வானவில் சந்தை



கடனா? சேமிப்பா? பள்ளிக் குழந்தைகளுக்கான நிதிக் கல்வித் திட்டம் ஒன்றை வடிவமைத்து, அதை பள்ளிகளோடு இணைந்து கற்பிக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, நாங்கள் சில ஆசிரியர்களோடும், பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களோடும் உரையாடினோம். 2000க்குப் பின், இந்திய நடுத்தர வர்க்கம் கல்வியை அணுகும் முறை பெரிதும் மாறி விட்டது என்று தெரிகிறது.

பிள்ளைகளின் கல்விக்கு ஒரு குடும்பம் எவ்வளவு செலவழிக்க முடியும், செலவழிக்க வேண்டும் என்பது குறித்த புரிதல் எத்தனை பெற்றோருக்கு இருக்கிறது? அதனாலேயே, பள்ளிக் கல்வி முடிக்கும் ஒரு இளைஞனின் மீது பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் என்ற பேரில் சுமத்தப்படுகிறது. அந்த மாணவனுக்கோ கடன் பற்றியோ சேமிப்பு பற்றியோ அடிப்படைப் புரிதல் கூட இருக்காது என்பது உறுதி. உண்மையில், பெற்றோர்கள் தங்களது நிதி மேலாண்மை சார்ந்த போதாமையை தங்களது பிள்ளைகளுக்குக் கடத்துகிறார்கள்.

இது வெறும் நிதி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. நிதித் தேவைகளை திட்டமிடுவது பற்றிய ஒரு தலைமுறையின் பிரச்னை என்றே தோன்றுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, ஒரு இளைஞிக்கு மொபைல் போன் போன்ற ஒரு தேவையைக் கூட உடனே அனுபவிக்கும் பொருட்டு 6 மாதத் தவணையில் வாங்கத் தோன்றுகிறது.

ஆறு மாதம் அந்தத் தொகையைச் சேமித்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல என்ற எண்ணமும் கூடப் பரவலாக இருக்கிறது. மொபைல் போன் போன்ற சிறிய பொருட்களுக்கே இப்படியென்றால், கார், வீடு போன்ற பெரிய தேவைகளுக்குச் சேமிக்கச் சொல்வது ‘அந்தக்காலத்துச்’ சிந்தனை ஆகிவிடுகிறது. ஆனால், உண்மையில் அப்படிச் சிலர் இன்றும் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இன்று இருக்கின்றன?

முன்பெல்லாம் (80கள், 90களில்) வாராந்திர பத்திரிகைகளில் தவறாமல் இடம் பிடிப்பது சீட்டுக் கம்பெனிகளைப் பற்றிய ஜோக்குகள் தான். இப்போதைய தலைமுறைக்கு ஏலச் சீட்டுகளைப் பற்றிய அறிமுகம் சற்றுக் குறைவுதான். எங்களது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர்களான மென்பொருளாளர்களுக்கு (பெரும்பாலும் தங்களது 30களில் இருப்பவர்கள்) ஏலச் சீட்டுகள் பற்றி பெரும்பாலும் தெரியாது. சொல்லப் போனால் வங்கிக் கடன் தாண்டி பெரும்பாலும் யாரும் சிந்திப்பதில்லை.

முன்பெல்லாம் ஒரு தெருவுக்கு ஒரு பெண்மணி ஏலச்சீட்டு நடத்துவார். தெரிந்தவர், அறிந்தவர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் என்று அதில் உறுப்பினராக இருப்பார்கள். அவரே மாதாமாதம் தொகையை வசூலித்து, ஏலத்தை நடத்தி, பணத்தைக் கொடுத்துத் திறம்பட நடத்துவார். இன்றும் பலர் இதைச் செய்து வருகிறார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது.

பெரும்பாலும் நம்பிக்கையின் பேரில் நடத்தப்படும் இந்த வகை சிறிய ஏலச்சீட்டுகள், பணத்தை ஏலத்தில் எடுத்தவர்கள் கட்டாமல் போனால், தொடர்ந்து மற்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சீட்டை நடத்துபவர்கள் நீண்ட காலத்திற்கு தங்கள் கைக்காசைப் போட்டுச் சமாளிக்க முடியாது. அதனாலேயே இது போன்ற சிறிய ஏலச் சீட்டுகள் தோன்றுவதும் மறைவதும் தொடர்ந்து நடக்கிறது.

ஆனால், சட்டதிட்டங்களுக்குட்பட்டும், மிகுந்த கட்டுப்பாடுகளுடனும், ஏலத்தில் எடுப்பவர்களுக்குச் சீட்டுப் பணத்தைக் கொடுப்பதில் போதுமான எச்சரிக்கையுடனும் செயல்படும் பல சீட்டு நிறுவனங்கள் இங்கு உள்ளன. கேரளத்தில் (Kerala State Financial Enterprises)  அரசாங்கமே சீட்டு நடத்துகிறது. கர்நாடகத்தில் ‘மைசூர் சேல்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் கர்நாடக அரசாங்கம் அதை நடத்துகிறது. தமிழகத்தில் அரசு அப்படி ஏதும் ஒன்றை நடத்தவில்லை.

ஆனால், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ரீராம் சிட்ஸ், தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 700 கிளைகளையும், கிட்டத்தட்ட 80000 முகவர்களையும் கொண்டு இது செயல்பட்டு வருகிறது. ஆந்திராவின் (தெலங்கானா?) ராமோஜி குழுமத்தின் மார்கதரிசி சிட்ஸ் பரவலான கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவைகளில் பலவும் இணையம் வழி பணம் செலுத்தும் (Online Payment) தொழில்நுட்பத்தையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.
 
ஏலச்சீட்டு என்றால் என்ன?
உண்மையில், சீட்டை நடத்துபவருக்கும் (Foreman) அதில் உறுப்பினராகச் சேருபவர்களுக்கும் இடையிலான ஓர் ஒப்பந்தம்தான் அது. ஒப்பந்தப்படி, ஒரு சீட்டில் சேரும் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டும். சீட்டை நடத்துபவர், அந்தத் தொகையை வசூலித்து குழுவில் உள்ள ஒருவருக்கு (கேட்பவர்/ bidder) அளிப்பார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கேட்கும் பட்சத்தில் சீட்டுத்தொகை ஏலத்தில் விடப்படும். சீட்டுத் தொகையில் அதிகத் தள்ளுபடிசெய்து கேட்பவருக்குக் கொடுக்கப்படும். உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய் சீட்டுத் தொகைக்கு ஒரு மாதத்தில் மூன்று பேர் போட்டியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் இருபதாயிரம் தள்ளுபடியில் ஏலம் கேட்கிறார் (அதாவது, எண்பதாயிரம் ரூபாய் கிடைத்தால் போதுமென்கிறார்).

மற்றொருவர் முப்பதாயிரம் தள்ளுபடியில் கேட்கிறார் (எழுபதாயிரம் ரூபாய் போதுமென்கிறார்). மூன்றாமவர் நாற்பதாயிரம் தள்ளுபடியில் ஏலம் கேட்கிறார் (அறுபதாயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமென்கிறார்). இப்போது, சீட்டு நடத்துபவர் அதிக தள்ளுபடியில் கேட்ட மூன்றாமவருக்கு ரூபாய் அறுபதாயிரத்தைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள நாற்பதாயிரத்தை சீட்டின் உறுப்பினர்களுக்கு  பிரித்துக் (தனது கமிஷனைக் கழித்த பிறகு) கொடுத்துவிடுவார்.

இப்படிஒவ்வொரு உறுப்பினருக்கும் கிடைக்கும் தொகையை ‘கசறு’ (Dividend) என்கிறார்கள். இதுவே சீட்டு எடுக்காதவர்களுக்கு கிடைக்கும் லாபம். சீட்டை எடுத்தவர் வேறு எங்கும் போய்க் கடன் வாங்குவதற்குப் பதிலாக தனது குழுவிலேயே அதைப் பெறுகிறார். அதுவும் குறைந்த வட்டியில். ஆக, ஏலச்சீட்டு ஒரு வகையில் கடனாகவும் (ஐம்பது மாதத் தவணையில் முதல் மாதம் எடுப்பவருக்கு) மற்றொரு வகையில் சேமிப்பாகவும் (கடைசி மாதத்தில் சீட்டுத் தொகை பெறுபவருக்கு) வேலை செய்கிறது.

அதனாலேயே, எப்போது பணத்தேவை ஏற்படுமென்று சொல்லமுடியாத சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஏலச்சீட்டு ஒரு வரப்பிரசாதம். எளிய மனிதர்கள் வங்கிக் கடன்களைப் பெறுவதில் உள்ள நடைமுறை சார்ந்த சிக்கல்களை வைத்துப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீராம் சிட்ஸ், தஞ்சாவூர் பிராந்திய உதவிப் பொது மேலாளரான அ.கார்த்திகேயன், “50 லட்சம் ரூபாய் (ஐம்பது மாதத் தவணை) சீட்டில் முதலில் ஏலம் எடுக்கும் ஒருவருக்கு 30 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஐம்பது மாதத்தில் கசறாக ரூ.10,56,000 எதிர்பார்க்கலாம். அவர் கட்டி முடிப்பது தோராயமாக ரூ.39,43,000. வட்டித் தொகையைக் கணக்கிட்டால் 7.86% தான் வரும்” என்கிறார். அதோடு, ராம் சிட்ஸ் நிறுவனம் இதுவரை ஐம்பதாயிரம் கோடி ரூபாய் சீட்டுத் தொகையைக் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் பேருக்கு வழங்கியிருக்கிறது என்றும் குறிப்பிடு
கிறார். இதில் பெரும் பயனாளிகள் நடுத்தர வர்க்கமும், சிறு குறு தொழில் முனைவோரும்தான் என்பது முக்கியம்.

முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு ஏலச்சீட்டு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. புதிய தலைமுறைப் பெண்கள் கடன் வாங்குவது பற்றியோ அல்லது சேமிப்பது பற்றியோ தங்களது வழக்கமான எண்ணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிலும் தற்சார்போடு இருக்க விரும்பும் நவீன உலகின் பெண்கள், எதிர்பாராத நிதி சார்ந்த பிரச்னைகளின் பொருட்டு முன் கூட்டியே திட்டமிடும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வது மிகவும் அத்தியாவசியமானது. அதன் பொருட்டு தங்கள் முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் தீர்க்கமாகப் பரிசீலிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

(வண்ணங்கள் தொடரும்!)

அபூபக்கர் சித்திக்
செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்
abu@wealthtraits.com