திருமண தகவல் மையமா வதை முகாமா?



சாதிய வன்முறை

ஊட்டி வளர்த்த பெண் குழந்தை விரோதியாகக்கூடுமோ? தனது கனவுகளை எல்லாம் தாய்ப்பாலோடு சேர்த்து ஊட்டிய தாயின் எண்ணத்தில் விஷத்தை கலந்தது எது? தோளில் தூக்கித் திரிந்த பிள்ளையை... தட்டான் பிடிக்க வரப்பில் பறந்தவளை முள் குத்திவிடக் கூடாதே என்று பதைபதைத்த தந்தை மனம் இறுகியது எப்படி? மகளை சித்திரவதை செய்ய லட்சங்களை அள்ளிக் கொடுக்கும் தந்தைகளின் மனதில் பாசத்தை துடைத்துப் போன நோய்தான் எது? இப்படி அடுக்கடுக்கான அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை பதில் சாதி வெறி.

ஒரு பெண் மேஜர் ஆன பின்னர் யாரை மணக்க வேண்டும் என்பது அவளது உரிமை என்கிறது சட்டம். சாதியோ சட்டம், சம உரிமை, பெண்ணுரிமை எல்லாவற்றையும் கேலிப் பொருளாகவே பார்க்கிறது. எதையும் மீறலாம் என்ற ரவுடித்தனம் சாதியின் அடையாளமாக உள்ளது. ஈரோடு அருகில் 7 பெண்களை வேறு சாதி ஆண்களை காதலித்ததற்காகவும் திருமணம் செய்ததற்காகவும் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கொடுமை பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தி, அடித்து துன்புறுத்தி, கருவைக் கலைத்து, தந்தையின் சாதியில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக செய்த கொடுமைகள் மனதை பதறச் செய்கின்றன. சமீபத்தில் ஈரோட்டில் சாதி மாறி காதலித்த பெண்களை திருமணத் தகவல் மையம் என்ற பெயரில் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். பெற்றோரே தங்களது மகளை லட்சங்களை அள்ளித் தந்து சித்திரவதை முகாமுக்கு அனுப்பியுள்ளனர் என்பது ஒப்புக்கொள்ளவே முடியாத சமூக அவமானம்.

சித்திரவதை முகாமில் இருந்து தப்பி வந்து இந்த விஷயத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் நவீனா. தன்னோடு மேலும் நான்கு பெண்களும் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிக்க உதவியுள்ளார். நவீனாவுக்கு நடந்தது என்ன? ஈரோடு மாவட்டம் முரளி ஊராட்சி சித்தாக்கவுண்டனூரை சேர்ந்த நகலடி பெரியசாமியின் மகள் நவீனாவுக்கும் பெரியண்ணனுக்கும் காதல். வழக்கம்போல வீட்டுக்கு தெரிந்த உடன் எதிர்ப்பு கிளம்பியது. நவீனா, பெரியண்ணனை திருமணம் செய்தால் பெரியண்ணனை கொன்று விடுவோம் என உறவினர்களை வைத்து பெற்றோர் மிரட்டியுள்ளனர். காதலே கடைசியில் வென்றது.

மேஜரான நவீனா பெரியண்ணனை திருமணம் செய்து கொண்டார். மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து தொட்டிப்பாளையத்தில் வீடு எடுத்து புதிய வாழ்வை துவங்கினர். எதிர்ப்புகள் தொடர்ந்தன. நவீனா தாய்மை அடைந்தார். நவீனா வசித்து வந்த வீட்டை அவரது சித்தப்பா கண்காணித்து வந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னும் நவீனாவை, பெரியண்ணனை விட்டுவிட்டு வரும்படி பெற்றோர் பல வகையிலும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

அதன் பின் நடந்தவை சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள். ‘‘சித்தப்பா இன்னும் சில பசங்களோட வந்து என்ைன கூப்பிட்டார். வரமாட்டேன் என்றதும் என் கண்ணையும், வாயையும் கட்டினர். அது மதிய நேரம் என்பதால் நான் சத்தம் போட்டும் பக்கத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை. ஆம்னி வேனில் என்ைன எங்ேகா கடத்திச் சென்றனர். கணவரைவிட்டு வராவிட்டால் அவரைக் கொன்று விடுவோம் என்று பணிய வைத்தனர். ஒரு கட்டத்தில் அவரோடு வாழ பிரியமில்லை என்று என்னை சொல்ல வைத்தனர். மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கணவரை விட்டு வந்து விடும்படி அட்வைஸ் செய்தனர்.

பின் ஈரோடு அருகில் திண்டல் பகுதியில் இருந்த திருமண தகவல் மையத்தில் என்னை விட்டனர். அதுதான் சித்திரவதை முகாம். அங்கே பொறுப்பாளராக இருந்த துளசி மணி என்னை அடித்துத் துன்புறுத்தினார். எங்கள் சாதியிலேயே வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டினர். நான் மறுத்தும் விடாமல் கோவையில் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று என் இரண்டு மாத கருவைக் கலைத்தனர். இத்தனை வேதனைகளோடு அந்த சித்திரவதை முகாமில் இருந்தேன்.

45 நாட்கள் ரணமாகக் கழிந்தன. கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் இருந்த அறையில் என்னோடு இன்னும் ஆறு பெண்களும் இருந்தனர். வேறு சாதியை சேர்ந்த ஆணை காதலித்ததற்காக திருமணத்துக்கு முன்பாகவே அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். கொங்கு வேளாளர் திருமண தகவல் மையம் நடத்திய துளசிமணி இது போல் பெற்றோர் அழைத்து வரும் பெண்களை மனமாற்றம் செய்வதாக உறுதியளிக்கிறார். இதற்காக பத்து லட்சம் வரை பெற்றோரிடம் பேரம் பேசுகிறார்.

எங்களுக்கு சமைத்துப் போடவும் பணம் பெற்றுக் கொள்கிறார். இரும்பு பைப்பால் பாதத்தில் என்னை அடித்து துன்புறுத்துவது வழக்கம். தப்பித்தாலும் வெளியில் உங்களைப் பிடிக்க ஆட்கள் வைத்திருக்கிறோம் என்று மிரட்டினார். எல்லா சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டேன்.  ஒரு நாள் காவலுக்கு இருந்த ஒருவரை ஒரு அறையில் பூட்டிவிட்டு என்னோடு இருந்த ஆறு பேரில் 4 பேரை அழைத்துக் கொண்டு தப்பினேன்.

வெளியில் வந்த உடன் கணவருக்கு போன் செய்து நிலைமையைச் சொன்னேன். அவர் முகத்தை நேரில் பார்த்த பின்தான் எனக்கு உயிர் வந்தது. அத்தனை கொடுமைகளையும் அவருக்காகத்தான் சகித்துக் கொண்டேன். இனி எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவரை விட்டு ஒரு நொடியும் பிரியக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு பெண் மேஜர் ஆகிவிட்டால் அவள் யாரோடு் வாழ வேண்டும் என்று முடிவெடுக்க உரிமை உள்ளது. தாய்மை அடைந்த என்னை கொங்கு வேளாளர் சாதியில் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நடத்திய கொடுமைகள் வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கவே கூடாது.

சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். இதற்காக புதிய சட்டங்கள் வரவேண்டும்’’ என்றார் நவீனா. நவீனாவின் கணவர் பெரியண்ணன், மாயமான நவீனாவை மீட்க உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நவீனா வெளியில் வர முடியாத அளவுக்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருப்பதாக பொய்யான மருத்துவச் சான்றிதழை நீதிமன்றத்தில் பவானி காவல்துறை எஸ்.ஐ. நடேசன் சமர்ப்பித்துள்ளார்.

சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய நவீனா அக்டோபர் 6 அன்று தனது கணவருடன் உயர் நீதிமன்றத்தில் ேநரில் ஆஜரானார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு உதவிக்கரம் நீட்டிய திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், ‘‘சாதியைக் காப்பாற்ற காதல் திருமணம் செய்து கொண்டவர்களை ஆணவக் கொலை செய்யும் அவலம் நடந்து வருகிறது. நவீனா முகாமில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

அவரது கணவருக்கும் மறைமுகமாக பல்வேறு நெருக்கடிகள் கொடுத்துள்ளனர். மிரட்டிப் பணிய வைக்கவும் முயற்சிகள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில் சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான உரிமையை மீட்க முயற்சிக்கும்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. ஈரோடு பகுதியில் காவல் துறையில் பணியில் உள்ள பெரும்பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் பெற்றோருக்கு சாதகமாக காவல் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

திருமணத் தகவல் மையம் என்ற பெயரில் வேற்று சாதியினரை காதலித்ததற்காகவும், திருமணம் செய்து கொண்டதற்காகவும் அடைத்து வைத்து சித்திரவதை செய்திருப்பது மனித உரிமை மீறலாகும்.  இது போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சாதியின் பெயரால் நடப்பதை அனுமதிக்கக் கூடாது. திருமண உரிமைச் சட்டம் வலிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி பஞ்சாயத்தில் ஈடுபட்டாலே தடுக்கும் வழிமுறைகளை சட்டத்தில் வலியுறுத்த வேண்டும்.

காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அம்சங்கள் சட்டத்தில் வேண்டும். நவீனாவுக்கு நடந்திருக்கும் கொடுமையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்ணின் மண உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் பொய் தகவல் அளித்த இன்ஸ்பெக்டர், போலி மருத்துவ சான்று அளித்த டாக்டர், நவீனாவை சித்திரவதை செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் கொளத்தூர் மணி.

- ஸ்ரீதேவி
படங்கள்: சி.செந்தில்குமார்