இழப்பதற்கு எதுவுமில்லை!



ஸ்நேகா பாரதி

‘எரியும் பனிக்காடு’ நாவல் சுதந்திரத்துக்கு முன் இந்திய தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துச் சொல்லும். சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தொழிலா ளர்களின் வாழ்க்கை பெரிய மாற்றங்களைச் சந்திக்கவில்லை. மிகச்சிறிய வசிப்பிடம், அதிக வேலை, குறைவான சம்பளம், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் என்றே அத்தொழிலாளர்கள் இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள்.

மூணாறில் சில ஆண்டுகளுக்கு முன்  தங்கராஜ் என்ற தேயிலைத் தொழிலாளியின் வீட்டுக்குச் சென்றோம். அவர் மனைவியும் தேயிலை பறிப்பவர். மகள் ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்கிறார். ‘அங்கே கூலி சற்று கூடுதல் என்றாலும், ஏலக்காய் செடிகளுக்கு அருகே தவளைகள் ஏராளமாக இருக்கும்... அந்தத் தவளைகளைச் சாப்பிடு வதற்குப் பாம்புகள் அதிகம் வரும்’ என்றார். தொழிற்சங்கத்தால் தங்கள் வாழ்க்கை அந்தக் காலத்தைவிட ஓரளவு முன்னேறி இருப்பதாகச் சொன்னார்கள். இருப்பினும், இந்த முன்னேற்றம் பெண் தொழிலாளர் வாழ்க்கையில் பிரகாசத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல், தொழிற்சங்கங்களில் ஆண்களின் கைகளே ஓங்கியிருக்கின்றன. பெண்களின் பிரச்னைகள் குறித்து தொழிற்சங்கங்கள் பிரத்யேக கவனத்தைச் செலுத்தவில்லை என்பதையே, சமீபத்தில் மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர் போராட்டம் எடுத்துக் காட்டுகிறது.



கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 19% போனஸை இந்த ஆண்டு 10% என்று குறைத்துவிட்டது சர்வதேச தனியார் தேயிலை நிறுவனம். கொதித்துப் போன  பெண்கள் ஒன்று சேர்ந்தார்கள். 6 ஆயிரம் பெண்கள் சேர்ந்த அமைப்புக்கு,  ‘பெம்பிளை ஒருமை’ (பெண்கள் ஒற்றுமை) என்று பெயர் சூட்டினார்கள்.  வீதியில் இறங்கிப் போராடினார்கள். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால், மூணாறு ஸ்தம்பித்தது. 9 நாட்கள் நீடித்த போராட்டம், ‘20% போனஸ்’ என்ற அறிவிப்பில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் தனியாகப் போராடி, வெற்றி பெற்ற நிகழ்ச்சி பலரையும் வாய் பிளக்கச் செய்திருக்கிறது. ‘‘எங்கள் போராட்டம் இத்துடன் முடியப் போவதில்லை.  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்தால் 230 ரூபாய் தருகிறார்கள். இந்த விலைவாசியில் சாப்பிடுவதா, மருத்துவச் செலவுகளை சமாளிப்பதா, குழந்தைகளைப் படிக்க வைப்பதா? 500 ரூபாய் தினக்கூலி கேட்டு அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்க இருக்கிறோம்’’ என்கிறார் ஒரு பெண் தொழிலாளி.

‘‘இன்றைய தொழிற்சங்கங்கள் ‘வேலை உறுதி’ என்பதோடு நின்று விடுகின்றன. ஆண் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தைக் குடித்துவிட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. நாங்கள் தனியாகப் போராடுவதைக் கூட சகிக்காமல் கற்களை வீசி, கலைக்க முயன்றனர். முதுகு வலிக்க வேலை செய்கிறோம். குடிகாரர்களுடன் குடும்பம் நடத்துகிறோம். வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கிறோம். இத்தனையையும் பெண்கள் தனியாகச் செய்யும்போது, போராட்டத்துக்கு மட்டும் எதற்கு ஆண் துணை? எங்கள் சம்பாத்தியம் முழுவதும் உணவு, உடை, படிப்பு, குழந்தை என்று முழுக்க முழுக்க குடும்பத்துக்குத்தான் பயன்படுகிறது. ஆண்களைப் போல குடித்துவிட்டு, பொறுப்பற்றுத் திரிவதில்லை’’ என்கிறார் இன்னொரு பெண் போராட்டக்காரர்.

‘நாங்கள் தோள்களில் தேயிலைகளை சுமந்தால்தான், நீங்கள் பணத்தைத் தோள்களில் சுமக்க முடியும்’, ‘உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போகும் நாங்கள் குடிசையில் வசிக்கிறோம்... நீங்கள் பங்களாவில் சொகுசாக வாழ்கிறீர்கள்’ - இப்படி கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
இப்போது அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பெண்கள் போராட் டத்துக்குத் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். பெண்களோ அவர்களின் ஆதரவு தேவை இல்லை என்கிறார்கள். பாதுகாத்துக் கொள்ளவும் போராட்டத்தை வடிவமைத்துக் கொள்ளவும்  தங்களுக்குத் தெரியும் என்று சொல்லும் பெண் போராட்டக்காரர்கள், ‘பசியும் கஷ்டங்களும் எங்கள் வாழ்க்கையின் ஒருபகுதி. மரணத்தைக் கண்டும் எங்களுக்குப் பயமில்லை’ என்கிறார்கள். ‘இழப்பதற்கு எதுவுமில்லை... பெறுவதற்கோ ஒரு பொன்னுலகமே இருக்கிறது’ என்றார் மாமேதை மார்க்ஸ். அயராது உழைக்கும் இத்தோழிகளின் எண்ணமும் அதுதானே!

"பசியும் கஷ்டங்களும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. மரணத்தைக் கண்டும் எங்களுக்குப் பயமில்லை!"