சாதனை ஆரம்பம்-ஜெ.சதீஷ்

ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் பெண்களும் இன்று கோலோச்ச தொடங்கியுள்ளனர். அத்தகைய பெண்களில் ஒருவர்தான் ரம்யா. உலக அளவில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வருகிறார்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே அவர்களுக்கான திறமையை அறிந்து ஊக்கப்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் கிரிக்கெட், கபடி, கொக்கோ போன்ற விளையாட்டுகளையும் தாண்டி குத்துச்சண்டை, சதுரங்க விளையாட்டு, கராத்தே போன்றவற்றிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் கரம்பியம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, வசந்தா ஆகியோரின் மகள் ரம்யா. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் குன்னம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இன்றும் தமிழகத்தில் பல கிராமங்களில் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டும் சமூகத்தில் இது போன்ற வீர விளையாட்டுகளில் பெண் ஒருவர் வெற்றி பெற்று வருவது பெண்கள் பலருக்கும் ஊக்கம் அளித்திருக்கிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி ரம்யாவிடம் பேசினேன்...

“அப்பாவும் அம்மாவும் விவசாயம் செய்து வருகிறார்கள். பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது குத்துச்சண்டை விளையாட்டு எங்கள் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விளையாட்டு பற்றி பி.இ.டி. சார் சொல்லும்போது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் என்னை முழுமையாக இந்த விளையாட்டில் ஈடுபட வைத்தது. ஆரம்பத்தில் அம்மா ரொம்பவே பயந்தார்கள். பிறகு ஆசிரியர்கள் இந்த விளையாட்டில் ஆபத்து இல்லை என்று சொன்ன பிறகுதான் விளையாட அனுமதித்தார்.

எங்கள் ஊரில் சிலர் உனக்கெதற்கு இந்த விளையாட்டெல்லாம்... காயம் ஏற்படும் என்று சொன்னார்கள். ஆரம்பத்தில் பயம் இருந்தது, பயிற்சிக்குப் பின் அந்த பயம் இல்லை” என்றவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வருகிறார்.

“2013ம் ஆண்டு முதல்முறையாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றேன். அதற்குப் பின் தொடர்ந்து நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றேன். கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றேன். என் பள்ளி தலைமை ஆசிரியர், பயிற்சி ஆசிரியர் மற்றும் பலரது உதவியால் எனக்கு குத்துச்சண்டைக்கான உபகரணங்கள் கிடைத்தன.

அவர்களோடு என் அம்மாவின் ஆதரவும்தான் என்னை வெற்றிபெறச் செய்தது. தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார். “இயற்கையாகவே ரம்யா உடல் வலிமை பெற்றிருந்ததால் அவருக்கு பயிற்சி அளிப்பது எளிதாக இருந்தது” என்கிறார் உடற்பயிற்சி ஆசிரியர் செந்தில்குமார்.
 
‘‘கிராமத்துப் பெண் என்பதால் இயல்பாகவே வேகமும் கடின உழைப்பும் அவரிடத்தில் இருந்தது. மேலும் முறையான பயிற்சி அவருக்கு வலு சேர்த்தது. கடந்த ஆண்டுகளில் கைப்பந்து, கால்பந்து விளையாட்டுகள் மட்டும்தான் இருந்தன. 2013ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதில் குத்துச்சண்டையும் ஒன்று. பள்ளிப் பாடங்களை பாதிக்காமல் கூடுதல் நேரத்தில் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ரம்யாவிற்கு ஆர்வம் இருந்தாலும் அவருடைய பெற்றோரிடம் ஒருவித அச்சம் இருந்தது.

ரம்யாவின் குத்துச்சண்டையை நேரில் பார்த்தபிறகுதான் அவர்கள் அதை ஒரு விளையாட்டாகவே கருதினார்கள். இப்பொழுது முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். முதல் போட்டியிலே வெண்கலப் பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் வெள்ளிப் பதக்கம் வென்று வருகிறார். தொடர்ந்து முறையான பயிற்சியும் பொருளாதார உதவியும் கிடைக்குமேயானால் சிறந்த குத்துச்சண்டை வீரராக வருவார் ரம்யா” என்றார்.

அரசுப் பள்ளிகளில்தான் பெருமளவிலான விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன என்றாலும், சில கிராமங்களில் உள்ள’ அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான இட வசதி இல்லாதது வருத்தத்திற்குரியது. தமிழக அரசு கண்காணித்து மாணவர்களுக்கு வேண்டிய விளையாட்டு உபகரணங்கள், போதிய இடவசதியை ஏற்படுத்தினால் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர ஏதுவாக இருக்கும். மேலும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் திறமையை அறிந்து ஊக்குவிக்க வேண்டும்.

‘‘பெண்பிள்ளையை எப்படி குத்துச்சண்டைக்கு அனுப்புவது என்று கொஞ்சம் பயமாக இருந்தது” என்கிறார் ரம்யாவின் அம்மா வசந்த. “வயசுப் பெண்ணுக்கு முகத்துல எங் கேயாவது அடிபட்டுடுச்சின்னா அவளுடைய எதிர்காலம் என்னவாகும்னு சிலர் சொல்லும்போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இது சண்டை இல்லை விளையாட்டு என்று செந்தில் சார் சொல்லி புரிய வச்சாங்க.

ரம்யா பங்கேற்ற எல்லா போட்டிக்கும் நாங்கள் போயிடுவோம். அந்த விளையாட்டை நேரில் பார்க்கும் போதுதான் எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. எனக்கு அவளுடைய முதல் வெற்றி நம்பிக்கையை தந்துச்சு. இந்த விளையாட்டில் ஆபத்து இல்லைன்னு புரிஞ்சது. ஊரில் சிலர் பயப்படத்தேவையில்லைன்னாங்க.

சிலர் எதுக்கு பொம்பளைப் பிள்ளைக்கு இந்த விளையாட்டெல்லாம் என்று சொன்னார்கள். எங்கள் பிள்ளைகளின் ஆசைதான் எங்களுக்கு முக்கியமாக தோன்றியது. தினக்கூலியான எங்களுக்கு மகளுக்குத் தேவையானதை வாங்கி தரமுடியாத சூழ்நிலையில் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், செந்தில் சார், தலைமை ஆசிரியர்கள்தான் உதவி செய்தார்கள். எங்களால் முடிந்த அளவுக்கு என் பொண்ணுக்கு ஊக்கம் தர்றோம். ரம்யாவின் ஆர்வம்தான் இந்த விளையாட்டில் வெற்றியை தந்திருக்கிறது. தொடர்ந்து ரம்யா சாதிக்கணும்” என்றார்.

படங்கள்: எஸ்.சுந்தர்