எழுத வந்ததே விபத்துதான்



-ஸ்ரீதேவி மோகன்

எழுத்தாளர் வத்சலா

“ஜனரஞ்சக பத்திரிகைகளில் வரும் கதைகளை வாசித்திருக்கிறேனே தவிர எழுத்தாளர் ஆகணும்கிற எண்ணம் எல்லாம் சிறு வயதிலோ இளம் வயதிலோ எனக்கு இருந்ததே இல்லை. நான் எழுத வந்ததே ஒரு விபத்து தான்” என்கிறார் பல தடைகளை தாண்டி தன்னுடைய 48வது வயதில் முதல் சிறுகதையை எழுதி, இன்று தனது 74வது வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் வத்சலா.

“அப்பா மும்பையில் வேலை பார்த்ததால் நான்காவது வரை மும்பையில் உள்ள தமிழ் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு அப்பாவிற்கு குஜராத்துக்கு பணி இட மாற்றம் ஆனது. அங்கே தமிழ் மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகள் எல்லாம் இல்லை. அதனால் அங்குள்ள ஒரு குஜராத்தி பள்ளியில் சேர்க்கப்பட்டேன். மொழி தெரியாமல் மிகவும் சிரமமாக இருந்தது.

அதன்பிறகு சில நாட்களில் வீடு மாற்றினார்கள். பள்ளியில் இருந்து தொலைவிற்கு மாற்றப்பட்டதால் என்னை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்கள். அப்போது எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. அதனால் கிட்டதட்ட இரண்டரை வருடங்கள் வீட்டில்தான் இருந்தேன். சிறுவயது என்பதால் படிப்பின் அவசியம் எல்லாம் புரியாமல் ஜாலியாக இருந்தேன். அண்ணாவை மட்டும் சென்னை ராமகிருஷ்ண மடப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்கள்.

ஒருநாள் வீட்டிற்கு வந்த அப்பாவின் பஞ்சாபி நண்பர் பெண் குழந்தையாக இருந்தாலும் பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை அப்பாவுக்கு வலியுறுத்தியதால் ஒரு ஆறுமாதம் வெளி ட்யூஷன் வகுப்புகளுக்குச் சென்று பாடம் கற்று பின் மறுபடி பள்ளியில் சேர்ந்தேன். புரியாத மொழியில் மிகுந்த சிரமத்துக்கிடையே படித்தேன். குஜராத்தி இலக்கணம் எனக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது.

அதனைக் கற்றுக்கொள்ள நான் மிகுந்த முயற்சி எடுத்தேன். ஒரு நல் ஆசிரியர் அதனை நல்ல முறையில் எனக்குப் புரிய வைத்தார். அவரின் உதவியோடு நல்லபடியாக பள்ளிப்படிப்பை முடித்தேன். பிறகு சென்னை வந்து பி.யூ.சி நல்ல மதிப்பெண்களோடு முடித்தேன். அதன் பிறகு பிஎஸ்ஸி இயற்பியல் முடித்தேன். ஆனால் இவ்வளவு சிரமங்களுக்கிடையே படித்த என்னை விடவும் என் அண்ணனைத்தான் உயர்வாக நினைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பெண்கள் படிப்பதோ பாட்டுக் கற்றுக்கொள்வதோ தையல் கற்றுக்கொள்வதோ எல்லாமே கல்யாணத்தை நோக்கி மட்டுமே என்பதாக இருந்தது. கல்யாணத்தை முன்னிறுத்தியே பெண்கள் வளர்க்கப்பட்டனர் என்று சொல்லலாம். அதனால் இவ்வளவு படித்ததே போதும் இதற்கு மேல் படித்தால் அதை விட அதிகமாக படித்த மாப்பிள்ளை தேட வேண்டும் எனச் சொல்லி அதற்கு மேல் படிக்க எனக்கு தடை போடப்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் என் அண்ணன் வேலை விஷயமாக ஒன்றரை ஆண்டுகள் ரஷ்யா போய் இருந்ததால் அவர் இல்லாத சமயத்தில் எனக்குத் திருமணம் நிச்சயிக்க முடியவில்லை. எனவே வீட்டில் போராடி எம்எஸ்ஸி சேர்ந்து படித்தேன். அங்கு பெண்கள் குறைவாக இருந்ததால் ஆண்களின் ஆதிக்கத்தை அதிகமாக உணர்ந்தேன். போராடி ஒரு வழியாக எம்எஸ்ஸி முடித்தேன். எனக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்தது. ஆனால் உடனே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் 3 மாதங்களுக்கு மேல் வேலைக்குப் போக முடியவில்லை.

திருமணத்திற்கு பின் வேலைக்குச் செல்ல என் கணவர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் பல பல இன்னல்களை சந்தித்தபிறகு கசப்பான அந்த திருமண பந்தத்தில் இருந்து வெளிவந்தேன். அப்போது என் கையில் ஒன்றரை வயது பெண் குழந்தை. பெற்றோருடன் இருந்தேன். ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில் யதேச்சையாக கணினிப் பயிற்சி எடுக்க நேர்ந்தது.

அதன் பிறகு அதன் மூலம் எனக்கு கணினி மென் பொறியாளராக அரசு வேலை கிடைத்தது. என் பெற்றோர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள, நான் வேலைக்குப் போனேன். வாழ்க்கை மெல்ல விளங்க ஆரம்பித்தது. என்னை சக ஊழியராக ஏற்றுக்கொள்ள அங்கிருந்த ஆண்களுக்கு மனமில்லை. ஒரு பெண் எப்படி எங்களுக்குச் சமமாக இருக்கலாம் என்றொரு எண்ணம் அவர்களிடம் இருந்தது.

எனக்கு வேலை கற்றுக் கொள்ள தேவையான மெட்டீரியல் கிடைப்பதே சிரமமாக இருக்கும். அவர்களுக்குப் போகத்தான் எனக்கு என்ற நிலைதான். ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். பெண் என்பதற்காகவே கடைசி வரை என்னிடம் அவர்கள் இயல்பாக பழகவில்லை. திறமை இருந்தும் அதீத உழைப்பு இருந்தும் தலைமையிடமிருந்து எனக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவே இல்லை.

ஒரு ப்ராஜெக்ட்டை பற்றி விளக்கும் போது கூட என் மேலதிகாரி என்னைப் பார்த்துப் பேச மாட்டார். ஆண் ஊழியர்களை பார்த்துத்தான் பேசுவார். கூச்சத்தால் அப்படிச் செய்யவில்லை. ‘நீ இதற்கு தகுதியானவள் அல்ல’ என்ற எண்ணம்தான் காரணம். ‘உன்னிடம் இதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீ அவ்வளவு முக்கியமான ஆள் இல்லை’ என்று அர்த்தம். அது அவர்கள் தவறும் இல்லை.

ஒரு பெண்ணை தன்னைவிட உயர்ந்த இடத்தில் வைக்கக்கூடிய அளவு பரந்த மனப்பான்மை அவர்களுக்கில்லை. ஆண்-பெண் நட்பு என்ற முதிர்ச்சி அவர்களிடம் இல்லை. ஆண்-பெண் உறவு என்பது காதலில்தான் முடியும் என்ற தவறான எண்ணத்திலிருந்து மக்கள் இன்னும் கூட முழுதாக வெளிவரவில்லை எனும் பட்சத்தில் அந்தக் காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.

நான் சமமாக இருப்பதையே அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் அதிக திறமையுடன் முன்னேற முயற்சித்தால் அவர்களால் தாங்க முடியுமா? அதனால் எனக்குக் கொடுக்கக்கூடாது அதே சமயம் என்னை விட தகுதி உடையவர்களும் யாருமில்லை என்பதற்காகவே மூன்று ஆண்டுகள் தொடர்ந்து யாருக்குமே ப்ரமோஷன் கொடுக்காமல் இருந்தார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு பெண்ணான என்னிடம் இயல்பான நட்பு பாராட்டக் கூடிய அளவில் அவர்கள் வளர்க்கப்படவில்லை.

பல ஆண்டுகள் எனக்கு என் வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தம் இருந்தது. ஒரு பக்கம் அலுவலகப் பிரச்னை. இப்படி இருக்க வீட்டிலும் சதா பிரச்னையாக இருந்தது. சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். எனக்குப் பிரச்னையாக இருந்தது வேறு யாருமல்ல எனது அம்மாதான். என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சிக்கும் அவர் தடை சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு சமயம் எம். எஸ். படிப்பதற்காக முயற்சி எடுத்தபோது ஏதாவது சொல்லித் தடுத்துக் கொண்டே இருந்தார்.

படிப்பு தான் என் வாழ்க்கைக்குத் துணையாக இருந்தது. என் லட்சியமாக இருந்தது. அதை தடுக்கிறார்களே என துயரமாக இருந்தது. வாரம் ஒருமுறையாவது நான் அழுவேன். அந்த அளவு நான்கு திசைகளிலும் எனக்கு சோதனையாகவே இருந்தது. ஒரு முறை அம்மா நெஞ்சு வலி என்றார். அப்போது எல்லா சோதனையும் மேற்கொண்ட போது அங்கிருந்த மன நல மருத்துவரும் அம்மாவிடம் பேசினார்.

அப்போது அந்த டாக்டர் என்னிடம் பகிர்ந்த தகவல் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. நான் எம்.எஸ். படிக்கக்கூடாது என்பது என் தாயாரின் எண்ணமாக இருந்திருக்கிறது. அதைத் தடுக்க அவர் முயற்சி செய்தார் என்பதை ஜீரணிக்கவே கடினமாக இருந்தது. என் குழந்தையையும் தன் வசமே வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தார் என் அம்மா. அதனால் மெல்ல என் தாயாரிடமிருந்து விலகினேன்.

என் தாய் தந்தையர்க்கு தனியாக வீடு எடுத்துக்கொடுத்து அவர்களுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து வாரம் ஒருமுறை சென்று பார்த்து வந்தேன். அப்போதுதான் எனக்கான முழு சுதந்திரத்தை என்னால் உணர முடிந்தது. பிறகு எம்.எஸ். முடித்தேன். அறிவொளி இயக்கத்திலும் பணியாற்றினேன்.
 
என் தாயார் எனது 45 வயதில் காலமானார். அதன்பிறகு இயல்பான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தபோது தான் என்னுடைய சகப் பணியாளர் ஹேமா மற்றும் பெண்ணியவாதி வ.கீதா இவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. பெண்ணியம் பற்றிய புரிதல்களை எனக்கு ஏற்படுத்தியவர்கள் இவர்கள் இருவரும்தான். கோழிக்கோட்டில் நடந்த பெண்கள் மாநாட்டுக்கு கீதா என்னை அழைத்துப் போனார்.

அங்கே படித்தவர்கள், படிக்காதவர்கள் ஏழை, வசதியானவர்கள் என பல வகையான பெண்கள் பல மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் கூடி இருந்தனர். யார் எவ்வகையை சேர்ந்தவராக இருந்தாலும் எப்படி இருந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்திற்காகவே ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எல்லாருடைய துயரத்திற்கும் பொதுவான ஒரே விஷயம் ஆணாதிக்கமாக இருந்தது.

தனிப்பெண்களுக்கான (Single women) கூட்டம் அங்கேயே இரவு நடைபெற்றது. எட்டு மணிக்குத் தொடங்கிய கூட்டம் முடிய நள்ளிரவு 2 மணி ஆனது. எந்த அறிவுரைகளும் அங்கே பகிரப்படவில்லை. அங்கு வந்த பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள் அவ்வளவுதான். ஆனால் அங்கு பெண்கள் ஒவ்வொருவரும் பேசிய விஷயங்கள் அவர்கள் பட்ட பாடுகளை கேட்ட பிறகு எனக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

மெல்ல என் தாயாரின் மனமும் புரிய ஆரம்பித்தது. அம்மா அழகானவர் மட்டுமல்ல மிகுந்த திறமையானவர். ஆனால் 15 வயதிலே திருமணம். மாமியார் வீடு, குழந்தைகள் என அவர் திறமை முழுதும் முடக்கப்பட்டுவிட்டது. அதனால் எனது வளர்ச்சியை இயல்பாகவே அவரால் தாங்க முடியாமல் போய்விட்டது. அது அவரது குற்றம் அல்ல என்பது புரிந்தது. அழுத்தி வைக்கப்படும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என உணர்ந்து கொள்ள முடிந்தது.

என் மன உணர்வுகளுக்கு ஏதோ ஒரு வடிகால் தேவைப்பட்டது. அப்போதுதான் என் அம்மாவைப் பற்றி ஒரு நாவல் எழுதத்தொடங்கினேன். வெறும் நிஜம் எழுத்திற்கு சுவாரஸ்யமாக இருக்காது என கொஞ்சம் கற்பனை கலந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது. அப்போது கிடைத்த அவகாசத்தில்தான் முதன் முதலாக ஒரு சிறுகதையை எழுதினேன்.

அதைப் பார்த்து பாராட்டிய கீதா அதனை எஸ்.வி. ராஜதுரையிடம் கொடுத்தார். அவர் அதனை ‘சுபமங்களா’ ஆசிரியரிடம் யாருடையது இந்த கதை என்ற விவரத்தை எல்லாம் சொல்லாமல் இந்த கதையை வாசியுங்கள் என்று மட்டும் சொல்லி கொடுத்துவிட்டு வந்து விட்டார். அங்கிருந்து அவர் வீட்டுக்கு வருவதற்குள் ‘இது யார் எழுதின கதை? ரொம்ப நல்லா இருக்கு.

கட்டாயம் இதனை பிரசுரிக்கவேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார் ‘சுபமங்களா’ ஆசிரியர். அப்போது தான் ராஜதுரை என்னைப் பற்றி சொல்லி இது எனது முதல் கதை என்றும் சொல்லி இருக்கிறார். அந்தக் கதை ‘சுபமங்களா’வில் பிரசுரமானது. மேலும் எழுதச் சொல்லி ஊக்குவித்தார். அப்புறம் சில சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினேன். ‘அதுவும் கடந்து’ என்ற எனது இரண்டாவது கதைக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு கிடைத்தது. மற்றுமொரு கதைக்கு ‘அக்னி’ அமைப்பு சார்பாக 1000 ரூபாய் பரிசாக கிடைத்தது.

கணையாழிக்கு ‘என்று’ என்ற கவிதையை அனுப்பினேன். செல்ஃப் அட்ரஸ் போஸ்ட் கார்டுடன் அனுப்பி இருந்தேன். கணையாழியில் இருந்து இந்த கவிதையை பிரசுரிக்க முடியாது என்று பதில் கடிதம் வந்திருந்தது. அதனால் ‘தினமணி’ பத்திரிகையில் நடைபெற்ற கவிதைப்போட்டிக்கு
அந்தக் கவிதையை அனுப்பி வைத்தேன். ஒருநாள் மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த போது கணையாழி வந்திருந்தது.

அப்போது தான் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்த என் மகள் பார்த்துவிட்டு ‘உன் பேரில் ஒரு கவிதை வந்திருக்குமா’ என்றாள். அப்போது நான் சொன்னேன். ‘வேறு ஒருத்தரும் என் பெயரிலே எழுத்தாளராக இருக்கிறாங்க போல,  நான் என் பேரை மாற்ற வேண்டி இருக்குமோ’ என்றேன். ஆனால் புத்தகத்தைப் பிரித்துப் படித்தால் அது என் கவிதைதான். நான் போன் செய்து கணையாழி ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார் ‘கவிதைக்கு சுஜாதாதான் பொறுப்பு. அவரது அஸிஸ்டென்ட் எடிட்டர் தவறுதலாக இந்த கவிதையை பிரசுரிக்க முடியாத ஃபைலில் வைத்துவிட்டார். ஆனால் அந்தக் கவிதையை எதேச்சையாக பார்த்த சுஜாதா இது அருமையான கவிதை எனச் சொல்லி பிரசுரித்தார்’ என்றார்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு நான் ‘தினமணி’ ஆசிரியரிடம் பேசி நடந்ததை சொன்னேன். அந்தக் கவிதை குறித்து கணையாழியில் சுஜாதா சிலாகித்து எழுதி இருந்தார். ஆங்கிலத்தில் பிரபல பெண்ணியவாதி சைமன்-டி-பெவாயர் 1000 பக்கங்களில் எழுதி இருந்ததை இவர் ஒரே கவிதையில் எழுதி விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார். 2000 ஆம் ஆண்டில் என் முதல் கவிதை தொகுப்பு ‘சுயம்’ வெளியானது. அங்கு சுஜாதா என் கவிதை நூலை நல்ல முறையில் விமர்சனம் செய்து பேசினார். சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி மற்றும் கஸ்தூரி ரங்கன் இவர்கள் மூவரும் எழுத்துத்துறையில் என்னை நன்கு ஊக்குவித்தார்கள்.

என் முதல் சிறுகதை வந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு எனது முதல் நாவல் ‘வட்டத்துள்’ வெளிவந்தது. நான் என் கதைகளை பல முறை திருத்தங்கள் செய்வேன். அதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனது. அந்த சமயம் என் மகளும் படிப்பை முடித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அவளுக்குத் திருமணமும் செய்துவைத்தேன். அதன் பிறகு ஆத்ம திருப்தி இல்லாத அந்த வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அதன் பிறகு நேரம் கிடைக்கும் போது சிறுகதைகள் எழுதுகிறேன். அதிகம் எழுதுவதில்லை. கட்டாயம் எழுத வேண்டும் என்று
இல்லாமல் என் உணர்விற்கு தோன்றும் போது மட்டும் எழுதுகிறேன்.

இப்போது இந்த ஜனவரியில் ‘கண்ணுக்குள் சற்றுப் பயணித்து’ என்ற எனது இரண்டாவது நாவல் வெளியானது. இனி சிறுகதை தொகுப்பு ஒன்றை வெளியிட வேண்டும். ஆணாதிக்கம் இந்த சமூகத்தில் நிறைய இருந்தாலும் நல்ல ஆண்களையும் நான் சந்தித்து இருக்கிறேன். பெண்கள் பெண்ணியம் பேசினாலும் ஆண்களை ஒதுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதே சமயம் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தன் சுயத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது. பொறுப்புகளில் இருந்து தான் உரிமை பிறக்கும் என்பார் காந்தி. அது போல நம் கடமையை செய்யத் தவறிவிட்டு உரிமை கோரக்கூடாது.

பெண்கள் படிப்புடன் கட்டாயம் தற்காப்புக்கலையும் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கான பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். எமோஷனல் இண்டிபென்டன்ஸ் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் குடும்பம், குடும்பம் என்று இல்லாமல் பெண்கள் தனக்கான நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்” என்று தீர்மானமாக சொல்லும் வத்சலா காற்றுள்ள பந்தை நீருக்குள் மூழ்கடிக்க முடியாது என்பதற்கான வாழும் சாட்சி. 

படங்கள்: ஆர்.கோபால்