ஈழத்தமிழ்ப் பெண் இப்போ நார்வே துணை மேயர்!



ஹம்சாயினி குணரத்னம்

அரசியலில் பங்குகொள்வதற்கே தயங்கும் இளைஞர்கள் மத்தியில், புலம்பெயர்ந்த இளம்பெண் ஒருவர் நார்வே நாட்டு ஓஸ்லோ நகரின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வியப்பிற்குரிய தகவலே!

காம்சி என்கிற ஹம்சாயினி குணரத்னம் 3 வயதிலேயே இலங்கையில் இருந்து நார்வே நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். இப்போது அவருக்கு 27 வயது. ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் சமூக புவியியல் படித்த காம்சி, நார்வே தொழிலாளர் கட்சி பிரதிநிதியாக 2007ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தங்களுடைய சோஷலிச நட்புக்கொள்கையால், கன்சர்வேட்டிவ் கட்சியின் 8 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தியுள்ளது தொழிலாளர் கட்சி. இக்கட்சியின் இளம் உறுப்பினரான காம்சி, ஓஸ்லோ துணை மேயர் பதவிக்கு போட்டியிட்டு வென்றுள்ளார்.



2011ல் உடோயோத் தீவில் நடந்த கோடை முகாமில் கலந்து கொள்ளச் சென்ற தொழிலாளர் கட்சி இளைஞர் அணி மீது நார்வே பயங்கரவாத அமைப்பினால் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சியைச் சார்ந்த 69 பேரில் 8 பேர் தாக்குதலில் பலியானார்கள். காம்சியோ தைரியமாக முடிவெடுத்து 500 மீட்டர் நீளமுள்ள ஏரியை நீந்திக் கடந்து உயிர் பிழைத்தார்.

“அந்தத் தாக்குதல் நடந்த போது எனக்கு 23 வயது. அவர்களின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பதிலாக நீரில் மூழ்குவதே மேல் என்று எண்ணி ஏரியில் குதித்தேன். இதுபோன்ற பெரிய மாற்றங்களை சந்திப்பதற்குத்தான் உயிர் பிழைத்திருக்கிறனோ!’’ என்று தனக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றி நினைவுகூர்கிறார். இப்போது புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மரியானே போர்ஜென் தொழிலாளர் கட்சியின் நீண்டகால அரசியல்வாதி. அவரின் கீழ் பணியாற்றும் வகையில் இளைஞரான காம்சி துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். இவரின் வெற்றி இன்றைய பெண்கள் அரசியலில் பங்குகொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது!

- உஷா