நெஞ்சை உருக்கும் உப்பளப் பெண்கள்... வாழ்வெங்கும் வலிகள்...



உப்பு இல்லாமல் உயிர் இல்லை எனும் அளவுக்கு நம் வாழ்வோடு கலந்துள்ளது. வெயிலில் மினு மினுக்கும் வெள்ளைத் தங்கம்.  கடற்கரை நகரங்களில் கண்ணுக்கு எட்டிய அளவுக்கு உப்பளங்களில் கொட்டிக் கிடக்கும் இந்த வெள்ளைத் தங்கம் தூர இருந்து பார்க்கத்தான் கொள்ளை அழகு. கொதிக்கும் வெயிலில் உப்பளத்தில் இறங்கி நடப்பது கற்பனை செய்யக் கூட முடியாதது. நினைக்கும் போதே கால்கள் தகிக்கும். முதுகுத் தண்டில் வெயில் சுளீரிடும். ஆனால் இந்த உப்பளத்தில் 30 ஆயிரம் பெண்கள் தங்கள் கால்கள் பொத்தலிட நடந்தும், சுமந்தும் வேலை பார்க்கின்றனர். வெப்ப பூமியில் கரிக்கும் உப்புச் சூடும் அவர்களை உருக்கி வதைக்கிறது. மென் விரல்கள் உப்பளங்களில் உலர்ந்து சருகாகிறது. உப்பளப் பணியில் வலியுடனே வாழ்வைத் தொடரும் பெண்களின் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே வெப்பம் சூழ்ந்தது.

இவர்கள் ஜனநாயக பெண்கள் இயக்கமாக தலை நிமிர்ந்து தங்களது உழைப்புக்கான கூலியை, தங்கள் வலிகளுக்கான கேள்விகள் கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்தியா கடல் வளத்தில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 30 லட்சம் பேர் கடல் சார்ந்த தொழிலில் உள்ளனர். மீன் பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக இருப்பது உப்பளத் தொழில். தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரை இங்கு உப்பு உற்பத்தி நடக்கிறது. இந்த உப்பில் பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடல் நீரைத்  தளங்களில் பாய்ச்சி சூரிய வெப்பத்தில் உப்பு தயாரிக்கப்படுகிறது. பாத்திகளைச் சீர் செய்து அமைத்த தளங்களில் கடல் நீர் பம்ப் செய்து தெப்பம் உருவாக்கப்படுகிறது. இப்படி பம்ப் செய்யும் போது சூரிய வெப்பம் சரியான டிகிரி அளவில் இருக்க வேண்டும். 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கடல் நீர் பாய்ச்சி வெண்மை நிறத்திலான உப்பை உற்பத்தி செய்கின்றனர். நாட்டின் உப்பு உற்பத்தியில் 20 சதவீதம் மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் உற்பத்தி மனித உழைப்பை மட்டுமே நம்பியுள்ளது. ஆண்களுக்கு இணையாக உப்பளத் தொழிலில் பெண்கள் பணிபுரிகின்றனர்.

வெயில் காலத்தில் மட்டும் தான் இவர்களுக்கு வேலை. மழைக்காலங்களில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கிப் பாழாகிவிடும். ஆண்டில் மூன்று மாதங்களுக்கு எந்த வேலையும் இன்றி இவர்கள் வாழ்க்கை கடனில் மூழ்கித் தவிக்கிறது. உப்பளத்தில் கடின உழைப்பை விதைக்கும் இவர்களுக்கு குறைந்த கூலியே கிடைக்கிறது.  அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் சட்டத்தைப் பயன்படுத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். 

உப்பளங்களில் பணியாற்றுபவர்களுக்கு தினக் கூலி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆண், பெண் இருவரும் உப்பளத் தொழில்களில் ஈடுபட்டாலும் கோடு போடுவது, உப்பு வாருவது, உப்பளங்களில் உப்பைச் சுமந்து வந்து குவிப்பது என பெரும்பாலான பணிகளைப் பெண்களே செய்கின்றனர். உப்பின் வீரியமும், வெயிலின் அனலிலும் இவர்கள் உடல் நலமும் சேர்ந்தே மோசமடைந்து  வருகிறது.

இந்தப் பெண்களுக்கான தேவை குறித்துப் பேசுகிறார் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாராத் தொழிலாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, ‘‘இதுவரை உப்பளப் பெண்களோட பிரச்னையை யாரும் கேட்கல. அவங்களுக்காகப் பேசுறது சந்தோஷம். உப்பளத்துல 80 சதவீதம் வேலைகள பெண்கள் செய்றாங்க. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமத்தான் வேலை பார்க்கறாங்க. வேலை செய்யுற இடத்துல ஓய்வெடுக்க ஒரு நிழல் கூடக் கிடையாது. தினக்கூலியான இவங்க வேலை பார்த்தாத்தான் கூலி கிடைக்கும். வேலை நேரத்துல அடிபட்டா எந்த நிவாரணமும் கிடைக்காது.

ஒரு பெண் அலுமினியக் கூடை யில் 25 கிலோ உப்பைத் தலைல தூக்கிட்டுப் போவாங்க. ஒரு நாளைக்கு இரண்டரை டன் உப்பைச் சுமந்து கொட்டினாத்தான் 200 ரூபாய் கூலியாய்க் கிடைக்கும். மழை, பனிக்காலத்துல இவங்களுக்கு வேலையே கிடைக்காது. கட்சிகளோட தேர்தல் அறிக்கையிலதான் இவங்களுக்கு மழைக்காலத்துல நிவாரணம் கொடுக்குறதா வாக்குறுதி கொடுப்பாங்க. இவங்க ஆட்சிக்கு வந்தப்புறம் இழப்பீடு எதுவும் கொடுக்கறதில்ல.

சுத்தமான குடி தண்ணீ, சாப்பாடு, ஓய்வு நேரம், கழிப்பிடம், குழந்தைகள் காப்பகம், ஓய்வறை, பாதுகாப்புக் கருவி, மருத்துவம், போக்குவரத்து என விதிகளை உருவாக்கியும் யாரும் இதெல்லாம் உப்பளங்கள்ல நடைமுறைப்படுத்தல. தொழிலாளர் பணியிடப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பற்றின தேசியக் கொள்கையை 2009ம் வருஷம் மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டது. ஆனால் அந்தக் கொள்கை சட்ட வடிவமாக்கப்படலை. உப்பளப் பெண்களோட உண்மை நிலைய சொல்றதுக்காக ஜனநாயக பெண்கள் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு மூலமா பெண்கள் தங்களோட உரிமைப் போராட்டங்களை நடத்தறாங்க. ஆனா உப்பளப் பெண்கள் வாழ்க்கையில இன்னும் இருட்டுத்தான்  மிச்சமிருக்கு. அவங்களும் விடியலைப் பார்க்கத்தான் எல்லோருமா போராடிட்டு இருக்கோம்"  என்கிறார்.

கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த சண்முகக்கனி, ‘‘எனக்கு வயசு 35 ஆயிடுச்சு. எங்க ஆயாவும் அப்பனும் படிக்க வைக்கல. பத்து வயசுல இருந்து உப்பளத்துல வேலை செய்யுறேன். என்னோட கணவர் முருகேச பாண்டியும் உப்பளத்துல வேலை செய்றார். எனக்கு ஐஞ்சு குழந்தைகள். எல்லாரும் படிக்கிறாங்க. என்னோட மாமி வீட்ல கொடுத்த தம்பாடு (உப்பளம்) சின்னதா இருக்கு. ராத்திரி ரெண்டு மணிக்கு வெளிய இருக்கிற உப்பளத்துக்கு கூலிக்கு வேலைக்கு போய்டுவேன். ஏழுமணிக்கு வீட்டுக்கு வந்து குழந் தைகள பள்ளிக்கு அனுப்பிட்டு சொந்த தம்பாட்டுல வேலை பார்ப்பேன். தினமும் வாங்குற கூலிய வெச்சுத்தான் குடும்பம் நடக்குது. அதுவும் சில சமயம் செலவுக்குக் காணாது.

சொந்த தம்பாடுல தினமும் 50 ரூபாய் தான் கிடைக்கும். அத சேர்த்து வெச்சு மழை வர்றப்போ செலவு பண்ணுவேன். உடம்புக்கு முடியல, கல்யாணம் இப்படி செலவுகளுக்கு கடன் வாங்கிச் செய்யனும். மழைக் காலத்துல மூணு மாசம் வேலையே இருக்காது. அதுக்கு அரசாங்கத்துல உதவறதா சொன்னாங்க. இதுவரைக்கும் எந்த உதவியும் கிடைக்கல. உப்பளத்துல வேலை செய்ற பெண்களுக்கு ஒரு கூட்டுறவு சங்கம் இருந்தா கஷ்ட நேரத்துல உதவியா இருக்கும்.

உப்பளத்துல வேலை செய்யுற பொம்பளைங்க பாடு ரொம்பவும் மோசம். ஆம்பளைங்க குடிக்கிறதால பொம்பள வேலை பார்த்தாதான் குடும்பம் நடக்கும். உப்பளத்துல கால்ல ரப்பர் கட்டிட்டு கோடு போடுறோம். எப்பவும் சூடாவே இருக்கிறதால கால் புண்ணாயிடும். உப்பளத்துலயே கிடக்குறதால புண் ஆறவே ஆறாது. குடும்பத்த நடத்தணும், புள்ளைங்க படிக்கணும். இதுக்காக எல்லா வலியையும் பொறுத்துட்டு பொம்பளைங்க வேலை பார்க்குறோம். பொம்பளைங்க வீட்ல குழந்தைங்கள கவனிச்சிக்க முடியாது.

வெயில் வர்றதுக்கு முன்னால வேலைக்கு போயிடறோம். வீட்ல உள்ள மூத்த பெண் புள்ளைகள் மற்றதுகளையும் பள்ளிக்குடம் அனுப்புற வேலையப் பார்க்கும். இதனால மூத்த பெண் குழந்தைகள் படிப்பை விட்டுட்டு வீட்டு வேலைகள கவனிக்குது. அதுங்க படிக்க முடியாமப் போய்டுது. உப்ப சுமந்து சுமந்து கண்ணுல சீக்கிரமே பிரச்னை வந்துடும். கருப்பைப் பிரச்னை இல்லாத பொம்பளைங்களே இல்லை. கால் எப்பவும் பொத்தலாத்தான் இருக்கும். ஆனாலும் எங்களுக்கு உப்பத் தவிற வேற எதுவும் தெரியாது. எங்க பிள்ளைகளாவது படிச்சி வேற வேலைக்குப் போகட்டும் ’’ என்கிறார் சண்முகக்கனி.

ஜனநாயகப் பெண்கள் இயக்கம் உப்பளப் பெண்கள் மத்தியில் இயங்கி வருகிறது. இதில் பெண்கள் இணைந்து தங்கள் பிரச்னைகள் பற்றி விவாதிக்கின்றனர். உழைப்புக்கு ஏற்ற கூலி, இழப்பீடு போன்ற விஷயங்களுக்காகப் போராடி வருகின்றனர். மழைக்காலங்களில், வருமானம் இல்லாத காலங்களில் தங்களது வாழ்வாதாரத்துக்காக அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

சண்முகக்கனியின் தோழி முத்துமாரி இதுகுறித்து கூறுகையில், ‘‘உப்பளத்துல வேலை பார்க்குறது அவ்வளவு சாதாரணமில்ல. இருட்டவே வேலைக்கு ஓடுவோம். குடிக்கத் தண்ணியோ, ஒதுங்கவோ சின்ன இடம் கூட இருக்காது. சாப்பிடுறதும் வெயில்லயேதான். குடிக்கத் தண்ணி கூட கையோட கொண்டு போய்டுவோம். வீட்டுக்கு தூரமான நாள்ல பொம்பளை அத்தனை கஷ்டத்தையும் தாங்கிட்டுத்தான் வேலை பார்க்கணும்.

உப்பளத்துல அடிபட்டு, காயம் ஆனா மருந்து எதுவும் கிடைக்காது. கூட வேலை பார்க்குற பொம்பளைங்கதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும். அப்படிப் போனா போன எல்லாருக்கும் அன்னிக்கு கூலி கிடைக்காது. ஒண்ணுக்குப் போக முடியாம அடக்கி வெச்சு சிறுநீர் பை இறங்கிப் போய்டும். இதனால பொம்பளைங்களுக்கு கருப்பை இறங்கறதும் உண்டு. கால்ல புண்ணு, அடி வயித்துல வலி, கால் மூட்டும், முதுகுத் தண்டுலயும் வலி இப்படி எல்லா வலியும் சுமந்துட்டுத்தான் உப்பளத்துல ஒவ்வொரு பொம்பளையும் வேலை செய்றா. எங்களைப் பற்றி யாரு யோசிக்கிறா?’’ என்று கலங்குகிறார் முத்துமாரி.

உப்பு இல்லாவிட்டால் இங்கு யாரும் உணவருந்த முடியாது. மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்கள், விலங்குகள் உயிர்வாழவும் உப்பு தேவைப்படுகிறது. இந்த உப்பு தயாரிப்பில் முக்கிய இடத்தில் இருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தின் உப்பளங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் குத்தகைக்கு எடுத்தும் உப்பு தயாரித்து வருகின்றனர். உப்பளங்களில் உழைக்கும் பெண்களின் அடிப்படை உரிமைகளை மதித்து அவர்களுக்கு வேலையிடத்தில் போதிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வேலை செய்யும் காலகட்டத்தில் அவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு அவசியம். அதே போல் வேலையில்லா காலங்களில் இவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி மாட்டிக் கொள்கின்றனர். அந்தக் கடனை கட்டவும், வாழ்க்கை நடத்தவுமே வாழ்க்கை முழுக்க உப்பளத்தில் கரைகிறது இந்தப் பெண்களின் வாழ்க்கை.

உப்பளப் பணியில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். தகரம் வேய்ந்த வீடுகளில் வசிக்கின்றனர். குறைந்த பட்ச வசதிகள் மட்டுமே இவர்களுக்கு உள்ளது. இவர்களது குழந்தைகள் படித்தாலும் பெரிய வேலைகள் எதற்கும் செல்ல முடியவில்லை என்று குமுறுகிறார் ராமலட்சுமி. உப்பளப் பெண்களுக்கான கஷ்டங்கள் எவ்வளவோ இருக்கு என்று தொடர்கிறார் ராமலட்சுமி, ‘‘எங்க வீட்ல மூணு பிள்ளைகள், அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆனதால எனக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. நான் எட்டாம் வகுப்பு லீவுல உப்பள வேலைக்குப் போனேன். சின்னக் காயம் கால்ல ஆச்சு. உப்பளத்துல வேலை பார்த்த வரைக்கும் புண் ஆறல. பள்ளிக் கூடம் போனதுக்கு அப்புறம்தான் ஆறுச்சு.

இப்ப இருக்கிற பிள்ளைகள படிக்க வைக்கறோம். பிளஸ் 2 படிச்ச துக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு இங்க உள்ள பிள்ளைகளுக்குத் தெரியல. இங்க படிச்சாலும் யாரும் அரசாங்க வேலைக்கெல்லாம் இதுவரைக்கும் போகல. அவங்களுக்கு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கு. கல்யாணம் பண்ணி இந்த ஊருக்கு வர்ற பொம்பளைப் பிள்ளைகள் உப்பள வேலைக்குத்தான் போகனும். சில பிள்ளைகள் உப்பளத்துல வேலை பார்க்க முடியலன்னு இறால் கம்பெனிக்கு வேலைக்குப் போனாங்க. அங்க வேலை பார்த்தா பொம்பளைப் பிள்ளைகளுக்கு கருப்பை சுருங்கிடுது. இதனால குழந்தை பிறக்கலைன்னு ஒரு பொண்ணு டைவர்ஸ் ஆகி அம்மா வீட்டுக்கே வந்துட்டா.

படிச்சாலும் உப்பளத்த விட்டு வேற வேலைக்குப் போக பஸ்வசதி எதுவும் இல்ல. வெளியில பாதுகாப்பா பொம்பளைகள் வேலைக்குப் போக முடியாது. படிச்சிட்டும் பல பிள்ளைகள் மறுபடியும் உப்பள வேலைக்கே போறாங்க. உப்பளத்துக்கு ராத்திரி 2 மணிக்கும், அதிகாலை 5 மணிக்கும் வேலைக்குப் போய்ட்டு காலைல 10 மணிக்குத்தான் திரும்பி வருவாங்க. அதுவரைக்கும் அவங்க பிள்ளைகள் வீதியிலதான் சுத்திட்டுக் கிடக்கும். குழந்தைகள் தானா வளரும். அதுங்களே கிளம்பி பள்ளிக்கூடத்துக்குப் போய்டும். இதுவரைக்கும் குழந்தைகளுக்குப் பிரச்னையில்ல. ஆனா இப்போ இருக்கிற இளைய பசங்கள் குடிக்கிறதோட, கஞ்சா போடறதும் உண்டு. இதனால இனிமேல குழந்தைகளுக்கும் பிரச்னை வர வாய்ப்பிருக்கு.

குடிக்கிறதுக்கு நல்ல தண்ணியோ, இருக்கிறதுக்கு நல்ல வீடோ இங்க இல்ல. அம்பாரில ஏறி ஏறி உப்புக் கொட்டி எல்லாருக்கும் கால் வலிக்கு மருந்து சாப்பிடுறாங்க. பொம்பளைங்க இந்த உப்பளத்துல வேலை செஞ்சும் வலியோட தான் அலையுதுக. தன் பிள்ளைகள் படிச்சி மாற்றம் வரணும்னு உழைக்குதுக. அடுத்த தலைமுறைப் பெண் பிள்ளைகளாவது நல்ல படியா வாழணும். இந்தப் பொம்பளைங்களுக்கு உதவ ஒரு கூட்டுறவு சங்கம் வரணும். அரசு சொல்ற திட்டங்கள் எதுவுமே இங்க வந்து சேர்றதில்ல. உப்பளத்துல பொம்பளைகள் பாதுகாப்பா வேலை பார்க்கணும். இதெல்லாம் எப்ப மாறும்? அரசாங்கம் மனசு வைக்கணும்’’ என்கிறார் ராம லட்சுமி. உப்பளத்தில் ரணம் மிகுந்த கால்களுடன் உப்பு சுமக்கும் பெயர் அறியாப் பெண்களின் கண்ணீருக்கு விடை கிடைக்க வேண்டும்.

- யாழ் ஸ்ரீதேவி