பிங்க்



சினிமா

அந்த டிசம்பர் 16ஐ மறக்க முடியுமா? ஓடும் பேருந்தில் சிலர் இணைந்து நிர்பயாவை பாலியல் வன்புணர்வு செய்த கொடூரத்தை எப்படி பெண்களால் மறக்க இயலும்? இதோ சில நாட்களுக்கு முன் அதே டில்லியில் சிசிடிவி கேமராவில் பதிவான இன்னொரு கொடூரம். பல முறை கத்தியால் நடுச் சாலையில் குத்தப்பட்டு ஒரு பெண் கொலையுண்டதையும் பார்த்தோம். இந்த டில்லிதான் ‘பிங்க்’ இந்தி திரைப்படத்தின் கதைக்களம்.

அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்துள்ள இத்திரைப்படம் நமக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. பெண்ணின் உடல் இங்கு என்னவாகப் பார்க்கப்படுகிறது? பெண் என்பவள் யார்? ஏன் பெண் எப்போதும் ஆணுக்கு இணங்க வேண்டியவள் என்றே இச்சமூகம் எண்ணுகிறது? இந்தக் கேள்விகள் எல்லாம் வெகுகாலமாக பெண்களால் எழுப்பப்பட்டுக்கொண்டிருப்பவைதான். ஆனால், ‘பிங்க்’ இதில் இன்னொரு படி முன்னேறுகிறது.

பெண்கள் குறித்த புரிதலை ஆண்களுக்கு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் புரிதலை ‘பிங்க்’ ஏற்படுத்துகிறது. ‘மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்றும் ‘வேண்டாம்’ என்று பெண் சொன்னால் ‘வேண்டும்’ என்று அர்த்தம் என்றும்தான் ஆண்களின் அகராதியில் எழுதப்பட்டிருக்கிறது. இதையேதான் நம் திரைப்படங்களும் பிரதிபலிக்கின்றன. ஆனால், ‘பிங்க்’ ஒரு பெண் ‘நோ’ சொன்னால் அதை ‘நோ’ என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறது. இதுவே இப்படத்தின் சாரம்.

ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்த ஒருவனுக்கு ‘ஓகே’ சொல்கிறாள் என்பதால் அவள் உன்னோடும் வருவாள் என்று அர்த்தமல்ல என்று ஆண்களுக்கு ஓங்கிச் சொல்கிறது ‘பிங்க்’. படத்தில் மூன்று பெண்கள் வருகிறார்கள். மினல், ஃபலக், ஆண்ட்ரியா அவர்களின் பெயர்கள். முறையே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவப் பெண்கள். ஒவ்வொருவரின் பாத்திரமும் கச்சிதமான சிற்பம் போல் செதுக்கப்பட்டிருக்கிறது. மூவரின் முகபாவங்களும் அத்தனை இயல்பு.

ஓடும் வாகனத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இறக்கிவிடப்பட்டபின் வீடுவரை ஒரு நடைபிணம் போல் டாப்ஸி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. நீதிமன்றத்தில் தன் 19வது வயதில் முதன்முதலில் பாலியல் உறவு கொண்டதை பகிர்ந்துகொள்ளும் காட்சியிலும் டாப்ஸி வியக்கவைக்கிறார். நீதிமன்றக் காட்சிகளில் அமிதாப்பும் இந்த மூன்று பெண்களும் தங்கள் நடிப்பால் நம்மை
ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

பூங்காவில் அமிதாப்பும் டாப்ஸியும் நடந்து வருகையில், ‘இவள்தான் அந்தப்பெண்’ என்று சிலர் பேசிக்கொண்டே போவதைப் பார்த்த டாப்ஸி தன் தலைக்கு முக்காடிட்டு நடக்கையில், அமிதாப் அந்த முக்காட்டை கலைத்துவிடுவார். ஒரு திரைப்படத்திற்கு காட்சிமொழி எத்தனை நுட்பமாக அமையவேண்டும் என்பதற்கு இக்காட்சியை பாடமாக வைக்கலாம்.

ஆண்ட்ரியா பாத்திரம் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இருந்து டில்லிக்கு வந்த பெண்ணாகக் காட்டப்படுகிறது. எல்லா பெண்களையும்விட ஒரு வடகிழக்கு மாநிலப் பெண் டில்லியில் எவ்வளவு இழிவாக நடத்தப்படுகிறாள் என்பதை மனமுடைந்து நீதிமன்றத்தில் கூறுகையில் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில், குறிப்பாக டில்லியில் வடகிழக்கு மாநிலத்தவரை இழிவாகப் பார்க்கும் போக்கும் அதிகமுண்டு.

கொலைகள்வரை நிகழ்ந்த வரலாறும் உண்டு. இன்னொரு பெண்ணான ஃபலக்கிற்கு ஒரு பேராசிரியருடன் இருக்கும் காதலை வைத்து அவளைப் பற்றி தவறாக சித்தரிக்க எண்ணுகிறார் எதிர்த்தரப்பு வழக்கறிஞர். இப்படி பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவர்கள் தவறான பெண்கள்தான் என்று நிறுவ முயல்கையில் வழக்கறிஞர் அமிதாப் அந்த வாதங்களை நொறுக்குகிறார்.

ஒரு கட்டத்தில் ஃபலக் தங்கள் மீது வைக்கப்படும் பாலியல் தொழிலாளி என்கிற குற்றச்சாட்டை “ஆமாம்! நாங்கள் பணம் வாங்குபவர்கள்தான்” என்று நீதிமன்றத்தில் அழுதுகொண்டே பொய்யாக ஒப்புக்கொள்கிறார். அதன்பின் கேட்கிறாள் “நாங்கள் அப்படிப்பட்ட பெண்கள்தான்! இப்போது சொல்லுங்கள் நீதிபதி அவர்களே! அப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் மினலின் விருப்பமின்றி அவளைத் தொட ஓர் ஆணை அனுமதிக்குமா உங்கள் சட்டம்?” என்று கேட்கிறாள்.

நீதிபதியின் தீர்ப்புக்குப்பின் அமிதாப்பின் கைகளைப் பிடித்துக்கொண்டு மினல் கண்ணீர் சொரியும் காட்சியில் விழிகளில் நீர் சுரக்காதவர்களே இருக்க முடியாது. அடுத்த காட்சி யில் ஒரு பெண் காவலர் வெளியே வரும் அமிதாப்புக்குக் கைகொடுப்பார். அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியும் நெகிழ்ச்சியுடன் கூடிய நன்றியுணர்வை ஆயிரம் பக்க வசனங்களிலும் கூட வெளிப்படுத்த இயலாது.

இப்படிப்பட்ட கருத்துகள்கொண்ட திரைப்படமொன்று தமிழில் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து வருமோ என்று ஏக்கமாகத்தான் இருக்கிறது. படம் முழுவதும் ஒரு திகில் தன்மை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களுக்காக தான் வாதாடப் போவதை அமிதாப் இவர்கள் வீட்டுக்கு வந்து சொல்லாமல் சொல்லி விட்டுப் போகும் காட்சி அப்படியே மனதில் நிற்கிறது.

அமிதாப் நீதிமன்றத்தில் அடித்தொண்டையில் பேசும் இந்த வசனங்கள்தான் படத்தின் கரு: ‘‘ஓர் ஆணுடன் தனியாக ஒரு பெண் சென்றால், அது அவளைத் தொடுவதற்கான லைசன்ஸோ அல்லது அவளது இருப்பே அவளது சம்மதத்தைக் குறிக்கிறது என்றோ எடுத்துக் கொள்ளக்கூடாது”. ‘‘ஒரு பெண் இரவில் தனியாக வீதியில் நடந்து சென்றால், சாலையில் செல்லும் வாகனங்களில் இருப்போர் வேகத்தைக் குறைத்து ஜன்னலை இறக்குவதுண்டு. இது ஏன் இவர்களுக்கு பகலில் தோன்றுவதில்லை?”

‘‘மது அருந்துதல் பற்றிய கண்ணோட்டம் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் நடத்தை பற்றியதாக இருக்கிறது. ஆண்களுக்கு அது ஓர் உடல்நலம் சார்ந்த பிரச்னை என்றுதான் பார்க்கப்படுகிறது”. “ராக் ஷோவில் இருக்கும் ஒரு பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால், கோயிலுக்கோ நூலகத்திற்கோ செல்லும் பெண்கள் அப்படிப் பார்க்கப்படுவதில்லை. ஒரு பெண் இருக்கும் இடமும் அவள் நடத்தையை நிர்ணயிக்கிறது”.

“நகரத்துப் பெண்கள் தனியாக வாழக்கூடாது. ஆனால், ஆண்கள் தனியாக வாழலாம். சுதந்திரமான தனித்த பெண் ஆண்களை குழப்பக்கூடியவள் என்றும் மது அருந்தும் பெண்கள் ஆண்களுக்கு சில உரிமைகளை வழங்குவதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது”. “பெண்கள் ஆண்களுடன் விருந்துக்குச் செல்வதோ அல்லது மது அருந்துவதோ அவர்களின் தேர்வு. நான் எதற்கும் தயார் என்று அதற்கு அர்த்தமல்ல”.

“ ‘நோ’ என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு முழு வாக்கியம். எந்த இடத்தில் அந்த வார்த்தை பிரயோகிக்கப்பட்டது, அதற்கான விளக்கம் எதுவும் தேவையில்லை. ‘நோ’ என்றால் அது ‘நோ’ தான். அது ஒரு பெண் நட்போ, உடன் பணிபுரியும் பெண்ணோ, கேர்ள் ஃபிரண்டோ, ஒரு பாலியல் தொழிலாளியோ அல்லது மனைவியோ யாராய் இருந்தாலும் ‘நோ’ என்று சொன்னால் ஆண் அவளைத் தொடக்கூடாது”.

திரையரங்கத்தில் கைத்தட்டலை அள்ளுகின்றன இந்த வசனங்கள். பெண், அவள் யாராய் இருந்தாலும், அவளை உடமை என்று நினைக்கும் உரிமை ஆண்களுக்கு இல்லை என்பதை ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது ‘பிங்க்’. பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதைவிட, ஆண்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவருவதாலேயே பாலியல் கொடூரங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்கிறது இத்திரைப்படம்.

எத்தனை கூட்டங்கள் போட்டுப் பேசினாலும் எத்தனை கட்டுரைகள் எழுதினாலும் கலை இலக்கியம் மூலம் ஒரு விஷயத்தை விளங்க வைப்பதுதான் மனமாற்றத்திற்கு வழிவகுக்கும். அந்த வகையில் ‘பிங்க்’ ஆண்களின் மனமாற்றத்திற்கு வித்திடும் ஓர் அற்புதப் படைப்பு. இது பெண்கள் பார்க்க வேண்டிய படம். ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

- கவின் மலர்