மனிதியே வெளியே வா!
போராட்டம்
பல்வேறு கட்சிகள் மற்றும் பெண்ணிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அக்டோபர் 1 அன்று ‘மனிதியே வெளியே வா’ எனும் முழக்கத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற நடைபயணம் சென்னையின் கவனத்தை ஈர்த்தது. உழைப்பாளர் சிலையில் துவங்கி காந்தி சிலைவரை சென்று முடிவுற்றது. முனைவர் வசந்திதேவி மனிதியாக முன் நின்று தனது குரலை பதிவு செய்து நடைபயணத்தைத் துவக்கினார்.
புத்தர் கலைக்குழு மற்றும் லயோலா கல்லூரி மாணவர்களின் பறையிசை நிகழ்வுடனும் பெண் விடுதலைக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய முழக்கத்தோடும் பெண்களின் பேரணி துவங்கியது. எழுத்தாளர்கள் ஓவியா, சல்மா, பேராசிரியை சரஸ்வதி, வழக்கறிஞர் அருள்மொழி போன்றோர் இதில் கலந்துகொண்டனர். பெண் விடுதலைக்கு ஆதரவு அளிக்கக்கூடிய ஆண் தோழர்களும் இதில் பங்கேற்றனர்.
“பெண்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறைகள், ஒரு தலைக் காதலால் ஏற்படும் கொலைகள், சாதியப் படுகொலைச் சம்பவங்கள் ஆகியவற்றை இச்சமூகத்திற்கு தெரிவிப்பதற்காகவும், சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பவும், அழுத்தமானதோர் எதிர்ப்புக் குரலை பதிவு செய்வதற்காகவும், அமைப்பு ரீதியாகவும் தனித்து இயங்கும் பெண்களை ஒருங்கிணைத்து “மனிதி” எனும் பொதுச் சொல்லில் இந்த கவன ஈர்ப்பு நடைபயணத்தை ஒருங்கிணைத்தோம்” என்று மனிதி அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்வி நம்மிடம் தெரிவித்தார்.
இதில் 160 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கோஷமிட்டது, கொடி பிடித்தது, கூட்டத்தை ஒருங்கிணைத்தது, பேரணிக்கு வந்தவர்களை வழிநடத்தியதென எல்லாவற்றையும் பெண்களே முன்னெடுத்து செய்திருந்தனர். இடையிடையே பெண்ணியச் செயல்பாட்டாளர்கள் தங்களின் குரல்களை பதிவு செய்தனர்.
சமீபத்திய வன்முறையாக உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதிய ஆணவக் கொலையில் உயிரை கொடூரமாய் இழந்த சங்கரின் மனைவி கௌசல்யா இப்பேரணியில் கலந்து கொண்டு பறை இசைக்கு ஏற்ப நடனமாடியதுடன், “நான் சங்கருடைய சாவுக்காக மட்டும் போராட வில்லை, சாதிக்கு எதிராகவும் நீதிகேட்டு போராடுகிறேன்” என்று சாதியப் படுகொலையின் சாட்சியாக நின்று தனது குரலை பதிவு செய்தார்.
- மகேஸ்வரி
|