மார்பக புற்று நோய் அறிய வேண்டிய தகவல்கள்வாசகர் பகுதி

உலகம் முழுவதும் பெண்களுக்கு ஏற்படும் மரணங்களுக்கான காரணங்களில் சமீப காலமாக மார்பக புற்று நோய் முன்னணி வகிக்கிறது. ஆமாம். கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 5 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் உயிர் இழந்தனர். இந்த வருடம் மேலும் 5 லட்சம் பேர் இதே வியாதி மூலம் உயிர் இழக்கக்கூடும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படி திடீர் மரணத்துக்கு முக்கிய காரணம் இந்த மார்பக புற்றுநோய் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாததே!

அவான்  என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச ஆய்வின்படி இன்றும் பல பெண்களுக்கு இந்த  வியாதி பற்றிய விழிப்புணர்வு இல்லை என கண்டுபிடித்து கூறியுள்ளது. இதன்  ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் இந்த வியாதியால் ஏற்படும் அபாயம் பற்றி  அறியாமல் இருக்கிறார்கள். பலருக்கு தாங்கள் வாழும் ஸ்டைலே மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது என்பதை உணருவதில்லை.மதுவுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு என்பதையும் அறிவதில்லை.

உங்களுக்கு தெரியுமா? ஒரு லட்சம் பேரில் 25.8 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளது.இவர்களில் ஒரு லட்சம் பேரில் 12.7 பேர் இறந்து போகின்றனர். 2020 வாக்கில் இந்தியாவில் 17,97,900 பெண்களுக்கு மார்பக புற்று நோய் இருக்க  வாய்ப்பு உண்டு என ஒரு உத்தேச கணக்கு கூறுகிறது. இதில் குறைந்தது 76,000  பேர் இறந்து விடக்கூடுமாம். என்ன கொடுமை இது?

மார்பக புற்றுநோய் சராசரியாக 30 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களையே தாக்குகிறது. டெல்லியில்  ஒரு லட்சம் பேரில் 41 பேருக்கும், சென்னையில் 37.7 பேருக்கும்,  பெங்களூரில் 34.4 பேருக்கும், திருவனந்தபுரத்தில் 33.7 பேருக்கும் மார்பக  புற்றுநோய் உள்ளதாக கணக்கிட்டுள்ளனர்.

பெண்கள் இந்த மார்பக புற்று நோய் தங்களுக்கு வந்திருக்கலாம் என எண்ண வைக்க இதோ சில காரணங்கள்

1. மார்பகம் அல்லது கங்கத்தில் எதிர்பாரா வலி.
2. மார்பக அளவு மாற்றம்.
3. மார்பக தோல் வண்ணம் மாற்றம் மற்றும் சுருக்கம் ஏற்படுதல்.
4. உள்பக்கமாக காம்பு திரும்புதல்.
5. காம்பிலிருந்து திரவம் வெளிப்படுதல்.
6. காம்பைச் சுற்றி அரிப்பு அல்லது மேற்பகுதி கடினமாக இருத்தல்.
7. மார்பகத்தில் கட்டிப்பால் வருதல், இது கங்கத்திலும் ஏற்படலாம்.
8. காம்பில் சீழ் அல்லது புண் ஏற்படுதல்.
   
ஆரம்பத்திலேயே இவற்றை கண்டுபிடித்து சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்வது  மிகவும் நல்லது. தாக்கம் அதிகரிக்கும் முன், குணப்படுத்துவது இயலும் என்பதை  தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்ப கட்டங்களான ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2 நிலைகளில் நோய் கண்டுபிடிக்கப்பட்டால் பயப்பட வேண்டாம். 90 சதவிகிதம் குணப்படுத்தி விடலாம்.
   
குடும்பத்தில் ஏற்கனவே இந்த வியாதி இருக்குமானால் அந்த குடும்பம் சார்ந்த  அடுத்த நிலை பெண்ணுக்கு 30 வயதிலேயே சோதனை செய்வது நல்லது. இத்தகைய பெண்கள் 35-40 வயது வாக்கில் Mammography செய்து கொள்ள வேண்டும். அதுவும் வருடா வருடம் செய்ய வேண்டும். மற்றவர்கள் தங்களை சோதித்துக் கொள்ள 35-40 வயதில் Mammography செய்து கொள்ளலாம்.

மார்பகத்தில் ஏதாவது வலியை உணர்ந்தால் உடனே பயப்பட வேண்டாம். ஏனென்றால்  அவற்றில் 80 சதவிகிதம் கேன்சராக இருப்பதில்லை. மாற்று சிகிச்சையின் மூலம்  குணப்படுத்தி விடலாம். புற்றுநோயின் குணம் என்னவென்றால் அது வெகுவேகமாக பரவும். ஆக, ஏதாவது பிரச்சனை தெரிந்தால் டாக்டரிடமும் சொல்லி தீர்வு காண்பது நல்லது.

ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரலாம்.இது ஆண்/பெண் விகிதாச்சாரமான 1:100 என்ற அடிப்படையில் இருக்கும்.ஆண் மார்பக வீக்கம் Gynaecomastia என்பதை சார்ந்தது. மார்பக திசுவால் வருவது. ஆபத்தானதல்ல. சரி செய்யப்பட்டு விடலாம்.

ஆண்களுக்கும் இவை ஏற்பட்டால் டாக்டரை அணுகலாம்

1. மார்பகத்தில் வீக்கம் ஏற்பட்டால், வலியில்லாமல் இருந்தாலும் காட்ட வேண்டும்.
2. தோல் கலர் மாறி, சுருக்கங்கள் ஏற்பட்டால்,
3. மார்பக காம்பு உள்பக்கமாக திரும்பியிருந்தால்,
4. காம்பு சிவப்பாகவோ, பாறை போல் கனமாகவோ இருந்தால்,
5. காம்பிலிருந்து நீர் அல்லது சீழ் வடிந்தால் கண்டிப்பாக டாக்டரை சென்று பார்த்து அவர் ஆலோசனையை பெறவும்.
   
தாயிடமிருந்து மகன், மகளுக்கு ஜீன் மூலம் வர வாய்ப்பு அதிகம். அதிக ரிஸ்க்  எடுக்காமல் சோதித்துக் கொள்வது நல்லது. ஹார்மோன் தெரபி எடுத்துக்  கொள்பவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். சீக்கிரமே  ப்ரீயட் வருதல் அல்லது சரியாகவே வராததால், குழந்தைகளுக்கு தாய்ப்பால்  கொடுக்காததால் என பல காரணங்களாலும் மார்பக புற்றுநோய் வரலாம்.

முதல் குழந்தை பிறக்க தாமதம், டயட், உடம்பு எடை, உடற்பயிற்சி இல்லாமை மற்றும் மது குடித்தல் ஆகியவற்றாலும் இந்த வியாதி வரலாம்.40-65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் வாரத்தில் குறைந்தது 5 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பொதுவாகவே சுறுசுறுப்பாக உள்ளவர்களை இந்த வியாதி தாக்குவதில்லை.
   
பொதுவாகவே தினமும் 30 நிமிடம் வீதம் வாரத்தில் 5 நாட்களுக்கு உடற்பயிற்சி  செய்பவர்களுக்கு ஜுரம், மனச்சோர்வு, பைத்தியம், மார்பகப் புற்றுநோய் போன்றவை வரவே வராது. இத்துடன் நடைப்பயிற்சி, மாடிப்படி ஏறுதல், ஓட்டம்,  நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ் மற்றும் பேட்மின்டன் போன்ற  விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவையும் வியாதிகளை விரட்டும் திறன்  படைத்தவை. மார்பக புற்றுநோய் உள்ளவர்களும் கண்டிப்பாக தினமும் 30 நிமிடம் வீதம் குறைந்தது 5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்வது அவசியம்.

சரி, இனி வரும் முன் தடுத்தல் எப்படி?

* ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்.
* பழம், காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
* இயற்கை உணவை விரும்பி சாப்பிடுங்கள்.
* சுவைக்காக கூட்டப்படும் பொருட்களை தவிர்த்து சாப்பிட பழகுங்கள்.
* உடல் எடையை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
* உடற்பயிற்சியை ரெகுலராக செய்யுங்கள்.
* புகை, மதுப்பழக்கம் இருந்தால் அறவே நிறுத்துங்கள்.
* பிறந்த குழந்தைக்கு கண்டிப்பாக ஒரு வருடமாவது தாய்ப்பால் கொடுங்கள்.
* கொழுப்பு நிறைந்த உணவுகளை குறையுங்கள்.
* மார்பகத்தை மாதம் ஒரு முறை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.
* சந்தேகம் வந்தால், நேரம் கடத்தாமல் உடனே டாக்டரை சென்று சந்தித்து தெளிவு பெறுங்கள்.
* கர்ப்பத்தடை மாத்திரைகளை நிறைய சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
* முடிந்த வரை ஹார்மோன் தெரபியை தவிர்த்திடுங்கள்.
* முதலில்  இந்த நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் கேட்டு, சேகரித்து தெரிந்து  கொள்ளுங்கள். தோழிகளுக்கு அவசியமானால் கண்டிப்பாக சொல்லுங்கள்.
* மார்பக புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே என்ற நம்பிக்கையுடன் சிகிச்சையை தொடருங்கள். நம்பிக்கையே உங்களை குணப்படுத்தி விடும்.
* மார்பகப் புற்றுநோயை நிரந்தரமாக விரட்ட நாமும் ஒரு கருவியாக செயல்படுவோம். வெற்றி பெறுவோம்.

- ராஜி ராதா, பெங்களூரு.