பறிபோகிறதா மகளிரியல் துறை?-ஜெ.சதீஷ்

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்பட்டு வரும் மகளிரியல் (Women studies) துறைகளை மூடிவிடுவதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மத்திய அரசிடமிருந்து வரும் நிதியை நிறுத்தப்போவதாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) ஆணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த உ.வாசுகியிடம் பேசியபோது, “உலக பெண்களின் பல்வேறு போராட்டங்களின் விளைவால் உருவானது மகளிரியல் துறை. மத்திய அரசின் அறிவிப்பு பெண்களின் முன்னேற்றத்தை முடக்கும் சதிகளில் ஒன்று. பா.ஜ.க-வின் ஒற்றை ஆட்சி, ஒற்றை வரி, ஒற்றை மொழி, சம உரிமை இல்லாத சமுதாயம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், ஆட்சிக்கு வந்த மூன்றாண்டு காலத்தில், தொடர்ச்சியாக எடுக்கப்படும் முடிவுகளின் நீட்சியாகவே இந்த அறிவிப்பை பார்க்கமுடிகிறது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் ஐந்தாண்டு திட்ட நிதிநல்கையின் கீழ் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தன. அவ்வாறு நிதி வழங்கப்பட்டு வந்த துறைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து நிதி நிறுத்தி வைக்கப்படும் என்று பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. அதன் பின் ஆய்வு செய்து எந்தெந்த துறைகளுக்கு நிதி வழங்கலாம் என்று தீர்மானிக்கப் போவதாக கூறியிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.

பா.ஜ.க அரசு வரலாற்றை திருப்புவதற்கும் அரசியலமைப்புச்சட்டத்தை திருத்துவதற்குமான முயற்சி யிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் போன்ற சுயேச்சையான நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிற்கு, தலைமைக்கேற்ற தகுதி இல்லாதவர்களையும் ஆளும் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களையே பா.ஜ.க அரசு நியமிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் மகளிரியல் துறைகளும் பெண்கள் இயக்கங்களும் இணைந்து பயணிக்கக்கூடிய சூழல் உள்ளது. மகளிரியல் துறை ஆய்வுகளை, பெண்கள் இயக்கங்கள் பயன்படுத்துவதும், பெண்கள் இயக்கங்களின் போராட்டங்களை மகளிரியல் துறையில் பயிலும் பெண்கள் கற்றுக்கொள்வதுமான ஒருங்கிணைப்பு நடப்பதை விரும்பாதவர்கள் இதை முடக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இந்தத் துறை பெண்களின் சுயேச்சையான நடவடிக்கைகளும் ஆய்வுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. மகளிரியல் துறையை பொறுத்தவரை பெண் சமத்துவ கருத்திற்காக போராடுகிற துறையாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தில் சமத்துவம் என்கிற வார்த்தைக்கே இடமில்லாதபோது, அந்த கருத்துக்களுக்கு எதிராக எந்தெந்த துறைகள் செயல்படுகிறதோ அவற்றை எந்த வழியிலாவது முடக்கவேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.

சித்தாந்தரீதியாக சிந்திப்பதற்கான வெளி இருக்கின்ற இடம் உயர் கல்வி நிலையம். அதை முடக்குவதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையை குறைத்தது மத்திய அரசு. அதே போல இப்போது மகளிரியல் துறைக்கு வந்துள்ளது மத்திய அரசு. யு.ஜி.சி இந்த ஆணையை ரத்து செய்து தொடர்ந்து இந்தத் துறையை இயங்கச்செய்ய வேண்டும்.

இல்லையென்றால் இத்துறையில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள், மகளிரியல் துறை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். வணிகவியல், மென்பொருள் தொடர்பான துறைசார்ந்த படிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மகளிரியல் துறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே குறைவு. எதிர்காலத்தில் பொதுவான நீரோட்டத்திலிருந்து விலகி முற்போக்கு சிந்தனைகளுக்கு வர நினைப்பவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் நிலையை நாம் ஏற்படுத்திவிடக்கூடாது” என்றார்.

மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கேள்விக்குறியாக மாற்ற வேண்டாம் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பேராசிரியர் ஒருவர். “மகளிரியல் கல்வி பெண்களுக்கான சம உரிமை வேண்டும் என்பதற்காக 1984ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இத்தனை ஆண்டுகாலமாக மத்திய அரசு மகளிரியல் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து வந்தது. 2016 மற்றும் 17ம் ஆண்டிற்கான நிதி வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசு இது குறி்த்து திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வருகிற செப்டம்பரோடு மகளிரியல் துறைக்கான நிதி நிறுத்தப்படும் என்று கூறியது. கல்வித்துறையில் இம்மாதிரியான அறிவிப்புகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தினாலும்.

மகளிரியல் கல்வி மூடப்படும் என்று உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் பல்கலைக்கழகங்களின் உள் கட்டமைப்புகளில் ஒன்றாக மகளிரியல் கல்வி இயங்கிவருகிறது. இதை வேறு வழிகளில் தக்கவைத்துக்கொள்ள நிறுவனங்கள் முயற்சி செய்யவேண்டும். ஏனெனில் தனிப்பட்ட நிறுவனத்தின் அதிகாரத்தின் கையில் மகளிரியல் துறை செயல்பட்டு வருகிறது. அவர்கள் இதை எப்படி எடுத்துச்செல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். மகளிரியல் கல்வி தடைபட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

பெண்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு அவர்கள் படிப்பதற்குரிய முன்னுரிமையை வழங்கவேண்டும். பெண்களுக்கான கல்வி மறுக்கப்படக்கூடிய சூழலை அரசு உருவாக்கக்கூடாது. பெண் கல்வி குறித்து விழிப்புணர்வை மத்திய அரசு அறிந்திருக்குமேயானால், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக மகளிரியல் துறை கல்வி என்பது எழுச்சி நிறைந்த கல்வியாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. பெண்ணுக்கான உரிமைகள் வேண்டும் என்பதற்காக 1910ல் ரஷ்யாவில் நடந்த போராட்டங்கள்... தொடர்ந்து பல மாநிலங்களில் ஏற்பட்ட புரட்சியால் உருவான ஒன்றுதான் மகளிரியல் கல்வி. மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி நிறுத்தப்படும்போது இதில் பெரும் பாதிப்பை சந்திக்கக்கூடியவர்கள் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களும் மாணவர்களும்தான் இது குறித்து துறை சார்ந்த அனைவரும் பேசி வருகிறோம். ஆகையால் இதற்கு மாற்று வழியை விரைவில் செயல்படுத்த வேண்டும்” என்கிறார்.
 
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படும் மகளிரியல் துறைகளை மூடக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “மத்திய அரசின் இந்த முடிவை வன்மையாகக் கண்டிக்கிறோம். மகளிரியல் துறைகளை தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இந்தியாவெங்கும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் 163 மகளிரியல் துறைகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர், ஆய்வு மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பல்லாயிரக் கணக்கில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மகளிரியல் துறைகள் நீண்ட காலமாக மகளிர் இயக்கங்களும் சமூக இயக்கங்களும் வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. 12வது ஐந்தாண்டு திட்டம் கடந்த 2017 மார்ச் மாதத்தில் முடிவுற்றபோது அதன் பின்னர் இந்தத் துறைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற அய்யம் எழுந்தது.

அப்போது 2017 -  18 நிதி ஆண்டிலும் இந்தத் திட்டங்களுக்கான நிதி நல்கை தொடரும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு செய்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்னால் திடீரென 2017 செப்டம்பரோடு இந்தத் திட்டங்களுக்கான நிதி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 26 இடங்களில் மகளிரியல் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஏராளமான ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதுபோலவே முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை நேரடியாக பல்கலைக்கழகங்களின் துறைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே இந்தியாவெங்கும் உள்ள மகளிரியல் துறைகள் பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்படும் வரை அவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை யு.ஜி.சி நிறுத்தக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

மகளிரியல் துறைகள் மூடப்படுவது வெறுமனே நிதிசார்ந்த பிரச்சனை அல்ல. அது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மகளிர் விரோதக் கொள்கையின் வெளிப்பாடாகும். இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.