வளரும் துயரம் நீ!
100 பொருட்களின் வாயிலாக பெண்கள் வரலாறு
-மருதன்
பொருள் 26: பேய் திருமணம்
சீனாவின் வடக்குப் பகுதியில் மஞ்சள் நதிக்கு அருகே அமைந்திருந்த கிராமங்களில் ஒரு விநோதமான வழக்கம் காலம் காலமாக நிலவி வந்தது. அதற்கு மிங்குன் என்று பெயர். திருமணம் செய்து வைக்கும் சடங்கு அது. அந்தக் கிராமத்தில் உள்ள ஓர் ஆணுக்கு 12 வயது நிறைந்துவிட்டால் அவன் திருமணத்துக்குத் தயாராகிவிடுவான். சீனா என்றில்லை, எல்லாப் பண்டைய சமூகங்களிலும் இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இருந்தது. விநோதம் இதுவல்ல.
மிங்குன் சம்பிரதாயத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அந்த 12 வயது சிறுவன் உயிருடன் இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அதாவது, 12 வயதை நெருங்கிய பிறகு எந்த ஆண் மகன் இறந்து போனாலும் அவன் திருமணத்துக்குத் தகுதியானவன் ஆகிவிடுகிறான். இப்படி இறந்தவர்களுக்கு நடத்தப்படும் திருமணம்தான் மிங்குன் என்று அழைக்கப்பட்டது.
இறந்துபோன ஒருவனுக்கு எப்படிப் பெண் தேடுவது? இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. முதலில், அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களை நாடிச் செல்வார்கள். பன்னிரண்டு வயதுக்குக் குறைவான சிறுமியாகத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு பெண் வீட்டாரிடம் பேசுவார்கள். இறந்துபோன மகனின் அருமை பெருமைகளையெல்லாம் விவரித்துவிட்டு, உங்கள் வீட்டில் வளரும் மகளை என் மகனுக்கு அளிக்கிறீர்களா என்று கேட்பார்கள் போலிருக்கிறது. வரதட்சணை பெண் வீட்டார் தரவேண்டுமா, ஆண் வீட்டாரே ஏதாவது தருவார்களா என்று தெரியவில்லை.
பெண் வீட்டாரின் சம்மதம் கிடைத்துவிட்டால் மிங்குன் சம்பிரதாயங்கள் தொடங்கிவிடும். இந்தச் சம்பிரதாயம் பற்றி சில குறிப்புகள் உள்ளன. சம்பந்தப்பட்ட சிறுமியை, அதாவது, மணமகளை அலங்கரித்து அழைத்துவருவார்கள். மணமகன் இல்லை என்பதால் அவனுக்குப் பதிலாக ஒரு வெள்ளை சேவலைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். சேவலுக்கும் சிறுமிக்கும் திருமணம் நடைபெறும். உடனேயே மணமகனுக்கான இறுதிச் சடங்கும் செய்யப்பட்டுவிடும்.
அதுவும் முடிந்தபிறகு மணமகன் குடும்பத்தினர் புதிய மணமகளைத் தங்கள் வீட்டுக்குக் கையோடு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இனி அந்தச் சிறுமி புகுந்த வீட்டின் சொத்தாக மாறிவிடுவாள். தன் ‘கணவனின்’ வீட்டில் அவள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். அவள் திருமணமானவளாகவே கருதப்படுவாள் என்பதால் இனி வாழ்நாளில் அவள் வேறு எந்த ஆடவரையும் காதலிக்கவோ திருமணம் செய்துகொள்ளவோ கூடாது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
சரி, ஒருவேளை பெண் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? அதற்கு இரண்டாவது வழி உதவும். உயிருள்ள பெண்ணுக்குப் பதிலாக இறந்துபோன ஒரு பெண்ணைத் தேடுவார்கள். அவளுடைய உடல் முறைப்படி கேட்டு, பெறப்படும். பிறகு அந்த உடலுடன் திருமணத்தை நடத்திமுடிப்பார்கள். மிங்குன் சம்பிரதாயத்தை பேய் திருமணம் என்றும் அழைக்கிறார்கள். உயிருடன் இல்லாத ஒருவரை மணக்கும் வழக்கம் என்பதால் உருவான பெயராக இருக்கும்.
ஒருவருமே இறப்பதில்லை, இறந்தபிறகு இங்கிருந்து கிளம்பி உயிர் இன்னோரிடத்தில், அதாவது, மேலுலகில் வசிக்கிறது என்னும் ஆதார நம்பிக்கையில் இருந்து கிளர்ந்தெழுகிறது இந்த வழக்கம். எனவே கீழுலகில் நடத்தப்படும் எல்லாச் சடங்குகளும் மேலுலகிலும் நடத்தப்படவேண்டும். டேவிட் ஈ. முங்கெலோ என்னும் அமெரிக்க வரலாற்றாசிரியர் இந்தப் பேய் திருமணத்தை ஆய்வு செய்திருக்கிறார். மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வழிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் இரண்டுமே பல சமயங்களில் மணமகன் வீட்டாருக்குத் தோல்வியைத் தந்திருக்கின்றன என்கிறார் அவர்.
உயிருள்ள சிறுமி மட்டுமல்ல... இறந்துபோன சிறுமியும்கூட கிடைப்பதற்கு அரிதாகிவிட்ட காரணத்தால் இறந்துபோன மணமகன்கள் பலர் துணையின்றி திண்டாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்களாம். ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஆராயும் முங்கெலோ ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார். இறந்துபோன ஒருவனுக்கு ஒரு சிறுமியை மணம் முடித்துவைப்பது எந்த வகையில் நியாயம்? அதை எப்படி அந்தச் சமூகம் அனுமதித்தது? ஒரு சிறுமியின் வாழ்வை பேய் திருமணம் அடியோடு அழித்துவிடாதா? இந்த நியாயமான கேள்விகளைவிட முக்கியமான ஒரு கேள்வியை முங்கெலோ எழுப்புகிறார்.
ஏன் பேய் திருமணத்துக்கு சிறுமிகள் கிடைக்கவில்லை? உயிருடன் மட்டுமல்ல இறந்த சிறுமிகள்கூட ஏன் கிடைக்கவில்லை? ஒரு கிராமம் என்றால் அங்கே குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதிலும் ஆண்களும் பெண்களும் நிறைந்திருக்கவேண்டும் அல்லவா? விடையையும் அவரே அளிக்கிறார். பேய் திருமணம் பற்றிய பல குறிப்புகள் தாங் வம்சத்து சீனாவில் இருந்து நமக்கு கிடைக்கின்றன. பொயு 618 முதல் 907 வரை சீனாவை ஆண்ட வம்சம் இது. தாங் ஆட்சிக்கு முன்பே தோன்றிவிட்ட வழக்கம் இது.
அவர்களுக்குப் பிறகும் அது தொடரவே செய்தது. நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு வலுவான சடங்காக இருந்தாலும், மணமகள் கிடைக்காமல் மணமகன் குடும்பம் அடிக்கடி தடுமாறியிருக்கிறது. அதற்குக் காரணம் பெண் சிசுக் கொலை. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் விகிதாச்சாரம் மிகவும் குறைவாக இருப்பதற்குக் காரணம் பிறந்தவுடனேயே பெண் குழந்தைகளைக் கொன்றுவிடுவதுதான் என்கிறார் முங்கெலோ. பெண்களை வளரவே அனுமதிக்காத ஒரு சமூகத்தில் எப்படி வளர்ந்த பெண்கள் இருப்பார்கள்?
கரு உருவானது தொடங்கி இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் பெரும்பாலான பெண் குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம் சீனாவில் இருந்தது. அதற்கெனவே பல வழிமுறைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். குழந்தையை அள்ளியெடுத்து வந்து தண்ணீரில் மூழ்கடிப்பார்கள். இது மிகவும் சாதாரணமாக வீட்டுக்கு வீடு கடைபிடிக்கப்படும் எளிய வழிமுறை. சிலர் ஆகாரமின்றி பட்டினி போட்டு, குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்காமல் கொல்வார்கள். கழுத்தை நெரித்துக் கொல்வதும் உண்டு.
கத்தியால் குத்துவது, நஞ்சு கொடுப்பது ஆகிய முறைகளையும் பலர் கையாண்டுள்ளனர். உயிருடன் குழந்தையை புதைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. பசியும் பஞ்சமும் குவியல் குவியலாக மக்களைக் கொன்ற காலகட்டம் என்பதால் பெண் குழந்தைகளைக் கொல்வது அப்படியொன்றும் பெரிய குற்றமாகக் கருதப்படவில்லை.
அப்போதும் ஆண் குழந்தைகள் அல்ல, பெண் குழந்தைகளே தேர்ந்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்டன. பிறக்கவிருப்பது பெண் என்பது எந்த நொடி தெரியவருகிறதோ அந்த விநாடியே பெற்றோருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொலை செய்யும் எண்ணம் உதயமாகிவிடும். இந்த உணர்வு இயல்பானதொன்றாக கருதப்பட்டது. ஆண் குழந்தையை வளர்ப்பதென்பது குடும்பத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முதலீடு; பெண் குழந்தையை வளர்ப்பது இருக்கும் வருமானத்தைப் பல மடங்கு குறைக்கும் அபாயம் கொண்டதொரு செயல். எனவே தாமதிக்காது பெண்களைக் கொன்றுவிடுங்கள் என்று உபதேசித்தது சமூகம். எது பெரிய குற்றம்? இறந்த ஆண் மகனுக்கு ஒரு சிறுமியை மணம் முடித்து வைப்பதா அல்லது மணமுடிக்கக்கூட ஒரு குழந்தை அகப்படவில்லை என்னும் நிலை ஏற்பட்டதா? எது ஒரு பெண்ணுக்கு நன்மையளிக்கும் செயல்? சேவலை மணந்து கொள்வதா அல்லது பேய்கள் நிறைந்த உலகில் இருந்து மரணத்தின் மூலம் விடுதலை பெறுவதா?
பொருள் 27: வாயும் வயிறும் பெண் சிசுக் கொலை என்பது பழங்காலத்தில் இருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம்தான் என்றும் அது உலகம் முழுவதிலும் பரவியிருந்தது என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கருக்கலைப்பு செய்வது, வளர்ந்தபிறகு கைவிட்டுவிடுவது, கொன்றுவிடுவது ஆகிய வழிமுறைகளைப் பயன்படுத்தி பெண்களைச் சமூகங்கள் தொடர்ச்சியாக நீக்கி வந்திருக்கின்றன. பெண்களைவிட்டு ஒதுங்கியிருப்பதன் மூலம் மட்டுமே மேன்மையை அடையமுடியும்; பிரம்மச்சரியமே ஓர் ஆணைச் சுத்தமானவனாக மாற்றும்; பெண்களைக் கண்களாலும் காணாமல் இருப்பதே உயர்ந்த தர்மம் என்பன போன்ற கருத்தாக்கங்களும் பல்வேறு சமூகங்களில் கிட்டத்தட்ட ஒன்றுபோல் நிலவி வந்திருக்கின்றன.
பண்டைய கிரேக்கர்கள் பெண் குழந்தைகளை இயற்கையின் கரங்களில் ஒப்படைத்துவிடும் வழக்கத்தை மேற்கொண்டனர். இதன் பொருள் ஒரு பொட்டலம் போல் கட்டி குழந்தையை விட்டுவிடுவது. உணவு இல்லாமல், துணை இல்லாமல், வெயிலிலும் மழையிலும் மாட்டிக்கொள்ளும் குழந்தை உயிர் பிழைத்திருக்காது அல்லவா? கிரீஸ் மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளில் பண்டைய காலங்களில் பெண் குழந்தைகளை இவ்வாறு காணாமல் அடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
கிறிஸ்தவ மதம் உதயமான பிறகும் இந்த வழக்கம் மறையவில்லை. ஐரோப்பாவில் மத்திய காலம் முழுக்க பெண் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நள்ளிரவில் திடீரென்று சுவாசிக்கமுடியாமல் குழந்தை இறந்துவிட்டது என்றும் உறங்கும்போதே இறந்துவிட்டது என்றும் பலர் பொய்க்காரணம் கூறினார்கள். 1556ம் ஆண்டைச் சேர்ந்த இரண்டாம் ஹென்றியின் சாசனம் ஒன்று, பெண் சிசுக்களை அழிப்பது கொலைக்கு நிகரானது என்று குறிப்பிடுகிறது. ஆனால், குழந்தைகளை கைவிட்டுவிடும் வழக்கம் பற்றி அது எதுவும் சொல்லவில்லை.
ரோம் நகரில் 14ம் நூற்றாண்டில் ஒரு புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டது. இங்கு உங்களுக்குத் தேவைப்படாத குழந்தையை ஒருவருக்கும் தெரியாமல் கிடத்திவிட்டு அருகில் மாட்டப்பட்டுள்ள மணியை அடித்துவிட்டு நீங்கள் வெளியேறிச் சென்றுவிடலாம். குழந்தையை மருத்துவமனை எடுத்துவந்து வளர்க்கும். பொதுவாக பெண் குழந்தைகளே இங்கு கைவிடப்பட்டன என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவை திருமண உறவுக்கு வெளியில் பிறந்தவையாக இருந்தன.
1811ம் ஆண்டு நெப்போலியன் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி ஒவ்வொரு மருத்துவமனையும் ஆதரவற்ற குழந்தைகளை வாங்கி வளர்த்தாகவேண்டும். இதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் எல்லா மருத்துவமனைகளிலும் குவியத் தொடங்கின. இந்த எண்ணிக்கையில் பெரும் பங்கு பெண் குழந்தைகளே. பெண்களைக் கைவிட ஏன் ஒரு சமூகம் இத்தனை பேரார்வத்துடன் முன்வந்தது? பெண் சிசுக்கொலைகள் ஏன் நடைபெற்றன? மெரிலின் பிரெஞ்ச் அளிக்கும் பதில் முக்கியமானது.
மனிதர்கள் சொத்து சேர்க்கத் தொடங்கிய பிறகுதான் இந்த வழக்கம் தோன்ற ஆரம்பித்தது என்கிறார் அவர். எப்படி? ஒரு குடும்பம் தனக்கான சொத்தைச் சேமிக்கத் தொடங்குகிறது. அந்தச் சொத்தை அது தனக்குப் பிந்தைய தலைமுறைக்கு விட்டுச் செல்கிறது. அந்தக் குடும்பம் தனக்கு அடுத்த தலைமுறைக்கு சொத்தைக் கையளிக்கிறது. பரம்பரை பரம்பரையாகக் குடும்பங்கள் இப்படித்தான் தனிப்பட்ட முறையில் சொத்துகளை வளர்த்து அளித்துக்கொண்டிருக்கின்றன. காலம் காலமாக சொத்துகள் ஆண்களுக்கானவையாகவே இருக்கின்றன.
ஓர் ஆணால் மட்டுமே செல்வத்தை உயர்த்தவும் வளர்க்கவும் முடியும் என்று மக்கள் நம்பினார்கள். ஆணே பொருள் ஈட்டுபவனாக இருக்கமுடியும் என்றும் பெண் அவனைச் சார்ந்து மட்டுமே வாழ்ந்தாகவேண்டும் என்றும் சமூகம் நம்பியது. அதனால் ஆணுக்கு மட்டுமே மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கப்பட்டன. இயல்பாகவே சொத்தும் ஆணுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது.
அதனாலேயே ஒவ்வொரு குடும்பமும் ஆண் வாரிசு ஒன்றைப் பெற்றாகவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டது. ஆண் குழந்தை இல்லாத வீடுகள் சொத்தை என்ன செய்வது என்று பரிதவித்துப் போயின. இது மேல்தட்டுப் பிரிவினரின் கலக்கமாக மட்டும் இல்லை. சொத்தே இல்லாதவர்களும்கூட ஆண் குழந்தைகளையே விரும்பினர். ஓர் ஆண் பிறந்தால் அந்த வீட்டில் ஒரு ஜோடி கரங்கள் பிறந்துவிட்டன என்று அர்த்தம். அந்த ஒரு ஜோடி கரங்களால் உழைக்க முடியும், பொருளீட்ட முடியும், குடும்பத்தின் சுமையைத் தூக்கமுடியும்.
மாறாக பெண் குழந்தை என்பது குடும்பத்தின் துயரம். ஓர் ஆணின் வயிற்றுக்கு அளிக்கப்படும் உணவு முதலீடாக இருக்கும். ஒரு பெண் குழந்தையின் வயிற்றில் சென்று விழும் உணவு பலனற்றதாக இருக்கும். இதையெல்லாம்விட பெரிய ஆபத்து ஒரு பெண் சிசு வளர்ந்து பெரிதாகும்போது அது முழுமையான பெண்ணாக மாறிவிடுகிறது என்பதுதான். முழுமையான ஒரு பெண்ணால் தாயாக வளரமுடியும்.
குழந்தைகளைப் பெற்றெடுக்கமுடியும். ஏற்கெனவே வறுமையில் உழலும் ஒரு குடும்பத்தில் மேலும் மேலும் புதிய வாய்களும் வயிறுகளும் தோன்றுவது கொடுமையானது அல்லவா? இந்த வாய்களும் வயிறுகளும் வளர்ந்தால் அவற்றுக்குத் திருமணம் செய்து முடிக்க வேண்டும். அதற்குக் கடுமையாகச் செலவு செய்யவேண்டும். அந்த வாய்களும் வயிறுகளும் மேலும் பல வாய்களையும் வயிறுகளையும் உருவாக்கிக்கொண்டு போகும்.
முடிவற்ற சுழற்சி இது. முடிவற்ற செலவு. முடிவற்ற இழப்பு. முடிவற்ற பெரும் சோகம். செல்வச் செழிப்பான குடும்பமாகவே இருந்தாலும் ஆண் குழந்தைகள் பிறந்தால்தானே குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும், மிக முக்கியமாக சொத்தும் வளரும்? துயரத்தையும் இழப்பையும் சோகத்தையும் மட்டுமே கொண்டுவரும் ஓர் உயிரை எதற்காக சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்க வேண்டும்? எனவே அவர்கள் அமைதியாகக் கொல்லத் தொடங்கினார்கள்.
(வரலாறு புதிதாகும்!)
|