நீங்கதான் முதலாளியம்மா



சீர் முறுக்கு
கலைச்செல்வி

``கல்யாணம், சீமந்தம், காதுகுத்தல்னு வீட்ல நடக்கிற எல்லா விசேஷங்களுக்கும் 51, 101, 201னு எண்ணிக்கையில சீர் முறுக்குகள் வைக்கிறது சில கம்யூனிட்டியில வழக்கம். இன்னிக்கு இருக்கிற அவசர உலகத்துல யாருக்கும் அதையெல்லாம் வீட்ல பொறுமையா செய்து வைக்க நேரம் இருக்கிறதில்லை. இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு பாரம்பரியமான பலகாரங்கள் செய்யவும் தெரியறதில்லை. கடைகள்ல வாங்கி வச்சிடறாங்க. விலையும் அதிகம். ருசியும் இருக்கிறதில்லை. முறுக்குங்கிறது காலங்காலமா எல்லா வயசுக்காரங்களாலயும் விரும்பப்படற ஒரு பலகாரம். எல்லா விசேஷங்களுக்கும் செய்யக் கூடிய இதைக் கத்துக்கிறது ஒண்ணும் பெரிய வித்தை இல்லை. விருப்பப்படறவங்க, முறுக்குத் தயாரிப்பையே ஒரு பிசினஸாகவும் பண்ணலாம்... என்னை மாதிரி...’’ என்கிறார் கலைச்செல்வி.

பத்தாவது மட்டுமே படித்திருக்கும் இவரது இன்றைய அடையாளமே முறுக்கு வியாபாரம்தான். ``சின்ன வயசுலேருந்தே வீட்ல பலகாரங்கள் செய்வேன். அதிகம் படிக்க முடியலை. மகளிர் சுயஉதவிக் குழுவுல சேர்ந்ததும் பிழைப்புக்காக ஏதாவது செய்யணும்னு தோணினது. வீட்ல எப்ப பலகாரம் செய்தாலும் குழுவுல உள்ளவங்களுக்கு எடுத்துட்டு வந்து தருவேன். டேஸ்ட் ரொம்ப நல்லாருக்குனு பாராட்டுவாங்க. அப்படியே அவங்கவங்க வீட்டு விசேஷங்களுக்கு சின்ன அளவுல ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. குழுவுல உள்ள பெண்கள் மூலமா வெளியில உள்ளவங்களுக்கும் என் கை மணம் பத்தித் தெரிய வந்தது. அப்படியே என் பிசினஸ் இன்னும் கொஞ்சம் வளர்ந்தது. இன்னிக்கு அமெரிக்காவுல உள்ள ஒருத்தங்க அங்கே பிறந்தநாள் கொண்டாட, என்கிட்டருந்து முறுக்கும் தட்டையும் ஸ்பெஷலா செய்து வாங்கிட்டுப் போற அளவுக்கு வளர்ந்திருக்கேன்.

கடைகளுக்கு ரெகுலரா சப்ளை பண்றேன். என்னோட ஸ்பெஷல்னு பார்த்தா சீர் முறுக்கும், தட்டையும். டால்டா சேர்க்க மாட்டேன். ஓமம், சீரகம், சுத்தமான எண்ணெய்னு எல்லாமே பார்த்துப் பார்த்து வீட்டு ருசி மாறாம இருக்கும். மிளகாய் தூள்ல நிறைய கலப்படம் நடக்கிறதா கேள்விப்படறதால, தட்டையில மிளகாய் தூள் சேர்க்கிறதில்லை. மிளகாய் வாங்கி அரைச்சு சேர்க்கறேன். வாரத்துல 3 நாள் ஆர்டர் இருக்கும். 3 கடைகளுக்கு போடறேன். விசேஷங்களுக்கு தொடர்ச்சியா ஆர்டர் இருக்கும். பிசினஸ் வளர்ந்ததால தரத்தைக் குறைக்கவோ, விலையை ஏத்தவோ நினைக்கலை...’’ என்பவர் 500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் இறங்க நம்பிக்கையும் உத்தரவாதமும் தருகிறார். ``1 கிலோ மாவுக்கு 60 பாக்கெட் முறுக்கும், தட்டையும் செய்யலாம். 5 சின்ன முறுக்கு உள்ள பாக்கெட்டை 8 ரூபாய்க்கு கொடுக்கறேன். 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்பவரிடம் ஒரே நாள் பயிற்சியில் சீர் முறுக்கும் தட்டையும் செய்ய கற்றுக் கொள்ள கட்டணம் 300 ரூபாய்.

"மிளகாய் தூள்ல நிறைய கலப்படம் நடக்கிறதா  கேள்விப்படறதால, தட்டையில மிளகாய் தூள் சேர்க்கிறதுஇல்லை. மிளகாய் வாங்கி  அரைச்சு சேர்க்கறேன்..."

விதம் விதமான வெஜிட்டேரியன் கிரேவி

வினோதினி

``தினமும் ராத்திரியில சப்பாத்தி சாப்பிட சொல்றாங்க டாக்டர்ஸ். ஆனா, வீட்ல உள்ளவங்களுக்கு அதுக்குத் தொட்டுக்க தோதா கோபி மஞ்சூரியன், பனீர் பட்டர் மசாலா, பாலக் பனீர்னு கேட்கறாங்க. சப்பாத்தியை மட்டும் வீட்ல பண்ணிக்கிட்டு, சைட் டிஷ்ஷை ஹோட்டல்ல வாங்கறோம். தினமும் இது கட்டுப்படியாகுமா?’’ என்கிற புலம்பலை பரவலாக பல வீடுகளிலும் கேட்கலாம். எதைக் கொடுத்தாலும் சாப்பிடத் தயார்... ஆனால், ஹோட்டல் டேஸ்ட் வேண்டும் என்கிறவர்களை திருப்திப்படுத்த முடியாமல் தவிக்கிற அம்மாக்களுக்கு ஆறுதலான சேதி சொல்கிறார் வினோதினி. பி.காம்.

பட்டதாரியான இவர் விதம் விதமான சைட் டிஷ் தயாரிப்பதில் நிபுணி. ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், தனது பிரதான விருப்பம் சமையலே என்கிறார் இவர். ``எங்க வீட்ல மாமா, சித்தப்பானு எல்லாரும் கேட்டரிங் துறையில இருக்கிறவங்க. அம்மாவும் பிரமாதமா சமைப்பாங்க. அவங்க எல்லாரும் சமைக்கிறபோது  கூட உதவியா இருந்தவகையில நானும் கத்துக்கிட்டேன். இப்ப நான் ஒரு கம்பெனியில வேலை பார்க்கறேன். ஆனாலும், தினமும் வீட்ல நான்தான் சமையல். யாராவது வீட்டுக்கு விருந்துக்கு வந்தா என்னோட சமையல்தான் ஸ்பெஷல். ஹோட்டல் டேஸ்ட் மாறாம அப்படியே பண்ணுவேன்.



என் ஃப்ரெண்ட்ஸ் பலரும் என்கிட்ட சைட் டிஷ் மட்டும் செய்து கொடுக்கச் சொல்லி ேகட்க ஆரம்பிச்சபோதுதான், அதையே ஒரு பிசினஸா பண்ற எண்ணம் வந்தது. ஹோட்டல் டேஸ்ட்டுல கிரேவி பண்றதுல சின்னச் சின்ன நுணுக்கங்கள் இருக்கு. தவிர, ஒரு பொருள்கூட விடாம எல்லாத்தையும் சேர்த்து சமைச்சா, அதே டேஸ்ட்டை கொண்டு வர முடியும். ஹோட்டல்ல ஒரு கப் கிரேவியை 100 ரூபாய்க்கு குறைவா வாங்க முடியாது. அது 2 பேர் சாப்பிடக்கூட போதாது. அதே செலவுல ஒரு குடும்பமே தாராளமா சாப்பிடற அளவுக்கு நாமளே தயாரிக்கலாம்’’ என்கிற வினோதினி, பனீர் கிரேவி, மஷ்ரூம் கிரேவி, முள்ளங்கி கிரேவி, மிக்சட் வெஜிடபுள் கிரேவி, கார்லிக் கிரேவி என 10 வகையான கிரேவிகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுத் தருகிறார். கட்டணம் 500 ரூபாய்.

"ஹோட்டல்ல ஒரு கப் கிரேவியை 100 ரூபாய்க்கு குறைவா வாங்க முடியாது. அது 2 பேர் சாப்பிடக்கூட போதாது. அதே செலவுல ஒரு குடும்பமே தாராளமா சாப்பிடற அளவுக்கு நாமளே தயாரிக்கலாம்."

சாட்டின் ரிப்பனில் தலையலங்காரப் பொருட்கள்
சூர்யா வரதராஜன்

சூர்யா வரதராஜனின் கைவண்ணத்தில் தயாராகிற ஹேர் பேண்ட், ஹேர் ராப் மற்றும் கிளிப்புகளை பார்க்கும் போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே போகத் தோன்றுகிறது. கலர்ஃபுல்லான மணிகளைக் கோர்த்து, வழவழப்பான சாட்டின் ரிப்பன் கொண்டு அவர் டிசைன் செய்கிற தலை அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கானவை. ``அடிப்படையில நான் ஓர் ஓவியர். ஓவியத்தோட சேர்த்து நிறைய கைவினைப் பொருட்களையும் செய்யக் கத்துக்கிட்டேன். புதுமையா எந்தக் கைவினைப் பொருளைப் பார்த்தாலும் உடனே அதை என்னோட ஸ்டைல்ல மாத்தி கிரியேட்டிவா பண்ணிப் பார்ப்ேபன். ஒருமுறை சென்னையில ரெண்டு பெரிய மால்கள்ல பெண் குழந்தைகளுக்கான ஹேர் பேண்ட், ஹேர் கிளிப் எல்லாம் பார்த்தேன்.

பார்க்கிறதுக்கு ரொம்ப சிம்பிளா இருந்தது. ஆனா, விலை அதிகம்.  அதைப் பார்த்ததும் வீட்டுக்கு வந்து அதே பொருட்களை என்னோட கிரியேட்டிவிட்டியை உபயோகிச்சு, இன்னும் அழகா பண்ணிப் பார்த்தேன். ஷாப்பிங் மால்ல போட்டிருந்த விலையில பாதிக்கும் குறைவா என்னால பண்ண முடிஞ்சது. அப்படிப் பண்ணினதை எனக்குத் தெரிஞ்சவங்களோட பெண் குழந்தைங்களுக்கெல்லாம் கொடுத்தேன். அவங்க உபயோகிக்கிறதைப் பார்க்கிறவங்க என்கிட்ட ேதடி வந்து வாங்கிட்டுப் போனாங்க. அப்படித்தான் என் பிசினஸ் வளர்ந்தது...’’ என்கிற சூர்யா, ஆரத்தி தட்டுகள், துணி பொம்மைகள் போன்றவற்றையும் செய்கிறார்.

``தலை அலங்காரப் பொருட்களுக்கான Base கடைகள்ல ரெடிமேடா கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து, நம்ம கற்பனைக்கேத்தபடி சாட்டின் ரிப்பன், முத்துக்கள், மணிகள் வச்சு அலங்கரிக்க வேண்டியதுதான். ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தா போதும். ஒவ்வொண்ணுலயும் 50 பீஸ் பண்ணிடலாம். ஒருநாளைக்கு 25 பீஸ் பண்ண முடியும். குறைஞ்சது 20 ரூபாய்லேருந்து விற்கலாம். அலங்காரத்தையும் உபயோகிக்கிற பொருட்களையும் பொறுத்து விலை கூடும். 50 சதவிகித லாபம் நிச்சயம். பெண் குழந்தைகள் இருக்கிற எல்லா வீடுகள்லயும் வாங்குவாங்க. பெண் குழந்தைகளுக்கு அன்பளிப்பா கொடுக்கவும் ஏற்றது. ஃபேன்சி ஸ்டோர்கள்ல விற்பனைக்கு கொடுக்கலாம். கண்காட்சிகள்ல வைக்கலாம்...’’ என்பவரிடம் ஹேர் பேண்ட், ஹேர் ராப், ஹேர் கிளிப் மூன்றிலும் தலா 2 மாடல்களை கற்றுக் கொள்ள தேவையான பொருட்களுடன் சேர்த்து கட்டணம் 500 ரூபாய்.

"ஷாப்பிங் மால்ல போட்டிருந்த விலையில பாதிக்கும் குறைவா என்னால பண்ண முடிஞ்சது. அப்படிப் பண்ணினதை எனக்குத் தெரிஞ்சவங்களோட பெண் குழந்தைங்களுக்கு எல்லாம் கொடுத்தேன்..."

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்