உணவுக்காக ஒரு திருவிழா



பாரம்பரியம்

நமது முன்னோர்கள் மருந்தையும் விருந்தையும் ஒன்றெனக் கொண்டதால் உடல் நலமும் மன நலமும் சாப்பாட்டறையிலிருந்தே நமக்கு வாய்த்தது. சமீபகாலமாக உணவே மருந்து... உடல் நலமே மன நலம் என்ற வார்த்தைகள் எல்லாம் மதிப்பிழந்து, கலப்பிடம் இல்லாத உணவுப் பொருட்களே இல்லை எனச் சொல்லுமளவிற்கு எல்லா உணவுப் பொருட்களிலும் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனக் கலவைகளும் உடலுக்கு ஒவ்வாத வண்ணங்களும்  ஏராளமாக சேர்க்கப்படுகின்றன. இந்நிலையில் நஞ்சில்லாத உணவு மிகவும் அவசியம் என்றாகிறது.

அவசரத்திற்காக பாக்கெட்டில் தயார் நிலையில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களிலும் நம்பகத்தன்மை இல்லை. மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்காக துரித கதியில் தயார் செய்யப்படும் இன்ஸ்டன்டு உணவுகளும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவே உள்ளது.  உணவகங்களில் வாங்கி உண்ணும் உணவுகளும்  ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளாமல் அக்கறையற்ற முறையிலே தயார் செய்யப்படுகின்றன. உணவை விஷமாக மாற்றி  உண்ணும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து இம்மாதிரி உணவுகளை உண்பதன் மூலம் உடல் உபாதைகள் நமக்கு உருவாவதுடன் உடல் குறைபாட்டுடன் கூடிய சந்ததிகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். சமீபகாலமாக இயற்கை முறையில் ரசாயனக் கலப்பின்றி முற்றிலும் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் உணவுப்பொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உரையாடல்கள், அது குறித்த பிரசாரங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுவதன் விளைவாக மக்கள் அதை சற்று  திரும்பிப்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நெல்லையில்  உள்ள ஜெயேந்திரர் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய உணவுக்கு பெயர் பெற்ற ‘நல்ல சோறு’  ராஜமுருகன் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு குறித்த பயிற்சிகளை வழங்கினார். இடையிடையே அந்தக்கால சமையல் பற்றியும் இந்தக்கால உணவுப்பழக்கம் பற்றியும் சில விஷயங்களை நகைச்சுவை உணர்வு கலந்து அங்கு வந்திருந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

பாரம்பரிய உணவு தயாரிப்பு குறித்து ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள வந்திருந்த சிலரிடம் நாம் பேசினோம். “சிறுதானியத்தில் இருந்து தயாராகும் பலவித உணவு பற்றி கற்றுக்கொண்டேன். குறிப்பாக கேழ்வரகு லட்டு, வரகு அரிசி பிரியாணி, மல்லி சாதம், அவல் பாயசம், தினை பாயசம் என சில அயிட்டங்களை அறிந்து கொண்டேன். இஞ்சியை நறுக்கிய 9 மணி நேரத்துக்குள் பயன்படுத்தவேண்டும் என்றும் பூண்டை நசுக்கிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற டிப்ஸ்களும் கிடைத்தன” என்றார் பனங்குடியைச் சேர்ந்த வீரபாண்டியன்.

உணவு தொடர்பான ஓரிரு நூல்களை எழுதியவரான பாளையங்கோட்டை ஹசீனா, “எனக்கு சிறு வயதிலிருந்தே சாப்பாட்டின் மேல் பிரியம் அதிகம். திருமணமாகி, குழந்தைகள் பிறந்து வளர்ந்ததும் மகள் திருமணத்துக்காகவும், பையன் வெளிநாட்டு படிப்புக்காகவும் பிரிந்திருக்கும் நிலையில் நிறைய தனிமை கிடைத்ததால் நான் சமைத்து ருசித்த உணவு பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கினேன். இந்த உணவுத் திருவிழாவில் புதுவிதமான பாஸ்தா தயாரிப்பு பற்றிச் சொன்னார்கள். நமது உணவு பாரம்பரியம் பற்றி ஒரு வித தெளிவு கிடைத்தது.

பல நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். போகுமிடமெல்லாம் அங்குள்ள உணவை சுவைப்பதிலும், அதன் சமையல் ரகசியத்தை அறிவதிலும் ஆர்வம் கொள்வேன். ஆரோக்கியமான உணவென்றால் ஜப்பான்  நாட்டு உணவு மட்டுமே. அங்கு மசாலா பொருட்கள் மற்றும் எண்ணெய் அதிகம் சேர்ப்பதில்லை. மீன் முக்கிய பங்கு வகிப்பது கூடுதல் சத்து. சுவையான உணவென்றால் இத்தாலியின் பாஸ்தாதான். மைதாவில் 100 விதமான வகைகளில் இந்த பாஸ்தா செய்யப்படுகிறது.

மெக்சிகன் உணவில் டாக்கோஷ் என்ற பச்சை காய்கறி, சுட்ட கோழி வைத்து மடித்த சோள ரொட்டி சுவை மிக்கது. நமது நாட்டில் மசால் தோசையை அடித்துக்கொள்ள எதுவும் இல்லை” என்றார். அரங்கத்தில் பெண்களுக்கு பாரம்பரிய உணவு குறித்து வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ‘நல்ல சோறு’ ராஜமுருகன் நமது உணவுப் பழக்க மாற்றம் குறித்து பெண்களிடம் கவலையுடன் பேசிக்கொண்டிருந்தார். ரெசிபிக்கு மாவு உருட்டிக்கொண்டே பெண்கள் ஆர்வமுடன் அவரை கவனித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

அங்கிருந்த 3 வகுப்பறைகளில் 69 பேர் பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மேஜைகளில் பரப்பி வைத்திருந்தனர். அதில் நம் கண்ணைக் கவர்ந்து ஆசையை தூண்டிய உணவைப் பற்றிய விவரம் கேட்டபோது, சிமிழி என்ற பெயரில் ஓர் உணவை திலகவதி என்பவர் படைத்திருந்தார். அது பற்றிய விவரம் கேட்டபோது, “என் அப்பத்தாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். ராகி, எள்ளு கலந்து செய்யுறதால இரும்பு, சுண்ணாம்பு சத்து நிறைய உள்ளது என்றார்.

குழந்தைகளுக்கு வீட்டில் சிற்றுண்டியாக நெய்யுருண்டை, சிறுதானிய சீடைகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். குதிரைவாலி கலவை சோற்றுடன் அமர்ந்திருந்த சங்கர்நகரை சேர்ந்த இம்மானுவேலுவிடம் பேசியபோது, “எங்கள் ஊர் பகுதிகளில் கம்பு, கேழ்வரகு அதிகம் விளைவதால் அவற்றில் கூழ் செய்து அடிக்கடி குடிப்போம்” என்று பாரம்பரிய உணவுப் பழக்கத்தை பற்றித் தெரிவித்தார்.

தாழையூத்துவில் இருந்து வந்திருந்த மும்தாஜ் என்பவர் தயாரித்திருந்த குலுக்கு ரொட்டி பற்றி விவரம் கேட்டபோது, “இது அந்தக்கால குளோப் ஜாமூன். கேப்பை, அரிசி மாவை பிசைந்து ரொட்டி கல்லில் போட்டு தட்டியோ, உருட்டியோ வைப்போம். பின் கருப்பட்டி பாகு காய்ச்சி வேர்க்கடலை, ஏலக்காய் தூள் சேர்த்து தேன் பதத்தில் எடுத்து மாவு உருண்டை அல்லது தட்டையை போட்டு ஊறவைத்து சாப்பிடலாம்” என்றார்.

சங்கரன்கோவில் மேல்நிலைப் பள்ளி யின் தமிழாசிரியர் சங்கர்ராம் தனது குடும்ப சகிதமாக இந்த உணவுத் திருவிழா வில் கலந்துகொண்டு தனது குடும்பத்தின் தயாரிப்பான பனையோலை கொழுக்கட்டை, நாட்டு சம்பா முந்திரிக்கொத்தை காட்சிப்படுத்தியிருந்தார். இந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவிற்கு மும்பையிலிருந்து வந்திருந்த ஜெயபாரதியிடம் பேசியபோது, “நான் மும்பையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு பாரம்பரிய உணவைப்பற்றி எதுவும் தெரியாது.

ஆனால், இந்த உணவுத் திருவிழாவில் கலந்துகொண்ட பிறகு என் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் அளவிற்கு கொஞ்சம் சமைக்கக் கற்றுக்கொண்டேன்” என்றார். உணவுத் திருவிழாவிற்கு வந்திருந்த பலரிடமும் பேசியபோது, “பாரம்பரிய உணவு பற்றியும்  அதன் பயன்பாடு குறித்தும் நன்றாகத் தெரிந்து கொண்டோம். இனி எங்கள் குடும்பங்களில் இந்த உணவுப் பழக்க வழக்கத்தையே கொண்டுவரும் எண்ணம் எங்களுக்கு வந்துவிட்டது” என்றனர்.

நாம் சந்தித்த பலரின்  உணர்வும் இதுவாகவே இருப்பதை உணர முடிந்தது. இதை பாரம்பரிய உணவை நோக்கிய நகர்வு என்றுகூட கருத்தில் கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக உணவுப் புரட்சி, சுகாதார புரட்சி மற்றும் வேளாண்மை புரட்சி என நிறைய மாற்றங்கள் ஏற்பட சாத்தியமிருப்பதையும் இந்த உணவுத் திருவிழா நமக்கு உணர்த்தியது.