கிச்சன் டிப்ஸ்..
வாழை இலையை பின்புறமாக தணலில் காட்டிய பின் சாப்பாடு, டிபனோ பொட்டலம் கட்டினால் எவ்வளவு மடக்கினாலும் கிழியாது. - வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.
முளை கட்டிய பச்சைப்பயிரை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து செய்யப்படும் சப்பாத்தி மிகவும் சத்துள்ளதாக இருக்கும்.கொறிப்பதற்கு ஒன்றுமில்லையா? கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் ஜவ்வரிசியை ஒவ்வொரு கைப்பிடியாகப் போட்டு நன்கு பொரித்தெடுங்கள். அதில் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு பெருங்காயப்பொடி கலந்துவிட்டால் மொறுமொறு ஜவ்வரிசி மிக்சர் ரெடி. - ஆர்.அஜிதா, கம்பம்.
ரசம், சாம்பாருக்கு கூடியவரை கட்டி பெருங்காயம் உபயோகிக்கவும். அதையும் சிறிய கிண்ணத்தில் ஊறவைத்து பின்னர் குழம்பு, ரசம் இறக்கும்போது பெருங்காயத் தண்ணீர் விட்டு இறக்கவும். மணமும், சுவையும் ஓஹோ தான்.தோசைப் பொடி அல்லது சாம்பார் பொடி அரைக்கும் போது கொஞ்சம் காஷ்மீரி மிளகாய் சேர்த்து அரைத்தால் கலர்ஃபுல்லாக இருக்கும். - ரேவதி வாசுதேவன், தஞ்சை.
 வெனிலா எசென்ஸை ஒரு காட்டனில் ஊறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்ட வாடை வராது. மாமிச துர்நாற்றத்திலிருந்தும் ஃப்ரிட்ஜை காப்பாற்றலாம். - எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
வடை தட்டும் போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரங்களின் அடியில் ஒரு துண்டு ரொட்டியைப் போட்டு வைத்தால் உலர்ந்து போகாடல் இருக்கும். - ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும். - எம்.பாரதி, காஞ்சிபுரம்.
உருளைக்கிழங்கை அரைவேக்காடாக வேகவைத்து நன்கு வடித்தெடுத்து பிறகு ரோஸ்ட் கறி செய்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது. மிகவும் ருசியாக இருக்கும்.வெங்காயத்தை வெறும் கடாயில் சிறிது வதக்கி விட்டு பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கி விடும். - கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊறவைக்கும்போது ஒரு டீஸ்பூன் கோதுமையை சேர்த்து ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல மென்மையாக இருக்கும். - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
|