அனுராதா ரமணன் நினைவலைகள்



- ஸ்ரீதேவி மோகன்

நீளமாக மை தீட்டிய கண்கள், நீண்ட திலகம், நிறைய கற்கள் வைத்த மூக்குத்தி, பளீர் சிரிப்பு என தமிழ் எழுத்து உலகில் மறக்கமுடியாத குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரர் அனுராதா ரமணன். ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வெகுஜன வாசகர்களை தம் பக்கம் இழுத்தவர். அவருடனான தன் மலரும் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பல காலம் அவருடன் இருந்த அவருடைய சகோதரி ஜெயந்தி.

“அக்காவிற்கு உடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேர். சகோதரி ஒருவர். அக்காதான் மூத்தவர். 1947ல் பிறந்தார். அக்காவின் அம்மா வழி தாத்தா ஆர். பாலசுப்ரமணியம் பிரபல நடிகர். ‘மதுரை வீரன்’ படத்தில் பானுமதிக்கு அப்பாவாக நடித்தவர். அக்காவின் பெற்றோர் மேட்டூரில் வசித்தபோது அக்கா மட்டும் சென்னையிலே அவரது தாத்தா வீட்டிலே வளர்ந்தார்.

அக்காவிற்கு பதினெட்டு வயது இருக்கும் போது திருமணம் நடந்தது. இரு மகள்கள் பிறந்தனர். பெரிய கொண்டாட்டமில்லாத திருமண வாழ்க்கை. அதுவும் பத்து வருடங்களில் முடிந்து போனது. நான் அக்காவிற்கு பெரியப்பா மகள். சொந்த சகோதரியாக இல்லாதபோதும் சின்ன வயதில் இருந்தே அக்காவுக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது.

அவர் கணவர் இறந்தபோது நான் அடிக்கடி அக்காவைப் பார்க்க போவேன். அவரது சொந்த சகோதரிக்கு அப்போதுதான் திருமணம் முடிந்து வெளியூரில் இருந்ததால் அக்காவிற்கு நான் ஒரு சிறந்த துணையாகிப் போனேன். அக்கா ஓவியம் நன்றாக வரைவார். அதனால் கணவர் இறந்தபிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக சென்னையில் ஒரு பத்திரிகையில் ஒரு வருடம் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றினார்.

ஒரு சமயம் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என பத்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்தார். பத்து நாட்கள் விடுமுறை முடிந்து போனால் அங்கு இன்னொரு ஓவியர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலில் அக்கா அந்த வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தார்.

‘இன்னும் ஆறு மாதங்களில் மஞ்சள் பத்திரிகையைத் தவிர என் பெயர் எல்லா பத்திரிகைகளிலும் வரும்படி செய்வேன்’ என ஒரு கோபத்தில் கூறி விட்டு வெளியே வந்தார். அந்தப் பத்திரிகையில் இருந்து வெளியே வந்த பின் அங்கிருந்தபோது உடன் வேலை பார்த்த உதவி ஆசிரியை ஒருவரின் கதைகளை ஃபேர் காப்பி எழுதி கொடுக்க ஆரம்பித்தார்.

அக்கா அந்தக் கதைகளில் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போன அந்த உதவி ஆசிரியர் ‘நீயே கதை எழுதலாம். உனக்கு அந்த திறமை இருக்கு’ என ஊக்குவித்தார். அடுத்து ‘மங்கை’ என்ற பத்திரிகையில் வேலை விஷயமாக போய் பேசிய போது அதன் ஆசிரியர் நீங்களே ஒரு கதை எழுதி அதற்கு படமும் வரைந்து வாருங்கள் எனச் சொல்லி அனுப்பினார்.

அடுத்து ‘தினமணிக் கதிரில்’ ஓவியர் வேலை விஷயமாக சென்ற போது அக்கா தனது ஓவிய புத்தகத்தை அங்கேயே மறந்து வைத்து விட்டு வந்துவிட்டார். எப்போதும் தனது ஓவியப்புத்தகத்தில் தனக்குப்பிடித்த ஓவியங்களை வரைவதோடு அது சம்பந்தப்பட்ட சில விஷயங்களையும் சுவாரஸ்யமாக எழுதும் பழக்கம் உடையவர் அக்கா.

அதை பார்த்த தினமணிக்கதிரின் ஆசிரியர் சி.ஆர்.கண்ணன் இவரை கூப்பிட்டு ‘தமிழில் பெண் எழுத்தாளர்கள் அவ்வளவாக இல்லை. நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். கதை எழுதுங்கள். நன்கு வளரமுடியும்’ என ஊக்குவித்தார். இளம் பருவத்திலேயே அக்காவிற்கு நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தது. நல்ல கற்பனைத்திறனும் இருந்தது. மேலும் இப்படி பலரும் சொல்லவே அக்கா கதை எழுத ஆரம்பித்தார்.

அக்காவின் முதல் கதை ‘கனவு மலர்கள் கருகும் போது'...  ‘மங்கை’ இதழில் வெளியானது. அதில் படத்திற்கு மட்டும் ‘அனு’ என தன் சொந்த பெயரைப் போட்ட அக்கா கதையை ‘சாம்பவி’ என்ற புனைப்பெயரில் எழுதி இருந்தார். அந்த கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த ‘சாம்பவி’ யார் என கேட்டு நிறைய பேர் கடிதம் எழுதி இருந்தனர்.

அதன் பிறகு ‘தினமணிக்கதிரில்’ தனது சொந்தப் பெயரிலே அக்கா கதை எழுதினார். அதற்கும் நல்ல பாராட்டு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். சில கதைகள் திரும்பி வந்த போதும், கதையில் குறைவில்லை. இந்தந்த இடத்திற்கு இப்படி கதைகள் எழுத வேண்டும் என புரிந்து கொண்டார். எந்தப் பத்திரிகைக்கு எந்த கதை சரியாக இருக்கும் என பார்த்து அனுப்பி வைப்பார். அது வெளியாகும். அதன் பிறகு அவரது எழுத்துலக வாழ்க்கை வேகம் பிடிக்க ஆரம்பித்தது.

‘இதயம் பேசுகிறது’ 1978ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் அக்காவின் கதை தங்கப் பதக்கம் பெற்றது. அப்போதைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர் கையில் அக்கா அந்த தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அனு அக்கா நாவல்களும் எழுத ஆரம்பித்தார். நாவல்களுக்கு நடுவில் ஒரு மாற்றத்துக்காக சிறுகதைகள் எழுதுவார். தொடர்களும் எழுத ஆரம்பித்தார். 

ஆண்டு தொடக்கத்தில் இரண்டு பெரிய டைரிகள் வாங்குவார். அதில் ஒன்றில் தனிப்பட்ட விஷயங்களும் மற்றொன்றில் கதைக்கான குறிப்புகளும் எழுதி வைப்பார். தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை சின்ன கருக்களாக குறித்து வைத்துக் கொள்வார். இந்த சமயத்தில் இந்தப் பத்திரிகைக்கு இது சரியாக இருக்கும் என அந்தக் கருவை கதையாக எழுதுவார்.

அவரது நாவல்கள் சில சினிமாவாக வெளிவந்தன. ‘கூட்டுப்புழுக்கள்’, ‘சிறை’ ஆகிய நாவல்களை ஆர்.சி. சக்தி படமாக்கினார். ஆர்.சி. சக்தி அக்காவின் எழுத்துக்கு நல்ல ரசிகர். நடிகை லஷ்மி அக்காவின் தோழி. அவர் ‘சிறை’ கதையை படித்து அது தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஆர்.சி. சக்தியிடம் அது குறித்துச் சொல்லி ‘இந்த கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான் நடிக்கிறேன்’ என சொன்னாராம்.

பின்னர் அதன்படி நடிக்கவும் செய்தார். அந்தப் படம் நல்ல வெற்றி பெற்றது. அந்தக் கதை ‘ஆனந்த விகடன்’ நடத்திய போட்டிக்காக நான் அனுப்பியது. அக்கா ‘நீயே ஏதாவது ஒரு கதையை அனுப்பி வை’ என்றார். அக்கா எழுதியதில் இந்தக் கதைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அதையே அனுப்பிவைத்தேன்.

‘சிறை’ யில் வருவதுபோன்ற ஒரு சம்பவத்தை அக்கா பார்த்திருந்ததால் அதன் பாதிப்பில் அப்படி ஒரு கதையை எழுதி இருந்தார். விகடன் பொன்விழாவில் அந்தக் கதை முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய் பெற்றது. அந்தக் கதை வெளியானபோது பிராமணர் சங்கத்தினரிடம் இருந்து பயங்கர எதிர்ப்பு வந்தது. வீட்டுக்கு வந்து மிரட்டினர்.

அக்கா அசரவில்லை. ‘எனக்கோ, என் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்கோ நடந்திருந்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியதை எழுதினேன்’ என வலிமையாக பேசி அவர்களை அனுப்பி வைத்தார். அந்தக் கதை தேர்வுக் குழுவில் எழுத்தாளர் லஷ்மி இருந்தார். பரிசு அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் ஒரு சமயம் அக்காவிடம் ‘உன் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நீ நன்றாக வருவாய்’ என பாராட்டினார். எங்களுக்கு விருந்து வைத்தார். அதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் அம்மா - மகள் போன்ற ஒரு அன்பு இருந்தது. அக்காவின் பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்தன. நான் பல சமயங்களில் அக்காவுக்குத் துணையாக இருந்தேன். எனக்குத் திருமணமான பின்னரும் கூட அக்காவிற்கு உதவியக இருந்தேன்.

ஆனால் குழந்தைகள் பிறந்தபிறகு என்னால் அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. என் குழந்தைகள் வளர்ந்த பிறகு மறுபடி அக்காவிற்கு உதவியாக இருக்க ஆரம்பித்தேன். அக்கா எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கற்றுத்தருவார். மனிதர்களுடன் பேசுவது எப்படி, பழகுவது எப்படி என கற்றுத் தந்தார். மனிதநேயத்தையும் கற்றுத் தந்தார்.

எனக்கும் என் கணவருக்கும் (இரட்டையர்கள் எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலா(சுபா) இணையில் சுரேஷ்) திருமணம் பேசி முடித்து வைத்ததும் அக்காதான். சீரியஸாகப் பெண்களின் கதையை எழுதினாலும் அக்காவிற்கு ஜனரஞ்சகமான படங்கள் பார்க்கத் தான் பிடிக்கும். துன்பியல் படங்களை பார்க்க விரும்ப மாட்டார். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழிகாட்டுவார்.

ஏதாவது ஒரு உதவி தேவைப்பட்டால் செய்வார். அக்காவிற்கு சமையலில் தனிப்பிரியம். நன்கு ருசியாக சாப்பிடக் கூடியவர். யாராவது பத்திரிகையாளர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருமுன்னே சமைத்து வைத்துவிடுவார். அவர்கள் சாப்பிடாமல் திரும்பிப் போக முடியாது.

வீட்டில் இப்படி, பார்த்துப் பார்த்து ருசியாக சமைத்து சாப்பிடுபவர் வெளியிடங்களில் யாரேனும் அன்பாக பரிமாறும் விருந்து சுமாராக இருந்தாலும் நன்றாக இருக்கிறது எனச் சொல்லி சாப்பிடுவார். ‘நம் வார்த்தை அவர்களுக்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறது பார்’ என்பார். பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு பத்திரிகையுடன் இணைந்து ஒரு நலத்திட்டத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் சிலருக்கு உதவிகளும் செய்தார். ஆனால் அதனை தொடர முடியாமல் போய்விட்டது.

தன் கணவர் இறந்தபோதும் தன்னை யாரும் பரிதாபமாக பார்க்கக் கூடாது என்று விரும்பினார். அதனால் எப்போதும் தன்னை நன்கு அலங்கரித்துக்கொள்ள விரும்புவார். எவ்வளவு உடம்பு முடியாத போதும் காலை எட்டு மணிக்கெல்லாம் தயாராகிவிடுவார். பைபாஸ் சர்ஜரிக்கு பின் ஏதாவது நல்ல விஷயம் செய்ய வேண்டும் என நினைத்து ‘அன்புடன் அந்தரங்கம்’ பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்கள் எழுதினார்.

அது பல பெண்களுக்கு வழிகாட்டியது. பலர் நேரிலும் கவுன்சிலிங்கிற்காக வர ஆரம்பித்தார்கள். ஏழைகளிடம் அவர் ஒரு போதும் பணம் வாங்கியதே இல்லை. அதுமட்டுமில்லாமல் யார் எந்த நேரத்தில் வந்தாலும் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து உட்கார்ந்துவிடுவார். தன் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லி இருந்தார்.

அதன்படி 2010ம் ஆண்டு அவர் மறைந்த போது அவரது கண்களை தானம் கொடுத்தோம். தனது கடைசி காலம் வரை அவர் எழுத்தை கைவிடவில்லை. அவர் இறந்தபோது பல கதைகள் பாதியில் நின்று போயின. தான் இறந்த பிறகும் தன்னை அழகுப்படுத்த வேண்டும் என்று அக்கா கேட்டுக்கொண்டதால் அவருக்கு மேக்கப் போடும் பியூட்டீசியனை அழைத்து வந்து மேக்கப் போட்டோம்.

அந்தப் பெண் ‘இதுவரை யாருக்கும் இப்படி செய்ததில்லை. அம்மா என்பதால்தான் போடுகிறேன். இப்படி அவர்களுக்கு மேக்கப் போடுவேன் என நினைக்கவில்லை’ என அழுது கொண்டே மேக்கப் போட்டுவிட்டார். கடைசி காலத்தில் கூடவே உதவி யாய் இருந்த ஒரு பெண் இப்போது வந்தாலும் அக்காவை நினைத்து வருந்துவார். ‘அம்மா போன பின்தான் எனக்கு சாப்பாட்டின் அருமையே தெரிகிறது’ என்பார்.

அக்கா கடைசியாக மருத்துவரிடம் பேசும்போது ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் நான் உயிரோடு இருக்க வேண்டும். எனக்கு சில கடமைகள் உள்ளன’ என சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்ய நினைத்திருந்தார் என்பது தெரியாமலே போய்விட்டதுதான் வருத்தம். கடைசியாக ஆம்புலன்ஸில் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வர மருத்துவர்கள் என்னை வண்டியில் ஏறச் சொன்ன போது ‘எப்போதும் என் கூடவே இருந்தாய், கடைசியாக இப்போதும் எனக்குத் துணையாக வா’ என அக்கா சொல்வது போல் இருந்தது.

எனக்குத் தாங்க முடியவில்லை. எத்தனை முறை அவரோடு இந்த வழியில் பயணித்திருக்கிறேன் என நினைத்து நெஞ்சம் கலங்கிவிட்டது” என சொல்லும் போது தன் சகோதரியை நினைத்து ஜெயந்தியின் கண்கள் குளமாகி இருந்தன. எழுத்து அவருக்கு சுவாசித்தல் மாதிரி சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் அனுராதா மேடத்தின் உதவியாளராக இருந்தவர் சர்ச்சில் பாண்டியன். ஒரு சிஷ்யனாக ஒரு குருவை பற்றி மரியாதையுடனும், பரவசத்துடனும், லயிப்புடனும் அவர் நம்மோடு அனுராதா ரமணன் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“பல படங்களில் நடித்தவர் ஆஜானுபாகுவான தோற்றமும் ராஜ லட்சணமும் கொண்ட ஆர். பாலசுப்ரமணியம். அவரின் பேத்தி என்பதாலோ என்னவோ அதே கம்பீரத் தோரணை அமையப்பெற்றதோடு நெஞ்சில் ஈரமும் மனித நேயத்தோடும் வளர்ந்தவர் அனுராதா மேடம். எழுத்துத் திறமையும், ஓவியத் திறமையையும் ஒரு சேர அமையப்பெற்றவர். ஒன்றின் அடிப்படை - மனித உணர்வு, மற்றொன்றின் அடிப்படை- அழகுணர்ச்சி.

ஓர் உன்னத கலைஞரை உருவாக்க இது தானே தேவை? சொந்த வாழ்வின் சோகத்தைத் துரத்த பேனாவைக் கையில் எடுத்தவருக்கு கடைசிவரை அதுவே உற்ற துணையாக மாறியது.  கடைசி வரையில் பேனா மட்டுமே அவருக்கு சம்பாதித்துக் கொடுத்த கற்பதரு. சந்தோஷத்தை அள்ளித் தெளித்த சினேகிதி. மனக்கவலைக்கு அருமருந்து. கணவன்… கடவுள்... எல்லாம்.

எழுதுவது என்பது சுவாசித்தல் மாதிரி இவருக்கு இயல்பானது. வாசகர்களை மட்டுமே முன்னிறுத்தி, எதையும் நேர்மையாக எழுத வேண்டும் என்பது எழுத்து பற்றிய இவரது தெளிவு. எப்போதும் கறுப்பு நிற மையில் அடித்தல், திருத்தல் இல்லாமல், கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி முத்து முத்தாய் எழுதுவார்.

எந்த ஒரு சூழலிலும் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு பேனாவை கையில் எடுத்து ‘இது நன்கு வரவேண்டுமே’ என்று அறிமுக எழுத்தாளரை போன்ற உத்வேகத்தோடு எழுதுவார். நான் அறிந்த வகையில் ஒரு போதும் கதைக்காக அவர் சிரமப்பட்டதே இல்லை. உண்மைச் சம்பவங்களோடு புதிய திருப்பங்களை கற்பனை செய்து படிப்போர் மனதை சிறை வைத்துவிடுவார். உபநிஷத் கதைகளில் வரும் ஒரு சின்ன வார்த்தை கூட இவரது கைவண்ணத்தில் நட்சத்திர சிறுகதை ஆகி விடும்.

‘நாவல் மற்றும் தொடர்கதை எழுதுவது என்பது பங்களாவில் ஐந்தாறு அறைகளில் வசதியாக வாழ்வது மாதிரி. எப்படி வேண்டுமானாலும் அந்த வீட்டை அலங்காரம் செய்யலாம். ஆனால் சிறுகதை என்பது ஒரே அறையில் வாழ்வது மாதிரி. அந்த சிறிய அறையை அழகாக காட்டுவது பளிச்சென்று வைத்துக்கொள்வது என்பதுதான் சவால்’ என்பார்.

இவரது கதைகளின் முதல் வரியே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடும். படித்து முடித்துவிட்டு தான் புத்தகத்தை கீழே வைக்கத் தோன்றும். அதே போல் முடிவும் பளீரென பொட்டில் அறைந்த மாதிரி இருக்கும். இவரது எழுத்துக்கள் நடுத்தர குடும்பத்து சாதாரண மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவை. ‘பெண்ணே உன்னால் முடியும்’ என்று பெண்களுக்கு ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தருபவை.

எழுத்தாளர் என்பதைத் தாண்டி இவர் சிறந்த ஒரு மனிதாபிமானி. எழுத்தாளர்களை நேரில் பார்ப்பது சிரமம் என்றிருந்த காலத்தில் எல்லோருடனும் இயல்பாக பழகியவர். இவரைத்தேடி வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தனது அலுவல், உடல்நிலை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் போல் அதே புன்சிரிப்புடன் வரவேற்று அன்பாய்ப் பேசி அனுப்பி வைப்பார்.

அழுத்தமான சம்பவங்கள், ஆழமான பாத்திரப்படைப்பு, விரிவான கண்ணோட்டம், அன்றாட பிரச்னைகளின் அலசல் என தன் வாசகர்களோடு எழுத்துச் சங்கிலியால் தன்னை பிணைத்துக்கொண்டவர். தனது ஆலோசனைகள் மூலம் தாயாய், சகோதரியாய், தோழியாய் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.

‘வாழ்க்கையை துணிச்சலாக எதிர் கொள்ளுங்கள். தோல்வி என்பது கவனக்குறைவாக இருக்கும் போது நமக்கு ஏற்பட்ட சறுக்கல் அவ்வளவே தானே தவிர வாழ்க்கை இதோடு முடிந்து போவதில்லை. மீண்டும் முயன்றால் உற்சாகமாய் உயிர்த்தெழலாம்’ என்பார். தன்னை இலக்கியவாதி என ஒருபோதும் அவர் காட்டிக்கொள்ள விரும்பியதே இல்லை. ‘இலக்கியம் என்பது பயமுறுத்தும் வார்த்தை.

எனக்கு இலக்கியம் தெரியாது. இதயங்கள்தான் தெரியும்’ என்பார். இன்று பத்திரிகை உலகில் இருக்கும் சிலர் இவரால் முன்னுக்கு வந்தவர்கள். உடல் நிலை முடியாத பல சமயங்களில், ஏன் தீவிர சிகிச்சையில் இருந்த போதும் கூட அவர் முகத்தில் குறையாத அலங்காரம் குறித்து டாக்டர் செரியன் வியந்து போனதை நான் பார்த்திருக்கிறேன்.

உடல் ரீதியான சவால்களை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு வெளியே சிரித்தபடி வளைய வர அவரால் முடிந்ததற்கு கடவுள் தந்த அவரது வெள்ளை மனம்தான் காரணம். கதை நாயகியாய் 25 ஆண்டு காலம் தமிழ் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் ‘பத்திரிகை உலகிற்கு நான் தேவைப்படும்போதே இந்த உலகில் இருந்து நான் விடைபெற்றுக்கொள்ள வேண்டும் பாண்டியன்’ என்பார்.

அதன்படியே நடந்தது. மூக்கிலும், வாயிலும் டியூப்புகள் சொருகப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் அத்தனை சிரமத்திலும் கூட என்னை பார்த்து தனது வலது கையை உயர்த்தி ‘தம்ஸ் அப்’ காட்டிய அந்தத் தருணங்கள் இன்றைக்கும் என் கண்களில் நீரை பெருக்குகிறது.”