தலைமையை அழகு செய்யும் அறிவுப் பெண்கள்
வையத்தலைமை கொள்
தனி மனித ஆளுமையை வளர்த்தெடுக்கும் அமைப்பு ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜே.சி.ஐ.). நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே கட்டிக் காத்த இந்த அமைப்பின் தேசிய தலைவராகி இருக்கிற முதல் பெண்மணி நாக்பூரை சேர்ந்த ராஜஸ்ரீ பஜே. மேடைகளை உரை வீச்சில் ஈர்க்கிற வலிமை வாய்ந்த பெண். எடக்குமடக்கான கேள்விகள் முன்வைக்கப்படும் போதும் புன்னகையுடன் அழுத்தமான பதிலோடு முற்றுப்புள்ளி வைக்கிறார். ஏர்ஹோஸ்டஸ், ஃபேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங், பாட்டு, நடனம் என இவரது பின்னணியில் ஏராளம் சிறப்புகள் உண்டு. இவரது கணவர் குன்வந்த் உலகெங்கும் பறக்கும் பிசினஸ்மேன். மகள் மான்வி.
“எனக்கு நான்தான் இன்ஸ்பிரேஷன்’’ எனும் அவரது தன்னம்பிக்கையும் அழகுதான்! ‘‘நான் இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வருவேன் என்று கனவு கூட கண்டதில்லை. பழைய ராஜ ஒரு டிரீம் கேர்ள். இப்போ கனவுகளை நனவாக்கத் தெரிந்த கியூட் லேடி. எப்போதும் உற்சாகமாகவும் கூலாகவும் இருக்க வேண்டும். நெருக்கடியான நேரங்களிலும் என் புன்னகை உற்சாகத்துடன் வெளிப்படும். இப்படி இருந்தால்தான் உறுப்பினர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
புரிதலே வெற்றிகளுக்கான வழியை திறந்து விடும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும் போது பெண்கள் முதலில் தங்களை நம்ப வேண்டும். தங்கள் திறமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. சவால்களை விரும்பி ஏற்றுக் கொள்ளும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும். சர்வதேச அளவில் இந்தியாவின் சிறப்பை எடுத்துச் செல்வதே எனக்கான இலக்கு’’ என்கிறார், கடந்த ஓராண்டில் ஏராளமான கனவுகளை நனவாக்கிய ராஜஸ்ரீ!
மேலும் அவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு பெண்ணுமே தலைவிதான். இல்ல நிர்வாகம், குழந்தை வளர்ப்பு என தான் சார்ந்துள்ள சூழலை தலைமை ஏற்று நடத்துகின்றனர். பெண்கள் எப்போதும் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஏன் இருக்க வேண்டும்? வெற்றியை வேட்டையாடும் வேட்கை பெண்களுக்கு அவசியம். அதன் தீவிரமே அவர்களை அடுத்தடுத்த உயரங்களுக்கும் கொண்டு செல்கிறது. தனி மனித ஆளுமை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஜே.சி.ஐ. பற்றிய விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது. சாதாரண கனவுகளுடன் வலம் வந்த என்னை பெரிய அளவில் செயல்படத் தூண்டியவை இங்கு கிடைத்த பயிற்சிகளே. இளம் பெண்களுக்கு இது போன்ற பயிற்சிகள் கிடைத்தால் மிகச் சிறந்த இடத்தை எட்டலாம். கல்லூரி மாணவ, மாணவியரை பக்காவாக செதுக்கி வடிவமைக்கும் ‘ஐ ஸ்மார்ட்’ என்ற புதிய பயிற்சித்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளேன்.
இதன் வழியே பல பெண்கள் தலைமை பொறுப்புக்கு வர வாய்ப்புள்ளது” எனும் ராஜ தேசிய பயிற்சியாளரும் கூட. யான் பெற்ற இன்பம் பெறுக இப்பெண்ணுலகம் என அனைத்து இந்திய பெண்களுக்குமான வெற்றி வாசலைத் திறந்து வைத்துள்ளார். இந்த அமைப்பின் 17வது மண்டலத்தின் முதல் பெண் தலைவி என்ற சிறப்பு மைதிலிக்கு. ஈரோடு பகுதியை சேர்ந்த இவரோ ‘தெனாலி’ டைப்பில் எதற்கும் பயப்படும் பெண்ணாக இருந்தவர்.
பி.ஏ. சோஷியாலஜி படிப்பு, பேட்மின்டன் விளையாட்டில் கொஞ்சம் ஈர்ப்பு. சிந்துக அரவிந்தனை காதலால் கரம் பிடித்து இளந்தமிழ் இலக்கியா, இளந்தமிழ் தென்றல் என இரண்டு மகள்களின் அம்மா. மகள்களை தாய்த்தமிழ் பள்ளியில் படிக்க வைப்பதில் பெருமிதப்படுகிறார். இதுவரை பெண்கள் இடம் பெறாத மண்டலத் தலைவர் பதவியில் இந்த ஆண்டு வீற்றிருக்கிறார் மைதிலி. இந்திய அளவில் செயல்படுத்தப்படும் ‘சுரக்க்ஷா’ திட்டத்துக்கு வித்திட்டது மைதிலியே.
இத்திட்டம் மூலம் அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சானிட்டரி நாப்கின் டெஸ்ட்ராய் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு, பள்ளி மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க ‘ஷேப் தெம் ரைட், மேக் தெம் பிரைட்’, கல்லூரி மாணவர்களுக்கு ‘ஐ - ஸ்மார்ட்’, குழந்தைப் பருவ தலைமைப் பண்பை தட்டி எழுப்ப ‘துளிர்’, கணவன்- மனைவி புரிதலை மேம்படுத்த ‘டூயட்’ என பயிற்சித் திட்டங்களால் சொல்லி அடிக்கிறார் மைதிலி!
‘‘பெண்களிடம் தலைமைப் பொறுப்பை நம்பிக் கொடுக்கலாம் என்பதற்கான முன்மாதிரியாக என்னை மாற்றிக் கொண்டேன். தனியாக நடந்து செல்லவே பயப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு இன்று மேடைகளை வசீகரிக்கவும், நூற்றுக்கணக்கான அமைப்புகளை வழிநடத்தவும் ஜே.சி.ஐ. பயிற்சிப் பட்டறைகள் நம்பிக்கை அளித்தன. தலைவர் பொறுப்பு காரணமாக குடும்பத்தை நிறைய மிஸ் பண்ணுகிறேன். அந்த வலியை நான் உணர்ந்து விடாமல் என் கணவர் கவனித்துக் கொள்கிறார்.
தனி மனுஷியாக இந்த சமுதாயத்துக்கு செய்ய நினைத்த நல்ல விஷயங்களை ஒரு தலைமைப் பொறுப்பில் இருந்து பெரிய அளவில் செய்ய முடிகிறது. புற்றுநோயில் என் தந்தையை இழந்தேன். இந்த நோய்க்கு இனி ஒருவரைக் கூட இழக்கக் கூடாது என்ற எண்ணம் புதிய தொரு விழிப்புணர்வுத் திட்டத்தில் கொண்டுபோய் விட்டது. இனி எப்போதும் புற்றுநோய் தடுப்புக்கான பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன் ’’ என்கிறார் மைதிலி.
‘‘சமுதாய மாற்றம் என்பது குடும்பத்தில் இருந்து துவங்குகிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டேன். அதுவே பயிற்சித் திட்டங்களாக வலம் வருகின்றன. குடும்ப அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய தனிக்குடும்ப சூழலில் அவரவர் திறன்களை கண்டறிந்து தட்டிக் கொடுக்க யாரும் இல்லாத நிலை. ஒவ்வொருவருடைய மனநிலையுமே கைவிடப்பட்ட குழந்தை போல உள்ளது.
அவர்களின் கரம் பிடித்து அவர்களையே அவர்களுக்கு அழகாய், அறிவாய் அறிமுகம் செய்து, கைப்பிடித்து, சாதிக்க அழைத்து, தன்னம்பிக்கை தருகிறது ஜே.சி.ஐ. பயிற்சித் திட்டங்கள். சமூக மாற்றத்துக்கான நம்பிக்கை வெளி்ச்சம் அவரவர் உள்ளத்தில் இருந்து துவங்குகிறது. எனது கைகளில் கொடுக்கப்பட்ட தலைமைப் பொறுப்பின் மூலம் இளம் உள்ளங்களில் ஒளியேற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே என்னை அடுத்தடுத்து வழிநடத்தப் போகிறது ’’ என்கிறார் மைதிலி. ஜே.சி.ஐ. அமைப்பில் இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் இந்த இரு பெண்களும் தலைமைக்கு அழகு!
- ஸ்ரீதேவி
|