அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்



அன்புக்கரசி - ஜெயச்சந்திர ஹாஸ்மி

காதல் ஒருவரை ஒருவர் புரிந்து்கொள்ளும் கருவி், பிரிவு என்பது தற்காலிகம்தான் என்பதை உணர்ந்த காதல் ஜோடி ஜெயச்சந்திர ஹாஸ்மி - அன்புக்கரசி. திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக இருக்கும் ஜெயச்சந்திர ஹாஸ்மி பேசுகையில், “நாங்கள் இருவரும் லயோலா கல்லூரியில் வெவ்வேறு துறைகளில் படித்தோம். முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது தனியார் வானொலியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே ஒரு போட்டி நடைபெற்றது. வாரம் ஒவ்வொரு கல்லூரி ஒரு முழுநாள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 14 பேரை தேர்ந்தெடுப்பார்கள்.

அப்படி எங்கள் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேரில் நானும் அன்பும் இருந்தோம். அப்படித்தான் நான் அவளை சந்தித்தேன். நானும் அன்புவும் ஒரே அணியில் இருந்தோம். ஒரே கல்லூரி என்றாலும் நாங்கள் 14 பேரும் அங்குதான் நண்பர்களானோம். அன்புவும் அப்படித்தான் பழக்கமானார். போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றோம். அதன்பிறகு கல்லூரியிலும் எங்கள் நட்பு தொடர்ந்தது.

அது ஃபேஸ்புக்குக்கு முந்தைய ஆர்குட் காலம். ஒரு நாள் அன்பு என்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று ஆர்குட்டில் சொன்னாள். என்ன என்று தொடர்ந்து கேட்டதற்கு, ‘எனக்கு எப்போ அதை உன்கிட்ட நேர்ல சொல்ற தைரியம் வருதோ... அப்ப சொல்றேன்’ என்று பதில் அனுப்பினாள். அப்போதே லேசாக யூகித்து விட்டேன்.

நான் நினைத்தது போலவே ஒரு நாள் எஸ்.எம்.எஸ் மூலம் என்னை காதலிப்பதாக சொன்னாள். அடுத்த நாள் என்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டாள். நான் அன்று குறும்படம் ஒன்று எடுத்துக் கொண்டிருந்தேன். அன்பு நாள் முழுக்க அம்மாவிடம் பேசிவிட்டு மாலையில்தான் கிளம்பிச் சென்றாள்.   நான்கு நாட்களுக்குப் பிறகுதான் என்னுடைய காதலை அவளிடம் சொன்னேன். நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகும்போதிலிருந்தே எங்கள் வீட்டிற்கு தெரியும். காதலிக்க ஆரம்பித்த பின் ஒரு நாள் அன்புவை வீட்டிற்கு அழைத்து வந்து அம்மாவிடம் ‘இவதாம்மா உன் மருமகள்’ என்று சொன்னேன். அதற்கு அம்மா சாதாரணமாக ‘அதான் எனக்கு தெரியுமே’ என்றார். அன்புவை அம்மாவிற்கும் ரொம்ப பிடித்திருந்தது என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

இந்த சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு கல்லூரி இறுதி ஆண்டு முடிய சில வாரங்கள் மட்டுமே இருக்கும் வேளையில், திடீரென ‘இனிமேல் இந்த காதல் வேண்டாம்’ என்று அன்பு சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எங்களுக்குள் எந்த பிரச்னையும் வராமல் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தாள் என்று குழம்பினேன். நிச்சயம் வேறு ஏதோ பிரச்னையின் காரணமாகவே இந்த முடிவை எடுத்திருக்கிறாள் என்று தோன்றியது.  என்னைவிட அதிகமாக காதலித்தது அன்புதான் என்று எனக்குத் தெரியும். அதனால் நிச்சயம் அவள் என்னை மறக்க மாட்டாள் என்று நம்பினேன். இருவரும் கண்டிப்பாக ஒன்றிைணவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

 கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் வரை நாங்கள் பார்த்துக் கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை. அவளை தொடர்பு கொள்ள நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. ஆனாலும் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. ஒருநாள் அவளுடைய நண்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் ‘அன்புவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இன்னும் 20 நாட்களில் திருமணம்’ என்று கூறினார். முதல் முறை என் நம்பிக்கை உடைந்ததுபோல் இருந்தது. அந்த நிமிடம் நரக வேதனையாக இருந்தது. சிறிது நேரத்தில் அந்த நண்பரே என்னை தொடர்புகொண்டு ‘நான் இப்போதான் அன்புட்ட பேசினேன்.

அவ இப்பவும் உங்களைத்தான் காதலிக்கறதா சொன்னா’ என்றார். அப்போதுதான் உயிரேவந்தது போல் இருந்தது. அதன் பின் என்னுடைய வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னேன்.  அடுத்தநாள் அன்பு வீட்டிற்கு போய் அவருடைய பெற்றோர்களிடம் பேசினோம். அந்த சூழலில் எந்த வீட்டிலும் எழும் எதிர்ப்பு அன்பு வீட்டிலும் இருந்தது. கடைசியில் வீட்டைவிட்டு வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், நண்பர்கள் சூழ எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அதிக சந்தோஷமாக இருக்கிறது. நான் இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக  பணியாற்றினேன். இப்போது முதல் திரைப்படம் இயக்கும் முயற்சிகளில் இருக்கிறேன். அன்பு தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறாள். எங்களுக்கு 2 வயதில் சத்யதேவ் நிரூபன் என்றொரு மகன் இருக்கிறார். அன்பு எந்த வேலையை செய்தாலும் தைரியமாகவும் முழு ஈடுபாட்டோடும் செய்து முடிப்பாள். அந்தத் துணிச்சல், கமிட்மென்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது எங்களுடைய திருமணம்தான். அழுகை, கோபம், பயம், பதட்டம், சந்தோஷம் என்று அத்தனை உணர்வுகளையும் சில மணிநேரங்களில் அனுபவித்தேன்’ என்றவரை தொடர்ந்து அன்புக்கரசி பேசினார்.

“கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட ரேடியோ நிகழ்ச்சியில், நான் ஒரு கதாநாயகியாகவும், என்னுடைய கணவர் இயக்குனராகவும் உரையாடும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதன்பின் நாங்கள் நண்பர்களானோம்.  இந்த நட்பு கல்லூரியிலும் தொடர்ந்தது. தினமும் எல்லோரும் சந்தித்துக்கொள்வோம். எல்லா நண்பர்களிடமும் பேசுவது போலவே நான் அவரிடம் பேசி வந்தேன். ஒரு கட்டத்தில் என் தந்தையிடம் பேசுவதுபோல என்னுடைய இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் அவரிடம்  பகிரத் துவங்கினேன். அதன் பிறகுதான் யோசித்தேன்.

எல்லோரிடமும்தான் பேசுகிறேன், ஆனால் இந்த அளவிற்கு உரிமையாக பேசுவதில்லையே என்று தோன்றியது. அவர் கூட இருப்பதை ரொம்ப பாதுகாப்பாக  உணர்ந்தேன். இதை ஏன் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல கூடாது என்று நினைத்தேன். ஒரு நாள் என் காதலை சொன்னேன். 2, 3   நாட்கள் கழித்து யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். என்ன சொல்வாரென்று எனக்கு பதட்டமாகவே இருந்தது. அவருக்கும் என்னை பிடித்திருந்தது.

என்னை காதலிப்பதாக அவரும் சொன்னார். ஆனால் நாங்கள் இருவரும் பழகுவதை வைத்து இவர்கள் காதலிக்கிறார்கள் என்று  யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.  என்னால் எங்கள் வீட்டில் எந்த வருத்தமும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நாங்கள் காதலிக்க தொடங்கி இருவரும் தனியாக வெளியே செல்வது, தனியாக பேசுவது என மற்ற காதலர்களை போல் நாங்கள் இருந்தது இல்லை. நண்பர்களோடு இருக்கும் போதுதான் சந்தித்துக்கொள்வோம், பேசுவோம். திருமணத்திற்கு பிறகுதான் நாங்கள் இருவரும் தனியாக வெளியில் சென்றோம்.

காதலிக்கும்போது சின்னச் சின்ன சண்டைகள் வரும். நான் கொஞ்சம் அதிகமாகக் கோபப்படுவேன். ஒரு கட்டத்தில் கொஞ்சநாட்கள் பிரிந்து இருக்கலாம்னு சொல்லிவிட்டேன். அந்தப் பிரிவு காதலை அதிகப்படுத்தியது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள கால அவகாசமாக இருந்தது. இப்போதும் கூட நாங்க ரெண்டு பேரும் நிறைய விஷயங்கள் விவாதிப்போம். அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை  என்னை விடமாட்டார். எந்த விஷயமாக இருந்தாலும் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கக்கூடியவர். அது எனக்கு பிடிக்கும்.

எனக்கு தெரியும், என்னை விட என்னை அதிகமாக அவர் நேசிக்கிறார் என்று. அந்த நம்பிக்கையில்தான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன். மூன்று ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு நாங்கள் சந்தித்தது எங்களுடைய திருமணத்தில்தான். எனக்கு திருமணம் ஆடம்பரமாக செய்வது பிடிக்காது. நான் ஒரு நாளும் அப்படி ஒரு கனவில் இருந்தது இல்லை. நான் நினைத்தது போலவே எங்களுடைய திருமணம் மிக எளிமையாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

- ஜெ.சதீஷ்