வீழ்வேனென்று நினைத்தாயோ?



- ஜெ.சதீஷ்

மார்ச் 16 கோவை மாநகரையே துக்கத்தில் ஆழ்த்தியது அந்தக் கொலை. சமூக ஊடகங்கள் பரபரப்பாயின. மிகக் கோரமாக வெட்டப்பட்டுக் கிடந்த ஃபாரூக்கின் உடல் காண்போரை பதற்றம் கொள்ள வைத்தது. 32 வயதே ஆன ஃபாரூக் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகியாக இருந்தார். கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர். இரும்பு வியாபாரம் செய்து வந்த இவர் பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராவார்.

ஃபாரூக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. ஃபாரூக்கிற்கு ரஷீதா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு ஃபாரூக்கின் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து நின்றது. பொருளீட்டும் குடும்ப உறுப்பினரான ஃபாரூக்கிற்குப் பின் குடும்பத்தின் நிலை என்ன என்பது கேள்விக்குறியானது. பொது வெளிகளில் பல்வேறு அமைப்புகளும் தலைவர்களும் ஃபாரூக் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்கள் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.

கணவரை இழந்த ரஷீதா தன் குழந்தைகளோடு தாய் வீட்டிற்கு சென்றார். கொடூரமான முறையில் கணவனை இழந்தபின் துயரத்தில் துவண்டுவிடாமல் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தவர் தற்போது ஃபா என்கிற துணிக்கடை ஒன்றை துவங்கியிருக்கிறார்.

தன்னுடைய இந்த முயற்சிக்கு அவருடைய தம்பிகளும், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகளும் உதவி வருவதாக கூறினார். இது குறித்து ரஷீதாவிடம் பேசியபோது... ‘‘நான் 10ம் வகுப்பு வரைதான் படித்தேன். அவ்வளவாக வெளியுலகம் தெரியாது எனக்கு. 2005 ம் ஆண்டில் எனக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள்.

இப்பொழுது மகன் 7ம் வகுப்பும், மகள் 2ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கணவர் இறந்து ஒன்றரை மாதங்கள் கழித்து இப்படியே இருந்தால் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி சரி செய்வதென்று புரியாமல் இருந்தபோது என்னுடைய தம்பியும் தோழர்கள் சிலரின் ஆலோசனையில் துணிக்கடை ஒன்றை அமைத்தேன்.

செல்வபுரத்தில் உள்ள என்னுடைய அம்மாவின் வீட்டிலேயே கடையை அமைக்க திட்டமிட்டு தற்போது கடை நன்றாக நடந்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் மட்டுமே தற்போது விற்பனை செய்து வருகிறோம். கடை துவங்குவதற்கு முன்பு பொருளாதாரரீதியாக சில சிக்கல்கள் இருந்தன.

நண்பர்களின் உதவியால் கடை முழுமை அடைந்தது. சிறிய கடையாகத்தான் இப்போது நடத்திக்கொண்டு வருகிறோம். வியாபாரத்தின் வருமானத்தை பொறுத்து கடையை விரிவாக்க திட்டமிட்டிருக்கிறேன். ஒவ்வொரு ஊராகச் சென்று ஆடைகளை வாங்கி வர தம்பி உதவியாக இருக்கிறார்.

கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் வீட்டிலே முடங்கி இருக்காமல், தங்களுக்கு உள்ள திறமையை வெளிப்படுத்தி உழைப்பதுதான் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். என் குழந்தைகளுக்காக நான் சம்பாதித்தே ஆகவேண்டும் இல்லையா? கோடை விடுமுறை முடிந்து என்னுடைய குழந்தைகள் இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர்’’ என்று சிறு புன்னகையோடு முடித்தார் ரஷீதா.

ஃபாரூக்கின் நண்பரான ஃபெரோஸ், ‘‘கணவனை இழந்த பெண், வீட்டை விட்டு வெளியவே வரக்கூடாது என்பது சமய நம்பிக்கை. இப்படியான சூழலில் அவருடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. கணவருடைய மரணம் என்பது இயற்கையான மரணமாக அல்லாமல், கொடூரமான கொலையாக இருக்க, அவர் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் சமூகத்தை எப்படி அவர் எதிர்கொள்ளவேண்டி இருந்திருக்கும்.

இது நிச்சயம் அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். ரஷீதாவின் குடும்பத்தைப் பொறுத்தவரை அவருடைய தம்பிதான் தூணாக இருந்து தாய் தந்தையரை பார்த்து வருகிறார். தம்பியின் பணியும் பாதிக்கப்பட்டபோது அவர்களுடைய குடும்ப பொருளாதாரம் மேலும் பாதிப்பை சந்தித்திருக்கும்.

உண்மையாகவே ஃபாரூக் சார்ந்திருந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் தாய் உள்ளத்தோடு தொடர்ந்து உதவி செய்து வந்தார்கள். அவர்களின் ஊக்கத்தின் அடிப்படையில் தற்போது ரஷீதா அவர்கள் நல்லதொரு முயற்சியை எடுத்துள்ளார். அவர்களின் குழந்தைகளுக்கும், அவருக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுக்கக்கூடிய முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். பொது அனுபவம் இல்லாத ஒருவர், இம்மாதிரியான முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது” என்கிறார்.