புத்துயிர்ப்பு



- ஜெ.சதீஷ்

உயிர் பிழைப்போம் என்கிற கடைசி நம்பிக்கையையும் இழந்து மீண்டெழுந்து வரும் அதிசயங்கள் சினிமாவில் சர்வ சாதாரணம். ஆனால், நிஜ வாழ்விலும் அப்படி ஒரு நிலையை சந்தித்து மீண்டும் எழுந்து வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவருக்கும் நேபாள தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் 2010ம் ஆண்டு காட்மாண்டுவில் திருமணம் நடந்தது.

ஆனால் 2012ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதுபற்றி கூறியுள்ள மனிஷா... “திருமணம் பற்றி ஏதேதோ கனவு கண்டேன். ஆனால் எங்கள் உறவு மோசமான நிலையில் இருந்தது. எனவே, திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவது நல்லது என்று கருதினேன். அதில் எந்த வருத்தமும் இல்லை.

அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு இது எனக்கு ஒத்து வராது என்பதை புரிந்து கொண்டேன். எனவே, பிரிந்தேன். இதில் யார் தவறும் இல்லை. இதற்கு நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன். இது என் தப்புதான். இப்போது என் வாழ்க்கை, என் வேலை என நிம்மதியாக இருக்கிறது. இப்படியே வாழ்ந்து விட நினைக்கிறேன்.

இனி என் வாழ்வில் காதல் வருமா என்று தெரியவில்லை. பிறகு பார்க்கலாம். நான் புற்று நோயுடன் போராடியபோது எனக்கு நெருக்கமானவர்கள் என்னை கண்டு கொள்ளவில்லை. நோயுடன் நான் போராடியதை பார்க்க விரும்பாததால் அவர்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் பாதிப்புக்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று கூறும் மனிஷா, மீண்டும் நடித்து வருகிறார். ‘புற்றுநோயை வென்ற நடிகை’ என்று பலரும் என்னைப் பார்ப்பதை முறியடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. சினிமா உள்பட ஊடகங்கள் புற்றுநோய் என்பது மரணத்தை நோக்கி தள்ளும் கொடிய நோய் என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறது.

மற்ற நோய்களைப் போலவே புற்றுநோயும் குணமாக்கக் கூடிய நோய்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் மனிஷா. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் தற்போது அவர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். புற்றுநோய் பாதிப்பை நியூயார்க் டாக்டர்கள் கண்டறியும் முன்னர் உடல் நலம் குறித்து யோசித்து பார்த்ததே இல்லை. உடலை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோய் வரும் முன்னரே அனைவரும் உணர்ந்து வாழவேண்டும்” என்பது மனிஷா தரும் அறிவுரையாக இருக்கிறது.