வானவில் சந்தை
காலில் சக்கரத்தைக் கட்டியவர்களுக்கு
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, நீண்டகாலமாக இருசக்கர வாகனம் ஓட்டும் எவரும் காயமோ தழும்போ இல்லாமல் இருக்க முடியாது என்றார். கூடுதலாக, இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்கள் ஒன்றிரண்டு இல்லாமல் போகாது என்றார். நானோ, நாள்தோறும் அவர்கள் வீடு வந்து சேர்வதே அன்றைய தினம் தப்பிப் பிழைத்துத்தான் என்றேன். தாழ்வான மட்டம் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களை இந்தி யச் சாலைகளில் ஓட்டுவது எப்படிச் சாத்தியமில்லையோ அதற்கிணையாகவே இருசக்கர வாகனங் களை ஓட்டுவதற்கும் தோதானவை அல்ல நமது சாலைகள்.
இது சாலைகள் மோசமானவை என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. உண்மையில், கடந்த பத்தாண்டுகளில் சாலைகள் ஓரளவு மேம்படுத்தப்பட்டுவிட்டன. குறிப்பாக நெடுஞ்சாலைகள். அவற்றோடு ஒப்பிடுகையில் நகரச் சாலைகளின் பராமரிப்புத் தரம் சற்றுக் குறைவுதான். சாலைகளில் நடப்பவர்களும் இருசக்கர வாகனர்களும் ஒரு கழைக்கூத்தாடிக்குரிய நுண்ணுணர்வும் திறனும் தேவைப் படுபவர்களாக இருக்கிறார்கள்.இந்தக் காரணங்களாலேயே வாகனங்களில் செல்பவர்கள், ஓட்டுனரோ சவாரி செய்பவரோ, ஹெல்மெட் (இரு சக்கர வாகனங்களுக்கு) அணிவதும், சீட் பெல்ட் (கார்களுக்கு) அணிவதும் அத்தியாவசியமாகிறது.
ஆனால், விதிமுறைகளின்படி கவனமாக வாகனங் களைச் செலுத்துவது மட்டுமே நமது கையில் உள்ளது. மற்றதெல்லாம் தற்செயல் நிகழ்வுகளின் விளையாட்டுதான். அதனாலேயே வாகனக் காப்பீடு அவசியமாகிறது. அது இல்லாவிட்டால் போலீஸ் பிடித்து தண்டம் வசூலிப்பார்கள் என்பதற்காக அல்ல. வாகனக் காப்பீடு சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கப் பட்டிருப்பதால், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை காப்பீடு செய்திருப்பார்கள்.
ஆனால், அவற்றின் அடிப்படைக் கூறுகளை அறிந்திருக்க மாட்டார்கள். விபத்தின் போதோ, களவு போகும்போதோ தான் அவர்கள் ஒரு காப்பீடு என்ன செய்யும் என்பதையே அறிகிறார்கள். இந்தக் கட்டுரையில், வாகனக் காப்பீடு என்ன இழப்பீட்டைக் கொடுக்கும் என்பது பற்றியும், அவற்றை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் பார்க்கலாம். மோட்டார் வாகனக் காப்பீடு அதன் பயன்பாடு சார்ந்து இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.மூன்றாம் தரப்புக் காப்பீடு (Third Party Insurance) பொதுக் காப்பீட்டுச் சட்டத்தின்படி (1991), வாகனம் வைத்திருக்கும் அனைவரும் மூன்றாம் தரப்புக் காப்பீட்டை கட்டாயம் செய்திருக்க வேண்டும். ஒரு வாகனத்தை ஓட்டுபவரால், மூன்றாம் நபரின் உடல் மற்றும் உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால், இந்தக் காப்பீடு இழப்பீடு வழங்கும்.
2.முழுக் காப்பீடு (Comprehensive Policy) மூன்றாம் தரப்புக் காப்பீட்டில் சொந்த வாகனத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்காது. ஆக, சொந்த வாகனத்திற்கான இழப்பீட்டையும் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டையும் சேர்த்தே வழங்கும் காப்பீடுதான் முழுக் காப்பீடு எனப்படும். இதுவே ஒரு வாகனத்திற்குத் தேவையான முழுமையான காப்பீடாகும்.
முழுமையான காப்பீடு அளிக்கும் பயன்கள் * மூன்றாம் தரப்பு வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடு. * மூன்றாம் தரப்பு உடமைகளுக்கு (சொத்துகளுக்கு) ஏற்படும் பாதிப்பு களுக்கான இழப்பீடு. * ஓட்டுனரின் கவனமின்மை, தீ, வெடிப்பு, கலவரம், தீவிரவாதச் செயல்கள் போன்றவற்றினால் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீடு. * இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், புயல், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடு. * வெளிக் காரணங்களால் ஏற்படும் விபத்துகளுக்கான இழப்பீடு. * களவு, திருட்டு போன்றவற்றுக்கான இழப்பீடு.
இழப்பீட்டிலிருந்து விலக்கப்பட்டவை என கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம். * வாகனத்தின் ஓட்டத்தினாலும் வயதினாலும் உண்டாகும் தேய்மானத்திற்கு இழப்பீடு இல்லை. * வாகனத்தின் ஓட்டுனருக்குச் சரியான ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் எந்த இழப்பீடும் கிடைக்காது. * காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தின் மீது மதிப்பிறக்கம் (Depreciation) செய்யப்பட்டே இழப்பீடு கணக்கிடப்படும். * மின் சாதனம் மற்றும் எந்திரச் செயலிழப்புகள் (Breakdowns) இழப்பீட்டைக் கோர முடியாது. * சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு இழப்பீடு கிடையாது.
காப்புறுதித் கட்டணம் (Premium) என்பது வருடந்தோறும் வாகன உரிமையாளர் காப்பீட்டு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை. அந்தத் தொகையைத் தீர்மானிக்கும் முதன்மையான காரணிகள் இவை. காப்புறுதி பெற்றவர் தெரிவிக்கும் மதிப்பு (Insured’s Declared Value IDV)இது பெரும்பாலும் வாகனத்தின் அன்றைய சந்தை மதிப்புதான். பல காப்பீட்டு நிறுவனங்கள் இவற்றை மதிப்பிட, அந்தந்த வாகனங்களின் வயதைப் பொறுத்து மதிப்பிறக்கம் செய்யப்பட்ட ஒரு பொதுவான அட்டவணையை வைத்திருப்பார்கள்.
வாகன மதிப்பைக் குறைத்துச் சொல்வதன் மூலம் குறைந்த காப்புறுதிக் கட்டணம் செலுத்தலாம் என்று நினைக்கும் வாகன உரிமையாளர்கள் விபத்து என்று வரும்போது மாட்டிக் கொள்வார்கள். ஏனென்றால், அப்போது உண்மையிலேயே ஆகும் செலவை விடக் குறைவான இழப்பீட்டுத் தொகைதான் கிடைக்கும். வாகனத்தைச் சரியான மதிப்பிற்கு காப்பீடு செய்வதே உண்மையான பயனளிக்கும்.
வயதும் தொழிலும் வாகன உரிமையாளரின் வயதும் செய்தொழிலும் கூடக் கட்டணத்தின் மீது பாதிப்பு செலுத்துகின்றன. வயது கூடக்கூட வாகனத்தை ஓட்டுவதில் முதிர்ச்சி கூடுமென்பதால் கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும். அதே போல, ஆடிட்டர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கும் அவர்களது தொழிலின் பொருட்டு கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும்.
இழப்பீட்டு வரலாறு காப்பீட்டுக் காலத்தில் இழப்பீடு ஏதும் கோரப்படவில்லையென்றால் (Claim), அதை அங்கீகரிக்கும் விதமாக ஊக்கத்தொகை (No claim bonus) வழங்கப்படும். அது காப்புறுதிக் கட்டணத்தில் 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடியாகக் கிடைக்கும். அதே நேரம், தொடர்ந்து இழப்பீடு கோருதல், காப்புறுதிக் கட்டணத்தை அதிகரிக்கும். அதனால், சிறிய இழப்பீட்டுத் தொகைக்காக கோரிக்கை வைப்பதைத் தவிர்ப்பது நலம். வழக்கமான காப்பீடு அளிக்கும் பயன்களைக் காட்டிலும் கூடுதல் சேவைகளையும் (Add-ons) வாகன உரிமையாளர்கள் பெறமுடியும். ஆனால், அதற்காக அவர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
மதிப்பிறக்கமற்ற காப்புறுதி (Zero Depreciation cover) வழக்கமாக இழப்பீடு கோரும் போது, வாகனத்தின் அன்றைய சந்தை மதிப்பை (தேய்மான மதிப்பிறக்கம் செய்த பின்) வைத்தே இழப்பீட்டுத் தொகையை கணக்கிடுவார்கள். ஆனால், மதிப்பிறக்கமற்ற காப்புறுதி யில், முழு மதிப்பிற்குமான இழப் பீடு வழங்கப்படும். அதற்காக, காப்புறுதிக் கட்டணத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் கூடுதலாகக் கட்ட வேண்டியிருக்கும். தண்ணீர் புகுந்ததினாலோ எண்ணெய்க் கசிவினாலோ, எஞ்சின் மற்றும் கியர் பாக்சிற்கு உண்டாகும் பாதிப்பிற்கும் இழப்பீடு பெற முடியும். இதுவும் ஒரு கூடுதல் சேவையாக வழங்கப்படுகிறது.
எங்கே வாங்குவது? வாகனக் காப்பீட்டை ஒருவர் மூன்று வழிகளில் வாங்க முடியும். ஒன்று, காப்பீட்டு முகவர்களிடமிருந்து (Insurance Agents / Brokers). இரண்டாவதாக, நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களின் (நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ்-New India Assurance, ஐசிஐசிஐ லோம்பார்ட்-ICICI Lombard போன்ற) அலுவலகங்களுக்குச் சென்று வாங்குவது. மூன்றாவதாக, ஒப்பீட்டு இணையதள விற்பனையாளர்களிடம் (www.policybazaar.com, www.easyinsuranceindia.com, www.coverfox.com போன்ற) வாங்குவது. எந்த வழியில் வாங்கினாலும், நன்கு ஆலோசித்து, எதிர்கால இக்கட்டுகளை மனதில் கொண்டு சரியான காப்பீட்டை தேர்ந்தெடுப்பது நலம்.
(வண்ணங்கள் தொடரும்!)
- அபூபக்கர் சித்திக் செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர் abu@wealthtraits.com
|