பால் போல பாலும் உண்டு



- ஜெ.சதீஷ்

மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று பால். பெண்களும் குழந்தைகளும் தங்கள் உடல் வலிமை பெற அதிகம் உட்கொள்வது பால்தான். ஆனால் நாம் அருந்தும் பால் தரமானதா? பால் நிறுவனங்கள், பாலை கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரும்பாலான தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து உணவாக பாலையே பயன்படுத்தி வருகிறார்கள். தமிழக அரசின் திடீர் அறிவிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில், பாதிக்கப்படுவது என்னவோ சாதாரண மக்கள்தான். பால் கலப்படம் செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை மேலும் பீதியில் ஆழ்த்திஉள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டோம்.

விக்கிரமராஜா, தலைவர்-தமிழ்நாடு வணிகர் சங்கம்
வெளிநாட்டு அன்னிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் நச்சுத் தன்மை இருப்பதை ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்து உறுதி செய்தது அரசு. குளிர்பானங்களில் நச்சுத்தன்மை இருப்பது உறுதிப்படுத்திய பிறகும் கூட நடவடிக்கை எடுக்காமல் அரசு மெத்தன போக்காக இருந்தது. பால் கெட்டுப் போகக் கூடாது என்று என்றைக்கு வேதிப் பொருட்களை சேர்க்கத் தொடங்கினார்களோ, அன்றைக்கே பாலின் தரம் குறைந்து போனது.

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசு பால் நிறுவனமான ஆவின் நிறுவனத்தில்கூட பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. ரசாயனப் பொருள் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியது. தனியார் நிறுவனங்களுக்கும், அரசு பால் நிறுவனத்திற்கும் பாலில் கலக்கப்படும் ரசாயன பொருட்களின் அளவு மட்டும்தான் வேறுபடுகிறது.

இன்றைய நவீன உலகத்தில் உணவுப் பழக்கவழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டதும் நோய்கள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம். நமது முன்னோர்கள் கோழி குழம்பு செய்வதற்கு மசாலா எல்லாம் அரைத்து வைத்த பிறகுதான் கோழியை அறுத்து மஞ்சள் தடவி அரை மணிநேரத்தில் சமைப்பார்கள். ஆனால் இன்று ஓரிரு நாட்களுக்கு முன்பு அறுபட்ட கோழியை மக்கள் உணவாக உட்கொண்டு வருகிறார்கள்.

இம்மாதிரியான உணவு பழக்கவழக்கங்களால் நச்சுத் தன்மை கொண்ட உணவு வகைகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. மக்களின் உணவு விஷயத்தில் தமிழக அரசு கண்டும் காணாததுமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சிறு வியாபாரிகள் கடைகளில் சோதனை நடத்தியது. போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலை வெளியிட்டது.

போதை சாக்லெட்டுகளை இறக்குமதி செய்தது யார், சுகாதாரத்துறை பரிசோதனையின்றி எப்படி வியாபாரிகளிடம் வந்து சேரும். இவற்றை அனுமதித்து விட்டு பாமர வியாபாரிகளின் கடைகளில் ஆய்வு செய்து அவர்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயமாகும். அந்த வியாபாரிக்கு அது போதை சாக்லெட் என்று கூட தெரிந்திருக்காது.

இதை முழுமையாக கவனிக்க வேண்டியது அரசுதான். ஆனால் மெத்தனமாக இருந்துவிட்டு, தவறு செய்வதற்கு முன்னோடியாக அரசே விளங்கி வருகிறது. தனியார் பால் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அனைத்து வியாபாரிகளும், வெளிநாட்டு குளிர்பானங்களை விற்கமாட்டோம் என்று நாங்கள் சொன்னது போல, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை விற்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம்.

திடீரென்று தமிழக அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பதை பரிசீலனை செய்து வருகிறோம். இன்று மக்கள் நேரடியாக மாடு வைத்திருப்பவர்களிடமே பசும் பாலை லிட்டர் 80 ரூபாய் என்றாலும் வாங்கிச்செல்கிறார்கள். மக்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அரசும் உடனடியாக தலையிட்டு அரசு பால் நிறுவனத்தை சீர் அமைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனங்களில் இருந்து வரக்கூடிய பால் பாக்கெட்டுகளை ஆய்வுக்குட்படுத்தி பரிசோதித்த பிறகு கடைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் வியாபாரிகளுடைய கோரிக்கை.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச் செயலாளர்-சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்பாலில் கலப்படம் என்பது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலே பால் கலப்படம் குறித்து வரலாற்று சான்று உள்ளன. ஆனால் அன்றைய காலக் கட்டத்தில் பாலில் தண்ணீர்தான் அதிகமாக கலப்படம் செய்யப்பட்டது.

ஆனால் இன்று வேதிப் பொருட்களை கலப்படம் செய்யக்கூடிய போக்கு வளர்ந்து விட்டது. அதே போல உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து விட்டது. சாதாரணமாகவே நோய்களை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தி வருவது என்பது கூடுதலான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தற்போது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்கின்றன என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு போதிய ஆதாரங்களை வைத்துக்கொண்டு அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்க வேண்டும்.

ஆனால் பால் மாதிரிகளை ஆய்வுக்காக புனேவிற்கு அனுப்பியுள்ளேன் என்பது நிர்வாக திறமையின்மையை காண்பிக்கிறது. மேலும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் ஐயம் ஏற்படுகிறது. இந்த அரசு உண்மையாகவே மக்கள் மீது அக்கறை உள்ளதாக இருந்தால், கலப்படம் இல்லாத பாலை உத்திரவாதப்படுத்த ஏராளமான ஆய்வுக் கூடங்களை மாவட்டம் தோறும் தொடங்கியிருக்க வேண்டும்.

முறையாக எல்லா தனியார் பால் நிறுவனங்களையும் ஆய்வுக்குட்படுத்தியிருக்க வேண்டும். கலப்படப் பாலினால் பலவிதமான பிரச்சனைகள் வருகின்றன. கலப்படம் செய்யப்பட்ட பாலை குடிப்பதால் முழுமையான புரதம் உடலுக்கு கிடைப்பதில்லை. வேதிப் பொருட்களான ஃபார்மலின், ைஹட்ரஜன் பெராக்சைடு, யூரியா, ஸ்டார்ச், மெலாமின், இப்படி ஏராளமான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதால் நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

முக்கியமாக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஃபார்மலின் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. மெலாமின் வேதிப் பொருளானது சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது. மேலும் பாலில் உள்ள புரதத்தை இந்த வேதிப் பொருளானது எடுத்து விடுகிறது. பாலை பதப்படுத்துவதற்காகவே வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

பாலை சேமித்து வைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது இங்கு? பாலை கறந்து உடனடியாக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வழிமுறைகளை தமிழக அரசு கையாள வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பால் விற்பனை குறைவாக இருக்கிறது. ஆகவே வேறு மாநிலங்களிலிருந்து பால் இறக்குமதி செய்யக்கூடிய தேவை ஏற்படுகிறது. தனியார் நிறுவனங்கள் லாபத்திற்காக பாலை பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன.

ஆனால் அரசு துறை, லாபம் நஷ்டம் பார்க்காமல் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். ஆவின் மையங்களை அதிகப்படுத்த வேண்டும். ஆவின் விற்பனையாளர்களை அதிகப்படுத்த வேண்டும். எல்லா விவசாயிகளிடமிருந்தும் நேரடியாக பாலை ஆய்வுக்குட்படுத்தி கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பால் கலப்படம் தடுக்கப்படலாம்.

இன்றைய காலகட்டத்தில் பண்ணை வைத்து மாடு வளர்ப்பவர்கள் தன்னுடைய மாடு அதிக பால் கரக்க வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசியை போடுகிறார்கள். அந்த ஹார்மோன் நிறைந்த பாலை குடிப்பதால் பெண்கள் விரைவில் பூப்பெய்து விடுகிறார்கள். இவற்றையெல்லாம் முதலில் தடுக்க வேண்டும். பால் விநியோகம், கொள்முதல் ஆகிய கட்டமைப்புகளை சீர் செய்யவேண்டும்.

கண்காணிப்புத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். பால் குடிப்பதால் புற்றுநோய் வரும் என்று அமைச்சரின் ஆதாரம் இல்லாத அறிவிப்பால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள். வியாபாரிகள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது விவசாயிகளுக்கு கறவை மாடு வழங்கப்பட்டது. அதற்கு தீவனம் கொடுக்கவில்லை, கறந்த பாலை கொள்முதல் செய்யவில்லை. இதனால் பால் கொள்முதல் பாதித்தது.

இதனால் முக்கியமாக பாதிக்கப்பட்டது கிராமத்து பெண்கள்தான். நம் கிராமத்துப் பெண்களை ஆடு, மாடுகளை கொடுத்து மேய்க்க சொன்னது இந்த அரசு. விவசாயிகளின் பொருளாதாரத்தை வேறு வழிகளில் மேம்படுத்த வேண்டும். ஆவின் பால் பண்ணைகள் அமைத்து வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் பால் கலப்படம் என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

கதிரவன், சென்னை மாவட்ட நியமன அலுவலர்,
உணவு பாதுகாப்புத் துறை

சமூக வலைத்தளங்களில் பால் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதுவரை சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தோம். அதில் சில கலப்படங்கள் இருந்தன. பாலில் அதிகப்படியான தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. தேசிய அளவில் பால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் 100க்கும் மேற்பட்ட பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதில் நேரடியாக பால் கறந்து வரும் விவசாயியிடம் இருந்து பெறப்பட்ட பாலில் சோப் ஆயில் கலக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கலப்படம் எப்படி நேர்ந்தது? அவர்களால் கலக்கப்பட்டதா இல்லை அவர்கள் கொண்டு வந்த பாத்திரம் முறையாக சுத்தம் செய்யாமலும் இருக்கலாம். மேலும் ஆல்டோ டெக்ஸ்ட் போன்ற வேதிப் பொருளும் கலப்படம் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன.

இவை மட்டும்தான் ஆய்வுகளில் இங்கு பார்த்தது. தற்போது மக்கள் இது குறித்து பீதி அடைய தேவையில்லை. பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஏதோ ஒரு சில இடங்களில் மட்டுமே இது போன்ற கலப்படங்கள் நடந்து வருகின்றன. அதற்கான ஆய்வு நடவடிக்கையைத்தான் தற்போது செய்து வருகிறோம்.

வீரராகவராவ், மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரையில் உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக இலவச உணவு தர ஆய்வு மையம் அமைத்தோம். மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 108 பால் மாதிரிகள் கொண்டுவரப்பட்டது. இதில் ஒரு பால் மாதிரியில் மட்டும் சோப் ஆயில் கலந்து இருந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

11 பால் மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாக சத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்டவை. ஆகவே முறையான விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். பாலில் மட்டும் இல்லாமல் பல்வேறு உணவுகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இங்கு பயன்படுத்தக்கூடிய ஆய்வு இயந்திரங்கள் முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் இயந்திரங்கள். இவை பாலில் உள்ள தரம், அதனுள் இருக்கக்கூடிய சத்துகள் என்னென்னவென்றும், கலப்படங்கள் ஏதேனும் இருக்கிறதா, அப்படி இருக்கும் பட்சத்தில் அது எந்த விதமான வேதிப் பொருள் என்பதையும் கண்டறிய உதவுகிறது.

இந்த ஆய்வுக்காக தமிழகத்தில் ஏற்கனவே அரசு ஆய்வுக் கூடங்கள் இருக்கின்றன. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால் உணவு ஆய்வுக் கூடங்களை நாடி மக்கள் செல்வதில்லை. விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் கூறுகிறோம். இதனால் ஹார்மோன் ஊசிகள் தடுக்கப்படும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே கலப்படம் தடுக்கப்படும். தொடர்ந்து மதுரையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மையங்களை அமைத்து ஆய்வுகளை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். உணவு பாதுகாப்புத் துறை இதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது.