ப்ரியங்களுடன்...
பாடகி எஸ்.ஜானகி பற்றிய நினைவூட்டல் தொகுப்பு அவரின் ரசிகர்களுக்கு வரமாக அமைந்தது. திரைப்படம் இயக்குதல் வாயிலாக பெண்களின் பிரதிநிதியாய் செயலில் இறங்கும் ரோஹிணிக்கு வாழ்த்துகள். - வள்ளியூர் ஏ.பி.எஸ். ரவிந்திரன், நாகர்கோவில்.
‘நீங்கதான் முதலாளியம்மா’ சிறுதானியங்களின் அற்புதப் பயன்களை உணர வைத்தது மகேஸ்வரியின் கட்டுரை. ‘பெண்ணின் வலியை ஆண் எழுத முடியாது’ என்கிற கவிஞர் சுகிர்தராணியின் கருத்துதான் எனதும். - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
இனிமையில்லா இறுதிக்காலம் படிக்க படிக்க இதயம் கனக்கிறது. கலைவாணி முதியோர்களுக்கு செய்யும் சேவை மகத்தானதுதான். அக்டோபர் 1-15 இதழ் சூப்பர் சூப்பர் என்று சொன்னால் போதாது. உதவும் உள்ளத்தையும் தந்து விட்டதே! - ராஜி குருஸ்வாமி, ஆதம்பாக்கம், சென்னை-88.
வாலெண்டரி ரிட்டையர்மென்ட் பெற்ற முதல் பாடகியான எஸ்.ஜானகிக்கு பிரிவோம்பல் விழா நடத்தியது போல அமைந்தது கட்டுரை. ‘அம்மா என்றால் நம் வீட்டில் இருக்கும் அம்மாவை சொல்கிறேன்’ என்ற இயக்குநர் பா.இரஞ்சித்தின் குறு(சு)ம்பை ரசித்தேன். மாரியப்பன் தாய், ‘என் சாதியை சொல்லி என் பிள்ளையை நான் வளர்க்கவில்லை என்று சொன்னாரே! அந்த ஊக்கம் தான் மாரியப்பனை சாதிக்க வைத்தது. ‘வாடகைக்கு வீடு தேடுகிறீர்களா’ கட்டுரை என் போன்ற வாடகைதாரர்களை எச்சரித்திருக்கிறது. - அ.யாழினி பர்வதம், சென்னை-78.
தடைகளைத் தகர்த்த தீபா மாலிக்கின் வெற்றி, எல்லாமிருந்தும் தற்கொலைக்கு முயலும் கோழைகளுக்கு ஒரு சவுக்கடி. - மல்லிகா அன்பழகன், சென்னை-78.
தீபாவளி வரும் நேரம், வகை வகையாய் பண்டங்கள் 30 இணைப்பு அருமை. தோழிக்கு நன்றி கூறி பலகாரங்கள் சுட ஆரம்பித்து விட்டோம். - தி.பார்வதி, திருச்சி-7.
எஸ்.ஜானகி பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றும் கலை அம்சமாகவே இருந்தன. அவர் வாய் திறந்து பாடாமலிருந்தாலும் அவரது மனமும், உதடும் அவருக்குள்ளே ஏதாவது பாடியபடிதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.புதுமையான தகவல்களுடன் தோட்டக்கலை நிபுணர் தந்துள்ளவை மணம் வீசுபவையே எனலாம். - சுகந்தி நாராயண், வியாசர்பாடி.
|