியராக நடித்துக் காலில் விழுந்த விஸ்வநாத அய்யரே அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளியையும் வைத்தார்.

இளம் விதவைகள் குறித்த அதீதமான கட்டுக்கதைகள் உலவும் சமூகம் இது. எனவே ஒரு விதவைப்பெண் நடிக்கிறார்,  அதிலும் ஆண் வேடத்தில் நடிக்கிறார் என்கிற செய்திகள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்னவோ
உண்மை. அந்தப் பரபரப்பைத் தயாரிப்பாளர் அசன்தாஸ் பயன்படுத்திக் கொண்டார் என்பதும் உண்மை. ஆனால் ‘பக்த  நந்தனார்’ வெற்றி பெற்றது. அதிலும் அதில் கே.பி.எஸ் பாடிய பாடல்கள் உலகத் தரம் வாய்ந்தவை. படத்தில்  இடம்பெற்ற 41 பாடல்களில் 19 பாடல்களை கே.பி.எஸ். பாடியிருந்தார். கடல் கடந்தும் நாடக மேடைகளில் ஒலித்த  அந்தக் குரல் திரையில் ஒலித்து அனைவரையும் கட்டிப் போட்டது.

பகிரங்கமாக வெளிப்பட்ட தொழில் போட்டி
‘பக்த நந்தனார்’ படத்தில் நடிப்பதற்காக கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்சம் கொடுத்து அசன்தாஸ் நடிக்க வைத்ததில்  அக்காலத்தில் தொழில் போட்டியும் வெளிப்படையாகவே இருந்தது. அந்தக் காலத்தில் முன்னோடி இயக்குநராக  அறியப்பட்ட கே.சுப்பிரமணியம் எஸ்.டி சுப்புலட்சுமியை கிருஷ்ணனாக நடிக்க வைத்து ‘பக்த குசேலா’ என்ற படத்தை  எடுக்கப் போவதாக அறிவித்தார். ஒரு பெண், ஆண் வேடமிட்டு நடிப்பது தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதுமையான  விஷயம். இதை விளம்பரப்படுத்திப் படத்துக்கு அதிக விளம்பரம் தேடிக்கொள்ளவும் முற்பட்டனர்.

ஆனால் கே.சுப்பிரமணியத்தின் அன்றைய போட்டியாளராக இருந்த தயாரிப்பாளர் அசன் தாஸ், கே.பி.எஸ்.ஸை  நந்தனாராக நடிக்க வைத்து ‘பக்த நந்தனார்’ படத்தை ‘பக்த குசேலா’வுக்கு முன்பாகவே எடுத்து வெளியிட்டு விட  வேண்டும் என நினைத்தார். இதற்காக  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், கலைகளின் மீது ஈடுபாடு  கொண்டவருமான  தீரர் சத்தியமூர்த்தியை அழைத்துக்கொண்டு சென்று கே.பி.எஸ்.ஸை சம்மதிக்கச் செய்தார். ஆண்  வேடம், நந்தனார் வேடம் என்பதால் வேறு எந்த ஆணுடனும் இணையாக நடிக்க வேண்டியதில்லை என்பதாலும்,  எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது அரசியல் குரு சத்தியமூர்த்தி வீடு தேடி வந்து கேட்டதாலும் சுந்தராம்பாள் அதற்கு  ஒப்புக்கொண்டார். அசன்தாஸ் மிகச் சுறுசுறுப்பாக ‘பக்த நந்தனார்’ படத்தை முடித்து வெளியிட்டு விட்டார்.

கே.சுப்பிரமணியத்தின் ‘பக்த குசேலா’ பின்தங்கிப் போனது. ‘பக்த நந்தனார்’ வெற்றி பெற்றார். ஏற்கனவே கே.பி.எஸ்  நாடகத்திலும் நந்தனார் வேடமேற்று நடித்துப் பிரபலமடைந்திருந்ததாலும், அவர் நடிப்புத் தொழிலே வேண்டாமென்று  விலகியிருந்தவர் மீண்டும் திரைப்பட நடிகையாக நடிக்க வந்ததும் கூட படத்தின் வெற்றிக்குப் பெரும் காரணம்.  இப்படித்தான் ஒரு நாடக நடிகையான சுந்தராம்பாள் திரையுலகில் அறிமுகமானார். தயாரிப்பாளர்களின் போட்டி, ஊதியம்  அதிகம் கொடுப்பது போன்ற விஷயங்களுக்கும் அன்றே கால்கோள் நடப்பட்டு விட்டது.

விமர்சனம் என்னும் வன்மம்

இப்போதைய விமர்சனங்களைப் போலவே அப்போதும் திரைப்படம் தவிர, தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களும்  முன் வைக்கப்பட்டன. பத்திரிகையாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த விகடன் பத்திரிகையில் ‘பக்த நந்தனார்’  படத்துக்கு பத்துப் பக்கங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். அதில் கே.பி.சுந்தராம்பாள் நடிப்பைப் பற்றி எதுவும்  எழுதாமல் ‘எருமை மாடும் பனைமரமும் இப்படத்தில் நன்றாக நடித்துள்ளன’ என்று எழுதினாராம். அதன் பின்னர்  வெளியான கே.சுப்பிரமணியத்தின் ‘பக்த குசேலா’ படத்தில் ஆண் வேடமேற்று கிருஷ்ணனாக நடித்த நடிகை எஸ்.டி  சுப்புலட்சுமி சிரிப்பை ‘முல்லைச் சிரிப்பு’ எனப் புகழ்ந்து தள்ளினார். தனிநபர் மீதான விமர்சனங்களுக்கும்  சர்ச்சைகளுக்கும் எப்போதும் பஞ்சமில்லை போலிருக்கிறது.

துறவி வேடத்துக்கென்றே பிறந்தவர்.

 
அடுத்ததாக அவர் நடித்தது  ‘மணி மேகலை அல்லது பால சந்நியாசி’; இப்படத்திலும் துறவறம் பூண்ட மணிமேகலை  வேடம் ஏற்றார். 1938ல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது; கதைக்காகவும்  கே.பி.எஸ் பாடிய பாடல்களுக்காகவும் படம் ஓடியது. 11 பாடல்களை இப்படத்தில் பாடியிருக்
கிறார் கே.பி.எஸ். இப்படம் வெளியான ஆண்டு 1940; அடுத்த படம் 1953ல் வெளிவந்த ‘ஔவையார்’. 1964ல்  ‘பூம்புகார்’, 1965ல் ‘திருவிளையாடல்’, தொடர்ந்து
மகாகவி காளிதாஸ், கந்தன் கருணை, துணைவன், திருமலைத் தெய்வம், காரைக்கால் அம்மையார், சக்தி லீலை என  அனைத்துப் படங்களிலும் துறவி வேடமே. அனைத்துப் படங்களிலும் இவருக்கான காஸ்ட்யூம் செலவும் மிகக் குறைவு.  காவி நிறப் புடவை அல்லது வெண்பட்டு, மகாகவி காளிதாஸ் படத்தில் மட்டும் கருப்பு நிறச் சேலை. அந்த விதத்தில்  தயாரிப்பாளருக்கு செலவு வைக்காத நடிகையும் கூட. அதனாலேயே கூட ஊதியம் அதிகம் கொடுத்தார்களோ என்று  தோன்றுகிறது.  

ஒரு நடிகைக்கான எந்தக் கவர்ச்சி அம்சங்களும் இல்லாமல் துறவி வேடம் மட்டுமே ஏற்று வெற்றி பெற்ற நடிகை  உலகிலேயே சுந்தராம்பாள் ஒருவராகத்தான் இருப்பார். ஆனால் இவரது நாடக வாழ்க்கையோ மிகவும் காதல்  வயப்பட்டது. சொந்த வாழ்க்கையோ சொல்ல முடியாத சோகம் நிரம்பியது. சுந்தராம்பாளின் இசை வாழ்வும் நாடக  வாழ்க்கையும் காதல் வாழ்வும் அடுத்த இதழில்...

கே.பி.சுந்தராம்பாள் நடித்த படங்கள்

1.நந்தனார்  1935,
2. மணிமேகலை  1940,
3. ஔவையார்  1953,
4. பூம்புகார்  1964,
5. திருவிளையாடல்  1965,
6. மகாகவி காளிதாஸ்  1966,
7. கந்தன் கருணை  1967,
8. உயிர் மேல் ஆசை  1967 (வெளிவராத படம்),
9. துணைவன்  1969,
10. சக்தி லீலை  1972,
11. ஞாயிறு திங்கள்  1972,
12. காரைக்கால் அம்மையார்  1973,
13. திருமலை தெய்வம்  1973,

(ரசிப்போம்!)
ஸ்டில்ஸ் ஞானம்