திருமதி ஒரு வெகுமதி!



‘மிஸஸ் எர்த் 2015’

ப்ரியங்கா குரானா கோயல்

திருமணமான பெண்களுக்காக அலங்கார அணிவகுப்பில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ப்ரியங்கா குரானா கோயல், ‘மிஸஸ் எர்த் 2015’  பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்!

20 நாடுகளிலிருந்து 24 அழகிகள் பங்கேற்ற தனித்துவமான ‘மிஸஸ் எர்த்’ போட்டி, ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உதவி மையத்துக்கு (HCWA) ஆதரவு அளிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இம்மையத்தின் இயக்குனரான ரித்திகா வினய், 2014ல் ‘மிஸஸ் ஆசியா பசிபிக் க்வின்’ பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! ‘‘வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்கான ஒரு சமூக அமைப்பால் நடத்தப்படுவதே, இப்போட்டியில் பங்கு கொண்டதற்கான முக்கிய காரணம்’’  என்கிற ப்ரியங்கா கோயல், ஐஐஎம் கொல்கத்தாவில் பயின்றவர். மிஸஸ் எர்த் போட்டியில் பங்கேற்ற முதல் (முதலீட்டு) வங்கியாளரும் கூட!



சமூக சேவை ஆர்வம், அழகு, திறமை, அறிவுக்கூர்மை மற்றும் ஆளுமைத்திறன், இரக்க  உணர்வு ஆகியவை இப்போட்டியில் அளவிடப்படுகின்றன. கலகலப்பாகப் பழகும் தன்மை, முற்போக்குச் சிந்தனை மற்றும் சேவை உணர்வால் பார்வையாளர்களைக் கவர்ந்து ‘மிஸஸ் எர்த்’ பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார் ப்ரியங்கா. இவர் அணிந்து வந்த ‘பஞ்சாபி தட்கா மற்றும் மார்வாடி மணமகள் உடை அனைவரையும் கவர்ந்தது.

‘‘முனைப்புடன் கூடிய போராட் டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. நேர்முகத் தேர்வு, திறன் அறிவினா, அறிமுகத் தேர்வு, மணமகள் உடை, பாரம்பரிய உடை, ஈவினிங் கவுன் மற்றும் டென்னிஸ் உடை உள்பட பல சுற்றுகள் கொண்ட பன்முனைப் போட்டியாக இருந்தது. இந்த வெற்றி, என் சிந்தனைகளை சமூக நிகழ்வுகளில் எடுத்துரைப்பதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பன்முகத் திறமைகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்த நினைக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். திருமணம் என்பது எதற்கும் தடையல்ல... உண்மையில் புதிய செயல்களில் ஈடுபடவும் அது உதவுகிறது. அதனால் இந்த வெற்றியை என் கணவருக்கும் 2 வயது மகனுக்கும் சமர்ப்பிக்கிறேன். இன்றைய உலகின் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் தளமாக எனக்கு கிடைத்த இந்த வெற்றியை பயன்படுத்திக் கொள்வேன்” என்ற தன் சமூக சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார் ப்ரியங்கா.

- உஷா