உடல்நலம் பேண...



வாசகர் பகுதி

இன்ஸ்டன்ட் எனர்ஜிக்கு
கீரையை விதவிதமான கூட்டு, பொரியலாகப் பண்ணிச் சாப்பிடுவதற்குப் பதிலாக, கீரையை வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் சீரகம் சேர்த்து அப்படியே குடிக்க சோர்வு சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடும். உடல் தெம்பாக இருப்பதை உடனடியாக உணர முடியும்.

சாப்பாட்டில் இரும்புச்சத்தை பெற்றிட
வெல்லம், ஏலக்காய், கிராம்பு, 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து பானகம் குடித்து வந்தால் உடலானது அயர்ன் சத்தைப் பெற்று விடும். தீராத ஒற்றைத் தலைவலி போக வெயில் நாட்களில் வரும் இனம்புரியாத தலைவலிக்கு பத்து மிளகு, நான்கு வெற்றிலைச் சேர்த்துக் கொதிக்க விட்டுக் குடிக்க, உடனே வியர்க்கும். தலைவலியும் நின்று விடும்.

அரிப்பை கட்டுப்படுத்த
வெயிலில் வேண்டாத இடங்களில் சொல்லமுடியாத அரிப்பும், துர்வாடையும் பெண்களுக்கு இருக்கும். காயவைத்த வேப்பிலை, மாவிலை, கடலை மாவு மூன்றையும் சேர்த்துக் குளித்து வந்தால் அரிப்பு நின்று விடும். (மாவிலை, வேப்பிலையை காயவைத்து பொடி செய்து கடலைமாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.)

நா வறட்சிக் கட்டுப்பட
உப்பு சேர்க்காமல் வேகவைத்த பெரிய நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அடிக்கடி தாகம் எடுக்காது.

வயிறு அழற்சியிலிருந்து விடுபட
கைப்பிடியளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா மூன்றையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு சூடாக குடித்து வந்தால் வயிறு ‘ஜம்மென்று’ இருக்கும்.

நன்கு பசியெடுக்க
கிராம்பு, ஏலக்காய், சுக்கு மூன்றையும் தேவையான அளவு எடுத்து வறுத்துப் பொடி செய்து சாப்பிடுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட நன்கு பசியெடுக்கும்.

களைப்பு தீர
பார்லி, பச்சைப்பயறு, மிளகு (தேவைக்கு) சம அளவில் எடுத்துக் கொண்டு சிவக்க வறுத்துப் பொடியாக பண்ணி வைத்துக் கொள்ளவும். டயர்டாக இருக்கும் போது 1 டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் களைப்பே தெரியாது.

மார்னிங் சிக்னஸ் இல்லாமலிருக்க
காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு பாலில் வேகவைத்து அப்படியேக் கூழாகவோ அல்லது தேவையான அளவு பால் கலந்தும் சாப்பிட காலை வேளை அசதி, களைப்புக் கண்ணுக்குத் தெரியாமல் ஓடி விடும்.
 
உடல் ஆரோக்கிய குளியலுக்கு
வெயில் காலத்தில் சோப்பெல்லாம் போட்டுக் குளிப்பதற்குப் பதிலாக பச்சைப்பயறு, வெந்தயம், ரோஜா இதழ், செம்பருத்திப்பூ நான்கையும் சமமாக எடுத்து காயவைத்து அரைத்த பொடியை தேய்த்துக் குளிக்க உடல் நல்ல சுறுசுறுப்பாக இருக்கும். செலவும் குறைவுதான்.

- சுதா,
 வடபழனி, சென்னை.