நதியோடு கதை பேசலாம்!



யாத்ரீகா

விடிந்ததும் விடியாமலும் வீட்டுவேலை, குழந்தைகள், அலுவலகம், மீண்டும் வீடு, குழந்தைகள் என்று சுழலும் பெண்கள்... அலுவலகம், ஓவர் டைம், புராஜெக்ட், டெட்லைன், மாதக்கடைசி, மன அழுத்தம் என்று அலைபாயும் ஆண்கள்... தினம் 8 மணி நேரம் புத்தகத்துடன் போராடி, வார இறுதியிலும் சிறப்பு வகுப்புகளில் பால்யம் தொலைக்கும் குழந்தைகள்... இவர்கள் இந்தத் தினப்படி வழக்கத்தை விட்டு விடுதலையாகி, அமைதியாகவும் ஆனந்தமாகவும் இயற்கையோடு ஒன்றி ஒரு நாள் கழித்தல் நலம். அந்த இடம் இரு மலைகளுக்கு நடுவில் மாபெரும் நீர்பரப்போடு இருந்தால்? அங்கே அமைதியான பரிசல் பயணம், பெரிய கரை, கரையில் வான் தொடும் புன்னை மரம், மரத்தில் உயர உயர கயிற்று ஊஞ்சல்கள், வீசி ஆட்டி விடும் தென்றல் காற்று, மனதையும் வயிற்றையும் நிரப்பும் உணவு, உண்ட மயக்கத்துக்கு இளைப்பாற இதமான இடம், மலைப்பாதையில் தூய காற்றை சுவாசித்து, கொஞ்சம் கைவீசி நடந்து, கரை புரண்டு ஓடும் ஆற்றில் அற்புதமாக 2 மணி நேர குளியல் என்று இருந்தால்?

எங்கே?

மேற்சொன்ன அனைத்தும் கனவல்ல... நிஜமாகவே உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் மேற்குத்தொடர்ச்சி மலையில், கோவையை அடுத்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூழல் சுற்றுலா தலம் பரளிக்காடு. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 30வது கிலோமீட்டரில் காரமடையை அடையலாம். இங்கிருந்து இடதுபுறமாக தோலம்பாளையம் பாதையில் பயணம் தொடர்ந்தால் 45 கிலோமீட்டரில் பரளிக்காடு. தோலம்பாளையம் சாலையில் தாயனூரில் பாதை இரண்டாக பிரியும், இடதுபுறமாக வெள்ளியங்காடு செல்லும் சாலை வழியே  ஒரே பாதை யாக பரளிக்காடு செல்லலாம்.  வழியெல்லாம் அழகு மேகம் உரசும் மலைத்தொடரை ரசித்தவாறே, அவ்வப்போது சிறு தூறலையும் அனுபவிக்கலாம். மலைப்பாதையில் இரண்டு செக் போஸ்ட்டுகள் உள்ளன. நாம் முன் பதிவு செய்த விவரம் அங்கு தெரிவிக்கப்பட்டு இருக்கும். இரண்டாவது சோதனைச் சாவடியில் இருந்து 7வது கிலோமீட்டரில் ஒரு மலைப்பாதை இடதுபுறம் பிரியும். அங்கிருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது பில்லூர் அணையை அடிப்படையாகக் கொண்ட இந்த சுற்றுலாத்தலம்.

எப்படி?

பரளிக்காடு செல்ல வன அலுவலகத்தில் முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். கோவை வனக்கோட்டம், காரமடை வனச்சரகத்தில் 2007ம் ஆண்டு முதல் செயல்படும் இந்தச் சூழல் சுற்றுலா, இங்குள்ள 22 மலைக் கிராமங்களை மையமாகக் கொண்டு, உள்ளூர் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தொழில் மேம்பாடு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதோடு, ஒரு முழு நாளையும் இயற்கையோடு  இனிமையாகச் செலவழிக்க அரிய வாய்ப்பு அளிக்கிறது. இங்கு செல்ல சொந்த வாகன வசதி செய்து கொள்வதே நல்லது.



எவ்வளவு?

பெரியவர்களுக்கு 400 ரூபாய் கட்டணம். 5-13 வயது குழந்தைகளுக்கு ரூ.300, 5 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவசம். பரளிக்காடு சென்று அடைந்ததும் சுக்கு காபியுடன் வரவேற்பு. 2 மணி நேர பரிசல் பயணம், மதிய உணவு எல்லாம் இதில் அடங்கும். வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, குருமா, தயிர்சாதம், இனிப்பு, களி, புளிக்குழம்பு, அசைவ விரும்பிகளுக்கு ஒரு குழம்பு, பழம் என அசத்தலான மதிய உணவை பஃபே முறையில் மகளிர் குழுவினர் அளிக்கின்றனர். பயிற்சி பெற்ற பரிசல் ஓட்டிகளும், பாதுகாப்பு ஜாக்கெட்களும் பாதுகாப்பான
பரிசல் பயணத்துக்கு உத்தரவாதம்.

எப்போது?

இச்சுற்றுலா வார இறுதி நாட்களில் மட்டுமே நடைபெறுகிறது.மொத்தம் 18 பரிசல்கள்... ஒரு பரிசலுக்கு 4 பேர். காலை மட்டுமே பரிசல் பயணம்.  நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 100 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரே குழுவில் 40 நபர்களுக்கும் மேல் இருந்தால் வார நாட்களிலும் சிறப்பு அனுமதி உண்டு. காலை 10 மணிக்கு பரிசல் பயணம் தொடங்குகிறது? 12 மணிக்கு கரையில் சிறிது ஓய்வு. ஒரு மணிக்கு மதிய உணவு. அதன் பின் விரும்பியவர்கள் ட்ரெக்கிங் செய்யலாம். மற்றவர்கள் ஆற்றில் குளிக்க செல்லலாம். எல்லா இடங்களுக்கும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக வருவார்கள்.

தொடர்புக்கு?

www.coimbatore.tn.nic.in/forestlocation.html
வனச்சரக அலுவலர்
9047051011 /  9443655663