கொய்யாப்பழம் வாங்குங்க...கொய்யாப்பழம் சீசன் துவங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் குவியல் குவியலாய் கொட்டி விற்கப்படும் இந்தப் பழம், அதன் வாசனையை வெளிப்படுத்தி தான் எங்கிருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். உலகில் உள்ள பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்தது நம்ம நாட்டு கொய்யாதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதியாகி, நம் ஊர் விற்பனை அங்காடிகளை நிறைத்து கண்ணைக் கவரும் ஆப்பிள் பழங்களைவிட நமது நாட்டுக் கொய்யாவில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்களை நாம் அறிந்தால், ஆப்பிளை விட கொய்யா பழத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவோம் என்கின்றனர் மருத்துவர்கள்.

* கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம் உள்ளது. வைட்டமின் ‘சி’ உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், நமது உடலை கிருமிகள் தாக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கிறது. அதிக நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது.

* இதில் ஃபோலிக் ஆசிட்டும், வைட்டமின் பி9ம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கொய்யாப்பழத்தை தினமும் உண்ணுதல் நலம்.

* நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வை நீக்குவதுடன், பித்தம் நீங்கும்.

* கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.

* மதிய உணவுக்குப் பிறகு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரகக் கோளாறு உள்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.

* கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

* கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

- ருக்மணிதேவி நாகராஜன்