டவுட் கார்னர்?எனது சம்பளத்திலிருந்து மாதந்தோறும் சிறிய தொகையை எதிலாவது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். நல்ல பலனளிக்கும் விதத்திலும் அதே நேரம் பாதுகாப்பான முதலீடாகவும் இருக்க எவ்வழியில் முதலீடு செய்யலாம்?
- மோகனாம்பாள், கும்பகோணம்.

பதிலளிக்கிறார் நிதி ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமி...
மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே உங்களுக்கான சிறந்த வழி. உடனடியாக பணத்தை முதலீடு செய்து உடனடியாக எடுப்பதை விட சில காலம் வரை முதலீட்டை நீட்டித்துக் கொண்டே போனால் நல்ல லாபத்தை  பார்க்க முடியும். சொல்லப்போனால் ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலும் மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் இறுதியில் கொழுத்த லாபத்தைப் பெற வாய்ப்பிருக்கிறது. மியூட்சுவல் ஃபண்டிலேயே பல வகைகள் இருக்கின்றன. அதில் எது உங்களுக்கு உகந்ததாக இருக்குமோ அதனை நீங்கள்  தேர்வு செய்து கொள்ளலாம். மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கென பல நிறுவனங்கள் இருக்கின்றன. Index Fund ஆக நீங்கள் முதலீடு செய்தீர்கள் என்றால் எந்த நிறுவனமாக இருந்தாலும் ஒரே அளவிலான லாபம் கிடைக்கும்.

500 ரூபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை இதற்கு அவசியம். ஆன்லைன் வழியாக நீங்கள் முதலீடு செய்யலாம். சென்செக்ஸ் புள்ளிகளின் அடிப்படையில் உங்களது முதலீடு கணக்கிடப்பட்டு உங்களுக்கான லாபம் கிடைக்கும். மியூட்சுவல் ஃபண்டை பொறுத்த வரை நீண்ட கால முதலீடு மட்டுமே பெருத்த லாபத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.

- கி.ச.திலீபன்

(வாசகர்கள் இது போன்ற சந்தேகங்களை எங்களுடைய முகவரிக்கு அனுப்பலாம். உங்களுடைய சந்தேகங்களுக்கு ‘டவுட் கார்னர்’ பகுதியில்  விடை கிடைக்கும்.)