இணைந்த ஓவியர்கள்



வார்த்தை  உச்சரிப்பில் மட்டுமல்ல, உடல் மொழியின் மூலமும் நகைச்சுவைக் காட்சிகளில் மக்களின் மனதை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்று ‘சிங்கம்’ படத்தில் அவர் பேசிய நகைச்சுவை வசனம் இன்றைய வாண்டுகளை அதிகம் கவர்ந்த ஒரு காமெடி. சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த ஓவியர், பெரிய பிசினஸ்மேன் என பன்முக திறமையாளராக இருக்கும் பாண்டு தன் இல்லறம் குறித்து மனைவியுடன் நமக்களித்த சிறப்பு நேர்காணல்…

“குமாரபாளையம் சொந்த ஊர். சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து பின், பரோடாவில் ஓவியம் சம்பந்தமாக படித்தேன். அதன் பிறகு பிரான்ஸில் உள்ள பாரீஸில் ஓவியத்தில் டாக்டரேட் முடித்தேன். தென்னிந்தியாவில் ஓவியத்தில் டாக்டரேட் முடித்தது நான் மட்டும்தான்.

படித்துக்கொண்டிருக்கும்போதே பத்திரிகைகளுக்கு ஃப்ரீலான்ஸிங்காக ஓவியம் வரைந்திருக்கிறேன். அப்பாவிற்கு நான் ஓவியர் ஆவதில் எல்லாம் விருப்பம் இல்லை. அதனால் படிப்பு முடிந்து சென்னை வந்தபின் 1975ல் ‘மெட்டல் லெட்டர்ஸ்’ என்ற பெயரில் நேம் போர்டு தயாரிக்கும் கம்பெனி ஆரம்பித்து பிசினஸ் செய்ய ஆரம்பித்தேன். அதன் பிறகு எனக்கு கல்யாணத்துக்காக பெண் பார்க்க வீட்டில் யோசித்தபோதுதான் என் பெரிய அண்ணனின் நண்பரும் பத்திரிகையாளருமான தமிழ்வாணன் பிரபல பத்திரிகையின் ஆசிரியர் புனிதன் அவர்களின் மூத்த மகள் குறித்து சொல்லி இருக்கிறார்.

நண்பர் வீட்டில் வைத்து இயல்பாக பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். பெண்ணைப் பிடித்திருந்தது. கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டேன். வீட்டில் வழக்கமாக நான் ஒன்று சொல்வேன். நான் ஓவியன் என்பதால் நான் கல்யாணம் செய்யும் பெண் ஓவியராக இருக்கக்கூடாது என்பேன். அதனால் என் வருங்கால மனைவி ஓவியர் என்பதை பெண் பார்க்கும்போது என்னிடம் மறைத்து விட்டார்கள். திருமணம் முடிவான பின்னர்தான் எனக்கு விஷயம் தெரிந்தது, என் மனைவி குமுதா ஒரு சிறந்த ஓவியர்.

அவர் திலகா என்ற பெயரில் பத்திரிகையில் வரைந்து கொண்டிருந்ததால் குமுதா என்று அறிமுகப்படுத்தியபோது எனக்குத் தெரியாமல் போனது. அதன் பிறகு அதில் ஒன்றும் எனக்கு பெரிய வருத்தமெல்லாம் இல்லை. 1977ல் தி.நகரில் இருந்த எஸ்ஜி.எஸ் சபாவில் எங்கள் திருமணம் நடைபெற்றது. பிசினஸில் பிஸியாக இருந்ததால் மனைவி கர்ப்பமான பிறகுதான் ஹனிமூன் ட்ரிப்பே போக முடிந்தது. பெங்களூர் சென்றோம். தாமதமாக கூட்டிச்சென்றதற்காக அவர் என்னிடம் கோபப்படவே இல்லை.

எனக்கு மூன்று மகன்கள். முதல் மகன் பிரபு, இரண்டாவது மகன் பஞ்சு, மூன்றாவது மகன் பிண்டு. பிசினஸ் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலால் ‘பஞ்சு பட்டு பீதாம்பரம்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க நேர்ந்தது. திருமணத்திற்கு முன் எம்ஜிஆருடன் எல்லாம் நடித்திருந்தாலும் நான் நடிப்பை பிரதானமாக கருதியதில்லை. நான் நடிப்பதில் வீட்டில் பெரிய விருப்பம் எல்லாம் இல்லை. அதனால் பாராட்டியதும் இல்லை. தாழ்த்திப் பேசியதும் இல்லை. ஆனால் அந்தத் தொடர் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.

அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் வந்தன. பிசினஸ் செய்து கொண்டிருந்ததால் சினிமாவுக்கென பெரிய அளவில் நேரம் ஒதுக்க முடியாது. அதனால் அதற்கேற்றாற் போல் சிறிய சிறிய ரோல்கள் எடுத்து நடிக்க ஆரம்பித்தேன். இதுவரை 754 படங்களில் நடித்திருந்தாலும் நம்பர் ஒன் இடத்திற்கு எல்லாம் நான் போட்டியிடவில்லை. ஆனால் பிசினஸில் நம்பர் ஒன்னாக இருந்தேன். நேம் போர்டு, ஷீல்டுகள், மொமண்டோக்கள் என எல்லாம் செய்து வந்தேன். பல நிறுவனங்களின் மெட்டல் நேம் போர்டுகள் நான் செய்ததுதான். அண்ணா அறிவாலயம், அண்ணா பல்கலைக் கழகம் துவங்கி பல நிறுவனங்கள், பல பிரபல நகைக்கடைகள், துணிக்கடைகள் என பல பிரபலமான தொழில் நிறுவனங்களுக்கும் போர்டு தயாரித்தது நாங்கள் தான். பல விருதுகளுக்கான மொமண்டோ நான் செய்ததுதான்.

முதன்முதலில் நடிகராக நான் அறியப்பட்ட படமான ‘என்னுயிர் கண்ணம்மா’வின் நூறாவது நாள் விழாவில் எனக்கு ஷீல்டு பரிசளித்தார்கள். அந்த ஷீல்டு நான் வடிவமைத்ததுதான். இப்போது என் மனைவிக்கு நான் நடிகர் என்பதில் பெருமைதான். நான் நடிப்பு, பிசினஸ் என எந்நேரமும் பிசியாக இருப்பேன். என் மனைவிதான் எனக்கு எல்லா நேரங்களிலும் ஆதரவாகவும் அஸ்திவாரமாகவும் இருந்திருக்கிறார். நான் மனதளவில் தளர்ந்திருக்கும் சமயங்களில் எனக்கு மனோதைரியம் கொடுப்பவர் என் மனைவி தான். ஆனால் அவர் ரொம்ப சாஃப்ட். ரொம்ப கோபப்படமாட்டார். எப்போதாவது கோபமாக இருந்தால் நான் அவரை நகைச்சுவையாகப் பேசி அவரது கோபத்தை உடைத்துவிடுவேன். அவ்வளவாக பேச மாட்டார். சமையல் ரொம்ப அற்புதமாக செய்வார். கிரியேட்டிவ்வாக யோசித்து வித்தியாசமாக சமைப்பார்.

நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அவர் அவ்வளவாக பேசாமல் சமைப்பார். அதற்கு ஈடுகொடுக்க அந்த நிகழ்ச்சியில் என்னை பேச வைப்பார்கள். வெளிநாடுகளில் இருந்து கூட சமையல் நிகழ்ச்சிக்காக இவரை அழைத்திருக்கிறார்கள். வெளிநாடு சென்று பல வாரங்களுக்குத் தேவையான சமையல் நிகழ்ச்சியை பதிவு செய்துவிட்டு வந்தோம். சமையல் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறார்.

நடிகரின் மனைவியாக இருந்தாலும் இதுவரை சினிமா படப்பிடிப்பே பார்த்ததில்லை. பார்க்க விரும்பியதில்லை. ஊட்டி, கொடைக்கானல் என அவுட்டோர் ஷூட்டிங் போகும்போது கூட வருவார். ஆனா, ஸ்பாட்டுக்கு வரமாட்டார். ஓவியங்கள் குறித்து பேச்சு வரும்போது இருவரும் நிறைய பேசுவோம். விவாதிப்போம். பாரீஸில் நான் பார்த்த ஓவியங்கள் குறித்து சொல்வேன். நாங்கள் இருவரும் ஓவியர்கள் என்பதால் பலரும் எங்கள் திருமணம் காதல் திருமணமா என்றுகூட கேட்டிருக்கிறார்கள்.

குவைத்தில் ஓவியப்போட்டிக்கு தலைமை தாங்க எங்கள் இருவரையும் அழைத்திருந்தார்கள். தலைப்பு சொல்வதில் இருந்து முடிவு சொல்வது வரை நாங்கள்தான். அந்த நிகழ்ச்சியை சுட்டி டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தார்கள். அந்த நாடு, நாட்டு மக்கள் என எல்லாமே வித்தி யாசமாக ஆச்சரியமாக இருந்தது. அது எங்களுக்கு மறக்க முடியாத அனுபவம். அந்த காலத்திலே செட்டிநாடு அரண்மனையில் தஞ்சாவூர் ஓவியம் கற்றுக்கொண்டவர் குமுதா. அங்கு அவ்வளவு எளிதில் யாருக்கும் கற்றுத் தரமாட்டார்கள்.

என்னை அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் கற்றுக்கொடுத்தார்கள். என் மனைவி வீட்டை பார்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தஞ்சாவூர் ஓவியத்தை தயார் செய்து ஏற்றுமதி செய்யும் பிசினஸையும் கிட்டதட்ட 15 வருடமாக வெற்றிகரமாக செய்து வருகிறார். தற்போது என் மூத்த மகன் என் பிசினஸை பார்த்துக்கொள்கிறார். மூன்று மகன்களும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டனர். பேரன், பேத்திகள் என நிறைவாக இருக்கிறது வாழ்க்கை. என் மனைவியும் பிள்ளைகளும் விருப்பம் காட்டாத  படிப்பிடிப்பை பார்க்க என் பேரன் அவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறான் எனச் சொல்லி சிரிக்கிறார் நடிகர் பாண்டு.”
 
குமுதா
“அப்பா ஆசிரியராக இருந்த ஒரு பிரபல பத்திரிகை ஒன்றில் நான் திலகா என்ற பெயரில் வரைந்து கொண்டிருந்தேன். அப்போது பாண்டு என்ற பெயரில் ஒருவர் வரைவார். அவர் ஓவியத்தில் கையெழுத்திடும்போது பாண்டுவிற்கு பக்கத்தில் ஃ என்று போட்டிருப்பார். நான் அப்பாவிடம் யாருப்பா இவர்? இவர் பெயரென்ன பாண்டுஃக்கா என கிண்டலாகக் கேட்பேன். ஒரு சமயம் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அப்பா அழைத்துச் சென்றார். அங்கு வந்திருந்த இவரை ‘இவர் தான் நீ யாரென்று கேட்ட பாண்டு’ என அறிமுகப்படுத்தி வைத்தார். அறிமுகமானோம்.

வீட்டுக்கு வந்த பின்னர் ‘அவரைப் பிடிச்சிருக்கா?’ என அப்பா கேட்டார். ‘எதுக்குப்பா கேட்கிறீர்கள்?’ என்றேன். பின்னர்தான் விஷயத்தைச் சொன்னார், ‘இவரை திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என. ‘உங்களுக்கு சரி என்று படுவதை செய்யுங்கள்’ என்றேன். அப்பா எனக்குச் சரியானதைத்தான் செய்திருக்கிறார் என்று இப்போதும் எப்போதும் உணர்கிறேன். இவர் எனக்கு அந்தளவிற்கு எப்பவுமே ரொம்ப சப்போர்ட்டிவ்வாக இருப்பார். யார்கிட்டேயும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார். என் உலகம் இவர் தான்.

ஏதாவது தப்பு பண்ணினால் கோபப்படுவார். கொஞ்ச நேரம் தான் கோபமா இருப்பார். அப்புறம் இயல்பாகிவிடுவார். எனக்குக் கோபம் வந்தால் நான் ரொம்ப நேரம் கோபமாக இருப்பேன். என்னை காமெடி பண்ணி சிரிக்க வைத்துவிடுவார். அவர் பெரிய மனிதர்களிடம் எல்லாம் பரிசுகள் வாங்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கும். நிறைய நடிகர்கள் வீட்டுக்கு வருவாங்க. சாப்பிடுவாங்க. பழகுவாங்க.

அதனால் எனக்கு என்னவோ ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்று ஆசை  ஏற்பட்டதில்லை. என் சமையலை இவர் மிகவும் பாராட்டுவார். என்னுடன் சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். என் அப்பாவிற்கு இவரை மிகவும் பிடிக்கும். என் தங்கைகளும் எங்கள் வீட்டுக்கு வந்தால் இவரின் நகைச்சுவைப் பேச்சைக் கேட்க இவரிடம் ஆர்வமாகப் பேசுவார்கள். வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த 40 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் எல்லாமே மறக்க முடியாத நிகழ்வுகள்தான். மிகவும் சந்தோஷமான வாழ்க்கை எங்களுடையது.”

- ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்