நீராலானது இவ்வுலகு
காலநிலை மாற்றமும் நீர் மேலாண்மையும்
காலநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் தற்போதைய பாதிப்புகள் மற்றும் எதிர்கால பாதிப்புகள் பற்றியான பல ஆய்வுச் செய்திகளை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும், அதன் பாதிப்புகளை குறைப்பதற்கும் எத்தகைய நடவடிக்கைகளை நம் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன என்னும் கேள்வியையும் தொடர்ச்சியாக நாம் விவாதித்துக் கொண்டு வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தை பற்றியும் அதில் உள்ள நீர் மேலாண்மை பற்றியும் பார்க்கலாம். இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்டது என்பதை கூற தேவையில்லை. தற்போதைய பாரதிய ஜனதா அரசு இந்த திட்டத்தை இது நாள் வரை மறுக்கவில்லை என்பதையும் நாம் இங்கு நினைவுக் கொள்ளுவோம்.
திட்டத்தின் கொள்கைகள் ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் நீடித்த நிலைத்த வளர்ச்சி என்னும் அடிப்படையில் காலநிலை மாற்றத்திற்கான திட்டங்களை வடிவமைப்பு செய்வது என்பது முதல் கொள்கையாக கூறப்பட்டுள்ளது. மேலும் புவி வெப்பமயமாக காரணமாக உள்ள வாயுகளின் வெளியேற்றை குறைப்பது, அதற்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது என்றும் பல கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை செயல்படுத்த தனியாக 8 செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை: தேசிய சூரியசக்தி திட்டம், தேசிய எரிசக்தி திறன் அதிகரிப்பு திட்டம், நிலைத்த வாழ்வியலுக்கான தேசிய திட்டம், தேசிய நீர் திட்டம், இமய மலை சூழல் பாதுகாப்பு தேசிய திட்டம், பசுமை இந்தியாவிற்கான தேசிய திட்டம், நிலைத்த வேளாண்மைக்கான தேசிய திட்டம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்தான வேலை திட்டத்திற்கான தேசிய திட்டம். இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த பிரதமர் அலுவலகத்திற்கு கீழாக செயல்படும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
எரிசக்தியும் நீர் தேவையும் இந்தியாவின் 55 சதவீத மின்சார உற்பத்தி நிலக்கரி சார்ந்த அனல் மின்நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. 10 சதவீத மின்சார உற்பத்தி எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெறப்படுகிறது. நீர் நிலைய மின்சார உற்பத்தி 26 சதவீதம். காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலமாக 6 சதவீத உற்பத்தியும், அணுசக்தி மூலமாக 3 சதவீத மின்சார உற்பத்தியும் செய்யப்படுவதாக திட்ட அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் நாம் கவனிக்க வேண்டிய செய்தி இந்தியாவின் 65 சதவீத மின்சார உற்பத்தி என்பது புவி வெப்பமயமாக காரணமாக உள்ள வாயுகளை வெளியேற்ற கூடியவையாக உள்ளது என்பதே. எனவே இந்த மின்சார உற்பத்தியில் இருந்து நாம் வெளியேற வேண்டும்.
மேலும் உலக இயற்கைவள நிறுவனத்தின் ஆய்வுப்படி இந்தியாவில் இயங்கி வரும் சுமார் மிகப் பெரிய 20 அனல் மின்நிலையங்களில் 14 மின்நிலையங்கள் போதிய நீர் இல்லாத காரணத்தால் பல முறை நிறுத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய மின்சார நிலைகளில் நன்னீரே பயன்படுத்தப்படுகிறது. எதிர்கால நீர் கிடைக்கும் தன்மையை கருத்தில் கொண்டு அனல் மின்நிலைகளை நாம் மூட வேண்டிய தேவை உள்ளது. அதே வேளையில் மின்சார உற்பத்தியும் செய்ய வேண்டிய சவாலும் உள்ளது.
இந்தியாவில் உள்ள 44 சதவீத மக்கள் இன்றைய தினம் மின்சார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. இவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் அதே வேளையில் சூழலை பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. அதற்கான நீடித்த நிலைத்த மின்சார உற்பத்தியை நாம் முன்னெடுக்க வேண்டும்.
தேசிய நீர் கொள்கை காலநிலை மாற்றத்திற்கான தேசிய திட்டத்தில் கூறப்பட்டுள்ள தேசிய நீர் செயல்திட்டம் மத்திய அரசின் தேசிய நீர் கொள்கையின் அடிப்படையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய நீர் கொள்கை 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய கொள்கை மூலம் பின்வாங்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய நீர் கொள்கை என்பது உலகமய சந்தை பொருளாதார பார்வை கொண்டது. நீரை விற்பனை பண்டமாக மட்டுமே பார்க்கும் கொள்கை அது. காலநிலை மாற்றத்தின் காரணமாக நாம் எதிர்கொண்டு இருக்கும் சவால்களை சந்திக்க அது போதுமானதாக இல்லை.
திட்டத்தின் போதாமைகள் காலநிலை மாற்றம் காரணமாக உண்டாகக் கூடிய பல ஆபத்துகளில் நீர் வறட்சியும் உணவு உற்பத்தி பாதிப்பும் முக்கியமானது. இந்த இரண்டு பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய செயல் திட்டங்கள் இவ்வறிக்கையில் இல்லை. மேலும் நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற அடிப்படை பிரச்சனைகள் இத்திட்டத்தில் கருத்தில் கொள்ளப்படவில்லை. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய சட்டங்களோ அதிகார அமைப்புகளோ உருவாக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இந்த திட்டம் எந்த வகையில் மக்களை காக்கும் என்பது தெரியவில்லை.
தற்போதைய பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பின்பு இத்திட்டத்தின் செயல்பாடு மேலும் முடங்கியுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான எந்த திட்டத்திற்கும் போதியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. கங்கை நதி பாதுகாப்பு மட்டுமே முன்வைக்கப்படுகிறது. இமய மலை பாதுகாப்பில் சற்று கவனம் செலுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த எந்தவித செயல்பாட்டிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரை இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது.
அதே நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பொட்டிபுரம் தாலுகாவில் நியூட்ரினோ திட்டத்தை அமைக்க மத்திய அரசு வேகமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இத்திட்டம் சூழலுக்கு மிகவும் ஆபத்தானது என்று சூழலியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி நம்மை எதிர்கொள்ள இருக்கும் மிகப் பெரிய ஆபத்தான காலநிலை மாற்றம் குறித்த அரசின் செயல்திட்டம் கவலை அளிக்கக் கூடிய வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகமயமாக்கலும் காலநிலை மாற்றமும் காலநிலை மாற்றத்தை நாம் எதிர்கொள்ள தேவையான தொழில்நுட்பங்களை வளர்ந்த நாடுகளில் இருந்து பெற வேண்டியுள்ளது. இவற்றை பெறுவதிலும் இந்தியா போதிய கவனம் செலுத்தவில்லை. அணுசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற சூழல் பாதிப்பு தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமே இந்தியா செயல்பட்டு வருகிறது. மாற்று எரிசக்தி குறித்தான தொழில்நுட்ப உதவிகளை வெளிநாடுகளில் இருந்து பெற எவ்வித முனைப்பும் காட்டாமல் உள்ளது இந்தியா. பிரதமர் மோடியின் வெளிநாட்டு கொள்கை இப்படித்தான் உள்ளது. உலகமய சூழல் நமக்கான தொழில்நுட்பங்களை பெறுவதில் பல சிக்கல்களை உருவாக்குகிறது.
எரிசக்தி மற்றும் நீர் மேலாண்மை எரிசக்தி மற்றும் நீர் மேலாண்மை இரண்டும் பிரிக்க முடியாதவை. தற்போது உள்ள அனல் மின்நிலையங்கள், அணுசக்தி மின்நிலையங்கள் நீரின் இருப்பிலேயே இயங்குகின்றன. நீர்த் தேவை இவற்றுக்கு அதிகமாக உள்ளது. எனவே இவற்றிலிருந்து வெளியேறுவது நீர் பாதுகாப்பிற்கு மிகவும் தேவையானது.
இவை எல்லாவற்றையும் விட காலநிலை மாற்றம் காரணமாக மாறி வரும் புதிய சூழலை புரிந்து கொண்டு நீரை எப்படி சேமிப்பது, அதனை எப்படி பயன்படுத்துவது, மேலாண்மை செய்வது எப்படி என்பதற்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். எதிர்காலம் நமக்கான நீரை அவ்வளவு எளிதாக தரப்போவதில்லை என்பதை பல நிகழ்வுகள் உணர்த்துகின்றன. எனவே இதனை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். அரசும் செயல்பட வேண்டும்.
(நீரோடு செல்வோம்!)
|