இசையால் இணைந்தவர்கள்



சுகந்தி-சுதந்திர குமார்

இசைத் துறையில் ஒன்றாக பயணித்து, சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த ஜோடிதான் பாடகர் சுகந்தியும் தபேலா கலைஞர் சுதந்திர குமாரும். நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் நடந்த மனதை பதைபதைக்க வைக்கும் படுகொலைகளை யாரும் மறந்திருக்க முடியாது. சாதி வெறியர்களால் 44 பேர்எரித்துக் கொல்லப்பட்ட நினைவிடத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை மலர்ந்திருக்கிறது. அவர்களுடைய காதல் அனுபவங்கள் குறித்து பேசினேன்.

மக்கள் இசையை மேடை தோறும் பாடும் சுகந்தி, “நான் பிறந்தது புதுக்கோட்டை மாவட்டம் விளானூர் கிராமம். கல்லூரி படிப்பை திருவையாறு இசைக்கல்லூரியில் படித்தேன். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது அவரை சந்தித்தேன். அப்போது அவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். ஆனால்  வயதில் என்னை விட மூத்தவர். கல்லூரிகளில் நடத்தப்படும் இசை போட்டிகளுக்கு அனைவரும் ஒன்றாக செல்வோம். அவர் தபேலா வாசிப்பார். நான் பாடல்கள் பாடு  வேன். அவர்தான் எங்களுக்கு என்ன பாட்டு பாடலாம் என்று செல்லுவார்.

திருவுடையான் பாடல், முற்போக்கு பாடல்கள் என தேர்ந்தெடுத்து கொடுப்பார். அப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. கல்லூரியில் எந்தப் பிரச்னை என்றாலும் தைரியமாக தட்டிக்கேட்பார். இவரை பார்த்தால் கல்லூரி நிர்வாகிகள் எல்லாம் பயந்து ஓடுவார்கள். கல்லூரியில் எந்நேரமும் நாங்கள் அவரோடுதான் இருப்போம். விடுதியில் தங்கி படிக்கும்மாணவர்கள் நல்ல உணவு சாப்பிட ேவண்டும் என்று வீட்டு உணவு கொண்டுவந்து கொடுப்பார். எல்லோரிடமும் அன்பாக இருப்பார். நான் என்மீது மட்டும்தான்  பாசமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு நான்தான் முதலில் ஒரு நாள் இரவு 7 மணிக்கு கல்லூரி விடுதியில் இருந்து போன் செய்து, நான் உங்களை காதலிக்கிறேன் என்று காதலை சொன்னேன்.

‘படிக்கிற புள்ள உனக்கு எதுக்கு இப்போ லவ் எல்லாம்’னு காலையில் பேசுகிறேன், நான் இப்போது கச்சேரியில் இருக்கிறேன் என்று போனை வைத்துவிட்டார். மறு நாள் போன் செய்து லவ் எல்லாம்  வேண்டாமென அட்வைஸ் செய்தார். என்னை விரும்பாத ஒருவரிடம் காதலிக்கிறோம் என்று சொல்லிவிட்டோமோ என்று எனக்கும் கொஞ்சம் வருத்தம் இருந்தது. கல்லூரி முடிந்தபின் ஆசிரியர் பயிற்சிக்காக வேறு கல்லூரியில் சேர முடிவு செய்தேன். ‘ஏன் வேறு கல்லூரிக்கு செல்கிறீர்கள்’ என்று கேட்டு அடிக்கடி போன் போடுவாங்க. 

நான் எடுக்கமாட்டேன். அதன் பின் ஒரு வழியாக அவரும் என்னை காதலிக்க சம்மதித்தார். எங்களுடைய காதலுக்கு அவர் வீட்டில் இருந்து எதிர்ப்பு இருந்தது. எங்கள் வீட்டில், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர், அவரை கல்யாணம் செய்தால் உன்னை கொலை செய்து விடுவார்கள்  என்று பயந்தார்கள். அந்த எதிர்ப்புகளை எல்லாம் கடந்து எங்களுக்கு கீழ்வெண்மணியில் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி 6 மாதங்கள் விடுதியில் தங்கி  இருந்தேன்.

அதன் பிறகு சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கினோம். அப்போது அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் சமாதானம் ஆகி வந்தனர். எங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்று மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அவர் தபேலா வாசிப்பது மிகவும் பிடிக்கும். பாகுபாடின்றி எல்லோருக்கும் உதவும் அவருடைய நல்ல குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார் பாடகி சுகந்தி. இவரைத் தொடர்ந்து குமாரிடம் பேசினேன்.

“சுகந்தியுடைய முதல் சந்திப்பே எனக்கு மோதலாகத்தான் இருந்தது. நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது ‘சீனியர் வர்றேன் மதிக்கமாட்டீங்களா?’ என்று கேட்டார்.   அதன்பிறகு கல்லூரியில் நிலவிய சாதி வேறுபாடுகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தை சுகந்தி தலைமையில் நடத்தினோம். சுகந்திதான்  எங்கள் கல்லூரியின் மாணவர் பேரவை தலைவர். அந்தப் போராட்டத்திற்கு பிறகுதான் அவர் என்னை காதலிக்க தொடங்கினார். முதலில் அவர் என்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் போது நான் மறுத்துவிட்டேன். 

அதன் பிறகு ‘நீங்கள் சாதி பார்க்கிறீர்களா அதனால்தான் என்னை காதலிக்க மறுக்கிறீர்களா’ என்று கேட்டார். நான் சாதி மறுப்பு கொள்கை உடையவன். என்னை இவங்க இப்படி சொல்லிட்டாங்களே என்று என்னை நானே பரிசீலனை ெசய்து கொண்டேன். அதன் பிறகு என்னை நிரூபிப்பதற்காக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவருடைய நண்பர்களிடம் பேசி உங்களுடைய கேள்விகள் எல்லாம் நியாயமானது. ஆனால் நான் சாதி பார்ப்பவன் இல்லை என்று  என்னுடைய  காதலை  சொன்னேன்.

எங்கள் குடும்பம் இடைநிலை சாதி. சுகந்தி தலித் சமூகத்தை சேர்ந்தவர். இதனால் எங்க வீட்டில் பெரிய எதிர்ப்பு இருந்தது. என்னை மிரட்டாமல், சமாதானம் செய்வதற்கு வீட்டில் எல்லா முயற்சியும் எடுத்தார்கள். கடைசியாக அந்தப் பெண்ணை திருமணம் செய்தால் வீட்டிற்கு வரக் கூடாது, நாங்கள் யாரும் திருமணத்திற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டனர். சாதி குறித்து அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால் சொந்தபந்தங்கள் இழிவாக பேசுவார்கள் என்று கவலைப்பட்டனர். வீட்டு எதிர்ப்பை எல்லாம் கடந்து திருமணம் செய்ய முடிவு செய்தேன். யாரும் திருமணத்திற்கு வரமாட்டாங்களே என்ற வருத்தம் மட்டும் இருந்தது. சாதி மறுப்பு திருமணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்தோம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் அவரிடமும் மாதர் சங்க தோழர் சுகந்தி கிட்டேயும் கேட்டு திருமண ஏற்பாடு செய்தோம். சாதி மறுப்பு திருமணம் செய்தால் கண்டிப்பாக வழக்கமாக வரக்கூடிய கூட்டத்தை விட அதிகமாக வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பாரதி புத்தகாலயம் தோழர் சிராஜ், திருமணத்தை வெண்மணியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதே  போலவே வெண்மணியில் எங்களது திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் திராவிட கழகம் களி.பூங்குன்றனார் தலைமையில் நடைபெற்றது. என்னுடைய திருமணம் யாரும் இல்லாமல் நடைபெறுமோ என்று நினைத்திருந்தேன். ஆனால் முற்போக்காளர்கள், நண்பர்கள் என்று திருமணம் நடந்த இடம் முழுவதும் கூட்டமாக நிறைந்திருந்தது’’ என்றார்.

- ஜெ.சதீஷ்