தேவை மாதவிடாய் விடுமுறை



- ஜெ.சதீஷ்

கேரளா மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் சில மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் பெண்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. பெண்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தின் வலியை சகஜமாக எடுத்துக் கொண்டு தங்களின் அன்றாட பணிகளில் இயல்பாக ஈடுபடுவது பெண்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்ற போதும் அச்சமயத்தில் ஓய்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் கட்டாயம் எல்லா பெண்களுடைய எண்ணமாக இருக்கும்.

மாதவிடாய் காலம் என்பது உடல்வலி தொடர்புடையது மட்டுமல்ல... மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய உதிரப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவர்கள் மனஅழுத்தத்துக்கு உள்ளாவதால் அவர்களுக்கு ஓய்வு அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறார் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் மன்றத் தலைவர் பரிமளா.  

“பெண்களுக்கான ஒவ்வொரு உரிமையையும் போராடியே பெற வேண்டி இருக்கிறது. பெண்களின் இயற்கையான உடல் வளர்ச்சி மற்றும் உடல் சுழற்சியின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாதவிடாய். அதனை தூய்மையற்றது என்ற உணர்வின் காரணமாக அது குறித்து வெளியில் பகிர முடியாத நிலைமை உள்ளது. பொதுவாகவே பெண்களுடைய மாதவிடாய் காலம்  என்பது தீட்டு என்று சொந்த வீட்டிலே ஒதுக்கக்கூடிய நிலைதான் இன்றும் பல வீடுகளில் இருக்கிறது.

பெண்கள் மாதவிடாய் பற்றி பொது வெளியில் பேசுவது கூட அசிங்கமான விஷயமாக பார்க்கப்படுகிறது. முதலில் பெண்கள் மாதவிடாய் பற்றி பொது வெளியில் பேசுவதற்கு முன்வரவேண்டும். மாதவிடாயை பெண்களின் உடலில் இயற்கையாக நடக்கக்கூடிய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று இச்சமூகம் உணரவேண்டும். மாதவிடாய் காலங்களில் 5லிருந்து அதிகபட்சமாக 7 நாட்கள் வரை உதிரப்போக்கு ஏற்படும்.

இந்த காலகட்டம் பெண்களுக்கு உடல் அசௌகரியத்தை உருவாக்கும். மாதம் தோறும் இந்த மாற்றத்தை சில பெண்களால் சமாளிக்க முடிகிறது, சிலரால் சமாளிக்க முடியாமல் போகிறது. அது ஒவ்வொரு பெண்ணின் உடல் வலிமையை பொருத்து அமைகிறது.  பெரும்பாலும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளக்கூடிய சமூகமாக இச்சமூகம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

பெண்கள் குறைவாக சாப்பிட வேண்டும், உடலை மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், ஆண்களை போல உடலை வலிமையாக வைத்துக்கொள்ள கூடாது என்கிற  போக்குதான் அதிகம் இருக்கிறது. கேரளா மற்றும் பெங்களூரில்  சில தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் முதல் நாளில் சம்பளத்தோடு கூடிய விடுமுறை அளிப்பது வரவேற்கத்தக்க ஒன்று. பிரசவகால விடுமுறை அளிப்பது போல வேலைக்கு செல்லக்கூடிய அனைத்து பெண்களுக்கும் இந்த விடுமுறையை வழங்கவேண்டும்.

சமீப காலமாகத்தான் பெண்கள் மாதவிடாய் குறித்து பொது வெளியில் பேசி வருகிறார்கள். அதன் அடிப்படையில் வரவேற்கத்தக்க விஷயமாக, தனியார் நிறுவனங்கள் இதை முன்னெடுத்திருக்கின்றன. அரசு, வேலைக்கு செல்லக்கூடிய பெண்களின் உரிமையாய் இந்த விடுமுறையை அங்கீகரிக்க வேண்டும். பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யக்கூடிய பெண்களுக்கும் இந்த சம்பளத்தோடுகூடிய விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கக்கூடிய இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கவேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இது போலவே  மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தேவைப்படக்கூடிய ஓய்வு மற்றும் விடுமுறை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை சட்டமாக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்த வேண்டும்” என்கிறார் பரிமளா.

மாதவிடாய் கால விடுமுறை குறித்தும், அது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்பதையும் ஐடி ஊழியராக பணிபுரியும் அனு காயத்ரியிடம் கேட்ட போது... “மாதவிடாய் காலத்தில் ஓய்வு எடுக்கவேண்டும் என்றால், இட வசதி இருந்தாலும் கூட நேரம் கிடைப்பதில்லை. மேலும் ஓய்வு கிடைக்காததால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

சமீப காலமாக மாதவிடாய் குறித்து  சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஐடி போன்ற தனியார் நிறுவனங்களில் நாப்கின் வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்  மாதவிடாய் காலத்தில் முதுகு கை,கால், மூட்டு வலி ஏற்படுவதால் வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது. அன்றைக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியை அன்றே முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

மாதவிடாய் காலங்களில் முதல் நாள் என்றில்லாமல், முதல் மூன்று நாட்களில் எந்த நாளிலும் பெண்களுக்கு வலி ஏற்படும் என்றும் எனவே இந்த மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாள் விடுமுறை என்றிருந்தால் செளகர்யமானதாக இருக்கும்’’ என்கிறார் அனுகாயத்ரி. ‘மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷாகிரா.

“ஒரு நாளைக்கு 30 நிமிடம்தான் ஓய்வு நேரம் வழங்கப்படுகிறது. இந்த அரைமணிநேரம் என்பது சாப்பிடுவதற்காக வழங்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் ஓய்வு எடுப்பதற்கோ, விடுமுறை எடுத்துக்கொள்ளவோ அனுமதி கிடையாது. அலுவலகத்தில் கொடுக்கப்படக்கூடிய விடுமுறைகள் கூட முறையாக வழங்கப்படுவது கிடையாது.

பணிச் சுமை காரணமாக சாப்பிடாமல் கூட வேலை பார்த்த நாட்களும் இருக்கின்றன. அப்படி பணிச்சுமை இருக்கக்கூடிய சூழலில் விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பளம் பிடிப்பதோடு, குழு மேலாளர் கோபத்திற்கும் ஆளாக வேண்டியுள்ளது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி விவரித்து சொல்வதற்கு பெண் மேலாளர்கள் இல்லை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

பெரும்பாலான நிறுவனங்களில் மேலாளர்கள் ஆண்களாக இருப்பதால் இது குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை. எனவே எங்களுடைய நிலைமையை அவர்களுக்கு புரியவைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மாதவிடாயின்போது கடந்த வருடம் பணிச்சுமை காரணமாக வலியையும் பொருட்படுத்தாமல் வேலை பார்த்ததால் ஒரே மாதத்தில் இரண்டுமுறை மாதவிடாய் ஏற்பட்டு மயக்கம் அடைந்தேன்.

இன்னும் அந்த உடல் உபாதையில் இருந்து நான் மீளவில்லை, தொடர்ந்து மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து சாப்பிட்டு வருகிறேன். முன் அறிவிப்பின்றியோ இல்லை திடீர் விடுப்பு எடுத்தால் பணிநீக்கம் செய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இப்படியாக எத்தனை நிறுவனங்களுக்கு பெண்கள் மாறிச் செல்வது?

மேலும் மாதவிடாய் காலத்தில் கழிப்பிடத்தை அதிகமாகப் பயன்படுத்த நேரிடும். நாப்கின்களை மாற்றக் கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே அலுவலகத்திற்குச் செல்லும் போது அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படியான சூழலில் மாதவிடாய்க்காக ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுமேயானால் பெண்களுக்கு பயனுள்ளதாக  இருக்கும்’’ என்கிறார் ஷாகிரா.