கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா?!



வித்யா குருமூர்த்தி

தீபாவளிப் பண்டிகை அன்று பெரும்பாலான நேரடி சந்திப்பு மற்றும் போன் விசாரிப்புகள் இப்படித்தான் தொடங்கும். கங்கை என்பது வெறும் நதி என்பதையும் தாண்டி, இந்தியர் வாழ்வோடு ஒன்றிய ஒரு தெய்வீகம்... ஒரு புனித உணர்வு. தீபாவளி அன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கை கலப்பதாக ஐதீகம். அதனால், சாதாரண வீட்டுக் குளியல் கூட அன்று கங்கைக் குளியலாகவே சிறப்பிக்கப்படுகிறது.

வேறு எந்த நதிகளுக்கும் இல்லாத சிறப்பாக அப்படி என்ன இருக்கிறது கங்கையில்?

கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில், இமயமலையின் கங்கோத்ரி பனி அடுக்குகளில் உருவாகும் கங்கை, 2 ஆயிரத்து 525 கிலோ மீட்டர் நீளமும், சில இடங்களில் 7 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டு பரந்து விரிந்து, பெருகிய இடங்களை எல்லாம் செழிப்புற வைத்து, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்தியாவின் மிக நீளமான ஜீவநதி கங்கை. உலகெங்கும் உள்ள பல  ஆராய்ச்சி மையங்கள், புகழ்பெற்ற பல உயிரியலாளர்கள் கங்கை நதி நீரை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், பல ஆச்சரியமான உண்மைகளைக் கண்டறிந்தனர்.

* பொதுவாக ஏதேனும் பாத்திரத்தில் அல்லது குடுவையில் பிடித்து வைத்திருக்கும் நீரானது சுத்திகரிக்கப்படாத பட்சத்தில், ஒரு சில நாட்களிலேயே கெடத் தொடங்கும். போதுமான பிராண வாயு இல்லாத காரணத்தால் அதில் நுண்ணுயிர்கள் உருவாகி, ஒருவித வாடை அடிக்கும். ஆனால், கங்கை நீரானது, அவ்வாறு பிடித்து மூடி வைத்த போதிலும், எத்தனை நாளானாலும் கெடாமல் குடிப்பதற்கு உகந்த நல்ல நீராகவே இருக்கும்.

* பல கோடி மக்கள் தினமும் கங்கையில் குளிக்கின்றனர். நிறைய உயிரற்ற உடல்கள் நதியினுள் வீசப்படுகின்றன. எனினும், இதுவரை கங்கையில் குளித்ததால் யாருக்கும் நோய்த்தொற்றோ சரும நோய்களோ ஏற்பட்டதில்லை.



* நியூ டெல்லி மலேரியா ஆய்வு மையம் அளித்த அறிக்கைப்படி, கங்கையின் மேல்புற நீர் கொசுக்களின் இனப்பெருக்கம் மற்றும் பரவுவதற்கு ஏற்ற வகையில் அமைந்தது அல்ல.

* காலரா போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் கங்கை நீரில் போடப்பட்ட 3 மணி நேரத்தில் உயிரிழந்தன. இவை சுத்திகரிக்கப்பட்ட நீரில் கூட 48 மணி நேரத்தில் பல்கிப் பெருகின. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், கங்கை நீரின் அதிசயமான ‘சுய சுத்திகரிப்புத் திறன்’ (Self cleansing ability) தான்.

* மற்ற நதிகளின் நீரை விட கங்கையில் ஆக்சிஜனின் அளவு மிக அதிகம்.
* புகழ்பெற்ற நீரியல் பேராசிரியர் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனரான டி.எஸ்.பார்கவா, வேறெந்த நதி நீருக்கும் இல்லாத, கங்கை நதி நீருக்கு மட்டுமே உரிய 2 சிறப்பு அம்சங்களைக் கூறியிருக்கிறார்.  

1. பாக்டீரியோபேகஸ் (Bacteriophages) என்னும் கெட்ட நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை (Anti bacterial) கங்கையில் இயற்கையாகவே உள்ளது.

2. வளிமண்டலத்தில் கரைக்கப்பட்ட ஆக்ஸிஜனைத் தன்னுள்ளே தக்க வைத்துக் கொள்ளும் திறன். இது வேறு எந்த நீர் நிலைகளைக் காட்டிலும், அதிசயிக்கத்தக்க விதமாக, கங்கையில் 25 மடங்கு அதிகம் (Oxygen retaining ability).

* பண்டைய காலங்களில் காசி வரை பிரயாணம் செய்து, கங்கை நீரைக் கொணர்ந்து தங்கள் ஊர்களில் உள்ள நீர் நிலைகளில் சுத்திகரிப்பு செய்வதற்காகக் கலப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். இந்த அறிவியல் பூர்வமான விஷயத்தை அன்றே செய்த நம் மூதாதையரின் சிந்தனை வணங்கத் தகுந்தது. ‘இனி கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா’ எனக் கேட்கும்போது, இவ்வளவு சிறப்பையும் நினைவு கூர்வோம்தானே!

"30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்தியாவின் மிக நீளமான ஜீவநதி கங்கை!"