பிரெஞ்ச் சினிமாவின் தாய்



-த. சக்திவேல்

‘‘என் வாழ்க்கையை திரைப்பட இயக்குனராகத்தான் தொடங்கினேன். பெண்ணாக அல்ல. திரைப்படத்துக்குள் வாழ்கிறேன். என்றென்றும் இதற்குள் வாழ்ந்திருப்பேன்’’ என்று பெருமிதத்துடன் சொல்கிற ஆக்னஸ் வர்தாவின் கண்கள் பார்வையிழந்து வருகின்றன. அதனாலேயே அவை நட்சத்திரங்களைப் போல மின்னுகின்றன. அந்தக் கண்களைக் காண்கின்ற மனம் அமைதி கொள்கிறது. சுருக்கங்கள் விழுந்த முகம் ஒரு குழந்தையை நினைவூட்டுகிறது. 89 வயதிலும் சினிமாவின் மீதான தீராத காதல் அவரைத் துடிப்புடன் இயக்குகிறது.

தன்னுடைய 87வது வயதில் புகைப்படக் கலைஞன் ஜே.ஆருடன் இணைந்து ‘Faces Places’ என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த வருடத்துக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை தட்டிச்சென்றிருக்கிறது ‘Faces Places’. நாலாப் பக்கமிருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. கடும் பொருளாதார நெருக்கடி, சோர்வான உடல், பார்வை குறைபாட்டுடன்தான் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்.
 
இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் 62 ஆண்டுகள் வாழ்வதே பெரும் சவாலாக இருக்கிறது. ஆனால், ஆக்னஸ் கடந்த 62 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் முடிசூடா ராணியாக வலம் வருகிறார். திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு வாழும் வழிகாட்டியாக இருக்கிறார் ஆக்னஸ் பிரெஞ்ச் சினிமாவின் தாய்.

‘புதிய அலை’ சினிமாவின் கிராண்ட் மதர் எனக் கொண்டாடப்படும் ஆக்னஸ் வர்தா மே 30, 1928ல் பெல்ஜியத்தில் பிறந்தார். தன் வாழ்க்கையின் ஒவ்வோர்அங்குலத்தையும் தனக்குப் பிடித்த மாதிரி செதுக்கிக் கொண்டவர். ஆர்லட் என்ற இயற்பெயரை ஆக்னஸாக மாற்றிக்கொண்ட அவர் கடந்த 60 ஆண்டு களாக தன்னுடைய ஹேர்ஸ்டைலைக் கூட மாற்றவில்லை. இருபது வயதிலேயே பாரீஸ் நகரத்துக்கு வந்துவிட்டார்.
 
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம் அது. இங்கே பெண்கள் வீட்டை விட்டே வெளியே வருவதற்கு பயப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாடக கம்பெனியில் புகைப்படக் கலைஞராக தனது கலை வாழ்வைத் தொடங்கினார். கொஞ்ச காலத்திலேயே தனக்கான துறை சினிமாதான் என்பதை உணர்ந்து அதற்குள் நுழைந்து விட்டார். அவரின் வருகைக்காக சினிமாவும் காத்திருந்திருக்கிறது. இதை அவரின் படங்களே நமக்கு உணர்த்துகின்றன.

யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், எந்த வித பயிற்சியும் இல்லாமலே முதல் படத்தை இயக்கினார். நடித்தார். திரைக்கதை எழுதினார். ஒரு பெண், அதுவும் சினிமா உருவாக்கத்தைப் பற்றி எதுவும் அறியாத  பெண் திரைப்படம் எடுத்தது பிரெஞ்ச் திரை உலகத்தில் பெரிய ஆச்சர்யத்தைக் கிளப்பியது. யார் இவர்? என்று திரைப்பட ஆர்வலர்கள் அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 
ஆக்னஸ் திரைப்படம் இயக்க ஆரம்பித்த காலகட்டம் சினிமா வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒன்று. பிரான்ஸ் நாட்டில் 1950களின் ஆரம்பத்தில் எந்தப் படம் வந்தாலும் அதன் மீது திருப்தி ஏற்படாமல் ஒரு கூட்டம் விமர்சித்துக் கொண்டேயிருக்கும். அது ஒன்றும் நாம் இன்றைக்கு முகநூலில் பதிவிடுகின்ற நான்கு வரி சினிமா விமர்சனம் அல்ல. மிகவும் தீர்க்கமான, நுண்ணிய பார்வை கொண்ட ஆய்வு விமர்சனம் அது. நாம் கொண்டாடுகின்ற சத்யஜித்ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ கூட கடுமையாக விமர்சனத்திற்கு அங்கே உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அந்த இளம் விமர்சகர்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இந்த மாதிரி விமர்சித்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நாம் விரும்புகிற, நாம் நினைக்கிற சினிமாவை நாம்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து சினிமாவில் குதிக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற இயக்குனர்களான த்ரூபோ, கோதார்டு, எரிக் ரோமர் போன்றோர்.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த இளம் இயக்குனர்கள் புதிய அலையைப் போல கிளம்பி வந்தார்கள். உலக சினிமாவுக்குள் புதிய ரத்தத்தைப் பாய்ச்சினார்கள். அதுவரைக்கும் சினிமாவிற்கு என்று இருந்த இலக்கணங்கள் எல்லாம் உடைக்கப்பட்டது. வாழ்வின் யதார்த்தங்கள், யாருமே கவனிக்காத விஷயங்கள் எல்லாம் திரைக்காவியங்களாக உருவாகின.

இந்த புதிய அலை சினிமா உலகம் எங்கும் பரவியது. இந்த ‘புதிய அலை’ இயக்கம்தான் சினிமா வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக சொல்லப்படுகிறது. தமிழில் கூட வித்தியாசமான படங்கள் வரும்போது அவை ‘புதிய அலை’ என்ற அடைப்பு மொழியுடனே அழைக்கப்படுகிறது.
 
இந்த புதிய அலையில் சிறகடித்த ஒரேயொரு பெண் இயக்குனர் ஆக்னஸ்தான். அவர் 1955ல் இயக்கிய முதல் படமான ‘La Pointe Courte’ தான் புதிய அலை சினிமாவுக்கு வித்திட்டது என்று சினிமா வரலாற்று நிபுணர்கள், விமர்சகர்கள் சொல்கிறார்கள். அவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், பயிற்சி இல்லாமல் மிகக் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்த யுக்தி புதிய அலை இயக்குனர்களுக்கு பெரும் நம்பிக்கையை தந்தது. அதனாலேயே அவர் ‘புதிய அலை சினிமாவின் மூதாதை’ என்று அழைக்கப்படுகிறார்.
 
ஆவணப்படங்கள், குறும்படங்கள், முழு நீளத் திரைப்படங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். புதிய அலை இயக்குனரான டெமியைத் திருமணம் செய்து கொண்டார்.
 
டெமியின் மரணம்வரை அவருடனே வாழ்ந்த ஆக்னஸின் ஆரம்ப காலம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ‘‘இந்த உலகில் பெண்ணாக இருப்பதென்பது மிகக் கடினமானது. ஆனால், திரைப்பட இயக்குனராக இருப்பதென்பது எல்லா விதத்திலும் கடினமானது’’ என்று வேதனையுடன் தெரிவிக்கின்ற ஆக்னஸ் பல தடைகளை உடைத்தெறிந்துதான் காலத்தால் அழியாத திரைக்காவியங்களான ‘Cleo from 5 to 7,’ ‘Vagabond’ போன்ற படங்களை நமக்குத் தந்திருக்கிறார்.

இவ்வளவு உயரத்துக்குப் போன பிறகும்கூட ஆக்னஸ் ‘Faces Places’ படம் எடுப்பதற்கான நிதியைத் திரட்ட பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. நண்பர்கள், தெரிந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியிலிருந்துதான் இந்த ஆவணப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
 
‘‘ஒரு பெண் என்பதால், என் படங்கள் அதிகமாக விற்பனை ஆவதில்லை’’ என்று கவலையுடன் சொல்கின்ற ஆக்னஸின் திரைப்படங்களில் மையமாக இருந்தது பெண்ணியம் சார்ந்த விஷயங்கள்தான். யாராலும் கண்டுகொள்ளப்படாத, ஆதரவற்ற, சமூகத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட, பிணியில், தனிமையில் வாடுகின்ற பெண்களின் உணர்வு களை, வலிகளைத்தான் திரைப்படமாக்கினார்.

கேமராவை எழுதுகோல் என்றே சொல்லும் ஆக்னஸ் எழுத்தாளர் காஃபகாவின் படைப்புகளால் அதிகம் தாக்கம் பெற்றவர். அதனால் அவரின் படங்களைப் பார்க்கும்போது நாவலை படிக்கின்ற அனுபவமே பார்வையாளனுக்குள் ஏற்படுகிறது. திரைப்படத்தைக் கூட ஃபிலிமில் எழுதுவதுதான் என்கிறார். ‘‘நான் பெண்களின் உரிமைக்காக போராடுகிறேன். ஒரு பெண் திரைப்பட இயக்குனராக அல்ல. ஒரு புலியைப் போல் பெண்களின் உரிமைக்காக போராடுகிறேன்’’ என்று ஆக்ரோஷமாக சொல்கிறார் ஆக்னஸ்.
 
ஆம்; அவர் ஒரு புலி!

ஆக்னஸ் வர்தா இயக்கிய திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள்

La Pointe Courte (1955)
 
Cleo de 5 to  7 (1962)
 
Le Bonheur (1965)
 
Les Cr atures (1966)
 
Loin du Vietnam (1967)
 
Lions Love (1969)
 
Daguerr otypes (1975)
 
L’Une chante, l’autre pas (1977)
 
Mur murs (1981)
 
Documenteur (1980-1981)
 
Sans toit ni loi (1985)
 
Jane B. par Agn s V. (1986-1987)
 
Kung-Fu Master (1987)
 
Jacquot de Nantes (1991)
 
Les demoiselles ont eu (1993)
 
Les Cent et une nuits de Simon (1994)
 
Les Glaneurs et la glaneuse (2000)
 
Les Glaneurs et la glaneuse...

deux ans apr s (2002)
 
Cin vardaphoto (2004)
 
Quelques veuves de Noirmoutier (2006)
 
Les plages d’Agns (2008)
 
Visages Villages (2017)