தேர்தலில் நிற்கும் திருநங்கை ராதிகா!



திருநங்கைகள் காலம் காலமாக இந்த சமூகத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதே அவமானமாக அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. கேலியும், கிண்டலும் உடைகள் தாண்டி அவர்களை கூசச் செய்தது. தனக்கு பெண் போல வாழப் பிடித்திருந்தாலும் ஆணின் உடைக்குள் அடைக்கலம் ஆகிடும் வேதனைகள் மிகுந்திருந்தது. இவ்வளவு வேதனைகளுக்கு இடையில் சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாத வாழ்க்கையில் இவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதினும் அரிதாக இருக்கிறது. தங்களுக்கு இந்தச் சமூகம் வழங்கிய கொடுமையான வாழ்க்கை முறையை சிலர் உதறி எழுந்தனர். அவர்கள் இன்று உதாரண மனுஷிகள்.

நாங்கள் தலை நிமிர்ந்து இந்த சமூகத்தில் நடக்க வேண்டும் என்று அவர்கள் காட்டிய உறுதி இன்று சிகரங்களைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. தமிழக அளவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சேலம் சூரமங்கலம் 18வது கோட்ட மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மனு தாக்கல் ஊரையே திரும்பிப் பார்க்க வைத்தது.

திருநங்கை ராதிகா தனது சகாக்களுடன் மேள தாளம் முழங்க, பாட்டும் ஆட்டமுமாய் உற்சாகத்துடன் வந்து மனு தாக்கல் செய்தார். தான் வாழும் 18 வது ேகாட்டம் பகுதியில் தே.மு.தி.கவின் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக ராதிகா களம் இறக்கப்பட்டுள்ளார். இந்திய அளவில் பல திருநங்கைகள் சுயேட்சையாக அரசியல் களத்தில் நின்று வெற்றிவாகை சூடியுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளராக திருநங்கை ஒருவர் தேர்தலில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை. ராதிகா 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி 368 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். தற்பொழுது மிகுந்த நம்பிக்கையோடு அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். ராதிகாவின் அரசியல் பிரவேசத்துக்கு பல தரப்பில் இருந்தும் வரவேற்பு அதிகரித்துள்ளது. பிரசாரத்தின் போது ராதிகாவுக்கு உதவ பல சமூக அமைப்புகள் கரம் கோர்க்க உள்ளன.

சேலம் ராதிகா மிக எளிய குடும்பத்தின் வாரிசு. சேலம் சூரமங்கலம் ராமகிருஷ்ண சாரதா பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பை முடித்துள்ளார். படிக்கும் காலத்தில் என்.சி.சி. மாணவர். அதன் பின் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., படிப்பைத் ெதாடர்ந்துள்ளார். ஊர்க்காவல் படையிலும் பணியாற்றியுள்ளார். தன்னை ஒரு திருநங்கையாக உணரத் துவங்கிய காலத்தில் கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் தத்தளித்தவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது அந்த உணர்வு.

திருநங்கை என்பதற்காக அனுபவித்த கொடுமைகள் ராதிகாவை மும்பைக்கு துரத்தியது. மும்பையில் 15 ஆண்டுகள் வாழ்க்கை. அதன் பின் சேலம் திரும்பியவர் தனது பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி வாழத் துவங்கினார். ெவவ்வேறு ஊர்களில் இருந்து சேலம் வரும் திருநங்கைகளுக்கு ராதிகாவின் வீடு வேடந்தாங்கல். அரவணைத்து அடையாளம் தருபவர். ராதிகா கடந்த 2004ம் ஆண்டு முதல் தே.மு.தி.கவோடு தொடர்பில் உள்ளார்.

பல கட்சியின் சார்பில் போட்டியிட தனது விருப்பத்தை ராதிகா தெரிவித்து வந்துள்ளார். இந்த ஆண்டு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுன்சிலர் பதவிக்கு களம் இறங்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்து விட்டு  ராதிகா உற்சாகமாகப் பேசினார். ‘‘என் வாழ்வின் மிகவும் சந்ேதாஷமான தருணமாக இதை உணர்கிறேன். நான் பிறந்த இடம் 18வது வார்டுதான். நான் பிறந்து வளர்ந்து விளையாடிய வீதிகளில் திருநங்கை என்பதற்காக கூனிக்குறுகிய காலங்களும் இருந்தன.

அந்தக் கொடுமையான பக்கங்களைக் கடந்து என் வாழ்க்கை தற்பொழுது அர்த்தம் உள்ளதாக மாறியுள்ளது. நான் அவர்களுக்காக அரசியலில் இறங்கி மக்கள் பணி செய்வதாக தெரிவித்தபோது அத்தனை பேரின் ஆதரவும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அப்பகுதியில் திருநங்கைகள் மற்றும் எனது உறவுகள் என 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தரும் உற்சாகம் எனக்கான வெற்றியை உறுதி செய்துள்ளது.

எனது வெற்றிக்காக பல சமூக அமைப்புகளும், தன்னார்வலர்களும் உதவ முன் வந்துள்ளனர். எனது நம்பிக்கையின் உயரம் சிகரம் தாண்டி உயர்ந்துள்ளது. நான் முகம் காட்டவே பயந்த வீதியில் இன்று தலை நிமிர்ந்து நடக்கிறேன். என்னை நம்பி களமிறக்கும் கட்சிக்கும், எனது திருநங்கை மக்கள் மற்றும் உறவுகளுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளைத் தருகிறேன். திருநங்கைகளின் சமூகத்தின் உதாரணப் பெண்ணாக என்னை உணர்கிறேன்’’ என்கிறார் ராதிகா.

ஒடுக்கப்பட்டவர்கள் எழுகின்றபோது அது இந்த சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வு பல மடமைகளை எரித்து சாம்பலாக்கும். மனித ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்து ஒன்றாய் உணர வைக்கும். ராதிகா ஏற்படுத்தியிருக்கும் அதிர்வும் ஒரு புரட்சி விதையின் முளைப்புக்கான
வெப்பமே!

- ஸ்ரீதேவி
படங்கள்: நாராயணன்