சாதனைப் பெண்களும் சமையல் அறைகளும்



மணியம் செல்வன்

இல்லங்கள் தோறும் சமையல் என்பது முற்றும் முழுதாக பெண்களையே சார்ந்ததாக ஆக்கப்பட்டது என்பது மனித குல வரலாற்றில் எங்கிருந்து தொடங்கியது? பெண் மட்டும் ஏன் சமையலறை கைதியாக பழங்காலத்திலிருந்தே சங்கடப்பட வேண்டும் என்பதற்கான காரணம் என்ன? காட்டுத் தீயில் கருகிய விலங்குகள், கிழங்குகளை ருசித்துப் பழகியதற்கு பின்பான ஆதிமனிதர்களின் வாழ்க்கைச் சுழற்சியில் ஒரு புள்ளியில் நிகழ்ந்த சிறு செயல்கூட காரணமாக இருக்கலாம். வேட்டையாடப்பட்ட விலங்குகளை ஏதேனும் ஓர் ஆதிப்பெண்ணே சிக்கிமுக்கிக் கற்களில் தீமூட்டி சுட்டும் வாட்டியும் தந்து பக்குவம் செய்திருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியே இன்று வரையிலான
நீட்சியாக இருக்கலாம்.

உழைக்கும் மக்கள் மற்றும் நாடோடிகள் வாழ்வில் அடுப்பங்கரை என்ற ஒன்றே தனித்து இருப்பதில்லை. எங்கேனும் ஓர் இடத்தில் மூன்று தோதான கல் தேடி, விறகு சேர்த்து, அடுப்பு கூட்டி சமைத்து விடுவார்கள். அணைந்த அடுப்பை அக்குடும்பத்தினர் யார் வேண்டுமானாலும் ஊதி பற்ற வைப்பார்கள். அந்த அடுப்பிலிருந்து புகை சுழன்று செல்வதையும் எரிவதையும் அவர்களின் குழந்தைகள் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதும், குளிர்காலத்தில் அந்த அடுப்பைச் சுற்றி அமர்ந்து குளிர் காய்வதும், கிழங்கு சுட்டுத் தின்பதும் பார்ப்பதற்கு பேரழகு! குடும்பமும் குடும்ப வேலைகளும் ஜனநாயகமும் இருப்பதை பார்க்கலாம் அவர்களிடம்.



இன்றைக்குப் புதுமைப் பெண், ஊடகப் பெண், சாதனைப் பெண், களப்பணியாற்றும் பெண், இலக்கியப் பெண், புரட்சிப் பெண் என பெண் விழிப்புணர்வும் விடுதலையும் பெற்று வரும் நிலையிலும், வீட்டில் சமையல் என்பது பெண்ணுக்கானது மட்டுமே என நாசுக்காக ஆண்கள் ஒதுங்கிக் கொள்வது நாகரிக சமூகத்துக்கான நல் அடையாளமாக இருக்க முடியாது. சமையலும் கணவனுமே ஒரு  பெண்ணுக்கான உலகமாக இருந்ததை ‘அடுப்படியே திருப்தி ஆம்படையானே தெய்வம்’ என்பது போன்ற பழமொழிகள் அம்பலப்படுத்துகின்றன. கவிஞர் ஜெயபாஸ்கரன் ‘மரபு’ என்ற கவிதையில் இதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

‘வியர்க்க விறுவிறுக்க
எனக்கு நானே புலம்பியபடி
எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையலறையின் ஜன்னல் வழிப்         
                      பார்த்து
பரிகாசம் செய்கிறாள் என் மனைவி.
அவள் சொல்கிறாள்...
சமையலறையில் என் கண்களை கட்டி
    விட்டால் கூட
எந்த பொருள் மீதும் விரல் படாமல்
கேட்டப் பொருளை கேட்ட
    மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று
சவால் விடவும் செய்கிறாள்
    அங்கிருந்து.
அவளிடம் சொல்லிக் கொள்வதில்லை
நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
அங்கேயே இருக்கிறாய் என்பதை...’

இப்படி முடியும் அக்கவிதை. பெண் என்னதான் படித்திருந்தாலும் அவள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் வீட்டிலுள்ளோர் வயிற்றுப் பசிக்கும் பொறுப்பெடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிவிட முடியாது. இது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கும் இரட்டை பணிச்சுமை என்பதால் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தி விடுகிறது.

‘இக்கரைக்கும் அக்கரைக்கும்
பரிசல் ஓட்டி பரிசல் ஓட்டி...
எக்கரை என்கரை என்பது மறக்கும்
இடையோடும் நதியோ மெல்லச்                 
 சிரிக்கும்’

என்கிற கல்யாண்ஜியின் கவிதை   வீட்டுக்கும் அலுவலகத்துக்குமாக அல்லலுறும் பெண்களுக்கே சாலப் பொருந்தும். உணவகங்கள், திருமண மண்டபங்கள், விழாக்கள் போன்றவற்றில் சுவையாக சமைத்து இனிமையாகப் பரிமாறும் ஆண்களை நான் வியப்புடன் பார்த்திருக்கிறேன். இவர்கள் ஏன் வீடு என்று வரும் போது மட்டும், சமைக்கும் விஷயத்தில் ‘கழுவுற மீனுல நழுவுற மீனாக’ மாறி விடுவதும், மரவட்டையைப் போல சுருண்டு கொள்வதும் ஏன்? சம்பளமற்ற வீட்டு வேலைகளும் சமையலும் தகுதிக் குறைவை ஏற்படுத்தும் என்கிற உளவியல் சிக்கலாகவும் இருக்கலாம். அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம் வேறு!

பெண்கள் சமைப்பதற்கு சங்கடப்படுவதைச் சொல்லும் போது, தான் எப்போதோ ஒரு நாள் வீட்டில் சோறு வடித்ததையும், தக்காளி தொக்கு வைத்ததையும், தோசை ஊற்றியதையும் சொல்லி உடனே அவர்களின் வாயை மூடி விடும் எனது நண்பர்கள் பலரை நானறிவேன்.
வீட்டை விட்டு எவ்வளவு தூரம் சென்ற போதிலும், பெண்களின் கால்களை, சமையலறையிலிருந்து கண்ணுக்குத் தெரியாத கயிறு ஒன்று கட்டி இழுத்துக் கொண்டே இருக்கிறது. அந்தக் கயிறை அறுப்பதோ, உதாசீனப்படுத்துவதோ சுலபமானதல்ல. எத்தனை எத்தனையோ நூற்றாண்டுகளாக சமையலறை அடுப்பின் தீயாக அவளது விருப்பங்கள், கனவுகள், லட்சியங்கள் எல்லாம் எரிந்து கொண்டே இருக்கின்றன. கனடாவில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழப்பெண் கவிஞர்கள் 18 பேர் இணைந்து ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற கவிதைத் தொகுப்பு ெவளியிட்டு இருப்பதை சமீபத்தில் நான் வாசித்தேன். அதில் ‘மைதிலி’ என்பவரின் கவிதையில் இலக்கியப் பெண் எழுத்தைத் தொடர முடியாத ‘வலி’ பதிவாகியுள்ளது.

‘ஒரு கவிதை எழுதப்படுகிறது.
குழந்தையின் சிறுநீரும் மலமும் சுற்ற
சிறிய இடைவெளியின் பின்பு
மீண்டும் எழுதப்படுகிறது.
சமையல் கழிவுநீர்
காய்கறிகளின் கறையுடன் அது                 
தொடர்கிறது.
யார் யாரோ வருவதும் போவதுமான             
பிறகு
பேனாவைக் காணவில்லை.
பேனா கிடைத்த போது
எழுதி முடிந்திராத கவிதையை
தேடி அலைவதும் பெறுதலுமற்ற
அந்தர மனநிலை தொடர்கிறது’
என்கிறது அக்கவிதை.
   
எழுத்தாளர் அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை அடிக்கடி என் நினைவில் வரும். இக்கதையை எல்லாப் பெண்களும் ஆண்களும் வாசித்திட வேண்டும் என்றும் என் மனம் விருப்பம் கொள்ளும். இக்கதையில் ஒரு வயதானப் பெண்மணி பெரிய பாத்திரத்தில் எப்போதும் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டும், அதற்கு குருமா தயாரித்துக் கொண்டுமே இருப்பார். 14 குழந்தைகளைப் பெற்று வளர்த்த அப்பெண்ணின் அடிவயிறு முழுவதும் பிரசவக் கோடுகளின் தடயங்கள். சரி... இதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் அப்பெண் என்ன செய்திருப்பார்? அவருக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கும். ஏதாவது ஓர் ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்து ஆப்பிள் ஏன் கீழ் நோக்கி விழுகிறது என சிந்தித்து, விடை கண்டிருப்பார் என அக்கதை முடிவதாக என் நினைவு.

இருவரும் இணைந்து, இருவரும் சம்பாதித்து, அன்பு நிறைவுடன் வாழும் வாழ்வில், ஒருவர் தனியாக சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இன்னொருவர் பாராமுகமாக இருப்பது எப்படி, கருத்தொன்றிய காதல் ஒன்றிய வாழ்வாக முடியும்? இதற்கு முன் அம்மாக்களும் பாட்டிகளும் சமைக்கவில்லையா என விவாதிப்பது எல்லாம் இக்காலத்துக்குப் பொருந்தாத விதண்டாவாதமாகத்தான் இருக்கும். ஊர்தோறும், வீதிதோறும் ஆரோக்கியமான முறையில் பொது சமையற்கூடங்கள் தோன்றுவதெல்லாம் நமது நீண்ட நாள் கனவாக, எதிர்பார்ப்பாகவே உள்ளது. நானும் பல கவிதைகளில் இவற்றை எல்லாம் எழுதியிருக்கிறேன். சரி, இதெல்லாம் ஒன்றும் சரிப்படாது என்றால் பாரதி சொல்வாரே...

‘மானுடரே... நீவிர் இங்கே
ஊண் உடல் வருத்த வேண்டாம்
உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்கு தொழில் இங்கே
அன்பு செய்தல் கண்டீர்’ என்றவாறு  பச்சையாக உண்பது குறித்தும், பழங்களை உண்பது குறித்தும்,
சிந்தித்துப் பார்க்கலாம். ஆணும் பெண்ணும் நல்ல சமூகத்துடன் நல்ல
உணவையும் இணைந்து சமைக்கலாமே...
சாதிக்கலாமே!

(மீண்டும் பேசலாம்!)