குரல்கள்



3 ஆண்டு கால மோடி ஆட்சி

- கி.ச.திலீபன்

இன்று இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இல்லை. அனைவரும் இதற்குக் காரணமாக மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என குற்றஞ்சாட்டும் வேளையில், மோடி ஆட்சி மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. நாட்டின் குடிமக்கள், குறிப்பாக பெண்கள் இந்த ஆட்சி குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள சில பெண்களிடம் கேட்டோம்...

ஆரோக்கியமேரி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு பெண்கள் இயக்கம்.
‘‘பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சியாகத்தான் மோடி ஆட்சி இருக்கிறது. பொதுவாகவே மோடி ஆட்சி என்பது மனுதர்மத்தின் ஆட்சியாகவே இருக்கிறது. மனுதர்மத்தில் கூறப்பட்டிருப்பது போல்தான் இங்கே பெண்களும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் வெளிப்பூச்சுதான்.

ஆனால் உள்ளே அப்படியல்ல. இதற்கு முந்தைய ஆட்சியிலும் பெண் சுதந்திரத்துக்கு எதிரான சூழல் இருந்திருந்தாலும் மோடி ஆட்சியில் இது மிகத் தீவிரமாகவே இருக்கிறது. அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற மசோதா இன்னும் நிலுவையிலேதான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலாவது இது குறித்த விவாதம் இருந்தது.

ஆனால் மோடி ஆட்சியில் அதற்கான எந்த நகர்வுகளும் இல்லை. பசுவைப் பாதுகாப்பதென்றால் உடனே சட்டம் இயற்ற முடியும்போது இதனைக் கொண்டு வர முடியாதா? மாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட தன் குடிமக்களுக்கு கொடுக்காதவர் மோடி. பண மதிப்பிழப்பு என்பது உழைக்கும் மக்களை பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியது.

அடித்தட்டு மக்களைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் இப்படி ஒரு திட்டத்தை இரவோடு இரவாக செயல்படுத்தினார். இந்து மேலாதிக்கத்தை முன் நிறுத்தியிருக்கும் மோடி ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மையினர் வஞ்சிக்கப்படுகின்றனர். மாட்டிறைச்சித் தடையே இதற்கான சமீபத்திய உதாரணம்.’’

சிந்து ராஜன், இல்லத்தரசி.
‘‘மத அடிப்படையிலான பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. இந்துத்துவக் கொள்கைக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் எனக்கு மற்ற அரசை விட மோடி அரசின் செயல்பாடுகள் மேல் ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நோக்கியே இருப்பதால் என்னால் இந்த அரசை ஆதரிக்க விருப்பமில்லை.

நீட் தேர்வு மற்றும் இந்தி கற்றுக்கொள்ளச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. நாம் தமிழ்மொழியை மட்டுமே கற்றுக் கொண்டிருப்பதால் மற்ற மொழி அறிவை இழந்து கொண்டிருக்கிறோம். தமிழ் பற்றுக்கும் இந்தியைக் கற்றுக் கொள்வதற்கும் சம்பந்தமே இல்லை. இது தமிழ் மொழியை முன்னிறுத்தி நடத்துகிற அரசியலாகப் பார்க்கிறேன்.

சரியான கொள்கைகளும் தெளிவும் இல்லாததால்தான் தமிழ் கல்வி முறை நீட் தேர்வுக்கு பயப்படுவதாக நினைக்கிறேன். களம் எப்படியாக இருந்தாலும் நமக்கான போர் வீரர்களை நாம் தயார்படுத்தியே ஆக வேண்டும். இந்துத்துவக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட மோடியின் செயல்பாடுகளை நான் வரவேற்கிறேன். இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்.’’

யாழினி, மருத்துவர்
‘‘2014ம் ஆண்டு மோடி ஆட்சிப் பொறுப்பேற்றபோது வேலை வாய்ப்பை உருவாக்குதல், கருப்புப் பண ஒழிப்பு, பொருளாதார சமன்பாட்டை உருவாக்குவது ஆகிய மூன்றையும் நிகழ்த்திக் காட்டுவதாகக் கூறினார். ஆனால் அது நிகழ்த்தப்படாமல் மாறாக மக்களுக்கு எதிரான செயல்பாடுகளையே அவர் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைக்கு மோடி ஆட்சியைப் பற்றி நாம் எந்த விமர்சனத்தையும் எழுப்பக் கூடாது. எழுப்பினோமென்றால் நாம் இந்திய தேசத்துக்கு எதிரானவர்களாக முத்திரை குத்தப்படுவோம். தமிழ்நாட்டில் இது காலம் வரையிலும் மாநில சுயாட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு தமிழக அரசியலை மோடி தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு நம் அரசியல்வாதிகள் காரணம் என்றாலும் மோடியின் செயல்பாடு மாநில சுயாட்சிக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அவர் சொன்னபடி வேலை வாய்ப்புகளை அவர் உருவாக்கவில்லை. மாறாக பல துறைகளில் பலரும் வேலை இழந்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் இங்கு ஆக்கப்பூர்வமான எந்த மாற்றமும் நடந்து விடவில்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 1.3 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அதன் 3 சதவிகிதம்தான் கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது. இப்படியிருக்கும் சூழல் ஜி.டி.பி. சரிவு நமது கல்வியை பாதிக்கும். நீட் தேர்வை எடுத்துக் கொள்வோமே ? திராவிட ஆட்சிகளால் நம் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதனை தேசியமயமாக்குவதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து மருத்துவர்கள் உருவாக முடியாத சூழல் ஏற்படும். மோடி தன் செயல்பாடுகள் மூலம் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு வளர்ச்சியே கிடையாது என்பதை நிறுவ நினைக்கிறார். இந்தியாவை முழுமையான இந்து நாடாக மாற்றிக்காட்டுவதுதான் பாஜகவின் அடிப்படை நோக்கம். அதை தெளிவுற செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி. காங்கிரஸை குற்றம்சாட்டியதைத் தவிர உருப்படியாக என்ன செய்திருக்கிறார்? நாட்டையே உலுக்கிய விவசாயிகள் மரணத்தைக் கூட அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.’’

ஷாலின் மரிய லாரன்ஸ், சமூக செயற்பாட்டாளர்
‘‘கிறித்துவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலுமே கூட நான் கடவுளை மறுக்கும் நாத்திக சிந்தனை கொண்டவள். மோடி ஆட்சிக்கு வந்து ஓராண்டு வரையிலுமே கூட சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவளாக எனக்குப் பயம் இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு எனக்கு பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

நான் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் செய்கிறேன். என் முழுப்பெயரை சொல்வதற்கே அஞ்சும் சூழல்தான் இங்கு இருக்கிறது. எனக்கான பாதுகாப்பின்மையை உணர்கிறேன். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இன்னொருவர் முடிவு செய்யும் நிலையில் நாம்  அடிமைகள்தான். இனி வருங்காலங்களில் பெண்கள் பேன்ட் போடக்கூடாது, ஸ்லீவ்லெஸ் அணியக்கூடாது அது நம் கலாசாரத்துக்கு எதிரானது என்று கூறி அதற்கும் தடை விதிப்பார்களோ என்று அச்சம் எழுகிறது.

மாட்டிறைச்சியை மையப்படுத்தி நடந்த கொலைகள், தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது மோடி அரசு சிறுபான்மையினர் மற்றும் தலித் நலன் சார்ந்து எவ்வித செயல்பாடுகளையும்  முன்னெடுப்பதில்லை என்பது தெளிவாகிறது.

இந்திய ஜனநாயக நாட்டின் பிரதமரோ யார் சொல்வதையும் கேட்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட நாஜிக்களால் நிகழ்த்தப்பட்ட சர்வாதிகார ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஜனநாயகம் என்கிற போர்வையில் சர்வாதிகாரத்தை நிறுவுகிறார் மோடி. பண மதிப்பிழப்பு, மாட்டிறைச்சித் தடை என ஒரே இரவில் இந்தியாவையே உலுக்க முடியும் என்கிற அவரது போக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.’’

மிருத்திகா, கல்லூரி மாணவி
‘‘என்னுடைய அடையாளமே நான் தமிழ்நாட்டை சேர்ந்தவள் என்பதுதான். அதற்கடுத்துதான் நான் இந்தியக் குடிமகள். தமிழ்நாட்டை சூறையாட வேண்டும் என்கிற நோக்கோடுதான் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. கீழடி அகழாய்வு மையம், நெடுவாசல், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றில் மத்திய அரசின் செயல்பாடுகள் என்னவாக இருந்தன என்பதைக் கூர்ந்து கவனித்தாலே அது தெரிய வரும்.

போதாக்குறைக்கு கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுமின் நிலையங்கள் துவங்குவதற்கு ரஷ்ய அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டை குறி வைத்து தாக்குகிறார் மோடி. தமிழ்நாட்டை விடுங்கள். இந்திய அளவில் என்ன நிலை? ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆதார் கார்டு அவசியமில்லை, விவசாயிகள் நலன் காக்கச் செயல்படுவேன், சுதேசியைப் பாதுகாப்பேன் என்றெல்லாம் கூறிய மோடி, ஆட்சிக்கு வந்த பின் தான் சொன்னதுக்கு நேர் எதிராகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்.

சுதேசி என்கிற வார்த்தையே இங்கே செத்து சுண்ணாம்பாகி விட்டது. இறக்குமதி, அந்நிய முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன. கடனை அடைக்க முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சூழலில் பல நூறு கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா சாவகாசமாய் அமர்ந்து இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பார்த்து ரசிக்கும் சூழலை என்ன சொல்வது? ஆதார் கார்டு இல்லையென்றால் நாம் மனிதர்களே இல்லை என்றே இந்த அரசு கருதுகிறதா? நிச்சயம் மோடி ஆட்சி மக்களுக்கான ஆட்சியல்ல... மக்கள் விரோத ஆட்சி.’’