பள்ளிக்கூடம் கவனிக்கிறதா?



அந்தப் பட்டுச் செல்லத்தின் முகம் ஏன் வாடியிருக்கிறது? அந்த நிலாப்பெண் முகத்தில் ஏன் அவ்வளவு குழப்பம்?அந்த அணில் வால் குட்டித் தங்கம் ஏன் இப்படி ஓடுகிறது? இப்படி வகுப்பறையில் அமர்ந்திருக்கும் அத்தனை குழந்தைகளையும் தாயன்போடு கவனிக்க ஒரு செல்ல அம்மா கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை சொர்க்கமாகிவிடாதா? குழந்தையின் வீட்டுச் சூழல், சமூகத் தொடர்புகள், பள்ளிச் சூழல் எல்லாம் உணர்ந்து குழந்தையின் சின்ன சிணுங்கலுக்கும் காரணம் இதுவாக இருக்கும் என்று மிகச்சரியாக கண்டுபிடித்துவிட்டால் தீர்வு எளிதாகிடுமே. அப்படியொரு செல்ல அம்மாவின் பெயர்தான் ‘பள்ளி சமூக சேவகர்’ (ஸ்கூல் சோஷியல் வொர்க்கர்).

ஸ்கூல் சோஷியல் வொர்க்கர் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம் என்று தனது முனைவர் பட்ட ஆய்வில் பரிந்துரைக்கிறார் கல்வியாளர்  ஹெலிக்ஸ் செந்தில்குமார். இவர் டிஸ்லெக்சியா குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளாக ஓப்பன் ஸ்கூல் அண்டு லேர்னிங் சென்டர்,  டிரெயினிங் சென்டர் ஆகிய கல்வி மையங்களை நடத்துகிறார். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் டிஸ்லெக்சியா ரெமடியல் டீச்சிங் பயிற்சி அளித்துள்ளார். கற்றல் கற்பித்தல் துறையில் மாணவர்களின் நண்பனாக வலம் வருகிறார்.

‘‘குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி அளிப்பதே கல்வி. இன்றைய கல்வி முறையில் இதற்கான சாத்தியங்கள் குறைவு. வளரும் சூழலும், குடும்பப் பொருளாதாரமும் குழந்தையின் நடத்தையில் பெரும்பங்கு வகிக்கிறது. இவற்றைப் புரிந்து கொண்டு குழந்தையின் மேம்பாட்டுக்காக செயல்படுவதே ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் பணி. குழந்தையின் பிளஸ் பாயின்டுகளை கண்டறிந்து தட்டிக் கொடுப்பதும், பிரச்னைகளை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட்டு பட்டாம் பூச்சியாக பறக்க உதவுவதும் அவசியம்.

பள்ளி நிர்வாக நடைமுறை, வகுப்பறை செயல்பாடு என பிரச்னை எதில் இருந்தாலும் தயக்கம் இன்றி சுட்டிக் காட்டுவதும் இதில் அடக்கம். குழந்தையின் முழு வளர்ச்சிக்கு தடையாக நிற்பது எதுவானாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும்’’ என்கிற செந்தில்குமார், இவற்றையே தனது ஆய்வின் பரிந்துரைகளாக முன் வைக்கிறார். மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் முதுகலைப் படிப்பில் ஒரு பகுதிதான் ஸ்கூல் சோஷியல் வொர்க். இதை ஒரு சிறப்புப் படிப்பாக கொண்டு வரவும் வலியுறுத்துகிறார் இவர்.

“இன்றைய ஆசிரியர்களில் பலர் குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு பாடம் நடத்துவதில்லை. பாடத்தை நடத்தி முடிக்க வேண்டியதே அவர்களின் இலக்காக இருக்கிறது. குழந்தையின் தொடர்பில் உள்ள புறச்சூழலை யாரும் கணக்கில் கொள்வதில்லை. குழந்தையை முழுமையாக புரிந்து கொள்ளாத பள்ளியால் எப்படி அந்தக் குழந்தைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்க முடியும். பள்ளியின் இந்த நிலையே ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் தேவைக்குக் காரணமாக இருக்கிறது’’ என்கிறார் செந்தில்குமார்.

யாரெல்லாம் ஸ்கூல் சோஷியல் வொர்க்கர் பயிற்சி பெறலாம்?
“பெண்களுக்கு இந்தத் துறை சிறந்ததாக இருக்கும். இந்தப்பயிற்சியில் சேர அடிப்படை எம்.எஸ். டபிள்யூ முடித்திருக்க வேண்டும். இவர்களால் சமூகச் சூழலோடு குழந்தைகளை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். 6 மாத பயிற்சியில் இருந்து ஓர் ஆண்டு வரை தேவைக்கு ஏற்ப பயிற்சி பெறலாம். இப்போது வெளிநாட்டுப் பள்ளிகளில் ஸ்கூல் சோஷியல் வொர்க்கர்கள் பணி மிகவும் முக்கியமானது. அவர்கள் குழந்தைகள் வாழும் சூழலை தெரிந்து கொள்ள ஹோம் விசிட் செய்கின்றனர்.

பெற்றோர் குழந்தைகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகின்றனர், திட்டுவது மற்றும் அடிப்பதும் ஏன் என பெற்றோரை கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. நம் ஊரிலும் வரும் காலத்தில் ஸ்கூல் சோஷியல் வொர்க்கர் அவசியம் என்கிற நிலை உருவாகும்’’ என்கிறார். செந்தில்குமார் சொல்வது நூறு சதவிகிதம் உண்மையே. குழந்தைகளின் பிரச்னைகளுக்காக பெற்றோர், பள்ளி ஆசிரியர் உட்பட எவரையும் கேள்வி கேட்கும் அந்த செல்ல அம்மாக்கள் நம் ஊர்களில் எப்போது சாத்தியம்? 

- ஸ்ரீதேவி