யெஸ்டர்டே-த.சக்திவேல்

அம்மா என்பவள் ஒரு புத்தகம். நம்மால் முழுமையாக படித்துவிட முடியாத புத்தகம் அவள். அந்தப் புத்தகத்தின் கடைசி வார்த்தையைப் படித்து முடித்த பின்பும் கூட, அவளின் சில பக்கங்கள் படிக்கப்படாமல் அப்படியே மீதமிருக்கும்.
- Kyung-sook Shin

கடந்த காலத்துக்குள் சென்று அதை மாற்றியமைக்கின்ற திறன்மனிதர்களிடம் இல்லை. ஆனால், நம்முடைய நாளைய நாட்களை மாற்றுகின்ற திறன் அன்புக்கு இருக்கின்றது. இப்படி தன்னுடைய அன்பால் மகளின் எதிர்காலத்தை மாற்றியமைத்த ஒரு அம்மாவின் கதைதான் ‘யெஸ்டர்டே’. தென்னாப்பிரிக்க நாட்டில் ஜுலு மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்கின்ற ஒரு குக்கிராமத்தில் படத்தின் கதை நிகழ்கிறது.

கதிரவனின் நெருக்கத்தால் பாலைவனத்தின் சிறு பகுதி போல காட்சியளிக்கும் அந்த கிராமத்துக்கு மின்சாரமோ, மருத்துவமனையோ, சரியான போக்குவரத்து வசதிகளோ போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அங்கே வாழ்கின்ற எந்தப் பெண்ணும் பள்ளிக்கூடப் பக்கம் கூட போகாதவர்கள். அவர்களின் தினசரி வாழ்க்கை விவசாயத்திலும், தண்ணீர் பிடிப்பதிலும், துணி துவைப்பதிலும், சமைப்பதிலும், சமைப்பதற்காக விறகு பொறுக்குவதிலும், குழந்தைகளுடன் இருப்பதிலும், அண்டை வீட்டாருடன் பேசுவதிலும் மெதுவாக நகர்கிறது.

யெஸ்டர்டே தன்னுடைய ஏழு வயது மகளுடன் அந்த கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறாள். அவளின் வாழ்க்கையும் சுற்றியிருக்கும் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையைப்போல ஒரே மாதிரி சுழல்கிறது. அவளின் கணவன் நகரில் இருக்கும் சுரங்கத்தில் வேலை செய்கிறான். பணம் மட்டும் அனுப்புவான். அவன் வீட்டுக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

அன்பு மகள் அருகில் இருப்பதால் யெஸ்டர்டேவின் வாழ்க்கை சுவைமிகுந்ததாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கிறது. மகளுடன் சேர்ந்து விதைக்கும் நேரங்களும், அனல் பறக்கும் வெயிலில் விறகு பொறுக்கும் நேரங்களும் அவளுக்கு ரம்மியமானவை. அவளின் கனவுகளும், ஆசைகளும், விருப்பங்களும் மகளைப் பற்றியது மட்டுமே. மகளுடன் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவளின் வாழ்க்கையில் பேரிடர் ஒன்று குறுக்கிடுகிறது. அவளின் உடல் இனம்புரியாத ஒரு நோயினால் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே செல்கிறது.

அவள் உடலில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. தீராத இருமலும் ,உடல் சோர்வும் அவளை வதைக்கிறது. அவளால் முன்பு போல எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. இதெல்லாம் அவளுக்கு ஒரு பிரச்னை இல்லை. ஒரு பறவையைப் போல் பறக்கத் துடிக்கும் மகளின் முன்பு இருமிக் கொண்டே இருப்பதும், சோர்வுடன் இருப்பதும்தான் அவளை வேதனைப்படுத்துகிறது.

அவளின் நிலையைப் பார்த்ததும் மகளின் புன்னகை பூத்த முகம் சட்டென வாடிவிடுவது உடல் உபாதையைவிட அதிகமாக அவளை நிலைகுலையச் செய்கிறது. யெஸ்டர்டேவின் கிராமத்தில் இருந்து மருத்துவமனை வெகு தொலைவில் உள்ளது. பேருந்து வசதி இல்லாததால் நடந்தேதான் அங்கு செல்ல வேண்டும். ஒரே ஒரு மருத்துவர் இருப்பதாலும், பல பேர் அங்கே முன்பே காத்துக் கிடப்பதாலும் யெஸ்டர்டே பலமுறை அங்கு சென்றும் மருத்துவரைக் காண முடியவில்லை.

யெஸ்டர்டேவுக்கும், அவளின் மகளுக்கும் அற்புதமான ஒரு நண்பர் கிடைக்கிறார். அவர் மருத்துவரைச் சந்திக்க கார் ஏற்பாடு செய்து தருகிறார். யெஸ்டர்டே காலையில் சீக்கிரத்திலேயே சென்று மருத்துவரைச்சந்திக்கிறார். தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது அவளுக்குத் தெரிய வருகிறது. இந்த நோய்க்கு காரணமானவர் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன்னுடைய கணவன் என்பதை அறிந்த யெஸ்டர்டே மேலும் நிலைகுலைந்து போகிறாள்.

பல மாதங்களாக வீட்டுக்கு வராத கணவனை பார்த்து பேசுவதற்கு சுரங்கத்திற்குச் செல்கிறாள். ஆனால், அவளுக்கு மிஞ்சியது அடியும், ஏமாற்றமும்தான். நாட்கள் செல்ல செல்ல எச்.ஐ.வி.யின் தாக்கம் அதிகமாகிறது. மரணத்தை நோக்கி விரைவாக செல்கிறது யெஸ்டர்டேவின் வாழ்க்கை. ஆனால், மகளை தனியாக விட்டு சீக்கிரம் பிரிந்து போய்விடுவோமோ என்ற பயம் அவளை உறங்கவிடாமல் செய்கிறது. அவளை வெறுத்து ஒதுக்கிய கணவன் வீட்டுக்கு வருகிறான். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவனை மகளுக்காக ஏற்றுக்கொள்கிறாள்.

தங்களின் அறியாமையால், பயத்தால், கல்வியறிவற்ற அண்டை வீட்டார்கள் யெஸ்டர்டேவையும், அவளின் கணவரையும் எய்ட்ஸ் நோயாளிகள் என்று வெறுத்து, விலகிச் செல்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் யெஸ்டர்டே கவலைப்படுவதில்லை. முன்பு போல மகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியவில்லை. அவளின் முன் தன்னுடைய நிலையை மறைக்க முடியவில்லை என்பதுதான் அவளை துக்கத்தில் ஆழ்த்துகிறது.

இவ்வளவு துயரத்துக்கு நடுவிலும் யெஸ்டர்டேவிற்கு ஒரு லட்சியம், ஆசை, வெறி, கனவு ஒன்று இருக்கிறது. அந்தக் கனவும், மன உறுதியும்தான் அவளை மரணத்தில் இருந்து தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது. ‘அன்பு மகளை முதல் நாள் பள்ளியில் கொண்டுபோய் விடும்வரை தான் உயிரோடு இருக்க வேண்டும். எழுத, படிக்க செல்லும் மகளின் ஆரம்ப நாளை எழுதப் படிக்க தெரியாத நான் பார்க்க வேண்டும்’ என்பதே அவளின் ஆசை, கனவு.

நாட்கள் செல்கின்றன. மகள் பள்ளிக்குச் செல்கின்ற நாளும் வருகிறது. மகளை பள்ளியில் கொண்டுபோய் விடுகிறாள். மகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பாடம் படிக்கப் போவதை ஒரு புன்னகையோடு பள்ளிக்கு வெளியில் இருந்து பார்க்கிறாள் யெஸ்டர்டே. திரை இருள படம் நிறைவடைகிறது.

எவ்வளவு கடினமான சூழலிலும் கூட மாறாத அன்பு, நம்பிக்கை, மன உறுதிக்குத்தான் நாளைய நாட்களை அழகாக்குகின்ற சக்தி இருக்கின்றது என்பதை உணர்த்துகிறது யெஸ்டர்டேவின் வாழ்க்கை. அதனால் தான் நாளைய மனிதர்களான யெஸ்டர்டேவின் மகளுக்குக் கூட ‘ப்யூட்டி’ என்று பொருத்தமான பெயரை வைத்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் குக்கிராமங்களில் வசிக்கின்ற கருப்பினத்தைச் சேர்ந்த எழுதப் படிக்கத் தெரியாத பெண்களின் வாழ்க்கையை, அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை இப்படம் தத்ரூபமாக சித்தரிக்கிறது.  இந்தப் படம் 2004ல் வெளியானது. இந்த தென் ஆப்பிரிக்க படம் ஜுலு மொழியில் இருந்தாலும் காட்சிகளின் வழியாக பாமரனும் உணர்ந்துகொள்ளும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கியவர் டாரெல்.