இவர்கள் சுயசக்திகள்-பி.கமலா தவநிதி

வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அப்படி வீட்டிலேயே தொழில்முனையும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் மரியாசினா ஜான்சன், நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் நிறுவனர் வீணா குமாரவேல், பூமிகா அறக்கட்டளையின் நிறுவனர் அருணா சுப்பிரமணியன், அவதார் கேரியர் க்ரியேட்டர்ஸ் & ப்ளக்ஸி கேரியர்ஸ் இந்தியா தலைவர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் ஆகியோருடன் சில திரைப்பிரபலங்களும் இணைந்து சாதித்த, சாதிக்க துடிக்கும் பெண்களை தேர்வு செய்து பிராண்ட் அவதார் நிறுவனம் ‘சுயசக்தி’ விருதுகளை வழங்குகின்றன.

இவ்வாறு வீட்டிலேயே சுயதொழில் செய்து சாதித்த பெண்களை கவுரவிக்கும் வகையில், விருது வழங்கும் விழா இந்தியாவில் நடந்தது இதுதான் முதல் முறை. நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த விருதிற்காக தாங்கள் எந்த துறையில் என்ன சாதனை செய்துள்ளோம் என்பதை பதிவு செய்திருந்த நிலையில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் விருதிற்காக தேர்வு செய்யப்பட்டு ‘சுயசக்தி’ விருதைப் பெற்றுள்ளனர்.

இந்த 120 பெண்களில் சிறந்த 10 பெண்களுக்கு அவர்கள் செய்யும் தொழிலுக்கு முதலீடு கொடுக்கப்படவிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகவும், முன்னேற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு அவர்களை இட்டுச் செல்வதாகவும் அதில் பங்குபெற்ற பெண்கள் குறிப்பிட்டனர். இவ்விருது பெற்ற சிலரிடம் பேசினேன்...

சிதம்பரத்தை சொந்த ஊராகக் கொண்டவரும் தற்போது சென்னைவாசியுமாகிய திருமதி ராஜலட்சுமி, வீட்டிலேயே குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு அரிசி, சாமை, கம்பு, சோளம், சிவப்பு அரிசி போன்ற சிறுதானியங்களை முளைக்கட்ட செய்து அத்தோடு பொட்டுக்கடலை, பச்சைப் பயறு, பாதாம், ஏலக்காய், உளுந்து போன்றவற்றையும் சேர்த்து காயவைத்து அரைத்துப் பொடியாக்கி சத்து மாவு தயாரிக்கிறார்.
  
மேலும் முடி கொட்டுதல், இளநரை, பொடுகு போன்றவற்றிற்கு இயற்கை பொருட்களாகிய நெல்லிக்காய், வெந்தயம், ஓமம், கிராம்பு, வெற்றிலை, சின்ன வெங்காயம், வேப்பங்கொழுந்து, மருதாணி, கறிவேப்பிலை, ரோஜா இதழ், செம்பருத்தி பூ, இலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, பொடுதலை, துளசி போன்றவற்றை கொண்டு தைலம் தயாரித்து கொடுத்து வருகிறார்.
      
‘‘மூலிகை தைலம், ஆம்லா தைலம் மற்றும் நல்லெண்ணையில் தைலம் என மூன்று வகை தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன, அதில் வெவ்வேறு இயற்கை பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதனால் உடலுக்கு மிகவும் நல்லது. என்னதான் பூஸ்ட், போன்விட்டா, ஹார்லிக்ஸ் போன்ற ஹெல்த் ட்ரிங்க்ஸ் குடித்தாலும் அதில் ஏதேனும் ஒரு வகையில் செயற்கை சத்துகள் சேர்க்கப்படுகின்றன. இயற்கை வழிதான் மிகவும் சிறந்தது.

குழந்தைகள் பாலோடு சேர்த்து சாப்பிடுவதற்கென தனியேவும், சர்க்கரை சேர்க்கக்கூடாத பெரியவர்களுக்கு மோருடன் கலந்து சாப்பிட என தனித்தனியாக வெவ்வேறு பொருட்களை வைத்து சத்து மாவுகள் தயாரிக்கிறேன். தயாரிக்கும் எவற்றையும் சேமித்து வைத்துத் தருவதில்லை. கேட்பவர்களுக்கு இரண்டு நாள் அவகாசம் கேட்டு உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறேன்.

வீட்டில் வேறு யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். இந்த வேலைகளை எல்லாம் நானே செய்து வருகிறேன். பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த சத்து மாவில் நெய் சேர்த்து உருண்டை பிடித்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். என்னுடைய ஐந்து வயதில் இருந்து இந்த மாதிரியான சிறுதானிய சமையலை சாப்பிட்டுத்தான் வளர்ந்தேன். எனக்கு வயது அறுபத்து ஐந்து, இன்னமும் நான் பத்து கிலோமீட்டர் வரை நடந்தே செல்வேன்” என்கிறார் ராஜலட்சுமி.

‘‘என் பேரு புவனேஸ்வரி. புவனாஸ் ப்ளோரால் வேனீஸ், புவனாஸ் ஜுவல் கேலரி, புவனாஸ் கிரேட்டிவ் வேர்ல்ட் போன்ற ஃபேஸ்புக் பக்கங்களை நடத்தி வர்றேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி பிரைவேட்ல வேலை பார்த்து வந்தபோதே பார்ட் டைமாக  டெரக்கோட்டா ஜுவல்லரி, குவில்லிங், ஃபேஷன் ஜுவல்லரி, சில்க் த்ரெட் ஜுவல்லரி, மணப்பெண்ணிற்கான ஜடை அலங்காரம் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் இருந்து ஆர்டர் எடுத்து செய்து வருகிறேன். பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன.

செயற்கை பூ அலங்காரம் செய்து தர சொல்லி கேட்பார்கள். இயற்கைப் பூக்களை போலவே அச்சு அசல் அப்படியே செயற்கையாக செய்ய முடியும். வெளிநாட்டில் கூட நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு தூரம் ரீச் ஆனதிற்கு முக்கிய காரணமே ஃபேஸ்புக்தான். மேலும் ‘பாகுபலி’யில் தமன்னா ஒரு பாடலுக்கு இயற்கை பூக்களால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்திருப்பார்.

அதே போல் தற்போது சிலர் தங்கள் திருமணத்திற்காக ஃப்ளவர் ஜுவல்லரி கேட்கிறார்கள். அதையும் செய்து தருகிறேன். சிலர் தங்கள் சாரி, லெஹங்கா போன்றவற்றை அனுப்பி, அதில் உள்ள டிசைன் போன்று வேண்டும் என்று கேட்பார்கள். இவற்றையெல்லாம் செய்து கொடுத்து அவர்களை திருப்தி செய்வதில்தான் இருக்கிறது என் சந்தோஷம். இதில்லாமல் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு வீட்டிலேயே கிராஃப்ட் கிளாஸ் எடுத்து வருகிறேன். நிறைய ஒர்க் ஷாப் நடத்தி இருக்கிறேன்.

இதுவரை என்னிடம் கற்றுக்கொண்டு 160 பெண்கள் சுயமாக தொழில் தொடங்கிவிட்டதுதான் என் சாதனையாக கருதுகிறேன்” என்கிறார் புவனேஸ்வரி. நாம் கேர் எல்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் அனிதா பேசும்போது, ‘‘ஆதரவற்ற பெற்றோர்கள், பிள்ளைகள் வெளிநாடுகளில் குடியேறிய பிறகு தனித்து விடப்பட்ட பெற்றோர்கள், பொதுவாகவே வீட்டில் தனியாக இருக்கும் பெற்றோர்கள் என இப்படிப்பட்டவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் எங்களுடையது.

தனியாக இருக்கும்போது அவர்களுக்கு நிறைய தேவைகள் இருக்கும். அதாவது உணவுத் தேவை, மருத்துவ ரீதியான தேவை, போக்குவரத்துக்கு ஆள்துணை போன்ற தேவைகளை பூர்த்தி செய்யவே நாங்கள் இருக்கிறோம். இந்த நிறுவனம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தது என் வாழ்வில் நடந்த நிகழ்வுதான். நான் ஐடி துறையில் வேலை செய்து வரும்போது வீட்டில் என் தாயாரை தனியாக விட்டு வரும் சூழ்நிலை இருந்தது. அப்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகவும் இருந்தது.

அலுவலகத்தில் என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. ஒருமுறை அவரோடு பேச அலைபேசியில் அழைக்கும்போது அவர் எடுக்கவில்லை. மிகவும் பதட்டமடைந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு போன் செய்து வீட்டிற்குச் சென்று பார்க்க சொன்னேன். என் தாய் நலமுடன் இருப்பதாக அவர்கள் கூறினாலும் படபடப்பு அடங்க பல மணி நேரங்கள் ஆகிவிட்டது. இதுபோன்று பிறருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த சேவை தொடங்கப்பட்டது.

நாங்கள் சந்தித்தவரை, உடல் குறைகளை விட பெரியவர்களுக்கு மனக்குறைகள் தான் அதிகம் இருந்தது. தனிமைதான் அவர்களுக்கு உடல் நலக் கேடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை அன்று வயதானவர்களுக்கு சில ஆர்வமூட்டும் போட்டிகள் மற்றும் கெட்-டு-கெதர் நடத்தி வருகிறோம். இதனால் இங்கு வருபவர்கள் ஒரு குடும்பமாக மாறியிருக்கிறார்கள்.

மேலும் சமைக்க முடியாத முதியவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. கடைகளுக்கு மற்றும் எங்கு வெளியே செல்ல நினைத்தாலும் எங்கள் உறுப்பினர்கள் அழைத்து செல்வார்கள். இதில் வருமானம் கிடைக்கிறதோ இல்லையோ மன நிம்மதி கிடைக்கிறது” என்கிறார் அனிதா. வீட்டிலேயே ஒரு அறை ஒதுக்கி அதில் பெரிய ரெஸ்டாரன்ட் செட் அப் செய்து ‘பாப் அப் கிட்சன் சென்னை’ என்ற பெயரில் சகோதரிகள், அவர்களின் தாய் மற்றும் அத்தைகளுடன் ஞாயிறுதோறும் குஜராத்தி உணவை செய்து கொடுத்து வருகிறார்கள் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட சேத்னா குடும்பத்தினர். 14 வகையான குஜராத்தி உணவை பரிமாறி வருகிறார்கள்.

மேலும் அவர்களின் தோழிகளுடன் சேர்ந்து கேரளத்தின் பாரம்பரிய உணவையும், மஹாராஷ்டிரத்தின் பாரம்பரிய உணவையும் சமைத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பித்து மூன்றே வாரங்களில் 80க்கும் மேற்பட்ட நபர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இதுகுறித்து உன்னித்தி திருவேதி கூறியபோது, ‘‘இந்த ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணம் எங்க அம்மா ஷேத்னா திருவேதி மற்றும் என் அத்தைகள் எல்லாரும் ரொம்ப நல்லா சமைப்பாங்க.

ஆனா அவங்க திறமையை வெளிக்காட்ட அவங்களுக்குனு ஒரு பிளாட்ஃபார்ம் கிடைக்கிறதில்ல. எங்க அம்மாவ ஊக்குவிக்கணும்கிறதுதான் எங்க நோக்கம். இதை ரொம்ப பெருமையா ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய பிறகு 2 ஆர்டர் கிடைக்கப்பெற்று வெற்றிகரமா செஞ்சு முடிச்சிருக்கோம். வீட்டிலேயே இருக்கிற, ரொம்ப நிறைய வெரைட்டி செய்ய தெரிஞ்ச அம்மாக்களோட இணைந்து பெரிய அளவில் செய்யணும்கிறது தான் எங்க ஆசை’’ என்கிறார் உன்னித்தி திருவேதி.