தில் ஐ.பி.எஸ். ரூபா-மகேஸ்வரி

அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறிப்போய் இருக்கிறார் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா டிமவுட்கில். அரசுப் பணியில் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுவது அதிகாரிகளின் கடமை. ஆனால் அவற்றை எல்லாம் நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து கைதட்டி, ரசித்துக்கொண்டிருக்கிறோம். எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்ற நிலையில்… ஒரு சில உயர் அதிகாரிகளின் நேர்மையும், அர்ப்பணிப்பும் அவ்வப்போது நம்மை அட என அண்ணாந்து பார்த்து வியக்க வைக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சசிகலாவைச் சுற்றி பரபரப்பிற்கு பஞ்சமில்லை. தொடர்ந்து வந்த தினங்களில் நடந்தவை எல்லாம் நாம் அறிந்ததே. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடன் இளவரசி மற்றும் சுதாகரனும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு சிறைக்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை டி.ஜி.பி. ஹெச்.எஸ்.என். ராவ், சசிகலா தரப்பிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றிருப்பதாகவும் சிறைத் துறை டி.ஐ.ஜி. பொறுப்பில் இருக்கும் ரூபா குற்றம்சாட்டியுள்ளதுடன், சசிகலாவிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

கடந்த 2007ம் ஆண்டு தற்போது மத்திய அமைச்சராக உள்ள உமா பாரதி, ஹூப்ளி மாநகரத்துக்கு வந்தால் கலவரம் வெடிக்கும் என்கிற பதற்ற நிலை இருந்து வந்தது. உமாபாரதியை தடுத்து நிறுத்த பயந்த பல்வேறு அதிகாரிகளுக்கு மத்தியில், ஹூப்ளிக்கு வந்த மத்திய அமைச்சர் உமாபாரதியினை, சிறிதும் தயக்கமின்றி அவரை கைது செய்து, எடியூரப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் ரூபா.

முதல்வர் எடியூரப்பாவுக்கு வழங்கப்பட்ட தேவைக்கு அதிகமான காவல் பாதுகாப்பு சேவைகளை, தேவையில்லாத செலவு எனக்கூறி பாதுகாப்பு வாகனங்களையும், போலீஸ் அதிகாரிகளையும் அதிரடியாகக் குறைத்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இவர்.பெங்களூருவின் துணை கமிஷனராக ரூபா இருந்தபோது, முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் தேவையில்லாமல் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பையும் திரும்பப் பெற்றார்.

இதில் அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் ரூபா சம்பாதிக்கத் தவறவில்லை. ரூபா பணிபுரியும் இடங்களில் எல்லாம் பெண்களின் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருவதுடன், அவர் பணியாற்றிய இடங்களில் அதிரடி நடவடிக்கைகளைக் காட்டாமல் இருந்ததே இல்லை. அரசியல்ரீதியாக எந்த நெருக்கடி என்றாலும், அதை எதிர்கொள்வதில் ரூபாவுக்கு நிகர் அவர்தான் என்கின்றனர் அவரை நெருக்கமாக உணர்ந்தவர்கள்.

இந்நிலையில் கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜியாக பதினைந்து நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ரூபா, பணிக்குச் சேர்ந்த நாள் முதலாகவே, சிறைத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வந்திருக்கிறார். கடந்த மாதம் 10ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை நடத்தி, ஆதாரங்களை சேகரித்தார். மேலும் சசிகலாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகைகள் குறித்து விளக்கம் கேட்டு சிறைத்துறை

டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் ரூபாவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், ‘சிறைக்குள் சசிகலாவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தனி சமையலறையே செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஊழலில் டி.ஜி.பிக்கும் பங்கு உண்டு என பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியவர். ‘இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. ஹெச்.எஸ்.என்.ராவ் இரண்டு கோடி ரூபாய் வரையில் லஞ்சம் பெற்றுள்ளார்’ என விளக்கமளித்து இரு அறிக்கைகளை அனைத்து உயர் மட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

அவரின் இந்த விளக்கம் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி, டி.ஜி.பி. சத்திய நாராயண ராவுக்கு கூடுதல்நெருக்கடியை கொடுத்திருக்கிறது. ரூபாவின் குற்றச்சாட்டுக்கு சிறைத்துறை டி.ஜி.பி மறுப்புத் தெரிவித்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறித்து, டி.ஐ.ஜி. ரூபா கிளப்பியுள்ள ஊழல் புகார் மாநிலம் தாண்டி தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் சசிகலாவுடன் தண்டனை அனுபவித்து வந்த 32 கைதிகள், பெல்லாரி மற்றும் பெரகாவியில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். சிறைத் துறை பிரச்சனை குறித்து, ஊடகங்கள் முன் விளக்கம் தந்த அதிகாரி ரூபா, ‘இது என்னுடைய பணியின் ஓர் அங்கம்’ எனத் தெரிவித்துள்ளார்.  ‘சிறையில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கின்றன’ என விளக்கம் தந்து தொடர்ந்து ஊடகங்களையும், மக்களையும் அதிர வைத்திருக்கிறார்.

இந்நிலையில், ரூபா சிறைத்துறை டி.ஜி.பி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை அமைத்திருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. மேலும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறை நடவடிக்கை குறித்து விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா, ஏ.கே. தெல்கி உள்ளிட்ட கைதிகள் தங்கியுள்ள அறை வளாகங்களில் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராப் பதிவுகளை ஆராய்ந்தபோது சசிகலா, தெல்கி உள்ளிட்ட பணக்காரக் கைதிகள் சிறையில் விதிமுறைகளை மீறி பல்வேறு சலுகைகளை பெற்றுவந்தது தெரியவந்திருக்கிறது.

தொடர் நடவடிக்கையாக, சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முறைகேடுகளை துணிந்து அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

யார் இந்த ரூபா ஐ.பி.எஸ்?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த துணிச்சலான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா, பிறந்து வளர்ந்ததெல்லாம் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தாவனகரே பகுதியில். பள்ளியில் படிக்கும் காலத்திலே பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி படிப்புகளில் கர்நாடக மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்றவர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிடம் சிறந்த என்.சி.சி. மாணவிக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

துப்பாக்கி சுடுவதில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கல்லூரியிலும் முதுநிலை உளவியல் படிப்பினை நிறைவு செய்து, அதிலும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார். குடிமைப் பணியியல் தேர்வில் 43வது இடத்தில் தேர்வாகி, 2000ம் ஆண்டு பேட்ச்சில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பயிற்சி பெற்றவர்.

பயிற்சியில் 5வது இடத்தை தக்கவைத்து, தன் சொந்த மாநிலமான கர்நாடகாவிலே அதிகாரியாக பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். பணியில் நேர்மையாக செயல் புரிந்ததற்காக பல பரிசுகளை பெற்றவர், ஜனாதிபதியின் கைகளால் விருதையும் பெற்றிருக்கிறார். ரூபாவின் அம்மா, அப்பா இருவரும் அரசு உயர் அதிகாரிகள். அவரின் தங்கை ரோகிணி, ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பணியில் இருக்கிறார். 2003ல், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முனிஷ் மோட்கில் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரூபா ஐ.பி.எஸ்க்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.