கலகல காரம்!



தீபாவளி மில்லட் ஸ்பெஷல்

ராகி பக்கோடா

என்னென்ன தேவை?

ராகி மாவு, மஞ்சள் தூள், சோள மாவு தலா - 1 கப், மிளகாய்த்தூள்  11/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி  - தலா  2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப, உடைத்த வேர்க்கடலை - 1/2 கப், பொட்டுக்கடலை மாவு (அ) கடலை மாவு - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 (விருப்பப்பட்டால்).

எப்படிச் செய்வது?

பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, ெகாத்தமல்லியை பொடியாக நறுக்கி இத்துடன் ராகி மாவு, சோள மாவு, கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு (ஏதாவது ஒன்று) சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், சூடான 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். இத்துடன் பொடித்த வேர்க் கடலை சேர்த்து பிசைந்து உதிர் உதிராக மாவு இருக்க வேண்டும். (பக்கோடா பதத்தில்) எண்ணெயை காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை பக்கோடாவாக பொரித்து எடுக்கவும். ராகி பக்கோடா கரகரப்பாக இருக்கும். வேர்க்கடலைக்கு பதில் முந்திரிப் பருப்பும் சேர்க்கலாம்.

கம்பு வடை

என்னென்ன தேவை?

கம்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா - 1/2 கப், புழுங்கல் அரிசி - 1/4 கப், பச்சை மிளகாய் -  4 to 5, காய்ந்த மிளகாய் - 2, தனியா - சிறிது, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்த் துருவல் - 1/2 கப், சோம்பு - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சிறு வெங்காயம் - தேவைக்கு(விருப்பப்பட்டால்), மல்லித் தழை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கம்பை நன்றாகக் களைந்து அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தனியாக ஊற வைக்கவும். இப்போது கம்பு, அரிசியை கெட்டியாக அரைக்கவும். பின் அத்துடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், தனியா,  ஊறிய உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து தேங்காயை ஒருசுற்று சுற்றி எடுத்து பொடித்த கறிவேப்பிலை, சோம்பு, மல்லி சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,  பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து சின்னச் சின்ன வடைகளாக உருட்டி சூடான மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வெங்காயம் வேண்டாம் என்றால் கோஸ் சேர்க்கலாம்.



ராகி மிக்ஸர்

என்னென்ன தேவை?
 
முறுக்கு மாவுக்கு…

ராகி மாவு - 250 கிராம், ஜவ்வரிசி (பெரியது) - 50 கிராம், உருக்கிய நெய் - 1 டேபிள்ஸ்பூன், சாமை மாவு - 50 கிராம், அரிசி மாவு - 25 கிராம், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பெருங்காயத்தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கு.

மிக்ஸர் கலப்பதற்கு…

அவல் - 150 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், கறிவேப்பிலை -  சிறிது, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், வேர்க்கடலை - 50 கிராம், உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து, ராகி மாவு, சாமை மாவு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, சலித்து வைக்கவும். இத்துடன் அரிசி மாவை சலித்து  உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கி 1 டேபிள் ஸ்பூன் நெய்யை சூடாக்கி சேர்த்து இளம் சூடான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் முறுக்கு அச்சியில் மாவைப் போட்டு எண்ணெயில் மாவை பிழியவும். தனித்தனி முறுக்காக பிழிந்து வெந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். இப்படி எல்லா முறுக்கையும் பிழிந்துவிட்டு, அதே எண்ணெயில் அவல், ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, இடித்த பூண்டு, கறிவேப்பிலை என்று தனித்தனியாக எல்லாவற்றையும் பொரித்து வடித்து டிஷ்யூ பேப்பரில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அனைத்தையும்  ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு முறுக்கையும் உடைத்துப் போட்டு உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் போட்டு கலந்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.

மினி சோள முறுக்கு அல்லது சோள வேர்க்கடலை முறுக்கு

என்னென்ன தேவை?

மஞ்சள் சோள மாவு - 1 கப், வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவு - 1/2 கப், பொட்டுக்கடலை மாவு - 1/2  கப், அரிசி மாவு - 1/2 கப், வெள்ளை எள் - 1/2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிது, சீரகம் - சிறிது (விருப்பப்பட்டால்) உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

எண்ணெய், நெய் தவிர மற்ற எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலக்கவும் (சோள மாவை மட்டும் லேசாக வறுத்து சேர்க்கவும்). பின் இந்த கலவையில் நெய்யை சூடாக்கி சேர்த்து, எள், சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். மாவை கொஞ்சம், கொஞ்சமாக முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்து உடையாமல் டப்பாவில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.



சாமை அரிசி காராசேவ்
 
என்னென்ன தேவை?

சாமை அரிசி மாவு - 50 கிராம், கடலை மாவு - 200 கிராம், மிளகுத் தூள், மிளகாய்த்தூள் தலா - 1/2 டீஸ்பூன், சமையல் சோடா - 1 சிட்டிகை, சீரகம் - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

சாமையை சிறிது லேசாக வறுத்து கடலை மாவுடன் சலிக்கவும். இத்துடன் கரகரப்பான மிளகுத்தூள், சோடா, மிளகாய்த்தூள், உப்பு, ெபருங்காயம், சீரகம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்து தேவையான நீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை காரா சேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: காராசேவ் கரண்டியில் தேய்க்க தெரியாவிட்டால், தேன்குழல் அச்சில் மாவை போட்டு பெரிய முறுக்கு மாதிரி (தேன்குழல் மாதிரி) பிழிந்து பின் உடைத்துக் கொள்ளவும். இந்த காராசேவின் கலர் சிறிது சிவப்பாக இருக்கும்.

ராகி முறுக்கு

என்னென்ன தேவை?

ராகி மாவு - அரை கப், பொட்டுக் கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், பச்சரிசி மாவு - 1/2 கப், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, சீரகம், எள் - தலா 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

லேசாக வறுத்த ராகி மாவை ஆவியில் சிறிது வேகவிட்டு எடுத்து அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு எல்லாவற்றையும் கலக்கவும். இத்துடன் சீரகம், உப்பு, வெண்ணெய், எள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழிந்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

மிளகு பட்டர் துக்கடா

என்னென்ன தேவை?

சிறுதானிய  மாவு - 1 கப் (காதி கடையில் ெரடிமேடாக கிடைக்கும்), மைதா - 1/2 கப், கோதுமை மாவு - 1/2 கப், மிளகுத்தூள் (கரகரப்பாக பொடித்தது) - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு - ேதவைக்கேற்ப, ரவை - 1/4 கப், நெய் (அ) வெண்ணெய் - 1/2 கப், வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெயில் உப்பு சேர்த்து நுரைத்து வரும்வரை குழைக்கவும். இதில் சிறுதானிய மாவு,  மைதா, கோதுமை சேர்த்து விரல் நுனியால் நன்றாக பிசறிக்கொண்ேட இருந்தால் ரொட்டித் தூள் மாதிரி வரும். அப்போது, கரகரப்பாக உடைத்த மிளகு, பெருங்காயத் தூள், ரவை, எள் சேர்த்து கலந்து தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசையவும். சிறிது நேரம் மூடி வைக்கவும். 5 நிமிடத்திற்குப் பின் பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சப்பாத்திக்கல்லில் அரை இன்ஞ் கனமாக தேய்த்து குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு துண்டுகள் விருப்பமான வடிவத்தில் வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.



எண்ணெய் இல்லாத சிறுதானிய, ட்ரை ஃப்ரூட்ஸ் / நட்ஸ் மிக்ஸர்

என்னென்ன தேவை?

முளைவிட்ட தானிய வகைகளை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, அதனை இடித்து ஃப்ளேக்ஸ் ஆகச் செய்து பதப்படுத்தியது - 500 கிராம்  (வெள்ளைச் சோளம் கோதுமை என்று கார்ன் ஃப்ளேக்ஸ் போல), மிளகாய்த்தூள் (அ) மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை - தேவைக்கு, வெறும் கடாயில் வறுத்த வேர்க்கடலை, பாதாம் சீவியது, தர்பூசணி விதை பதப்படுத்தியது, வெள்ளரி விதை, முந்திரி, காய்ந்த கறுப்பு திராட்சை, உலர்ந்த அத்திப் பழங்கள், வறுத்த கொப்பரை சீவியது,  உலர்ந்த தாமரை விதை, கிர்ணி விதை இவை அனைத்தும் - தலா 1 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உலர்ந்த பழங்கள், உலர்ந்த பேரீச்சை, ஃப்ளேக்ஸ் போன்ற கலவை, உலர்ந்த அத்திப்பழங்கள், உலர்ந்த கறுப்பு திராட்சை, காரத்திற்கு மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு, சிறிது சர்க்கரை சேர்த்து அனைத்தையும் கலந்து, உலர்ந்த பழங்களையும் பொடித்து வெறும் கடாயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை தூவி நன்கு கலந்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். இது 10 நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

சத்துமாவு - புதினா நாடா

என்னென்ன தேவை?

லேசாக வறுத்து கலந்த மாவு (கம்பு, தினை, சாமை) - 3 கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 1 கப், பூண்டு  4 பல், காய்ந்த மிளகாய் விழுது - 2 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, புதினா அரைத்த விழுது - சிறிது, (எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைக்கவும். பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.) வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முதலில் புதினா இலைகளை எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சர்க்கரையுடன் சேர்த்து விழுதாக மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவுகளைப் போட்டு உப்பு, வெண்ணெய், மிளகாய், பூண்டு விழுது சேர்த்து கலக்கவும். இத்துடன் புதினா விழுதையும் சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து பிழியும் பதத்திற்கு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ரிப்பன் அச்சில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழியவும். மாவு வெந்து வந்ததும் திருப்பி போட்டு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் வடித்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.  தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாக கூட செய்யலாம்.

சிறுதானிய மாவு தட்டை

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1 கப், வறுத்து அரைத்த கம்பு மாவு - 1 கப், வறுத்த தினை மாவு - 1 கப், வறுத்த கேழ்வரகு மாவு - 1 கப், வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எள் - 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, உளுந்துமாவு - 1 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (நீர் வடித்தது), உடைத்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

எண்ணெயைத் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் மாவில் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தட்டை பதம் வரும்வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு வட்டமாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு பொரித்தெடுக்கவும்.

சாமை சிறுபருப்பு முள்ளு முறுக்கு

என்னென்ன தேவை?

சாமை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், சிறுபருப்பு - 50 கிராம், பொட்டுக் கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், சூடான எண்ணெய்  - 2 டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு, மிளகாய்த்தூள், சீரகம், எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து சிறுபருப்பை லேசாக வறுத்து ஆறவிடவும். இதை மிக்ஸியில் நைஸாக பொடித்து சலிக்கவும். பொட்டுக் கடலையையும் பொடித்து சலிக்கவும். சாமை மாவையும் அரிசி மாவையும்  லேசாக வறுத்து சலித்து அனைத்தையும் கலந்து உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், மிளகாய்த்தூள், சூடான எண்ணெய், வெண்ணெய் சேர்த்து தேவையான நீர் விட்டு பிசைந்து 5 நிமிடம் மூடி வைக்கவும். எண்ணெயைக் காயவிட்டு பெரிய பெரிய முறுக்காக ஒவ்வொன்றாக பிழிந்து இருபுறமும் வேகவைத்து எடுத்து ஆறியதும் உடைத்து பரிமாறவும்.

சீஸ் கிரிஸ்பி

என்னென்ன தேவை?

மைதா - 1/2 கப், கம்பு மாவு - 11/2 கப் (வேக வைத்தது), அரிசி மாவு - 1 கப், நெய்  - 4 டேபிள்ஸ்பூன், கரகரப்பாக உடைத்த மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், சீஸ் - 1 துருவியது) டேபிள்ஸ்பூன், சீஸில் உப்பு இருப்பதால் தேவையான உப்பு, எண்ணெய் பொரிப்பதற்கு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

சீஸைத் துருவி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, 1 மேசைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் உப்பையும் சேர்க்கவும். நன்கு குழைத்து வெண்ணெய் மாதிரி வரும்போது, லேசாக வறுத்து ஆறிய கம்பு மாவு, மைதா மாவு, சீரகம், மிளகு சேர்த்து தேவையான நீர் விட்டு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். அரிசி மாவுடன் நெய் சேர்த்து குழைத்து கலந்து வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து தேய்த்து சதுர ரொட்டியாக மெல்லியதாக தேய்க்கவும். அதன்மேல் குழைத்து வைத்த அரிசிமாவை எல்லா இடமும் படும்படி பூசவும். மீண்டும் ஒரு ரொட்டியை உருட்டி தேய்த்து முதல் ரொட்டியின்மேல் வைத்து சிறிது அழுத்தி ஒட்ட வேண்டும். பின் மீண்டும் ஒரு ரொட்டி மெல்லியதாக தேய்த்து, இப்படி மூன்று ரொட்டிகள் ஒன்றின்மேல் வென்று வைத்து அழுத்தி உருட்டி தேய்த்து முள் கொண்டு குத்தி விருப்பமான வடிவத்தில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சிறுதானிய ஃபிரெஞ்ச் ஃப்ரை

என்னென்ன தேவை?

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், கம்பு, சாமை, ராகி கலந்த மாவு - 3/4 கப், அரிசி மாவு  1/4 கப், நெய் - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிது, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலை, கடலைப்பருப்பு 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் வடித்து வைக்கவும். கலந்த மாவை லேசாக வறுத்து வைக்கவும். இப்போது ஊறிய பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பின் வடித்து இத்துடன் உப்பு, அரிசி மாவு, கலந்த சத்து மாவு, சீரகம், பெருங்காயம், நெய் சூடு செய்து சேர்க்கவும். இக்கலவையை நன்கு கலந்து விரல்போல் வடிவம் கொடுத்து உருட்டி சூடான மிதமான சூட்டில் பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கரகரப்பாக மிக ருசியாக இருக்கும்.

சிறுதானிய உப்பு உருண்டை

என்னென்ன தேவை?

கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி அரிசி, சாமை, வரகு, தினை இவையனைத்தும் வறுத்து ரவையாக உடைத்தது - 2 கப், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு தலா - 3 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் - 10 (அ)மிளகு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன்.

தாளிக்க…
கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், கறிவேப்பிலை, மல்லி, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 மூடி.

எப்படிச் செய்வது?

தானியங்கள் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து ஒரு வெள்ளைத் துணியிலே 1/2 மணி நேரம் உலர்த்தி மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இத்துடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து தானியங்கள் மாதிரி கரகரப்பாக ஊற வைத்து உலர்த்தி ரவையாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் தாளிக்க கொடுத்ததையும், மிளகாய் வற்றல் அல்லது பொடித்த மிளகு, சீரகத்துடன் தேங்காய்த் துருவலும் சேர்த்து வதக்கி 5 - 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பொடித்த தானியங்கள், பருப்புகளோடு உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி உருண்டைப் பிடித்து ஆவியில் வேக விட்டு எடுத்து சட்னியுடன் மல்லி தூவி பரிமாறவும்.

கேழ்வரகு - சிறுதானிய குணுக்கு

என்னென்ன தேவை?

சிறுதானிய மாவு - 3/4 கப், கேழ்வரகு மாவு - 1/4 கப், பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் அல்லது 4 டேபிள் ஸ்பூன், புதினா, மல்லி தலா - ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கருஞ்சீரகம், மிளகு, சீரகப் பொடி தலா - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கு, இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவு, சிறுதானிய மாவு, பொட்டுக் கடலை மாவு, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, கருஞ்சீரகம், மிளகு, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின் இத்துடன் மல்லியையும் புதினாவையும் சிறிது நீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து கலவையில் சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்க்கவும். எல்லாவற்றையும் பிசைந்து சிறிது நேரம் வைத்து, பின் எண்ணெயை காய வைத்து, உருண்டைகளாக உருட்டியோ அல்லது கிள்ளிப் போட்டு வெந்ததும் பொரித்து எடுக்கவும். ஜீரணத்திற்கு நல்லது, கரகரப்பாக இருக்கும். மிளகுக்கு பதில் மல்லி, புதினாவுடன் பச்சைமிளகாய் சேர்க்கலாம்.