ரோஜா நிற காதல்
பெற்றோரின் ‘பர்த் டே’ ஞாபகம் இருக்கோ இல்லையோ, கண்டிப்பாக பிப்ரவரி 14ம் தேதியை யாரும் மறப்பதில்லை. உலகம் முழுவதும் வாழ்கிற காதலர்களால் இது காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டாம் கிளாடியஸ் என்னும் அரசனின் கட்டளையை மீறி, ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைத்த குற்றத்திற்காக வாலன்டைன் பாதிரியாரின் தலை துண்டிக்கப்பட்ட தினம்தான் பிப்ரவரி 14. அந்தத் தியாகத்தைப் போற்றும் விதமாகவே இந்த நாளை காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிமாறிக் கொள்ளும் பரிசுப் பொருட்களில் இதய வடிவம் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கும் கீ செயின்களுக்கும் தனித்த இடம் உண்டு. அனைத்தையும் தாண்டி தனித்த இடம் ரோஜாவுக்கு.
ஏன்?
காதலைச் சொல்ல தகுந்த மலர் ரோஜா. பண்டைய கிரேக்க மரபின்படி காதல் தெய்வத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘இரோஸ்’ (Eros). இவரால்தான் காதல் மலருக்கு ரோஸ் என்கிற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். காதல் தூதுவனாக இருப்பதால்தான் இந்த ரோஜாவுக்கு காதலில் ஏக மரியாதை. காதலர் தினத்துக்காக ஸ்பெஷலாக ஓசூர் பகுதியிலிருந்து ஆண்டுதோறும் 1 கோடிக்கும் அதிகமான ரோஜா மலர்கள் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய், சீனா, தாய்லாந்து மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
சின்னச் சின்ன பரிசுகளும் பூக்களுமே அன்பைப் பலப்படுத்துகின்றது. அந்த அன்புக்கு மேலும் உறுதியாக விட்டுக் கொடுக்கும் மனமும் புரிந்துகொண்டு அனுசரித்துச் செல்லும் குணமும் அவசியம். அப்படி வாழும் ஜோடிகளுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினமே! வெளிநாடுகளில் காதலர் தின கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே துவங்கி விடுகிறது.
பிப்ரவரி 7: ரோஸ் டே - காதலை வெளிப்படுத்த உகந்த சிவப்பு ரோஜாவை கொடுத்து மகிழும் நாள். பிப்ரவரி 8: ப்ரபோஸ் டே - காதலை எதிர்பாராத வகையில் வித்தியாசமாக வெளிப்படுத்தும் நாள். பிப்ரவரி 9: சாக்லெட் டே - தன் ஜோடிக்கு அவர்கள் விரும்பும் சாக்லெட்டை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நாள். பிப்ரவரி 10: டெடி டே - பெண்களுக்கு டெடி பியர் பிடிக்கும் என்பதால் தன் அன்புக் காதலிக்கு அழகிய பெரிய காதல் சின்னம் பதித்த டெடி பியர் பொம்மையை வழங்கி மகிழ வைக்கும் நாள். பிப்ரவரி 11: ப்ராமிஸ் டே - தன் காதலன் அல்லது காதலிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் காதலை உறுதி செய்யும் நாள். பிப்ரவரி 12: ஹக் டே - உன் மீது அன்போடும் அக்கறையோடும்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் அணைப்புக்கான நாள். பிப்ரவரி 13: கிஸ் டே - தன் மனப்பூர்வமான அன்பை முத்தத்தால் வெளிப்படுத்தும் நாள். பிப்ரவரி 14: வாலன்டைன்ஸ் டே - அன்புப் பரிசுகள் மூலம் தன் அன்பை வெளிப்படுத்தி மகிழும் இனிய நாள்.
- சூர்யா சரவணன்
காதலர் தினத்தை பிப்ரவரி 14 மட்டுமே கொண்டாடுறது எனக்கு சுத்தமா பிடிக்காது. வருஷம் 365 நாளும் எனக்கு காதலர் தினம்தான். அடிச்சுக்குறதும் சமாதானம் ஆவறதும்... மீண்டும் உடனே சண்டைக்கு நிக்கிறதும்தான் அழகு. காதல் இல்லாமல் வாழ்க்கை எந்தக் கட்டத்திலும் ருசிக்காது. - சமந்தா
|