தமிழ் சினிமாவில் பெண்கள்
சினிமா
ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் துறையாக இருக்கிறது தமிழ் திரைத்துறை. இப்படியான சூழலில் நடிப்புத்துறை, ஆடை வடிவமைப்பு மற்றும் சிகையலங்காரம் ஆகிய துறைகளில் மட்டுமே பெரும்பான்மையான பெண்கள் பங்களிக்கின்றனர். அது தவிர்த்து திரைத்துறை சார்ந்த தொழில்நுட்பத் துறைகளில் பங்களிக்கும் பெண்கள் வெகு சொச்சம் பேரே. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கால்பதித்து, சாதனை புரியும்போது ஏன் திரைத்துறையில் மட்டும் இந்த வெற்றிடம் என்பது போன நூற்றாண்டிலிருந்து எழும்பி வரும் கேள்வி.
இதற்கு விதிவிலக்காக சில பெண்கள் போன நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறார்கள் என்றாலும் தற்போது அந்த விகிதம் அதிகரித்து வருகிறது. நிச்சயம் இது ஆரோக்கியமான மாற்றம்தான். அப்படியாக தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பெண்கள் சிலரிடம் பேசினோம்.
பெண்கள் குடும்பப் பாங்கான படங்களைத்தான் எடுப்பார்கள். அவர்களின் வலியும், சோகமுமே அப்படங்களில் நிறைந்திருக்கும் என்கிற பொதுவான எண்ணத்தைத் தகர்த்திருக்கிறார் இயக்குனர் உஷா கிருஷ்ணன். இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை- குடும்பப் படமான ‘ராஜாமந்திரி’ அனைத்துத் தரப்பு மக்களையும் ரசிக்க வைத்தது.
‘‘அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சைன்ஸ் படித்தேன். தற்செயலாகத்தான் அந்தப் படிப்பில் இணைந்திருந்தேனே தவிர ஊடகத்துறை மீதோ, திரைத்துறை மீதோ எந்த நாட்டமும் அதற்கு முன் இருந்திருக்கவில்லை. சினிமா, ரேடியோ, அனிமேஷன் ஆகியவை எங்களுக்குப் பாடமாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டன. திரைத்துறை மற்றும் எழுத்துத்துறையில் உள்ளவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் கருத்தரங்குகளும் நடக்கும். அப்படித்தான் எனக்கு எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் அறிமுகம் கிடைத்தது.
அவர்தான் என்னை இயக்குனர் மகேந்திரன் சாரிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கான சப் டைட்டில் பணிகளில் இணைந்து செயலாற்றினேன். சினிமா என்பது எட்டாக்கனியெல்லாம் கிடையாது. நாம் பார்க்கும் வாழ்க்கையை அதே யதார்த்தத்தோடு திரையில் காட்ட வேண்டும் என்று மகேந்திரன் சார் சொன்னார். சினிமா மீதிருந்த மாயை உடைந்தது அவரால்தான்.
பிறகு சுசீந்திரன் சாரிடம் ‘பாண்டியநாடு’, ‘ஜீவா’ படங்களில் பணியாற்றினேன். அப்பணி மூலம் துறை சார்ந்து பலவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அப்போது வந்த நம்பிக்கையை அடுத்துதான் படம் இயக்கும் முயற்சிகளில் இறங்கினேன். ‘ராஜாமந்திரி’ படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் முன்பே இருந்தது. அப்படத்தின் கதை புனைவு என்றாலும் கதாப்பாத்திரங்கள் நான் பார்த்த வாழ்க்கையிலுள்ள நிஜ மனிதர்களின் கதாப்பாத்திரங்கள்தான். தயாரிப்பாளர் தேடுவது என்பது மிகப்பெரு சவாலாக இருந்தது.
முதல் படம், பெண் இயக்குனர், அண்ணன்-தம்பி கதை என இந்த மூன்று காரணங்களால் பல தயாரிப்பாளர்கள் பின்வாங்கினார்கள். கதை பிடித்திருந்தாலும் என்னால் இயக்க முடியுமா? என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது. இதையெல்லாம் மீறி நீண்ட தேடுதலுக்குப் பிறகுதான் படம் இயக்கினேன். எதிர்பார்த்தபடியே நல்ல விமர்சனங்கள் வந்திருப்பதில் மகிழ்ச்சி’’ என்றவர் அடுத்த படத்துக்கான பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறார்.
‘‘ஸ்கிரிப்ட் முடித்து விட்டேன். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்புக்கு செல்வதாகத் திட்டம்’’ என்கிறார் உஷா கிருஷ்ணன். ‘வல்லமை தாராயோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மதுமிதா. அதனைத் தொடர்ந்து ‘கொலகொலயா முந்திரிக்கா’ மற்றும் ‘மூணே மூணு வார்த்தை’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இந்தியில் ஸ்ரீதேவியை வைத்து படம் இயக்கும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.
‘‘நான் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது அப்பா விருப்பம். டாக்டர் ஆக வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். ஆனால், சிறுவயதிலிருந்தே கிரியேட்டிவான பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு இரண்டிலும் விருப்பம் இல்லை. கிரியேட்டிவான துறையில் இயங்க வேண்டும் என்பதால் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். சிங்கப்பூரில் மல்டிமீடியா ஃபிலிம் மேக்கிங் படித்தேன். படிக்கிற காலத்தில் நான் இயக்கிய ‘Untittle red’ எனும் இந்தியப் பெண்கள் பொட்டு எதனால் வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியான ஒரு நிமிடப் படம் BBC Best of the world 2003 என்கிற விருதைப் பெற்றது. இதுதான் என் முதல் படி.
அது தந்த ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அடுத்து அமெரிக்காவில் ஃபிலிம் மேக்கிங்கில் முதுநிலை படித்தேன். ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ 3வது பாகத்தில் இன்டர்ன்ஷிப் செய்தேன். திரைப்பட உருவாக்கத்தில் நல்ல தேர்ச்சியுடன் இந்தியா திரும்பியதும் ‘வல்லமை தாராயோ’ படத்தை இயக்கினேன். அப்படம் தமிழ்நாடு அரசின் மாநில விருதைப் பெற்றது.
கடந்த ஆண்டு மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன். பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் ‘உன் சமையலறையில்’ படத்தின் இந்தி வெர்ஷன் ‘தடுக்கா’வில் க்ரியேட்டிவ் ப்ரொடியூசராக வேலை பார்த்தேன். அடுத்து ஸ்ரீதேவி புராஜக்ட் போய்க்கொண்டிருக்கிறது. திரைப்பட உருவாக்கத்துக்கு நிறைய உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். பல துறைகளையும் ஒருங்கிணைத்து படத்தை இயக்கி அதை வெளிக்கொண்டு வருவது ஒரு பிரசவம் போலதான். பெண்கள் குடும்பத்தை நிர்வகித்துக் கொள்வார்கள் என்கிற உத்தரவாதத்தில் ஆண்கள் படம் இயக்கச் செல்கிறார்கள்.
ஆனால், பெண்களுக்கு குடும்பம், குழந்தைகள் என பல கமிட்மென்டுகள் இருப்பதே அவர்கள் திரைத்துறைக்கு அதிகம் வராததற்கான காரணமாக இருக்கும். மற்றபடி பெண்களால் முடியாது என்பதல்ல’’ என்கிறார் மதுமிதா. ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் மலைப் பிரதேசத்தின் அழகை தன் கேமரா கண்கள் வழியாகக் காண்பித்தவர் ப்ரீத்தா. இந்திய ஒளிப்பதிவின் பிதாமகன் பி.சி.ஸ்ரீராமின் வார்ப்புகளில் ஒருவர்.
‘‘கிரியேட்டிவ் துறையில் பணிபுரிய வேண்டும் என்கிற ஆர்வம் என் இயல்பிலேயே இருந்தது. பி.சி.ராம் என் தாய்மாமா என்பதும் ஒளிப்பதிவுத் துறையை நான் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணம். சென்னை திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பில் கோல்டு மெடல் வாங்கினேன். ‘மே மாதம்’, ‘சுபசங்கல்பம்’, ’குருதிப்புனல்’ ஆகிய படங்களில் பி.சி. சாரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன்.
‘நாக் நாக்’ ‘அபியும் நானும்’ ‘கண்ணாமூச்சி ஏனடா’ ‘கௌரவம்’ ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிறகு பெங்களூருக்கு இடம் பெயர்ந்து விட்டேன். இரண்டு கன்னடப் படங்களுக்கும் ஒரு இந்திப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். இயக்குனர்கள் ப்ரியா, ராதாமோகன், பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் ஒரு முறை இணைந்து பணியாற்றிய பிறகு, அடுத்த படத்துக்கும் இணைந்து பணியாற்றும் அளவுக்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறேன்.
ஒளிப்பதிவுத் துறையை பற்றிச் சொல்வதானால் ‘science married with art’ என்றுதான் சொல்ல வேண்டும். ப்ரிபுரொடக்ஷனின் போது எந்தெந்த காட்சிகளில் எந்தெந்த மாதிரியான லைட்டிங், லொக்கேஷன், ஃப்ரேம் இருக்க வேண்டும் என்பதை இயக்குனருடன் கலந்தாலோசிப்போம். படப்பிடிப்புக்கு சென்று விட்டால் கிரியேட்டிவ், தொழில்நுட்ப அறிவுடன் சேர்ந்த உடலுழைப்பு தேவைப்படும். படப்பிடிப்புத் தளத்தில் நமக்கானதை அமைக்கிற அளவுக்கான ஆளுமை இருக்க வேண்டும்.
இவற்றுக்குள் நமக்கென தனித்துவமான கேமரா கோணங்கள், லைட்டிங் வாயிலாகத்தான் நல்ல ஒளிப்பதிவாளராக அடையாளம் பெறமுடியும். சினிமாவில் பிரேக் கிடைப்பது தான் முக்கியமானது. அதுவரை மனம் தளராமல் காத்திருக்க வேண்டும். இண்டஸ்ட்ரி இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது. பெண்கள் உள்ளே நுழைவதற்கான சரியான தருணம் இது’’ என்கிறார் ப்ரீத்தா.
உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துக்கு பாடல் எழுதிய முதல் பெண் பாடலாசிரியர் உமாதேவிதான். ‘கபாலி’ படத்தில் வெளியான ‘மாயநதி’ ‘வீரத்துரந்தரா’ ஆகிய பாடல்களும் சரி, ‘மெட்ராஸ்’ படத்தில் வெளியான ‘நான் நீ நாம் வாழவே’ பாடலும் சரி தனித்துவமான வரிகளால் நம்மை புருவம் உயர்த்த வைத்தவை. அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் உமாதேவி.
‘‘தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவள் என்பதால் சங்க இலக்கியச் சொல்லாடல்களை நன்கு அறிந்திருந்தேன். இயல்பிலேயே இருந்த கவிதை ஆர்வம் மொழியுடன் சேர்ந்து இன்னும் வளப்பட்டது. சிறுபத்திரிகைகள் துவங்கி ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வரை பலவற்றுக்கும் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 2006ம் ஆண்டு ‘திசைகளைப் பருகியவள்’ என்கிற கவிதைத் தொகுப்பை கொண்டு வந்தேன். இந்தக் கவிதைத் தொகுப்புதான் என்னை ரஞ்சித் சாரிடம் கொண்டு சேர்த்தது.
ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவரைச் சந்தித்து பேசியபோது என் கவிதைகளில் சொல்லாடல்கள் மிகச்சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார். அப்போது வரை அது ஒரு பாராட்டு மட்டும்தான் என்றிருந்தேன். ‘மெட்ராஸ்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்படி உருவான பாடல்தான் ‘நான் நீ நாம் வாழவே’. பாடல் வேறு கவிதை வேறு என்றாலும் பாடலுக்குள் கவிதையைக் கொண்டு வருவதற்கு நல்ல மொழிப்பயிற்சி தேவை. பாடல் உருவாக்கம் என்பது குழுப்பணி.
இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆகிய மூன்று பேரால் உருவாவது. ஒவ்வொருவரும் மற்றவர் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நான் ‘கபாலி’க்குப் பிறகு முழு நேர பாடலாசிரியராகியிருக்கிறேன். பாடலா சிரியர் துறையில் பெண்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே சமயம் சமத்துவ சிந்தனை அடிப்படையில் பெண் பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அப்போது தான் இன்னும் பல பெண்களின் வரவு சாத்தியப்படும்’’ என்கிறார் உமாதேவி. இன்றைக்கு முக்கியமான இயக்குனர்கள் பலரிடமும் ஒரு பெண் உதவி இயக்குனராவது பணிபுரிகின்றனர். பெண் உதவி இயக்குனர்கள் என்ன சொல்கிறார்கள்? இயக்குனர் ரஞ்சித்திடம் ‘கபாலி’யில் உதவி இயக்குனராய் பணியாற்றிய ஜெனி, ”தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இயக்குனர் ரஞ்சித்தை பேட்டி எடுத்தேன். அந்த அறிமுகத்தின் வாயிலாகக் கிடைத்த வாய்ப்புதான் இது.
தொலைக்காட்சியில் உண்மையை அப்படியே எடுத்துக் காட்டுவதை விட புனைவின் வாயிலாக அரசியலைப் பூடகமாகவும் பேச முடியும் என்பதைக் கற்றுக்கொண்டேன். திரைத்துறையில் பாலினப் பாகுபாடு கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், நான் பணியாற்றிய இடத்தில் அந்தப் பாகுபாடு இல்லை. ‘கபாலி’ படத்தில் நான் மட்டும்தான் பெண் உதவி இயக்குனர். எனக்கு சம உரிமையும் முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டது. பாலின அடிப்படையிலான சலுகை பெண்களுக்குத் தேவையில்லை.
ஓர் ஆணை எப்படி நடத்துகிறார்களோ அதற்குச் சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம். எனது எண்ணங்கள் மதிக்கப்படும் நிலையில்தான் நான் எனது உழைப்பைக் கொடுக்க முடியும். பெண்கள் திரைப்படங்களை இயக்குவதற்கான தேவை இருக்கிறது. ஆண்கள் பார்க்கும் உலகுக்கும் பெண்கள் பார்க்கும் உலகுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. பெண்கள், உலகைப் பார்த்தால் அதில் பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்றில்லை. என் பார்வையில் இந்த உலகை. மக்களை எப்படிப்பார்க்கிறேன் என்பதன் காட்சி வடிவமாக என் படைப்பு இருக்கும்” என்கிறார்.
இயக்குனர் மிஷ்கினிடம் பணியாற்றிய மீனாகுமாரி, ‘‘நான் இயக்குனராகப் போகிறேன் என்றதும் அப்பா அதனை மறுத்தார். முதுநிலை சமூகசேவை மற்றும் உளவியல் படித்திருக்கும் என்னை அவர் ஐ.ஏ.எஸ். படிக்கும்படி சொன்னார். நான் அவரை மீறித்தான் டான்போஸ்கோ திரைப்படப் பள்ளியில் இணைந்து திரைப்பட இயக்கம் கற்றுக் கொண்டேன். சிறந்த மாணவர், சிறந்த குறும்படம் என்கிற இரண்டு விருதையும் அப்பள்ளியில் பெற்றதற்குப் பிறகுதான் அப்பாவுக்கே ஒரு நம்பிக்கை வந்தது. இயக்குனர் மிஷ்கினிடம் இணைந்தபோது என்னை ஒரு ஆணுக்கு சமமாகத்தான் இயக்குநர் நடத்தினார்.
திரைத்துறையில் பாலினப் பாகுபாடு இருக்கின்றது. பெண்ணின் தலைமையை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். ஒரு பொண்ணு சொல்லி பண்றதா என்பது போல செயல்படுவதை பார்க்க முடிகிறது. பெண் இயக்குனர் என்றதுமே குடும்பப் பாங்கான கதையெல்லாம் வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். ஏன் ஒரு பெண்ணால் நகைச்சுவைப் படம் எடுக்க முடியாதா? இன்றைக்கு சினிமாவில் 90 சதவிகிதம் காமெடி பெண்களை கேலி செய்வதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கேலியை பெண்களால் எழுத முடியாது. ரொமான்ஸ், த்ரில்லர், ஆக்ஷன் கலந்த ஒரு படத்துக்காக தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களது படத்துல சண்டையெல்லாம் வருமா? என்கிறார்கள். இதையெல்லாம் கடந்து வர வேண்டிய சவால்கள் நிறைந்திருக்கிறது திரைப்பட உலகம்’’ என்கிறார்.
- கி.ச.திலீபன் படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
|