வானவில் சந்தை - GST



அபூபக்கர் சித்திக்
செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்
abu@wealthtraits.com


வரியும் வாழ்வும்
சென்ற மாதம் முழுக்கவே நாம் எல்லோரும் ‘ஜி.எஸ்.டி’, ‘ஜி.எஸ்.டி’(GST) என ஊடகங்கள் முழங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். நீங்கள் ஒரு வீட்டை நிர்வகித்தாலும், ஏதேனும் வேலைக்குச் சென்றாலும் அல்லது ஒரு தொழில் முனைவோராய் இருந்தாலும் ஜி.எஸ்.டி உங்களைப் பாதிக்கும். நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அதன் சாதக பாதகங்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரியைப் (Goods and Services Tax  GST) புரிந்து கொள்வதன் வழியாகவே எதிர்கொள்ள முடியும்.

முந்தைய நிலை
அமுதா ஒரு தொழில் முனைவர். ஆயத்த ஆடைகளுக்கான துணி வகைகளை வாங்கி விற்கிறார். அவர் துணி உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்கிறார். அப்போது அவருக்கு விற்கப்படும் சரக்குக்கு விற்பனை வரி உண்டு. அதாவது அவரது கொள்முதல் விலை என்பது துணிகளின் விலையையும் விற்பனை வரியையும் உள்ளடக்கியதுதான்.

இப்போது அமுதா வாங்கிய துணிகளை ஓர் ஆயத்த ஆடை உற்பத்தியாளருக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆயத்த ஆடை உற்பத்தியாளர் அமுதாவிடம் துணிகளை வாங்கும் விலைக்கு (கொள்முதல் விலை+விற்பனை வரி+லாபம்) விற்பனை வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது ஏற்கனவே வரி செலுத்தப்பட்ட ஒரு பொருளுக்குக் கூடுதல் வரிச்சுமை ஏற்றப்படும்.

எத்தனை கை மாறுகிறதோ அத்தனை சுமை. வரிக்கு வரி. ஓர் ஆடையைக் கடையில் வாங்கும் பண்டத்தின் இறுதி நுகர்வாளர் இத்தனைக்கும் சேர்த்தே விலை கொடுக்கிறார். மிக நல்லதொரு எடுத்துக்காட்டு பெட்ரோல் விலை. பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்கள் (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் டீலர்களுக்கு ரூ.24.56 விலைக்குக் கொடுக்கின்றன.

அதில் மத்திய அரசு விதிக்கும் எக்சைஸ் வரியையும் டீலர் கமிஷனையும் சேர்த்தால் ரூ.49.22 ஆகிவிடுகிறது. இந்தத் தொகையில் கூடுதலாக மாநில அரசு ஒரு 27% வரியைச் சுமத்தும். இப்படி வரியின் மீது வரியாகச் செலுத்தியே நாம் பெட்ரோலுக்கு விலையைக் கொடுக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகள் வரி இதையெல்லாம் மாற்றும் என்றே முன்வைக்கப்பட்டது.

அதாவது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரிகளின் பாதிப்பை முற்றிலும் நீக்கம் செய்யும் என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான ஒரு வரி விதித்தல் முறையை இது சாத்தியப்படுத்தும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது. 

வரிகள் பூஜ்யத்திலிருந்து அதிகபட்சம் 28% என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக இது பகுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் மிகக் குறைந்த சதவீத வரி விதிப்புக்கும், ஆடம்பரப் பொருட்கள் அதிகபட்ச வரி விதிப்புக்குள்ளும் வருகின்றன.

அத்தியாவசியமான உணவுப் பொருட்களுக்கு 0% வரி. அதி ஆடம்பரப் பொருட்கள் மற்றும் தீங்கிழைக்கும் பொருட்கள் என்றழைக்கப்படும் புகையிலை, குளிர்பானங்கள் போன்றவற்றுக்கு அதிகபட்ச வரியான 28% க்கும் கூடுதலாக வரி வசூலிக்கப்படும். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், முன்பு 15% என்றிருந்த சேவை வரி இப்போது 18% என 3% கூடுதலாக விதிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்வச் பாரத் வரி, க்ரிஷி கல்யாண் வரி மற்றும் கல்வி வரி போன்றவை இனி விதிக்கப்பட மாட்டாது. சுத்தமான சுற்றுச்சூழல் வரி மட்டும் இப்போது தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கு முன்பு விதிக்கப்பட்ட கீழ்க்கண்ட வரிகள் அனைத்தும் இனி விலக்கப்படுகின்றன.

1. மத்திய எக்சைஸ் வரி (Central Excise Duty)
2. சேவை வரி (Service Tax)
3. ஈடுசெய் வரி (Countervailing Duty)
4. சிறப்பு ஈடுசெய் வரி (Special Countervailing Duty)
5. மதிப்பு கூட்டு வரி (Value Added Tax)
6. மத்திய விற்பனை வரி (Central Sales Tax)
7. சுங்க வரி (Octroi)
8. கேளிக்கை வரி (Entertainment Tax)
9.  நுழைவு வரி (Entry Tax)
10. கொள்முதல் வரி (Purchase Tax)
11. ஆடம்பர வரி (Luxury Tax)
12. விளம்பர வரிகள் (Advertisement Taxes)
13. குலுக்கள் சீட்டுகள் மீதான வரிகள் (Taxes Applicable on Lotteries).

எதிர்பார்க்கப்படும் விளைவுகள்

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறுகிய காலத்திற்கு பண வீக்கத்தை ஏற்படுத்தக் கூடும். சேவைகள் வரி முன்பிருந்த 15%லிருந்து 18% ஆவதால், உணவகங்களில் சாப்பிடுவது, திரைப்படங்களுக்குப் போவது போன்றவை கூடுதல் செலவை வைக்கும். அதே நேரம் மதுபானங்களும் பெட்ரோலியப் பொருட்களும் ஜி.எஸ்.டி வரம்புக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமான வரி வருவாய்த் தளங்கலான இவை இப்படி விலக்கப்பட்டிருப்பது தற்காலிகமாகவேனும் வரி இழப்பையே ஏற்படுத்தும்.

விலையேற்றம் சாத்தியமுள்ளவை

* டிரக் போன்ற வணிக வாகனங்களின் விலை கூடும்
* சேவைகள் வரியேற்றத்தால் மொபைல் அழைப்புகளின் கட்டணம் கூடும்
* துணிகள், ஆடைகள், பிராண்டட் நகைகளின் விலை அதிகரிக்கும்
* சிகரெட் விலையேறும்.

விலை குறைப்பு சாத்தியமுள்ளவை

* பெயின்ட், சிமென்ட் போன்றவை விலை குறையக்கூடும்
* வாகனங்களின் பேட்டரிகள் விலை குறையும்
* இரண்டு சக்கர வாகனங்கள், சிறிய கார்களின் விலை குறையலாம்
* மின் விசிறிகள், ஏர் கூலர்கள், பல்புகள், வாட்டர் ஹீட்டர்கள் போன்ற மின் சாதனங்கள் விலை குறையக்கூடும்.

இந்தியா போன்ற மாநிலக் கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு வகையான வரி விதிப்பு முறைகளைக் கொண்டிருக்கும்போது, தொழில் துறை பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் மின்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒருவர் தனது உற்பத்தியை இந்தியா முழுக்க அனுப்புவதற்கு பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

பல்முனை வரி விதிப்பும் நாடு முழுவதுக்கும் ஒரே மாதிரியான சீரற்ற வரி விதிப்பு முறையும் தொழில் முனைவோருக்கு பெரிய தடையாகவே இருந்து வருகிறது. பொருட்கள் மற்றும் சேவைகளை நுகரும் இறுதிப் பயனாளிக்கும் அதிக செலவை வைப்பதாகவும் இருந்தது. இந்தப் புதிய வரி விதிப்பு முறை, அதன் சாதக பாதகங்களோடு, இறுதிப் பயனாளிக்கு என்ன செய்யும் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
 

(வண்ணங்கள் தொடரும்!)