கலாசாரத்தின் பெயரால் ஒடுக்குமுறை



பண்பாடு

ஊடறு.காமும் மலேசிய பெண்களும் இணைந்து நடத்திய பெண்கள் சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். பினாங்கு தீவில் பயான் லெபாஸ் என்கிற இடத்தில் இயற்கை சூழலில் நடந்தது இச்சந்திப்பு. ஆகஸ்ட் மாதம் 27, 28 இரண்டு நாட்கள் நடைபெற்ற சந்திப்பில் 27ம் தேதி நான் பேச இருந்த அரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ‘பெண்கள் வாழ்வில் கலாசாரத்தின் தாக்கம்’ என்பது எனக்கான தலைப்பு.

ஒரு சமூகத்தின் கலாசாரம் என்பது அக்காலகட்டத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதும், அந்த வாழ்க்கை முறை எப்படி தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது என்பதும்தான். ஆங்கிலத்தில் Culture என்றும் வடமொழியில் கலாசாரம் என்றும் சொல்லப்படும் சொற்களைக் காட்டிலும் தமிழில் வழங்கப்படும் பண்பாடு எனும் சொல் மிக விரிவானது; அழுத்தமானது.

பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியது. விளம்பரங்கள், ஊடகத் தாக்கம் இவற்றால் பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்பது போன்ற பார்வை நிலவுகிறது. ஆனால், மேம்போக்காக, உடையளவில் நவநாகரிகமான தோற்றத்தையும் அடுப்பங்கரை சார்ந்த பயன்பாட்டுக் கருவிகளின் புதுமையும் தவிர பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை பெண்களின் வாழ்வில் மாற்றம் வேண்டுமென்று உணர்கிறோம். பேசுகிறோம். ஆனாலும் கலாசாரம் சார்ந்தவற்றை சுமந்து கொண்டு வாழ்வது பெண்களே. ஒப்பீட்டளவில் ஆண்களுக்கு சுமை மிக மிகக் குறைவு.

பண்டைக்காலத்தில் ஆண்களும் தலைமுடியை நீளமாக வளர்த்து சடை பின்னி வைத்திருந்தார்கள். காது, மூக்கு குத்தி அதற்கான அணிகலன்களை அணிந்தார்கள். காலமாற்றத்தில் ஆண்கள் இதிலிருந்து விலகிவிட்டார்கள். டிரெண்ட் என்கிற வகையில் காதில் கம்மல் போடுவதைப் பார்க்கிறோம். அது மாறிவரும் கலாசாரத்தினைக் குறிக்கிறது. திருமணத்தின்போது காலில் மெட்டி அணியும் போக்கு அக்காலத்தில் ஆண்களிடமும் இருந்தது. இப்போதும் இம்முறை இருக்கிறது. அது ஆண்களைப் பொறுத்த அளவில் ஒருநாள் சடங்கு.

பெண்களில் பெரும்பான்மையானோர் கணவனோடு வாழும் காலம்வரை மெட்டி அணிகிறார்கள். ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் ஆண்கள் மிக எளிதாக கால்சட்டைக்கு (பேன்ட்) மாறிவிட்டனர். பெண்கள் அணியும் பாரம்பரிய உடையில் இருந்து சற்று மாற்ற நினைத்தாலும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாலும் அது எளிதல்ல. கல்லூரிகளிலும் குடும்பங்களிலும் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு அதிகம்.

பெண்கள் இரண்டாம் பாலினமாகவும் பார்க்கப்படுகிறார்கள். தீட்டு எனக்கூறி ஒதுக்கி வைப்பதாக, பெண் சிசுக்கொலையாக, கருவிலேயே கொல்லப்படுவதாக, வரதட்சணைத் திணிப்பாக, சடங்குரீதியான மத ஒடுக்குமுறையாக என அனைத்திலும்் ஒடுக்குமுறைதான். கலாசாரம் பெண் ஒடுக்கு முறைக்குக் காரணமாக இருப்பதோடு பெண்களையே கருவியாகக் கொண்டும் செயல்படுகிறது. பெண்கள் எங்கே எப்படி ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணராத வரையில் ஒடுக்கப்படுகிறோம் என்ற புரிதலற்றவர்களாகவே நீடிப்பர்.

பெண் சிசுக் கொலைக்கான காரணம் என்ன?
1. பெண் குழந்தை வன்முறைக்கு ஆளாகாமல் பாதுகாக்கப் படவேண்டும்.
2.பெண் குழந்தைக்கான திருமண செலவு. 
3. ஆண்குழந்தைக்கான தாயாக இருப்பதில் பெருமைப்படும் ஆணாதிக்கம் கலந்த தாய்மை மனம்.

இவையே பெண்கள் முன்னேறிவிட்டதாக சொல்லுகிற காலத்திலும் பெண் குழந்தைக்கான கருவைத் தேர்ந்தெடுத்து கொலை செய்கிறது. பசுவதை பற்றி கவலை கொள்கிற தரப்பினர் பெண்ணை தெய்வமாக உயர்த்திப் பேசுவர். ஆனால், உயர்த்திப் பேசுவது வெற்று வார்த்தை அளவில் மட்டுமே. பெண் ஆணுக்கு அடிமை எனும் மநுதர்மம் பெண்ணுக்கு உயிர் இருப்பதையோ அவளுக்கான விருப்பங்களையோ முன்வைத்ததில்லை.

பெண்ணை கணவன் அடிக்கலாம். பெண்ணை சித்திரவதை செய்யக்கூட அனுமதி அளித்துவிட்டு பார்ப்பனர்களின் சாந்த சொரூபியான பெண் தெய்வங்களுக்கு வழிபாடு நடக்கிறது. இப்படி அடக்கப்படும் உணர்வு நிலையின் எழுச்சி மனநிலை ஆண்டாளை பாவைப் பாடலில் மதர்த்த காமம் விழைந்து இறைவனை வேண்டுகிறது. புத்த பிக்குணிகள் பாலி மொழியில் எழுதிய கவிதைகளில் ‘அப்பா விடுதலை’ என்று அடுப்பங்கரையிலும் அம்மி குழவியிடமும் கணவனிடமும் சிக்கித் தவித்த வாழ்விலிருந்து விடுதலை கோருகிறது.

பெண் சிறு தெய்வக் கோயில்களில் சாமி வந்து ஆடுபவர்களாகி அதிகாரம் செலுத்தும் மனிதர்களிடம் பரிகாரமும் கூறி ரத்தம் குடிக்கிறது. பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற மனநிலை ஏற்கனவே இருந்தாலும் தொலைக்காட்சி ஊடகங்கள் அதை பரவலாக்குகின்றன. குறிப்பாக திருமணச் சடங்குகளை இடையறாது தொடர்கிறவள் பெண். பெண் சிசுக்கொலையை ஊரில் உள்ள கிழவியோ, பெண் மருத்துவரோ, தாதியரோ செய்கிற நிலை. வரதட்சணையை கறார்த்தன்மையோடு கேட்டுவாங்குகிற இடத்திலும் பெண்ணே முன்னிறுத்தப்படுகிறாள்.
ஆணாதிக்கம் வடிவமைத்த கூறுகளை அதிகாரியாக நின்று செயல்படுத்துபவளும் பெண்தான். இக்கொடுமைகளில் சிக்குண்டு வதைபடுபவளும் பெண் என்கிற நிலையை பெண்கள் ஊடுருவி உணரவேண்டும்.

1. கலாசாரம் பெண்ணை போகப்பொருளாக, இரண்டாம் பாலினமாக ஒதுக்கி வைத்திருக்கிறது.
2. கலாசாரம் பெண்ணை தன் கருவியாக பயன்படுத்துகிறது.
3. கலாசாரம் மீண்டும் பெண்ணுக்குப் பெண்ணையே எதிரியாக வடிவமைக்கிறது.

இவ்வாறு முக்கோணமாக இயங்குகிறது. பெண்களுக்கு திருமணத்தில் தாலி அணிவிக்கும் சடங்கு, கணவன் இறந்தபின்பு தாலி இறக்குதல், பூ பொட்டு எடுத்தல், வளையல் உடைத்தல் எனும் சடங்குகள் இன்னும் நீடிக்கின்றன. உலகம் சுருங்கிவிட்டதெனச் சொல்கிற தகவல் தொழில்நுட்பச் சூழலில், எல்லாத் துறைகளிலும் பெண் பணிபுரிகிறாள். இரவுபகல் பாராமல் 24X7 வேலை பார்க்கிறாள்.

கை நிறைய சம்பாதிக்கிறாள். இத்தனை முன்னேற்றங்களை பார்த்தாலும் திருமணம் ஆகாத பெண்களை, குழந்தை பிறக்காத பெண்களை இச்சமூகம் எப்படி நடத்துகிறது? மாநகரங்களில் இத்தீவிரம் குறைவு என்றாலும் கிராமங்களின் அகம் இன்னும் மாறாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.

சமூகம் பெண்ணுக்குத் திணித்த கற்பு என்கிற கண்ணுக்குத் தெரியாத அளவுகோல் இன்றளவிலும் மாறவில்லை. கற்புநிலையை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்றான் பாரதி. கற்பழிப்பு என்கிற வார்த்தையின் பொருள் கற்பு என்கிற ஒன்று அழிக்கப்படுவதாக பொருள்படுகிறது. பெண்ணை சொத்தாகப் பார்க்கும் ஆணாதிக்கச் சமூகம் பெண்ணுக்கு மட்டுமே கற்பை வலியுறுத்துகிறது. ஆணுக்குச் சொல்வதில்லை.

கற்பு என்பதன் அடிப்படையில்தான் சாதி தன்னை திடப்படுத்திக் கொள்கிறது. சாதியுடன் சொத்தாகப் பார்க்கப்படுகிற பெண் சாதிமறுப்பு குறித்து சிந்திக்க முடியாது. அப்படி சாதிமறுப்பை அங்கீகரித்தாலும் கலப்பு மணம் என்பது எளிதாக நடந்துவிடுவதில்லை. ஆணவக்கொலைகள் நடைபெற இந்த சாதிய அமைப்பே காரணமாகிறது. இந்த அமைப்பு பெண்ணின்மீதே சுமையாகிக் கிடக்கிறது. சாதி அமைப்புகளின் இயலாமை கொலைகளை நிகழ்த்துகிறது.

திருமணத்திற்காக பெண் தேடும்பொழுது சம்பளம் அதிகம் வேண்டும் என்பதற்காக மென்பொருள் துறையில் பணிபுரியும் பெண்களைத் தேர்ந்தெடுப்பதும் இங்கு உண்டு. அதுபோலவே மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் என்பதாலே பெண் வேண்டாம் என மறுப்பதையும் காணமுடிகிறது. பெண் குழந்தைகள் வளரும்போது விளையாட்டிலும்கூட பாகுபாடு காட்டப்படுகிறது.

இலக்கியத்தில் பிள்ளைத் தமிழில் குழந்தைகள் விளையாட்டை ஆண்பால், பெண்பாலுக்கென பிரித்தது போல இப்போதும் ஆண் குழந்தைக்கு சைக்கிள், துப்பாக்கி, ஜீப் முதலான பொம்மைகள் கொடுப்பதும் பெண்குழந்தைக்கு அடுக்களை சாமான்களின் மாதிரி வடிவங்களை விளையாட்டு சாமான்களாக கொடுப்பதும் தொடங்கிவிடுகிறது.

‘தோசையம்மா தோசை’ முதலான குழந்தைகளுக்கான பாடலில் உணவைப் பங்கிடுகையில் ஆண்களுக்கு கூடுதல் உணவையும் பெண்களுக்கான உணவை குறைத்து சொல்வதும்கூட ஒரு வகையில் பாகுபாடுதான். இவ்வாறு பலவற்றைக் கூறலாம். ‘பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு’ பழமொழிகள் கூட போதையூட்டும் பொருளாகப் பெண்ணை சொல்கிறது. பெண்ணின் சிரிப்பு கூட கலாசாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் வரதட்சணை வாங்குவது தொடரவே செய்கிறது. வரதட்சணை கேட்கும்போதே அதை மறுப்பதில்லை, புகார் அளிப்பதில்லை. மஞ்சள் நீராட்டு விழா பெண்ணுக்கான குழந்தைத் திருமணத்திற்காக பயன்பட்டிருந்த காலமொன்று இருந்தது.

ஆனால், இன்றும் தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் கூட இச்சடங்கினை விடாமல் தொடர்வதைக் காணமுடிகிறது. கலாசாரம் பெண்ணுக்கு எதிராக பல கோணங்களில் செயல்படுகிறது. பெண்கள் இதைப் புரிந்துகொண்டால் மட்டுமே கலாசாரத்தின் பெயரால் தான் அடிமைப்படுத்தப்படுவதை உணர்ந்து அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியும்.

-ச.விசயலட்சுமி