‘புத்தம் வீடு’ஹெப்சிபா



ஒரு நாவல், ஒரே நாவல் அவரை எழுத்துலகில் முக்கியமான ஒருவராக மாற்றியது. இன்றைக்கும் கிளாசிக்கல் நாவல் வரிசையில் முக்கிய இடம் வகிக்கிறது ‘புத்தம் வீடு’. இந்த நாவலின் மூலம், தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்தவர் எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன். தமிழில் நான்கு நாவல், ஆங்கிலத்தில் மூன்று கவிதைத் தொகுப்பு மற்றும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் என தன் வாழ்வை இலக்கியத்திற்காக ஈடுபடுத்திக்கொண்ட
சிறந்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்.

1925ம் ஆண்டு பிறந்தவர் ஹெப்சிபா. புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். சிறு வயதில் பர்மாவில் சிறிது காலம் வசித்தவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றியவர். அதே கல்லூரியில் பணியாற்றிய தமிழ் பேராசிரியர் ஜேசுதாசனை மணமுடித்தார். பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் இருவரும் மனமொத்த காதல் தம்பதிகளாக வாழ்ந்ததோடு தமிழின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர். தமிழ் இவர்களை ஒன்றிணைத்தது என்றும் கூறலாம்.

கணவரின் ஊக்கமளிக்கும் சொற்களால் ‘புத்தம் வீடு’ என்ற தன் முதல் புதினத்தை ஹெப்சிபா எழுதினார். 1964ல் இந்த நாவல் வெளியானது. மிகவும் பேசப்பட்ட முற்போக்கு நாவலான ‘புத்தம் வீடு’ மலையாளத்திலும் ஆங்கிலத்தில் ‘லிசீஸ் லெகசி’ (Lissy’s Legacy) என்ற பெயரிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. ‘புத்தம் வீடு’ நாவலை அடுத்து ஹெப்சிபா எழுதிய ’டாக்டர் செல்லப்பா’ என்ற நாவல் 1967ல் வெளிவந்தது. அடுத்த இரண்டு நாவல்களான ‘அனாதை’, ‘மா-னீ’ என்ற இரண்டும் முறையே 1978, 1982களில் வெளி வந்துள்ளன. ஆங்கிலத்தில் மூன்று கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

தமிழுக்கு மேலும் பல சேவைகளை ஆற்றிய ஹெப்சிபா அவர்களுக்கு அவரது கணவர் ஜேசுதாசன் மிகவும் உறுதுணையாக இருந்தார். 2002 ஆம் ஆண்டில் ஜேசுதாசன் காலமானார். கணவரின் இறப்பிற்குப் பிறகு மனமுடைந்து போன ஹெப்சிபா, அவரது இறுதிக்காலத்தை மதச்சேவையில் கழித்தார். 2012 பிப்ரவரி 9 ந்தேதி மாலை அவரது சொந்த ஊரான புலிப்புனத்தில் தனது 88வது வயதில் ஹெப்சிபா காலமானார்.

ஹெப்சிபாவுடன் பழகினவரான பேராசிரியரின் மாணவர் வேத சகாய குமாரை தொடர்பு கொண்டபோது   ஹெப்சிபா குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். ‘‘ஹெப்சிபா நாகர்கோவில் டபி பள்ளியில் தங்கி ஆங்கில வழி கல்வி முடித்தார். புத்திசாலியான மாணவி. தலைமை யாசிரியருக்கு மிகவும் பிடித்தமான மாணவியாக இருந்தார். பின்னர் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை முடித்து திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணி யாற்றினார். ஹெப்சி பாவிற்கு உடன் பிறந்தவர்கள் என்று சொன்னால் ஒரு தங்கை மட்டும்தான்.

ஹெப்சிபா பேராசிரியர் ஜேசுதாசனை மண முடித்தார். இருவரும் ஒரே கல்லூரியில் நீண்ட காலம் பணிபுரிந்தனர். பெண்கள் கல்லூரியிலும் ஹெப்சிபா சில காலம் பணியாற்றி இருக்கிறார். ஹெப்சிபா, பேராசிரியர் ஜேசுதாசன் இருவரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களின் தந்தை சாதாரண தொழிலாளி தான். அவர்கள் குடும்பத்தில் பேராசிரியர் தான் முதல் தலைமுறையாக பட்டம் பெற்றவர். நான் அவருக்கு உறவினர். அதுமட்டுமல்லாமல் அவரது மனதுக்கு நெருக்கமான மாணவனாகவும் நான் இருந்தேன்.

நாங்கள் அவரை பேராசிரியர் என்றுதான் அழைப்போம். ஹெப்சிபா அம்மையாரும் பேராசிரியரும் இணைபிரியாத ஜோடிகள். இருவரும் தீவிரமான லட்சியவாதிகள். இருவருக்கும் தமிழ் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு இருந்தது. அந்த விஷயம் அவர்களின் ஒற்றுமைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. கருத்தரங்கம், இலக்கியக்கூட்டம் என எங்கு சென்றாலும் இணைந்தேதான் செல்வார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.

ஹெப்சிபா அம்மையாரும், பேராசிரி யரும் கிறிஸ்தவ சமயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். ஒரு சாதாரண கிறிஸ்தவர்களை காட்டிலும் தங்கள் மதத்தின் மீது அதிதீவிர பற்றுக்கொண்டிருந்தவர்கள். ஆனால் அதை விட அதிகமாக இலக்கியத்தை நேசித்தார்கள். இலக்கியத்தை பொறுத்தமட்டில் அவர்கள் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. தங்கள் மதம் சார்ந்த இலக்கியங்களை விடவும் ராமாயணக் காப்பியத்தின் மீது தனி ஈடுபாடு கொண்டிருந்தனர்.

அதனால் முதல் பிள்ளைக்கு நம்பி(ராமன்) என்றும் இரண்டாவது பெண்ணுக்கு பூவி(பூமாதேவி) என்றும் மூன்றாவது மகனுக்கு தம்பி (இலட்சுமணன்) என்றும் பெயரிட்டனர். மதம் வேறு இலக்கியம் வேறு என்ற இந்த விஷயம் நான் அவர்களிடம் கற்றுக் கொண்ட ஒன்று. 60களில் இருவரும் இணைந்து தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் ஒரு ஆய்வேடாக்கினார்கள். ஹெப்சிபா நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சங்க இலக்கிய பாணர்கள் செவ்வியல் கலைஞர்கள் என்ற கருத்தை நிலைநாட்டியவர் ஹெப்சிபா.

ஒரு நாள் பேராசிரியரிடம் ஹெப்சிபா அவர்கள் ‘நான் ஒரு நாவல் எழுதலாம் என்று இருக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்க, ‘ம்… கட்டாயம் எழுது’ என்று பேராசிரியர் ஆர்வமாக ஊக்கம் கொடுக்க, அடுத்த 15 வது நாளில் ஒரு முழுமையான நாவலை ஹெப்சிபா அவர்கள் எழுதி முடித்தார். அதைப் படித்த பேராசிரியர் அதனை சுந்தரராமசாமியிடம் காண்பித்தார். ‘தமிழிலக்கியத்தைப் பொறுத்தமட்டில் இது ஒரு முக்கியமான நாவல், இதனை கட்டாயம் பதிப்பிக்க வேண்டும்’ என்று சுந்தரராமசாமி சொன்னார். அப்படி 1964ல் தமிழ் புத்தகாலயத்தில் வெளியானதுதான் ’புத்தம் வீடு’ நாவல்.

பொதுக்கல்வியினால் நவீன மயமாதல் ஏற்படும்போது சமூகத்தில் ஏற்படும் மாறுபாட்டை உணர்த்தியது அந்த நாவல். அதன் பிறகு அவர் எழுதிய ‘டாக்டர் செல்லப்பா’ மற்றும் ‘அனாதை’ இரண்டும் கிட்டதட்ட அந்த நாவலின் தொடர்ச்சி தான். அதாவது ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறையின் கதை அல்லது ஒரு சமூகத்தின் மூன்று தலைமுறையின் கதை எனலாம். அடுத்தது மா-னீ.

ஆனால் பேராசிரியரை பொறுத்த மட்டில் ‘புத்தம் வீடு’ தான் சிறந்த நாவல் என்று எப்போதும் சொல்வார். இருவரும் நிறைய விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இருவரின் வாழ்விலும் வாசிப்பு பெரும்பங்கு வகித்தது. இருவரும் முற்போக்கு மனப்பான்மை கொண்டவர்கள். எழுத்தில் மட்டுமல்லாது வாழ்விலும் முற்போக்கினை கையாண்டவர்கள். பின்பற்றும் மதம் செயலில் இருக்க வேண்டும் என்பார்கள். சில எதிர்ப்புக்கிடையில், கிறிஸ்தவ மதத்தில் சாதி கிடையாது என்று சொல்லி, தனது இளைய மகனுக்கு தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து பெண் எடுத்து திருமணம் செய்வித்தனர். அது அந்தக் காலத்தில் கொஞ்சம் பெரிய விஷயம்.

ஹெப்சிபாவிடம் இலக்கியம் குறித்து உரையாடிக்கொண்டே இருக்கலாம். தமிழின் மூலை முடுக்கெல்லாம் அவருக்கும் தெரியும். எது நல்ல இலக்கியம் என சுலபமாக கண்டுகொள்வார். அவரிடம் அழகியல் உணர்வு, ரசனை உணர்வு உண்டு. ஹெப்சிபாவும் பேராசிரியரும் சுந்தரராமசாமிக்கு நெருக்கமான நண்பர்கள். கடைசி வரை சுந்தரராமசாமி நட்புடன் இருந்தார்.

இருவரும் 70 வயதுக்கு மேல் இணைந்து Count down from Solomon என்றொரு மிகப்பெரிய ஆய்வில் ஈடுபட்டார்கள். இலக்கியத்தின் மூலம் தமிழ் சமூக வரலாற்றை பதிவு செய்தனர். நான்கு பகுதிகளாக அந்த ஆய்வு வெளிவந்தது. Institute of Asian Studies இதனை வெளியிட்டனர். அதற்கான பதிப்பு உரிமையை பெற்றுக்கொள்ளக் கூட இவர்கள் ஆர்வம் காட்டவில்லை. எவரிடமும் நிதி உதவி பெறாமல் தங்களது ஓய்வூதியப் பணத்தில் அந்த ஆய்வினை செய்தனர். ‘ஏன் இந்த வயதில் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘தமிழுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக்கடன் இது’ என்று ஹெப்சிபா சொன்னார். அந்த ஆய்வு பதிப்பாகி வரும் முன் பேராசிரியர் மரணப்படுக்கையில் விழுந்துவிட்டார். பல நாட்கள் உயிர் ஊசலாடிக்கொண்டே இருந்தது. அதனால் எங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

அந்த ஆய்வின் மூன்றாவது தொகுதியான அவர் மிகவும் நேசித்த கம்பராமாயண ஆய்வேட்டை சீக்கிரம் முதல் பிரதி தயாரித்து அவரிடம் காண்பித்தோம். அதனைப் பார்த்து மெல்லிய புன்முறுவல் பூத்தார். உடன் அவர் உயிர் பிரிந்தது. அந்த அளவிற்கு இலக்கியத்தின் மீது உயிராக இருந்தவர் பேராசிரியர். ஆனால் இந்த ஆய்வினால் அவர்களுக்கு பெரிதாக எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். பேராசிரியர் இறந்த பிறகு நான் அவ்வளவாக அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை. ஹெப்சிபா மிகவும் தளர்ந்து போனார். தடுமாற்றம் வந்தது.

எழுதுவதை நிறுத்தினார். கடைசி காலத்தில் மத சேவையில் ஈடுபட்டார். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை. அப்படி தன்னைக் கூறிக்கொள்பவர்களுக்கு நீங்கள் பணம் தரவும் தேவை இல்லை என தன்னால் இயன்றவரை இப்படி பணம் செலவழிப்பவர்களை தடுத்து வந்தார்” என்றார். எழுத்தாளரும் பேராசிரியருமான அ.ராமசாமி, ‘‘1980களில் நண்பர்களுடன் இணைந்து இலக்கியம் பேசுவது வழக்கம். ஒரு சமயம் தமிழின் முக்கிய நாவல்கள் குறித்துப் பேசும்போது ‘கோபல்ல கிராமம்’, ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘புத்தம் வீடு’ போன்ற நாவல்களை பற்றிப் பேச்சு வந்தது. அதனால் ‘புத்தம் வீடு’ நாவலை படிக்க வேண்டும் என்று ஆவல் வந்தது. அப்படி தேடிப் படித்தது தான் அந்த நாவல். அதன் பிறகு ஹெப்சிபாவின் மற்ற மூன்று நாவல்களையும் வாசித்தேன்.

அறுபதுகளின் மத்தியில் வெளிவந்த தமிழகத்தின் ட்ரெண்ட் செட்டிங் நாவல் ‘புத்தம் வீடு’. கன்னியாகுமரியும், திருநெல்வேலியும் இணையும் இடத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. கன்னியாகுமரியின் பின்னணியில் இருந்து வெளிவந்த முதல் தமிழ் நாவல் இது. வசதியாக இருந்த ஒரு குடும்பத்தின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைகிறது. அதற்கு அந்த வீட்டு ஆண் பிள்ளைகள் காரணமாக இருக்கின்றனர். ஆண்கள் தங்கள் குடும்ப கடமைகளை அறியாமல் இருக்கிறார்கள். லிஸி என்னும் முதன்மை கதாபாத்திரம் குடும்ப அமைப்பு என்பது பெண்ணியத்திற்கு எதிரானதல்ல, அவர்களுக்கு அதனை புரிய வைத்தால் போதும் என்பதை உணர்த்துகிறது.

தன் காதலை மெல்ல மெல்ல இயல்பாக தன் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. ஹெப்சிபாவின் முதல் மூன்று நாவல்களிலும் ஒருவிதமான தொடர்ச்சி யைக் காண முடிகின்றது. ‘பனைவிளை’ என்ற தென் தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த ஒரு சில மனிதர்கள் இம்மூன்று நாவல்களிலும் வருகின்றனர். புத்தம் வீட்டின் முக்கியப்பாத்திரமான ‘லிஸி’யும் அவளது கணவரான தங்கராஜுவும், அவனது தம்பி ‘செல்லப்பனு’ம் மூன்று நாவல்களிலும் வருகின்றனர். இம்மூன்று நாவல்களையும் ஒரு நாவலின் மூன்று பாகங்கள் என்று சொல்ல முடியாது;

தனித்தனி நாவல்களே. இம்மூன்று நாவல்களின் பின்னணிகள் வேறானவை; பாத்திரங்களின் குணங்கள் வேறானவை; சமூகப் பொருளாதாரச் சூழல்கள் வேறானவை. இரண்டாவது நாவலான ‘டாக்டர் செல்லப்பா’வில் கதாபாத்திரங்களை அதனதன் குறை நிறைகளோடு காண்பித் திருப்பார். மூன்றாவது நாவலான ‘அனாதை’ வடிவ ரீதியாகவும் கதையைச் சொல்வதிலும் தெளிவற்ற தன்மையைக் கொண்டுள்ளது.

கடைசியாக வெளிவந்துள்ள மா-னீ, அவரது முதல் மூன்று நாவல்களின் படைப்புலகத்திலிருந்து சற்று விலகியது. இந்நாவலில் குடும்ப உறவுகள் குறிப்பிட்ட பொருளாதாரப் பின்னணியில் நிறுத்தப்படாமல், உலகப்போர் என்ற பெரும் நிகழ்வொன்றின் பின்னணியில் நிறுத்தப்பட்டுள்ளன. உலக மொழிகள் பலவற்றிலும் உலகப்போரின் விளைவுகள் பற்றிய நாவல்கள் வந்துள்ளன என்றாலும் தமிழில் மிகவும் குறைவு.

மா-னீ ஒரு வகையில் அவருடைய சுய சரிதை போல என்றும் சொல்லலாம்.தமிழ் இலக்கிய உலகில் முக்கியமாக கவனிக்கப்பட்ட நாவல் மா-னீ. ஹெப்சிபாவின் நான்கு நாவல்களையும் அவற்றில் வெளிப்படும் சார்பு நிலையையும் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தோமானால், அவரது படைப்புகள் ‘குடும்ப அமைப்பு’ என்ற உலகத்தைத் தாண்டி வெளியில் செல்லவே இல்லை. வாழ்க்கை பற்றிய அவரது மதிப்பீடுகளும், சமூகம் பற்றிய கோட்பாடுகளும் வெளிப்படுவதை அவரது நாவல்களில் அறியலாம். ஹெப்சிபா தன் காலத்து மனிதர்களின் வாழ்க்கை முறையும் சமூக மதிப்புகளும் மாறி வருகின்றன என்பதை உணர்ந்தவராகத் தன்னை அடையாளம் காட்டுகின்றார்.

சமூகத்தின் இயங்கியல் தன்மையைப் புரிந்து கொண்ட ஹெப்சிபாவின் வாழ்க்கை பற்றிய கோட்பாடு அதன் போக்கிலேயே அவருக்குரிய இலக்கியக் கோட்பாட்டையும் உருவாக்கித் தந்துவிடுகிறது. சமூகத்தை வளர்ச்சிப் போக்கில் நகர்த்தும் தன்மையுடைய இந்த இலக்கியக் கோட்பாடே அவருக்கு நாவல் வரலாற்றுக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர் என்ற பெருமையினைப் பெற்றுத் தந்தது எனலாம். தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் ஹெப்சிபா.

- ஸ்ரீதேவி மோகன்
ஓவியம்: ஸ்யாம்