காஜூ ஸ்ட்ராபெர்ரி



ராஜேஸ்வரி விஜய் ஆனந்த்

என்னென்ன தேவை?

(12 ஸ்ட்ராபெர்ரிகள்  செய்ய...)
முந்திரி - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
ரோஸ் ஃபுட் கலர் - 1/4 டீஸ்பூன்
சிவப்பு ஃபுட் கலர் -  1/4 டீஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் - 1/4 டீஸ்பூன்
ரோஸ் எசென்ஸ் - 3 துளிகள்
ஐஸ்க்ரீம் எசென்ஸ் - 1 துளி
பால் - 2 டீஸ்பூன்.



எப்படிச் செய்வது?

1. முந்திரிப்பருப்பை மிக்சியில் பொடி செய்யவும். 1 கப் அளந்து தனியாக வைக்கவும்.
2. சர்க்கரையை ஓர் அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
3. ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
4. ரோஸ், ரெட் கலர் சேர்த்து, ரோஸ் எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
5. பொடித்த 1 கப் முந்திரிப்பருப்பை அதில் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
6. ஓரத்தில் ஒட்டாமல் திரளும் பொழுது, அடுப்பை நிறுத்தவும்.
7. கிளறிக் கொண்டே இருந்தால், கெட்டியாக திரண்டு வரும்.
8. கை பொறுக்கும் சூட்டுக்கு வரும் போது, சப்பாத்தி இடும் கல் போல ஒரு சுத்தமான இடத்துக்கு மாற்றவும்.



9. பால் ஒரு தேக்கரண்டி சேர்த்து, நன்கு பிசையவும். ஒரு சொட்டு நெய் தடவிக் கொள்ளலாம் - கையில் ஒட்டாமல் இருக்க. 2 நிமிடங்கள் பிசைந்தால், சப்பாத்தி மாவு போல மாவு கிடைக்கும்.
10. பிறகு, ஒரே அளவாக 12 உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
11. அதை, ஸ்ட்ராபெர்ரி வடிவில் உருட்டவும்.
12. ஒரு ஃபோர்க் அல்லது டூத் பிக் வைத்து, ஸ்ட்ராபெர்ரியில் உள்ளது போலவே புள்ளி வைக்கவும்.
13. இதே முறையில், மீதி உள்ள முந்திரிப்பருப்பு பொடியில், பச்சை நிறம் மற்றும் எசென்ஸ் சேர்த்து, மாவு தயாரிக்கவும்.
14. 12 சிறு உருண்டைகளாக உருட்டி, அதை, இலை போல வெட்டி எடுக்கவும்.
15. இந்த இலையை, முன்பு செய்த ஸ்ட்ராபெர்ரியில் ஒட்டி வைக்கவும். சிறிய கப் கேக் லைனரில் வைத்து, பரிமாறவும். 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

உங்கள் கவனத்துக்கு...

* மிதமான தீயில் பாகு காய்ச்சவும். இல்லையேல் பதம் தப்பி, மாவு உதிரியாகிவிடும்.
* பால் சேர்த்தல், மாவை மிருதுவாக்குவதற்கு மட்டுமே. அதிகம் சேர்க்க வேண்டாம்.
* முந்திரியை அரைக்கும்போது, நிறுத்தி நிறுத்தி அதிக நேரம் அரைத்தால், எண்ணெய் விட்டுவிடும். அதனால், ஓரிரு முறைகளில் அரைத்துவிடவும்.