தயங்கக் கூடாது!



சப்னா பாவ்னானி

தன்னுடைய நாகரிகத் தோற்றத்தாலும் தைரியமான அணுகுமுறையாலும் பிரபலமானவர் மும்பையைச் சார்ந்த கூந்தல் கலை நிபுணரான சப்னா பாவ்னானி. தனக்கு நேர்ந்த ‘கேங் ரேப்’ சம்பவத்தை சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அது மட்டுமல்ல...

இளம் வயதிலேயே தந்தையை இழந்த சப்னா, சிகாகோவில் உறவினர் வீட்டில் வளர்ந்தார். தன்னுடைய 24வது வயதில்,  ஒரு கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தின் இடையே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற ஒருவன், இன்னும் சிலரோடு சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவத்தையே அவர் நினைவு கூர்ந்திருந்தார்.



‘பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் வன்முறைகளை வெளியே கொண்டுவரத் தயங்கக் கூடாது. நியாயம் கிடைக்கும் வரை தைரியமாக போராட வேண்டும். உங்களுக்கு நேர்ந்த அவமானத்தை மறைத்தால், அது உங்களுடைய பலவீனத்தையே காட்டும். தைரியமாகப் போராடினாலோ, அது உங்களுக்கு மரியாதை தேடித் தரும். இதை வலியுறுத்தவே பல வருடங்கள் என் நினைவுகளில் பூட்டியிருந்ததை இப்போது வெளியிட்டுள்ளேன். என் ஆழ்மனதில் பதிந்த இந்த சம்பவம், எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை. அபாயங்கள் நிறைந்த இவ்வுலகில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியையே தூண்டியது. அதன்பின் இந்தியா வந்து ஹேர் ட்ரெஸிங் சலூன் தொடங்கிய எனக்கு, இன்று பல பிரபலங்களும் முன்னணி நடிகைகளும் வாடிக்கையாளர்கள்’ என்கிற சப்னா, சமீபத்தில் வேறு வகையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி குர்ஷித் முகமது கசூரி எழுதிய புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவரான சுதீந்திர குல்கர்னி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி மும்பையில் நடைபெறுவதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிகழ்ச்சி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன், சிவசேனா தொண்டர்கள் குல்்கர்னியின் முகத்தில் கருப்பு வண்ணம் பூசினர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத குல்கர்னி அதிர்ச்சியில் உறைந்தார்.

எனினும், பெயின்ட் வழிந்த முகத்துடன் குல்கர்னி விழாவில் பங்கேற்று, குர்ஷித் நூலை வெளியிடச் செய்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை பலரும் எதிர்த்தனர். சப்னாவோ, எதிர்ப்பை மிகவும் அழுத்தமாகத் தெரிவிக்கும் நோக்கில், தன் முகத்திலும் கருப்பு மையைப் பூசிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அடிப்படையான கருத்துரிமைக்கு எதிராக ஏராளமான  சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இச்சூழலில், வெறுமனே வேடிக்கை  பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தனது கருத்தை வலுவாகத்  தெரிவிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் மன தைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்!

- இந்துமதி